Pages: 1 2 3 4 5
Pages: 1 2 3 4 5

கேனோபநிடதம்

Part IV – நான்காம் பாகம்

sā brahmeti hovāca brahmaṇo vā etadvijaye mahīyadhvamiti
tato haiva vidāñcakāra brahmeti || 4-1||
அதுவே பிரம்மம்! அதனருள் உம்வெற்றி!
அதனால் பெருமை, அதன் முழுஉடமை!
இதமாய் மாதா ஈந்தஉப தேசம்!
பதமாய் அறிவான் பரம்பொருள் நேசம்! (4-1)

தேவி, இந்திரனிடம், அவ்வடிவம் பிரம்மம் என்றும், அதன் அருளின் காரணமே தேவர்களின் வெற்றி என்றும், அதனால், எல்லாப் பெருமையும் பிரம்மத்துக்கே சேரும் என்ற உபதேசத்தினை அருளினாள். அதனால் இந்திரன் பிரம்மமே அவ்வடிவம் எனும் உண்மையை உணர்ந்தான். (4-1)

tasmādvā ete devā atitarāmivānyāndevānyadagnirvāyurindraste
hyenannediṣṭhaṁ pasparśuste hyenatprathamo vidāñcakāra brahmeti || 2||
நேய வடிவை நெருங்கிய பொருளாய்
வாயுவும், தீயும், வகுந்து அறிதலால்
தேவருள் அவர்கள் தேர்ந்தவர்; இந்திரன்
யாவருள் மிகவும் யோகன் ஆயினன்! (4-2)

எக்காரணத்தால் அக்கினியும், வாயுவும், இந்திரனும் பிரம்மமெனும் வடிவத்தை நெருக்கத்தில் கண்டார்களோ, அக்காரணங்களால், அவர்கள், தேவர்களில் சிறந்தவர்களாகக் கருதப்படுகின்றனர். (4-2)

tasmādvā indro’titarāmivānyāndevānsa
hyenannediṣṭhaṁ pasparśa sa hyenatprathamo vidāñcakāra brahmeti || 4-3||
இந்திரன், தன்னை ஈர்த்திடும் வடிவை
முந்தைய பொருளாய் முழுமைப் பிரம்மமாய்
சிந்தையில் தெளிந்தான்; சிறப்பத னாலே
இந்திர உலகின் எந்தை ஆனான்! (4-3)

இந்திரன் இதனை நெருங்கிய வடிவாக மட்டுமல்லாமல், இதுவே பிரம்மம் என்றும் தெளிந்த காரணத்தினால், தேவ உலகத்தின் தலைவனாக விளங்குகின்றான். (4-3)

tasyaiṣa ādeśo yadetadvidyuto vyadyutadā
itīn nyamīmiṣadā ityadhidaivatam || 4-4 ||
யாதிதன் அர்த்தம்? எதற்கு இப்பாடம்?
மினுக்கெனும் மின்ன்லின் மின்னணு போலே,
நொடிக்குள் இமைக்கும் நொடியில் உணர்வாய்,
தோன்றாத் தோன்றும் ஜோதிஸ்வ ரூபம்,
ஊன்றிப் பாரது அதிதை வீதம்! (4-4)

இந்த உபதேசத்தின் காரணம் என்ன? மின்னலின் மின்னலாய், இமைச் சிமிட்டலின் சிமிட்டலாய், இப்பிரம்ம ஒளி தோன்றி மறைகிறது. இதன் பெயர் அதிதைவதம். (4-4)

athādhyātmaṁ yaddetadgacchatīva ca mano’nena
caitadupasmaratyabhīkśṇa saṅkalpaḥ ||4- 5||
இமைப் போதில் மனமிதனைக் கலந்திருப்ப தாயும்,
இதனாலே இதனருகில் கவர்ந்திருப்ப தாயும்,
பளிச்சென்று வெளிச்சத்தின் பாவனைகள் தோன்றும்
பரிசாகும் அத்தியாத்ம பாக்கியமே ஆகும்! (4-5)

இந்த பிரம்ம வேட்கையின் காரணமாக, மனமானது சிலநேரத்தில் பிரம்மத்தை அடைவதைப் போலவும், அதனால், பிரம்மத்தின் அருகிலேயே இருப்பதுபோலவும், அடிக்கடி, ‘பளிச்சென்று ஒளியாகத் தோன்றி மறையும். அந்தப் பாவனைக்கு அத்தியாத்மம் என்று பெயர். (4-5)

taddha tadvanaṁ nāma tadvanamityupāsitavyaṁ sa ya etadevaṁ vedābhi
hainam sarvāṇi bhūtāni saṁvāñchanti || 4-6||
தன்னுள் தனிச்சுடரைத் தரிசித்தல் ஞானம்;
தத்வனம் என்பதரும் தாத்பரியம் ஆகும்!
இத்திறனை எவனொருவன் இப்படி அறிவானோ
அத்தகையன் அனைவரது அன்பினுக்கும் இனியன்! (4-6)

