Pages: 1 2 3 4 5
Pages: 1 2 3 4 5

கேனோபநிடதம்

Part III மூன்றாம் பாகம்

brahma ha devebhyo vijigye tasya ha brahmaṇo
vijaye devā amahīyanta || 3-1||
(சுரரோடு அசுர ராக, தூய்மையும் தீய நோக்கும்,
அரவென மனமே மத்து, ஆழ்கடல் சிந்தை யாக,
தரவெனக் கறந்தார் சாகாத் தத்துவம் அறிய வேண்ட,
பரவியதே விடமே இடரும் பவவினை வடிவாய் ஓட,

உருத்திர சிவனே கருணை உருப்பெற விடத்தை ஏற்று
தடுத்திடும் மாய அவித்தை தன்குரல் வளையில் ஏற்க,
பிரம்மமே சிவமே தந்த பேரருள் உதவி யாக
அம்மணி வடிவில் ஞான அமிர்தமே தந்தார் என்பர்!

வானவர் மறந்தார் உண்மை; வலிவினால் தாமே வெற்றி
ஆனவர் ஆனோம் என்று ஆர்ப்பரித் தறிவை விட்டார்!
வெற்றியின் மமதை நீக்கி வெளிச்சத்தை மனதிலேற்ற
முற்றிலும் நிறையும் பிரம்மம் மூடருக் கருளும் கதையே! )

பிரம்மம் அளித்த பெருவரமே வெற்றியென
இம்மியும் உணராது இருமாப்பில் மதியிழந்து
விம்மினர் தேவர்கள் வீணான பெருமிதத்தில்
எம்மாலே ஆனதுவே எல்லாமெனச் சிறுத்தர்! (3-1)

முந்தைய காலத்தில் தேவர்களும் அசுரர்களும் சண்டையிட்ட பொழுது, பிரம்மத்தின் துணையால் தேவர்கள் வென்றாலும், அதனை மறந்து, தாமே வெற்றிக்கு வித்து என ஆணவத்தால் இருந்தனர்.

(இச்சண்டையில், தேவர்களும், அசுரர்களும், சாகாத் தன்மை தரவல்ல அமிர்தம் வேண்டிப் பாற்கடலை, வாசுகி எனும் பாம்பினைக் கொண்டு கடைந்தனர். அப்போது, பாம்பின் விடம் எங்கும் பரவ, அதனைத் தாளாமல் அனைவரும் ஓடினர். அப்போது, கருணையால், பிரம்மமாகிய பரசிவமே சிவனாகி, விடத்தைத் தமது கழுத்தில் ஏற்று, தேவர், அசுரர் ஆகிய எல்லோரையும் காத்தருளினார். அந்த விடம் மறைந்த பின், அமிர்தம் தோன்ற, அதைப் பிரம்ம சக்தி, மோஹினி வடிவான தாயாக வந்து, தேவர்களுக்குக் கொடுத்து அவர்களைக் காத்தார். இந்த வெற்றியையே தேவர்கள் தாமே பெற்றதாகக் கர்வப்பட்டனர். நற்குணமும் தீக்குணமுமே தேவ அசுரர்கள். சிந்தையில் மனமெனும் பாம்பை மத்தாக வைத்து, இக்குணங்கள், எப்போதும் நிரந்தரமான சுகத்தைத் தேடிக்கொண்டிருக்கிறது. அந்த நிச்சயமான சுகம், பிறவியிலாப் பேரின்பம் அல்லவா? அச்சாகாநிலை அடைய நாம் முயற்சிக்கும்போது, ஊழ்வினையும், பாழ்மனதும் பாடாய்ப் படுத்துகின்றதல்லவா? அந்த விஷம் போனால் தானே, நம்மால் அமிர்தமாகிய ஆன்ம ஞானத்தைப் பெற முடியும்! அதற்குக் கருணைவடிவான பிரம்மத்தின் உதவி அல்லவா அவசியம்? இதைத்தான் இப்புராணக்கதை உணர்த்துவதாக எண்ணம். ) (3-1)

ta aikśantāsmākamevāyaṁ vijayo’smākamevāyaṁ mahimeti |
taddhaiṣāṁ vijajñau tebhyo ha prādurbabhūva tanna vyajānata
kimidaṁ yakśamiti || 3-2||
தவறினைத் திருத்தித் தன்னிலை உணர்த்த
அவரிடைப் பிரம்மம் அருவமாய் நிற்க,
யக்ஷன் எனுமொரு பூஜ்ய வடிவில்
நிற்பதை அறிய நிமிர்ந்தனர் தேவர் (3-2)

அவர்களுடைய தவறான எண்ணத்தை நீக்க, பிரம்மம் அங்கே வட்டவடிவ நிர்மலமாகத் தோன்றியது. அப்படி ஒரு தோற்றம் இருப்பதை உணர்ந்த தேவர்கள், அந்த வடிவம் யாது என உணரவில்லை! (பிரம்மம் எனும் பரமாத்மா இருப்பதை உணர்வதாலேயே, தேவர்களாக இவர்கள் விளங்குகிறார்கள் எனும் உண்மையை உணரவேண்டும்.) (3-2)

te’gnimabruvañjātaveda etadvijānīhi
kimidaṁ yakśamiti tatheti || 3-3||
தீயெனும் தேவே! தெளிவாய், இவ்வடிவில்
யாரென அறிந்து வாவெனச் சொன்னார்!

