02 Kenopanisad
கேனோபநிடதம்
Part II இரண்டாம் பாகம்
nūnaṁ tvaṁ vettha brahmaṇo rūpam |
yadasya tvaṁ yadasya deveṣvatha nu
mīmāsyemeva te manye viditam || 2-1||
மூடனாய் அதற்குள்ளே முற்றுணர்ந்தான் போல்வரவே}
‘நன்றாய்நான் அறிவேன்’என நவிலநீ முற்பட்டால்
அன்றுஅது, அற்பம்; அறிவதற்கோ ஏராளம்!
உருவத்தில் தெய்வமெனும் உணர்வதனை ஆராயும்
பருவத்தை மேலும் பயிற்சிபெறல் ஆதாயம்!
(என்றாய் நற்குருவும் எடுத்தியம்பிச் சீடனிடம்
நன்றாய் ‘நான்’என்று நவில்வதனை விசாரிக்கச்
சென்றுவரச் சொன்னார்; சீராய்ந்து சீடன்வந்து)
இன்றுள்ளம் மீண்டும் இயற்பட்ட தென்றானே! (2-1)
முதற்பகுதியில் சீடனுக்கு ஆன்மா எனும் பிரம்மம், தன்னுள்ளேயே இருந்தாலும் அதைப் புலன், மனம், அறிவு இவற்றால் அறிய முடியாது என்று உபதேசித்தார். பணிவுடைய சீடன் அதனாலேயே தான் முற்றும் அறிந்ததாக எண்ணி விட்டானோ என்ற தயவினால், குரு அவனிடம், ‘நான் எல்லாம் அறிந்தேன்’ என்பது மூடத்தனம். அறிவதற்கு இன்னும் அதிகம் உள்ளது. வெளியிலே வணங்கும் உருவங்களிலேதான் இறையுணர்வு என்பதை மீண்டும் ஆராய்வது நல்லது. தன்னை (நான் யார்) என மேலும் பயின்று வா எனக் கூறினார். சீடனும், பயிற்சிகள் பல செய்து பின்பு மீண்டும் குருவிடம் பணிந்து ‘இன்று என்னால் அறியப்பட்டதாக நினக்கிறேன்’ என்று உரைக்கிறான்.
(உபதேச மந்திரங்களை இலக்கியம்போலப் படிப்பது பயன் தராது. ஒவ்வொரு வாக்கினையும் உளமார ஆய்ந்து, பயன் தெளிந்தபின்பே மேலும் மேலும் பயில முனைய வேண்டும். இதனையே சீடன் பணிந்து கற்பதும், பின் தனியே பயிற்சி பெறுவதுமாக இங்கே காட்டப்படுகின்றது.) (2-1)
yo nastadveda tadveda no na vedeti veda ca || 2-2||
அறிந்துவிட்ட தெனவும்யான் அறியவில்லை – ஆதலினால்
நன்கறிவேன் எனஏனோ நவில்வதற்கு முடியவில்லை!
என்குருவே என்றமர்வான் ஏற்றமுறு நற்சீடன்!
அறியவில்லை என்றோ அறிந்துகொண்டேன் என்றோ
தெரியவில்லை எனஉணர்ந்து தெளிந்தவனே மேலோன்
பிரம்மமெனும் ஆன்மப் பெருஞான வழிப்போக்கன்;
பிரம்மமெனத் தன்னில்வுணர் பேராய்வுப் போராளி! (2-2)
ஆன்மாவை நன்றாக அறிந்து கொண்டதாக எண்ணவில்லை; அறியவில்லை என்றோ, அறிவேன் என்றோ தெரியவில்லை என்று சீடன் கூறும் பொழுது, ஏவன் ஒருவன் அறியவில்லை என்றோ, அறிந்து கொண்டதாக எண்ணவில்லை என்றோ, இவ்வாறு நினைக்கிறானோ, அவனே, ஆத்ம ஞானத்தை அறிபவன். பிரம்ம தத்துவத்தைத் தீரமுடன் ஆய்ந்துணரும் பேறு பெற்றவன் என உபதேசிக்கிறார்.
