(Read in ENGLISH)

சிவனின் மூன்றாம் கண் (சிவராத்திரி 2017)

Conversation With Aiya (12)

‘இன்னும் மூணு நாள்ல சிவராத்திரி’, உமா சொன்னார். ஐயாவை இந்தியாவுக்கு வழியனுப்ப அப்போது நாங்கள் காரில் விமான நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தோம்.

‘தெரியும்; ஐயா நம்மோடு இருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் அவர் ஊருக்குப் போகிறார்’.  நான் சொல்வதைச்  சிரித்தபடி பக்கத்தில் அமர்ந்திருந்த ஐயா கேட்டுக் கொண்டிருந்தார்.

‘இந்தியாவில் சிவராத்திரி எப்படி இருக்கும்? லண்டன்ல நடக்கிற நவராத்திரி மாதிரி கலர்புல்லா இருக்குமா?’ – காவ்யா கேட்டாள்.

‘இல்லை, வேற மாதிரி’, நான் சொன்னேன்.

‘சிவராத்திரி ரொம்ப அமைதியாத்தான் நடக்கும். விரதமெல்லாம் இருப்பார்கள். ரொம்பவும் பாப்புலர்தான்.’

‘எனக்கு எந்த ஸ்வாமி பவர்புல்னு சந்தேகமாயிருக்கு.  கிருஷ்ணா, சிவா, கணேஷ்… எல்லாமே எனக்குப் பிடிக்கும்’, இது கீர்த்தி.  எந்த ஸ்வாமி, எப்போ பவர்புல் அப்படினு  மாற்றி மாற்றி யோசிக்கிற வயசிலேதான் இன்னும் இருக்கிறாள்.

‘எனக்கு சிவனை ரொம்பப் பிடிக்கும். அதுவும், அவரோட மூணாவது கண், அதைத் திறந்தால், எல்லாமே எரிஞ்சு போய்டும்.  Awesome!’ என்றாள் காவ்யா.

‘அவரோட தவத்தை யாராவது கலைச்சாத்தான், சிவனுக்கு கோபம் வந்து மூணாவது கண்ணை திறப்பார். இல்லையா Dad?,  மன்மதன் அப்படித்தானே எரிஞ்சு போனான்!’

எனக்கு இந்த வாய்ப்பு ஐயாவுடன் ஆழ்ந்து விவாதித்து அறிய ஏற்பட்டதாகவே தோன்றியது.

‘ஸ்ரீ ருத்ரம் படிக்கும்போது, சிவனுடைய கோபத்துக்கு ஒருவித பயமும், அதேசமயம், அதன் மேல் நிறைய மரியாதையும் காட்டறது தெரியும். அப்படித்தான்,  ருத்ரத்துக்கு பொதுவான  அர்த்தம் எல்லாம் இருக்கு.  ஒருவேளை, வேற எதாவது ஆழ்ந்த உண்மையும் அதில் இருக்கலாம்’.

ஐயாவின் பதிலைக் கேட்க வேண்டும் என்பதற்காக மீண்டும் சீண்டினேன்.

‘வேதங்களின்படி, கடவுள் எல்லாக் குணங்களையும் கடந்தவர். அவருக்குக் கோபம் எப்படி வரமுடியும்!  அதுவும் தன்னை யாரோ தொந்தரவு செய்து விட்டார் என்பதற்காக மூன்றாவது கண்ணைக் காட்டி, எரிச்சுட்டார் அப்படினா, கடவுளுக்கும் நமக்கும் என்ன வேறுபாடு இருக்கு?’

ஐயா என்னை நோக்கித் திரும்புவதைப் பார்த்துத் தொடர்ந்தேன்.

‘ஆமாம் ஐயா, எனக்கு இது புரியவே இல்லை.  சிவனின் முக்கண் தத்துவம்தான் என்ன?  அவரோட மூணாவது கண்அழிக்கும் சக்திதான்,  அப்படினாஅது பயங்கரந்தான்.  அதுக்காகத்தானா, சக்தி, நெற்றிக்கண்ணை சிவன் திறக்காமல் இருக்கணும்னு பிரார்த்தனை செய்தார்?’