(தீயென இங்கே திகழ்வது அறிவு!
அறிவால் பிரம்மம் அறிதலோ கூடும்?
அறிவின் ஆணவம் அடங்குதல் பாரும்!) (3-3)

தேவர்கள், தங்களுருகில் நிற்கும் யக்ஷ வடிவம் ஏதென்று தெரிந்து கொள்ள, அக்கினியாகிய தீக்கடவுளை அனுப்பினர். (இங்கே தீ என்பது, அறிவினைக் குறிக்கிறது. அறிவால் ஆயமுடிவாதா ஆன்மா? இல்லையே!) (3-3)

tadabhyadravattamabhyavadatko’sītyagnirvā
ahamasmītyabravījjātavedā vā ahamasmīti || 3-4||
அறிவேன் எனத்தீ அங்கே சென்றது!
அவ்வுரு தீயிடம் யார்நீ என்றது!
செருக்காய் நானே செந்தீ என்றது!
விருத்தும் ஜாத வேதகன் என்றது! (3-4)

தீ, நான் அறிவேன் எனக்கூறி அவ்வடிவத்தின் அருகில் சென்றது. பிரம்மம், நீ யார் என்று கேட்டபொழுது, நானே தீ, பெயர் ஜாத வேதகன் என இறுமாப்புடன் சொன்னது. (3-4)

tasminstvayi kiṁ vīryamityapīdam sarvaṁ
daheyaṁ yadidaṁ pṛthivyāmiti || 3-5||
அப்படியோ, எனில் யாதுன் வீரியம்?
செப்பிடு என்றே சீருரு கேட்டது;
பூமியில் எதையும் பொசுக்கிடும் என்னுடை
வீரியம் என்று விடைத்தது நெருப்பு. (3-5)

தீயை நோக்கி, பிரம்மம், உன்னுடைய வலிமை என்ன என்று கேட்டபொழுது, நான் எதனையும் எரித்துச் சாம்பலாக்கி விடுவேன் எனக் கர்வத்துடன் கூறியது. (3-5)

tasmai tṛṇaṁ nidadhāvetaddaheti |
tadupapreyāya sarvajavena tanna śaśāka dagdhuṁ sa tata eva
nivavṛte naitadaśakaṁ vijñātuṁ yadetadyakśamiti || 3-6||
அதுசரி இதைஎரி எனஒரு புல்லை
விதித்தது; தீயோ விரைந்ததில் பாய்ந்து
ஊதியும் உலர்த்தியும் ஒருபயன் இல்லை!
வீரியம் எங்கே? விடையறி யாமலே
யக்ஷ வடிவச் சக்தியீ தேதென
வெட்கிய தீயும் விட்டது ஓட்டம். (3-6)

பிரம்மம் ஒரு புல்லைத் தரையில் போட்டு, சரி, இதனை எரித்துவிடு பார்க்கலாம் எனத் தீயிடம் கூறியதும், தீ விரைந்து அந்தப் புல்லின் மீது பாய்ந்து பலவகையில் எரிக்கப் பார்த்தும் ஒன்றும் நடக்கவில்லை. வெட்கத்தால், இந்த யக்ஷ வடிவம் யாரெனத் தெரியவில்லையே எனத் திரும்பிச் சென்றது. (3-6)

atha vāyumabruvanvāyavetadvijānīhi
kimetadyakśamiti tatheti || 3-7||
வானவர் உடனே வாயுவைப் பார்த்து
போயறி, வடிவப் புதிரவிழ் என்றனர்;
(வாயுவே செல்வ வளமெனும் செழிப்பு!
போயறிந் திடுமோ புதிராம் ஆன்மா?)

தேவர்கள், தங்களுருகில் நிற்கும் யக்ஷ வடிவம் ஏதென்று தெரிந்து கொள்ள, வாயுவாகிய வளிக்கடவுளை அவ்வடிவம் யாதெனத் தெரிந்துவர அனுப்பினர். (இங்கே வளி என்பது, செல்வ வளத்தினைக் குறிக்கிறது. செல்வத்தாலும், பொருளாலும் ஆயமுடிவாதா ஆன்மா? இல்லையே!) (3-7)

tadabhyadravattamabhyavadatko’sīti vāyurvā
ahamasmītyabravīnmātariśvā vā ahamasmīti || 3-8||
வாயுவை யாரென வடிவம் கேட்டது;
வாயுவும் தானே வளிஎனச் சொன்னது;
மாதரிட் சாஎன்ற மதிப்புடைப் பெயரில்
ஓதிடும் உலகென உவந்து சொன்னது (3-8)