மின்னல் போல் தோன்றி மறைகின்ற இந்த ஆன்மரூபத்தை தரிசிப்பதிலே வேட்கை கொள்வதே ஞானம். அத்தகைய தரிசனமே தத்வனம் என வேதங்களால் புகழப்பட்டது. இதனை இவ்வறு அறிந்து உணர்ந்தவன், எல்லா உயிரனங்களுக்கும் அன்புக்குரியவனாக விளங்குவான். (4-6)

upaniṣadaṁ bho brūhītyuktā ta upaniṣadbrāhmīṁ vāva ta
upaniṣadamabrūmeti || 4-7||
ஐயா! உபநிடத ஐயங்கள் தீர்க்கவென
மெய்யாகக் கேட்டதனால் மெய்ப்பரிசு உபதேசம்!
நெய்யா ரகசியத்தை நேர்ப்படுத்தி பிரம்மமெனும்
பொய்யா விதியைப் போதித்தேன் என்றறிக! (4-7)

குருவே, உபநிடத உண்மைகளை உபதேசம் செய்யுங்கள் என்ற உண்மைப் பணிவிற்குப் பரிசாக, பிரம்மத்தைப் பற்றிய ரகசியத்தைத் தெளிவாக விளக்கிக் கூறினேன். (4-7)

tasai tapo damaḥ karmeti pratiṣṭhā vedāḥ sarvāṅgāni
satyamāyatanam || 8||
பாதங்கள் தவம், பணிவு, நற்கருமம்;
வேதங்கள் அதனங்கம், விளைநிலம் சத்தியம் (4-8)

தவம், பணிவு, செயற்கடன் ஆகியவே அப்பிரம்மத்தின் பாதங்களாக உள்ளன. (அதாவது, இம்மூன்றும் பிரம்ம ஞானம் அடைவதற்கு மிக முக்கியமான தகுதிகள்.) வேதங்கள் அதன் அங்கங்களாக உள்ளன. (4-8)

yo vā etāmevaṁ vedāpahatya pāpmānamanante svarge
loke jyeye pratitiṣṭhati pratitiṣṭhati || 9||
யாரிதை அறிவார் தீயவை அடையார்!
கூரிய வினையின் குறியினில் அடையார்!
வீரிய முடையார் வீடினை அடைவார்!
நேரிய வழியால் நிலை பெறுகின்றார்! (4-9)

எவன் இவ்வுண்மையினை அறிகிறானோ, அவன் தீமைகள் ஒழிந்து, உயர்ந்த வழியில் சென்று, சுவர்க்கம் எனும் பிரம்ம நிலையை அடைகிறான். (4-9)

|| iti kenopaniṣadi caturthaḥ khaṇḍaḥ ||
இவ்வாறு கேனோபநிடதம் நான்காம் காண்டம் நிறைவு.
om āpyāyantu mamāṅgāni vākprāṇaścakśuḥ
śrotramatho balamindriyāṇi ca sarvāṇi |
sarvaṁ brahmaupaniṣadaṁ
mā’haṁ brahma nirākuryāṁ mā mā brahma
nirākārodanirākaraṇamastvanirākaraṇaṁ me’stu |
tadātmani nirate ya
upaniṣatsu dharmāste mayi santu te mayi santu |
om śāntiḥ śāntiḥ śāntiḥ ||
மெய்யுடல் உறுப்பும் வாக்கும் மேவிடும் மூச்சும் நோக்கும்
செய்விழி, செவியும் கேட்கும் சேதனம் நடத்தும் ஆக்கம்
தொய்வின்றி நடக்க வேண்டும்! தூயான்மா காக்க வேண்டும்!
ஆன்மனே பிரம்மம் ஆகும்! ஆய்ந்துப நிடதம் கூறும்
ஆன்மனை அகலேன் யானும், அகன்றிடா ஆன்மா ஞானம்
ஊன்றிடும் உபநிட தங்கள் உணருவோர் உணரும் பேறு
ஈன்றினி என்னுள் என்றும் இனிமையாய் நிலைக்க வேண்டும்!

ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

|| iti kenopaniṣad ||
இவ்வாறு கேனோபநிடதம் நிறைவு.
Pages: 1 2 3 4 5

Related Posts

Share this Post