‘லுக்!  இந்த மாதிரி நிறைய புராணக்கதைகள் இருக்கிறதன் காரணமே, ஒவ்வொருவர் மனதுக்கு ஏற்றபடி, நல்ல வழியிலே திருப்பணும் அப்படிங்கிறதுக்குத்தான்.  இதுக்குள்ள இருக்கிற உண்மை என்ன அப்படினு தெரியனும்னா, வேதாந்தம் எனும் விளக்குதான் நமக்குத் தேவை.  அதைப் புரிஞ்சுக்கத் தயார்னா, நான் சொல்றேன்.’ என்றார் ஐயா.

கண்ணாடி வழியாகப் பார்த்தேன். பின் இருக்கையில் உமா, பெண்கள் இருவரையும் அமைதியாக இருக்கும்படி சைகை காட்டிக் கொண்டிருந்தார்.

‘சிவனோட மூன்றாம் கண்ணைப்பத்தித்தானே கேள்வி?  மூணு மூணா இருக்கிற மத்த சில விஷயங்களையும் நான் சொல்றேன்.  இதெல்லாம் உங்கள் மனசுல, இந்த சிவராத்திரிக்குத் தகுந்த  நல்ல விசாரணையை எழுப்பும்.’

நாங்கள் எல்லாம், முழுவதும் காதுகளாக மாறி இருந்தோம்.

‘வாழ்க்கை என்பது தொடர்ச்சியா இருக்கிற அனுபவங்கள்தான் இல்லையா?’

‘ஆம் ஐயா,  அனுபவ-தாரா அப்படினு நீங்கள் சொல்லி நான் கேட்டிருக்கேன்.  தொடர்ச்சியா வரும் அனுபவங்களின் சங்கிலிதான் வாழ்க்கை அப்படினு.’

‘ஆமாம்.  நமக்கெல்லாம்  பலவிதமான அனுபவங்கள் இருக்கு. அதனால நம்முடைய வாழ்க்கையும் பலவிதமாய் வேறுபட்டு  இருக்கு.  ஆனால் வேதாந்தம், மனிதர்களோட  எல்லா அனுபவங்களையும் மூணு வகையாத் தொகுத்து வைத்திருக்கிறது.  இதுல முக்கியமா, இந்த மூன்று அனுபவநிலைகளையும், மூன்று பாதிப்புக்களாக, த்ரி-அவஸ்தா அப்படினு பெயரிட்டிருக்கு’

‘அவஸ்தையாகவா…. ஏன்?’

‘அதுவும் கொஞ்சம் சிந்தித்த பிறகு உங்களுக்கே புரியும்.   இந்த மூன்று அவஸ்தைகளும் என்ன தெரியுமா?  ஜாக்ரதா, ஸ்வப்னா, ஸுஷூப்தி அப்படிங்கிறதுதான்.’

‘தெரியும் ஐயா.  விழிப்புநிலை, கனவுநிலை, ஆழ்துயில் நிலை – அவைதானே?’

‘ஆமாம்.   உங்களைக் கேட்கிறேன்.  விழிப்புநிலையிலே, நீங்க பார்க்கிறீங்களா? நீங்கள் அனுபவிக்கிறீர்களா?’

‘நிச்சயமாக ஐயா!  விழிப்பு நிலையில் உடலும், மனமும் ஆக்டிவா இருக்கு. அதனால்தான் உலகத்தில எல்லா இன்ப துன்பங்களையும் பார்த்து, அனுபவிக்கிறோமே?’

‘அப்படினா, ஒரு பேச்சுக்கு,  விழிப்புநிலையில், நமக்கு ஒரு கண் இருக்கு அப்படினு வைச்சுக்கலாமே?’

‘அதாவது, நமக்கு அனுபவத்தை காட்டித் தர, ஒரு அறிவு அப்படினு எடுத்துண்டா, yes, விழிப்பு நிலையில் ஒரு கண் இருக்கு’

‘அதுபோல, கனவு நிலையில, ஒரு கண் இருக்கா?’

‘கனவில்தான் உடல் ஆக்டிவா இல்லையே!  அதனால கண் அப்படிங்கிற உறுப்பு கனவு நிலையில் இல்லை.  ஆனால், நீங்கள் கேட்கிறது புரிகிறது.  மனம் ஆக்டிவா இருக்கு. கனவு மனசிலதான் நடக்கிறது. அதனால அனுபவமும் இருக்கு.கனவு நிலையில ஒரு கண் இருக்குனே வைச்சுக்கலாம்.’