ஆன்ம ஞானப்பயன், தன்னை ஆன்ம ஸ்வரூபமாக உணர்வதும் அவ்வுணர்வின் முதிர்ச்சியால், பானையுள் பரவிய வெற்றிடமே, வெளியில் பரந்த வெற்றிடம் என்பது போல், ஆன்மாவே பரப்பிரம்மம் என லயித்து இருக்கச் செய்வதும் ஆகும். அதுபோது, இரண்டென ஏதும் இல்லாத காரணத்தால், அனுபவிப்பவன், அனுபவப்பொருள் என்றேதும் இல்லை. அதனால் அந்த அனுபவத்தை வர்ணிப்பதும் இல்லை. அத்தகையோன், அவ்வான்ம ஐக்கியத்தை விட்டு, மீண்டும் உலக வழக்கில் இருக்கும் போது, தாம் அனுபவித்தது மெய்யா, பொய்யா, தாம் அறிந்துகொண்டது மெய்யா, பொய்யா எனும் கலக்கத்தில் இருப்பது இயற்கையே. இத்தகைய நிலமை, அணு விஞ்ஞானத்திலும் ‘நிச்சயிக்கமுடியாத தத்துவம்’ (Theory of uncertainty) என்று ஏற்படுவதாக நாம் அறிவோம். (2-2)
avijñātaṁ vijānatāṁ vijñātamavijānatām || 2-3||
அறியப்பட்டது ஆன்மா எனப்புகல்வான் அறியான்!
அறிவாளார் ஆன்மாவை அறியப் படாதென்பர்!
அறிவீனர் தாமதனை அறிந்ததெனக் கொள்வர்! (2-3)
ஆன்மா அறியப்படாதது என உணர்ந்து கொண்டவன் அறிவாளி ஆவான். அறியாதவன் தான் ஆன்மாவை அறிவதாகச் சொல்வான். ஆன்மா, அறிவாளிகளால் அறியப்படாதது! அறிவீனர்களால், அறியப்பட்டதாகக் கருதப்படுவது!
(இதன் காரணம் என்ன? அறிதல் என்பது, அறிபவன், அறிபொருள் என்ற பாகுபாட்டின்போதே எழும் அனுபவம். ஆன்ம ஞானிக்கு, தன்னை உணரும் போது, இப்பாகுபாடு மறைவதால், அறிகிறோம் எனும் அறிவு அங்கு இல்லை. அதனாலேயே, ஆன்ம ஞானிகள், தாம் ஆன்மாவை அறிவோம் எனக் கருதமாட்டார்கள். மற்றவர்கள் அறிவீனர்களே!) (2-3)
ātmanā vindate vīryaṁ vidyayā vindate’mṛtam || 2-4||
ஆவிதமாய் முடிவாய் ஆன்மாவாய்க் காணுபவன்
சாவினையே சாகடித்துச் சத்தியமே வீரியமாய்
மேவிநிலை மெய்யாய் மெய்யாகி நிலைக்கின்றான் (2-4)
ஒவ்வொரு பொருளிலும் விளங்கும் பிரம்மம், அறியப்படாமலேயே அறியும் பொருளாய் இருப்பதாகத் தீர்மானம் கொண்டவனே, அந்த ஞானத்தால் வீர்யமுடையவனாக, சாவென்னும் விலங்கினை அறுத்து, சாகநிலையை அடைகிறான். (2-4)
na cedihāvedīnmahatī vinaṣṭiḥ |
bhūteṣu bhūteṣu vicitya dhīrāḥ
pretyāsmāllokādamṛtā bhavanti || 2-5||
அப்புறமேன் அழிவு? அறியார்க்கோ பேரழிவு!
எப்பொருளும் பிரம்மம் என்றுணரும் தீரர்களே
இப்புவனம் ஆள்வாரே! என்றுமவர் வாழ்வாரே! (2-5)
இந்த உண்மையை, இங்கேயே அறிந்துணர்ந்தவன், அதனால் அழியாமல் இருக்கிறான். இங்கேயே இதனை அறியாவிட்டால், பிறவிப் பெருங்கடலில் மூழ்குதலாகிய பேரழிவு ஏற்படுகிறது. எல்லாவற்றிலும் பரவியிருக்கும் பிரம்மத்தை உணர்ந்தவர்களே, தீரர்கள் (ஏனெனில் அவர்கள் வைராக்கியம் எனும் நல்லுறுதி உடையவர்கள்). அந்தப் பரந்த ஞானத்தினால் அவர்களே இவ்வுலகை ஆள்வார்கள்! என்றும் வாழ்வார்கள். (2-5)
இவ்வாறு கேனோபநிடதம் இரண்டாம் பாகம் நிறைவு.