வாயு அவ்வடிவத்தின் அருகில் சென்றது. பிரம்மம், நீ யார் என்று கேட்டபொழுது, நானே வளி. என்னை மாதரிட்சா என்று அழைப்பர் என இறுமாப்புடன் சொன்னது. (3-8)

tasminstvayi kiṁ vīryamityapīdam
sarvamādadīya yadidaṁ pṛthivyāmiti || 3-9||
அப்படியோ, எனில் யாதுன் வீரியம்?
செப்பிடு என்றே சீருரு கேட்டது;
பூமியில் எதையும் புரட்டிப் போட்டிடும்
காரியம் எந்தன் கைத்திறம் என்றது (3-9)

வாயுவை நோக்கி, பிரம்மம், உன்னுடைய வலிமை என்ன என்று கேட்டபொழுது, நான் பூமியில் எதனையும் புரட்டிப் போட்டிடுவேன் என வாயு கர்வத்துடன் கூறியது. (3-9)

tasmai tṛṇaṁ nidadhāvetadādatsveti
tadupapreyāya sarvajavena tanna śaśākādatuṁ sa tata eva
nivavṛte naitadaśakaṁ vijñātuṁ yadetadyakśamiti || 3-10||
‘அதுசரி! இதைஎடு’ எனஒரு புல்லை
விதித்தது; வளியும் விரைந்ததில் பாய்ந்து
ஊதியும் உருட்டியும் ஒருபயன் இல்லை!
வீரியம் எங்கே? விடையறி யாமலே
யக்ஷ வடிவச் சக்தியீ தேதென
வெட்கிய வாயு விட்டது ஓட்டம் (3-10)

பிரம்மம் ஒரு புல்லைத் தரையில் போட்டு, சரி, இதனைப் புரட்டிப்போடு, பார்க்கலாம் எனக் கூறியதும், வாயு விரைந்து அந்தப் புல்லின் மீது பாய்ந்து பலவகையில் புரட்டப் பார்த்தும் ஒன்றும் நடக்கவில்லை. வெட்கத்தால், இந்த யக்ஷ வடிவம் யாரெனத் தெரியவில்லையே எனத் திரும்பிச் சென்றது. (3-10)

athendramabruvanmaghavannetadvijānīhi kimetadyakśamiti tatheti
tadabhyadravattasmāttirodadhe || 3-11||
பின்னர் வானவர் தன்னுள் முன்னவன்
நன்னன் இந்திரன் நாடி அழைத்து
என்னே ஈதென எமக்கறி வுரைக்க,
மன்னனும் பணிவெனும் மகுடம் அணிந்தான் (3-11)

தேவர்கள், பிறகு தங்கள் தலைவனான இந்திரனிடம் சென்று, இவ்வடிவ உண்மையை அறிந்து வர வேண்டினர். இந்திரனும், அதனை ஏற்றுப், பணிவுடன் அவ்வடிவத்திடம் ஏகினான். (இந்திரன் பிரம்மமாகிய வடிவத்தை அறிவதற்குப் பணிவுடன் செல்வது, அவன் தேவர்களுக்குத் தலைவனாக இருக்கின்ற தகுதியைக் காட்டுகின்றது.) (3-11)

sa tasminnevākāśe striyamājagāma bahuśobhamānāmumā
haimavatīṁ tāhovāca kimetadyakśamiti || 3-12||
பணிந்தவன் முன்னே பனியென விளைந்த
கனித்திடும் பிரம்மக் கவினுரு இல்லை!
இனித்திட இமாவான் இயல்மகள் தேவி
கனித்தனள் இந்திரன் கண்டனன் கருணை! (3-12)

(தானெனும் ஆணவம் தானழிந் தாலே
ஞானம் நயக்கும்! நயனம் திறக்கும்!
மோன அகிலாண்ட முழுமதி நாயகி
முன்னே வந்தருள் முனையத் தருவாள்!
பிரம்ம முடிச்செனும் பெருவினா திறந்து
தர்மம் வளர்வுறத் தன்னிலை தருவாள்!

உண்மையான வேட்கையுடன், ஆணவமில்லாத பணிவுடன் இந்திரன் அங்கு சென்றபோது, அங்கே அந்த யக்ஷ வடிவம் இல்லை. ஆனால், அகிலாண்டேஸ்வரி, கருணையுடன் காட்சி தந்து கொண்டிருந்தாள். (ஆணவம் இல்லாத நிலையில் ஆன்ம வேட்கை கொண்டால், அன்னை பராசக்தி, பிரம்ம ஞானம் அடையும் வழியினை உபதேசிக்க வருவாள் எனும் தத்துவம் இங்கே காட்டப்படுகிறது.) (3-12)

|| iti kenopaniṣadi tṛtīyaḥ khaṇḍaḥ ||
இவ்வாறு கேனோபநிடதம் மூன்றாம் காண்டம் நிறைவு.
Pages: 1 2 3 4 5

Related Posts

Share this Post