இப்படிச் சொல்லிக்கொண்டே, ஐயா இந்த உரையாடலை எங்கு கொண்டு செல்லப்போகிறார் என யோசித்தேன்.

‘அப்போ அழ்ந்து தூங்கும்போது?’

‘நிச்சயம் இல்லை ஐயா’,  சட்டென்று சொன்னேன்.

‘ஆழ்ந்து தூங்கும்போதுதான் உடல், மனம் எல்லாம் ஒடுங்கிப் போயிருக்கே!’

காவ்யா சொன்னாள், ‘அப்போ நமக்கு எந்த எக்ஸ்பீரியன்ஸும் கிடையாது’

ஐயா பலமாகச் சிரித்தார்.  ‘ஆர் யூ ஷ்ய்ர்?’

‘ஆம் ஐயா, உறக்கத்தில், அனுபவிக்க எதுவும் கிடையாது’, என்றேன்.

‘அப்படியானால், ஒவ்வொருமுறை ஆழ்ந்து தூங்கும்போதும், நீங்கள் வாழ்க்கையை இழந்தவராக அல்லவா ஆகிவிடும்?  வாழ்க்கை என்பது அனுபவங்களின் தொடர் சங்கிலி என்றால், அனுபவம் இல்லாத உறக்கநிலை நம் இறப்பாக அல்லவா ஆக வேண்டும்?  சுகமாத் தூங்குபவனைச் செத்தவன் என்றா நாம் அழைக்கிறோம்?’

‘இல்லை ஐயா, நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை.ஆழ்ந்து தூங்கும்போது, அனுபவ அறிவு இல்லைனு…’

ஐயா இடைமறித்துக் கேட்டார். ‘அனுபவ அறிவு இல்லை அப்படினா…’

‘அதான் ஐயா. தூங்கிட்டா மனசாலதான்  எதையும் கிரஹிக்க முடியாதே!’

‘ஏன்?’

‘வெல்,  மனம் ஆக்டிவா இருந்தால்தான் எண்ணங்களே இருக்க முடியும்.  தூங்கும்போதுதான் மனம் ஆக்டிவா இல்லையே?’

ஐயா மீண்டும் பலமாகச் சிரித்தார்.

‘மனம் ஆக்டிவா இல்லையே அப்படினு நீங்க சொல்லணும்னா, அது எப்போ ஆக்டிவா இருக்கு, எப்போ ஆக்டிவா இல்லை அப்படிங்கிறதைப் பார்க்கிறதுக்கும் ஒரு கண் இருக்கணுமா இல்லையா?’

‘வெல்….  அது கான்ஷியஸ்னஸ்…. அப்படினு’ – நான் உறுதியில்லாமல் பதில் சொன்னேன்.

ஐயா மீண்டும் குறுக்கிட்டார்.

‘அதைப் பிடித்துக் கொள்ளுங்கள். கான்ஷியஸ்னஸ்.  அதாவது நமக்குள் இருக்கின்ற உள்ளுணர்வு.  அது எப்போதுமே இருக்கு.  அதுதான் உங்கள் மனசை பார்த்துக் கொண்டே இருக்கு.  அதுதான் சாட்சி.  அது இல்லைனா, மனம் இப்போ ஆக்டிவ், இப்போ ஆக்டிவ் இல்லை அப்படிங்கிற அறிவு,  உணர்வு நமக்குக் கிடைக்காது’.

‘ம்… ஐயா, நான் இதுவரைக்கும் கான்ஷியஸ்னஸ் அப்படினா, அதுவும் ஒரு எண்ணம் அப்படினு இருந்தேன். அது சரியாக இருக்க முடியாது. மனம் ஆக்டிவா இருந்தால் மட்டுமே  எண்ணங்கள் இருக்கும்….  எனக்குத் தெளிவாகப் புரியவில்லை ஐயா’ – இப்படி என் அறியாமையை அம்பலம் ஏற்றிவிட்டு, வழக்கம்போல் சரணடைந்தேன்.

‘கான்ஷியஸ்னஸ் பத்தி எல்லாம் ஆழமா நாம் இப்போ விவாதிக்க வேண்டாம்.  முக்கியமான கருத்து என்ன அப்படினா, ஆழ்ந்த உறக்கத்திலேயும், நமக்குள் ஒரு கண் விழித்துக் கொண்டே இருக்கு.  அதுதான் நமக்குள் இருக்கிற மூன்றாவது கண்!’

‘ஐயா, இதோட பயன் எனக்குப் புரியலை.  விழிப்புநிலையில் அனுபவங்கள் இருக்கு; அதே மாதிரி கனவிலேயும்.  அதனால, அந்த இரண்டு நிலையிலும் நமக்கு அந்த அனுபவத்தைத் தர ஒரு கண் இருக்கு அப்படினு சொல்றதுல ஒரு பயன் இருக்கு.  ஆனால் தூங்கும்போது ஒரு கண் இருக்கு அப்படினு வைச்சுக்கறதாலே என்ன பயன்?’

‘நல்ல கேள்விதான்.  நம்மளோட மூணாவது கண்ணால என்ன பயன் அப்படினு பார்க்கிறதுக்கு முன்னாடி, அந்த மூணாவது கண்ணோட வேலை என்ன அப்படினு தெரிஞ்சுக்கணும்.  அதனோட வேலை ஒண்ணே ஒண்ணுதான். எப்பவுமே நம்மளோட மனசைப் பார்த்துக்கொண்டே இருப்பதுதான் அந்தக் கண்ணோட வேலை.  மனம் ஆக்டிவா இருந்தாலும், இன்-ஆக்டிவா இருந்தாலும், மனசை இந்தக் கண் பார்த்துக் கொண்டே இருக்கும்.  ஒரு சாட்சியாக!’

‘ஐயா, இந்த மூணாவது கண் எங்கே இருக்கு?  ஏன் அது மனசை மட்டுமே பார்க்கணும்?’ – காவ்யாவின் கேள்வியில் ஆர்வம் கொட்டிக் கிடந்தது.

‘இந்த மூன்றாவது கண் – நம் ஒவ்வொருக்குள்ளும் இருக்கும் சாட்சியாகிய உணர்வு.  விட்னெஸ்-கான்ஷியஸ்னஸ் அப்படினு வைச்சுக்கோ.  அதுதான் உனக்குள்,  அறிபவராக இருக்கிறது.  அதுதான் ஸப்ஜெக்ட்.  அதுதான் மற்ற எல்லாவற்றையும் விஷயமாக, ஆப்ஜெக்டாகப் பார்ப்பது.  வேதாந்தம் அதுக்குக் கொடுக்கிற முக்கியமான பெயர் ஆத்மா.  அது எல்லாவற்றையும் அறிவதால், அந்த அறிவொளிக்கு ‘சித்’ அப்படினும் பெயர்.  அதனோட பிரகாசத்தினால்தான், மனம் உயிரூட்டம் அடைகிறது.  அதனால மனசுக்கும் ஆக்டிவா இருக்கின்ற திறமை வருகிறது.’

‘அதாவது, மனம் ஒரு கண்ணாடி மாதிரி. சூரிய ஒளியை பிரதிபலிக்கிற கண்ணாடி மாதிரி’,  காவ்யா ஆழ்ந்து கேட்டிருக்கிறாள்.

‘ரொம்ப சரி!  மிகத்துல்லியமான கண்ணாடி மாதிரி மனம்.  ஆனால், கண்ணாடி சூரிய ஒளியை பிரதிபலிச்சு, பக்கத்தில் இருக்கிற மற்ற எல்லாவற்றுக்கும் ஒளியைத் தருவதால், அந்தக் கண்ணாடியே தன்னை சூரியன் அப்படினு நினைச்சுக்கலாமோ?  ஆனால் அப்படித்தான், மனம் ஆத்மாவின் ஒளியால் ஆக்டிவ் ஆன உடனேயே, தானே ஆத்மா அப்படினு நினைச்சுக்கிறது.  இதுதான் எல்லாத் தவறுகளுக்கும் ஆதாரமாய் இருக்கிறது.  இதைத்தான்  மூல-அவித்யா அல்லது அடிப்படை அறியாமை என வேதாந்தம் சொல்கிறது. ஏனென்றால் மனம் வெறும் சடப்பொருள் அல்லவா?’

‘ஐயா, மனம் உண்மையிலே சடமானதா?  மனம்தானே நினைவாக, அறிவாக எல்லாப் பொருட்களையும் படைக்கின்ற சக்தியாக இருக்கிறது!’

‘பொருட்களை மட்டும் என்ன,  உங்களுடைய உலகத்தையே, உங்கள் மனம்தான் படைக்கிறது’ – என்றார் ஐயா.

‘அப்படியானால், மனம் எப்படி சடம்?’ – விரைந்து கேட்டேன்.

‘அது ஏற்கனவே அறியப்பட்டதே!  உறக்கத்தில், மனம் எந்த சக்தியும் இல்லாமல், அதனுடைய இயற்கை நிலையான சடப் பொருளாகத்தானே இருக்கிறது! மீண்டும், கருணையால், ஆத்மா மனதிற்கு ஒளியைக் கொடுத்து எழுப்பினால்தான், மனம் மீண்டும் செயல்படுகிறது’.

‘ஐயா, நீங்கள் மூன்றாவது கண், மனதை மட்டுமே பார்க்கிறது அப்படினு சொன்னது ஏன்?  அந்தக் கண்ணால் ஏன் மற்ற விஷயங்களை, உலகத்தை எல்லாம் பார்க்க முடியாது?’ – காவ்யா கேட்டாள்.

‘வெல், மூன்றாம் கண் மனதை மட்டுமே பார்க்கிறது. ஏனென்றால், மற்ற எல்லாமே மனதில்தான் இருக்கிறது’

‘உலகமும் மனசுலதான் இருக்கு, அப்படினு சொல்றிங்களா?’

‘ஆமாம்.  மனம் இல்லைனா, எண்ணங்கள் இல்லை. எண்ணங்கள் இல்லைனா, காலம் இல்லை.  காலம் இல்லை அப்படினா, வெளி அதாவது space இல்லை.  காலமும், வெளியும் இல்லைனா, உலகமே இல்லை.  அதனால்தான் உங்களோட ஆழ்ந்த உறக்கத்தில, உங்களோட உலகமும் இல்லாமல் போய்டும்.’

‘அப்படினா, ஆழ்ந்த உறக்கத்திலே, வெறுமைதான் இருக்கு, அப்படித்தானே?’ நான் கேட்டேன்.

‘வெறுமை இருக்கு அப்படினு சொல்றதே முரண்பாடானதுதானே.  இருக்கு எனும் சொல் மிக முக்கியம். அது ஈஸ்வரனை, இருப்பினைக் காட்டுவது.  ஆழ்ந்து உறங்கும்போது, அங்கே இருப்பது மூன்றாவது கண் மட்டும்தான்.  வேறு எதுவும் இல்லை.  நத்திங் ஈஸ் தேர் அப்படினு சொல்லாமல், நத்திங் எல்ஸ் ஈஸ் தேர் அப்படினு சொல்லணும்’.

‘ஐயா, நான் தூங்கும்போது, உலகம் இல்லை என்றுஎப்படிச் சொல்ல முடியும்?’

‘நான் சொன்னது, உங்களோட உலகம் இல்லை அப்படினுதான் சொன்னேன்’ – ஐயா உங்களோட உலகம் என்பதை அழுத்தமாகச் சொன்னார்.

‘ஐயா, ஆனால் நான் திரும்பவும் விழித்துக்கொண்டால், தூங்கப்போவதற்கு முன்னாடி பார்த்த உலகம், தொடர்ந்து இருக்கிறதுதான் தெரிகிறதே? அதைவிட வேற என்ன உறுதி வேணும்,  உலகம் அழியலை அப்படிங்கிறதுக்கு. ஆகையால் எப்படி மனம்தான் உலகத்தைப் படைக்கிறதுனு சொல்ல முடியும்?’

‘நீங்கள் பார்க்கிற, அனுபவிக்கிற உலகம்,   உங்களுக்கு மட்டுமே சொந்தம்.  அது உங்களுக்கு மட்டுமே யுனீக்.  நம் ஒவ்வொருவருக்குள்ளும்  அப்படி நாம் அனுபவிக்கிற உலகம் யுனீக்காக  இருக்கு.  இதைப் புரிஞ்சுக்கிறது மிகவும் முக்கியம்.   வெளி உலகத்தில் பலபொருட்களும், தோற்றங்களும் எல்லார்க்கும் பொதுவாகத்தான் தெரியும்,  ஆனால், அது ஒவ்வொன்றைப் பார்க்கும் நம் ஒவ்வொருவரின் பார்வையும், அதனால் நாம் அடையும் ஒவ்வொரு அனுபவமும் ஒவ்வொருவருக்கும் தனித்தன்மையானது.  அதனாலதான், ஒரே பொருள் ஒவ்வொருவருக்கும் வேறுவேறு அனுபவத்தைத் தருகிறது.  இதைப் புரிஞ்சுண்டா,   நம்ம பார்வைப்படியே, மற்றவர்கள் ஒருவிஷயத்தைப் பார்க்கலையே அப்படிங்கிற கோபமோ, வெறுப்போ நமக்கு வரமுடியாது.  ஏன்னா, ஒவ்வொருவரும் தம்முடைய தனி உலகத்தில் மட்டுமே  இருக்கிறோம். இது கொஞ்சம் ஆழமான விஷயம்.  இப்போ நாம்  முக்கியமா எடுத்துக்க வேண்டிய கருத்து என்னவென்றால்,   நாம் நம் ஒவ்வொருவரின் கோணத்தில்தான் வாழ்கிறோம் என்பதால், வேதாந்தமே, நம்மைப் பற்றி மட்டுமே சிந்திக்க வைக்கிறது. அதுதான் நமக்கு இப்போ குறிக்கோள்’.

‘ஆமாம் ஐயா, நம்மைப்பற்றி முழுமையாத் தெரிந்து கொள்ளத்தான் ஆசை.  சரி, என்னோட மூணாவது கண்  எப்படி சிவனோட மூணாவது கண்ணோட சம்பந்தப்பட்டிருக்கு?  சிவனோட மூணாவது கண் எல்லாத்தையும் பொசுக்குவதாச்சே!’

ஐயா தன் கண்களைமூடி அமர்ந்திருந்தார்.

நான் பொறுமையாகக் காத்திருந்தேன். எனக்குத் தெரியும். ஒவ்வொருமுறையும், ஐயா சொல்லும் கருத்துக்கள் எல்லாமே எனக்குப் புரிந்து விடுவதில்லை.  ஆனால், ஒருமுறை கூட, அவரது வார்த்தைகள் என் மனதுள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தத் தவறுவதில்லை.  நான் அவற்றை அப்படியே உள்வாங்கிக் கொண்டு, என்றேனும் அவை பூத்துப் பலனளிக்கும் எனக் காத்துக் கிடப்பேன்.

ஐயா என்னை உற்றுப் பார்த்தார்.

‘சிவனின் மூன்றாம் கண் முழுதுமாய்த் திறந்தவுடன், அங்கே அழிவது மித்யா எனப்படும் தோற்ற மாயை.  அதுதான் நம்மை ஆத்மா எனக் காட்டாமல் மறைக்கின்ற அறியாமை என்னும் திரை.  அந்தத் திரை வீழ்த்தப்பட்டால், அந்தக் கணமே, எல்லாத் தோற்றங்களும் மறைந்து,  அறிபவன், அறியப்படும் பொருள் எனும் வேறுபாடு எதுவுமே இல்லாமல்,  இரண்டற்ற தன்மை – அதாவது – அத்வைதம் எனும் ஆத்மாவின் ஒருநிலை மட்டுமே விளங்கும்.  அது ஒரு சுகநிலை’

‘ஆழ்ந்த உறக்கத்தைப் போல’ – உமா சொன்னார்.

‘மிகச் சரி. அது ஒன்றுதான் ஏற்றுக் கொள்ளத்தக்க உதாரணம்.  எப்போதெல்லாம்,  இரண்டற்ற தன்மை இருக்கிறதோ அப்போதெல்லாம், அங்கே ஆனந்தம் மட்டுமே இருக்கிறது.  ஆனந்தம் என்பது பயம் அற்ற நிலை.  முழுமையான நிறைவில் இருக்கின்ற நிலை.  அங்கே விரும்பவோ, வெறுக்கவோ ஏதுமில்லை என்பதால், அமைதியும் நிறைவும் மட்டுமே அங்கே இருக்கிறது.  அதுதான் பூரணம் என்பது’.

சில நிமிடங்களுக்குப் பிறகு ஐயா தொடர்ந்தார்.

‘அதனாலதான் நமக்குத் தூக்கம் போரடிப்பதே இல்லை.  மத்த விஷயங்கள் போரடித்தால், நமக்குத் தூக்கம்தான் வரும்.  இதை ஆழமாக சிந்தித்துப் பார்த்தல், தூக்கம் என்பது எத்தகைய வரம் அப்படிங்கிறது புரியும்’.

‘ஆம் ஐயா. உண்மைதான்.  ஆனால் நீங்கள் சொல்வதைப் பார்த்தால், உறக்க-நிலைதான் நமது வீடு போலவும், விழிப்பு-நிலை, கனவு-நிலை என்பதெல்லாம், ஏதோ திணிக்கப்பட்ட பயணங்கள் போலவும் தெரிகிறது.  அப்படியா சொல்கிறீர்கள்?  அது நம்முடைய உலக வழக்கத்திற்குத் தலைகீழாக அல்லவா இருக்கும்!’

‘வேதாந்தம்  காட்டும் பாதையில்,   பெரும்பாலான உலக வழக்கங்கள் எல்லாம் தலைகீழாகத்தான் ஆகிவிடும்.  நம்மைப் பற்றியும், உலகத்தைப் பற்றியும், ஏன் கடவுளைப் பற்றியும் கூட நாம் வைத்திருக்கும் எண்ணங்கள் முற்றிலும் மாற்றப்பட்டுவிடும்.  அதனால்தான் வேதாந்தத்தை அறிய, பக்குவமான மனமும், நல்ல வழிகாட்டியின் துணையும் நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்’.

எனக்குள் நினைத்துக் கொண்டேன்.  ‘எனக்குத்தானே தெரியும், எத்தனை காலமாக மனதைப் பக்குவப் படுத்த முயன்று, பரிதாபமாக இன்னும் நான் தத்தளித்துக் கொண்டிருக்கிறேன் என்று’.

ஐயா தொடர்ந்து சொன்னார்.

‘ஆனால், நீங்கள் சொல்வதை நான் எடுத்துக் கொள்கிறேன்.  தூக்கம் சுகமாக இருக்கிறது என அதிலேயே நாம் வீழ்ந்திருக்க முடியாது.  அப்படி இருந்துவிட்டால், கோமா, சாவு என்றாகிவிடும்.  உடலோடு வாழும்வரை, இந்த உலகோடு நாம் உறவாடித்தான் வாழவேண்டும்.  அந்தக் கடமையை விட்டு  ஓடிவிடக் கூடாது.   என்ன முக்கியமான பாடம் என்றால்,  நம்முடைய மூன்றாவது கண்ணை அறிந்து கொள்வதாலும், அதன் பார்வையால், நாம் யார் எனும் உண்மையைப் புரிந்து கொள்வதாலும்,  உலகத்தில் சந்திக்கும் எல்லாச் சவால்களையும் நாம் எளிதாக எதிர் கொள்ள முடியும்.  அதனால் வாழ்க்கையே ஒரு அழகிய விளையாட்டாகிவிடும்.   திரையில் பார்க்கும் படத்தினைப் போல, வாழ்க்கை ஓட்டத்தை நாம் பார்த்து இரசிப்பவராக முடியும்’.

‘அதனால் என்ன பயன்?’

‘உறுதியான வலிமை,  முழுமையான விடுதலை, தூய்மையான இன்பம்!  உலகத்தோட ஈடுபட்டாலும், எவ்விதப் பந்தமும் இல்லாத சுகம்.  ஒரு பார்வையாளனாக, வாழ்க்கையை ஒரு திரைப்படமாகப் பார்த்திருக்க முடியும்.  அது ஏன்! விரும்பினால், அடுத்துப் பார்க்க வேண்டிய படத்திற்கான கதையையும் நாமே எழுத முடியும்’

‘ஐயா,  நீங்கள் சொல்றது – என் மனம்தான் ஸ்க்ரீன்,  என் வாழ்க்கைதான் அதில் ஒடும் சினிமா.  என்னோட மூணாவது கண்தான், சும்மா பார்க்கின்ற ரசிகன்,  அப்படித்தானே’ – நான் உறுதிப்படுத்திக் கொண்டேன்.

‘ஆமாம்.  பார்ப்பவனாக மட்டுமே நீங்கள் இருக்கும்வரை உங்களுக்குப் பாதிப்பே இல்லை!’

‘ஐயா, தயவு செய்து, இதை மறுக்காதீர்கள்.  திரைப்படக் காட்சிகள் மனதை உலுக்காமல் இருக்காது.   அதே மாதிரி, வாழ்க்கையில் எந்தப் பாதிப்புமே இல்லாமல் நாம் இருந்துவிட முடியாது’ – இது உமா.

‘ஆமாமாம்.  நாம் பணம் கொடுத்து டிக்கட் வாங்கிக் கொண்டு பார்க்கிறோம். ஏனென்றால், கொடுத்த காசுக்கு, சிரித்து, அழுது அந்த ரோலர்-கோஸ்டரில் ஏறி, இறங்கி வரவேண்டும் என்பதற்குத்தானே!  அதனால் நாம் அந்தப் பாதிப்புக்குள்ள போய்ட்டு வருவது நடப்பதுதான்.  ஆனால்,  அந்தப்பாதிப்பு நிலையானது அல்ல.   நீங்கள் நிஜமாகவே பைத்தியமாக இருந்தாலே ஒழிய, திரைப்படத்திலிருந்து, நீங்கள் வேறுபட்டவர் என்பதில் உங்களுக்கு சந்தேகமே வரக்கூடாது.’

‘இன்ட்ரெஸ்டிங்க் ஐயா;  என்னோட மூன்றாவது கண்ணுக்கும் சிவனோட மூன்றாவது கண்ணுக்கும் என்ன தொடர்பு ஐயா, அதை தயவு செய்து சொல்லுங்கள்’, நான் கேட்டேன்.

உமாவும் கூடவே கேட்டார்.

‘ஆம் ஐயா.  புராணங்களில் நான் படித்திருக்கேன்.  தேவர்கள் எல்லாம் சக்தியிடம் வேண்டியதால், சக்தி, மன்மதனை மீண்டும் வரச் செய்தார் அப்படினு.  சக்தி ஏன் சிவபெருமானிடம், அவரது பாதி மூடியிருந்த நெற்றிக் கண்ணை, அப்படியே வைத்துக் கொள்ள வேண்டினார்?  அதையும் சொல்லுங்கள்’.

‘புராணங்கள் எல்லாமே மிக அழகான கதைகளைக் கூறி, அதன் வழியாக மாறாத உண்மையை நமக்குத் தருவதற்காக இருப்பவைதான்.   ஒவ்வொரு நிகழ்ச்சியும், ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு காலகட்டத்தில் அறிவையும், பண்பையும் தருபவை.  அண்டம், பிண்டம் என எல்லா வகையிலும்தான்.  உதாரணமாய், உங்களுக்கு ஒரு மனம் இருக்கு.  தூங்கும்போது, அது சடமாய் இருக்கு.  உறங்கும்  உடலும், மனமும் வெறும் பிண்டம்தான்.  பிறகு மனம் மீண்டும் எழுப்பப்பட்டு,  அதனால் உடலும் எழும்பி, அடுத்த விழிப்பு நிலையில் நாம் ஈடுபடுகிறோம்.  எல்லா உயிர்களையும் சேர்த்துப்பார்த்தால், அங்கே காஸ்மிக்-மைண்ட் – அதாவது அண்ட அளவில் ஓர் மனம் இருக்கிறது.  அதுவும், ஆழ்துயிலில் சடமாகத்தான் இருக்கும்.   பிண்டமானாலும், அண்டமானாலும், ஆழ்துயிலில், மீந்து இருப்பது மூன்றாவது கண் மட்டுமே. அதுவே இரண்டற்ற சுகநிலை.  விழிப்பு வந்தால், அது பிண்டத்தின் மனமாயினும், அண்டத்தின் மனமாயினும், அங்கே ஓடும் படம்தான் தோற்றங்களும், பெயர்களும்’

‘யார் இந்தப் படத்தை  ஒளிபரப்புவது?  யார் இதற்குக் கதை எழுதுவது?’ – இது காவ்யா.  டிஜிட்டல் மீடியா நிபுணராக இருக்கும் காவ்யாவுக்கு,  இம்மாதிரியான விவரங்களில் தீர்க்கமான பார்வை உண்டு.

ஐயா பெரிதாகச் சிரித்தார்.

‘இது ஆழமான கேள்வி காவ்யா! சுருக்கமாய்ச் சொன்னால், உன்னுடைய மூன்றாவது கண்ணின் ஒளிதான் உன் வாழ்க்கைப் படத்துக்கு உயிரோட்டமான ஒளி.  உன்னுடைய மனம்தான் திரை. இதிலே முக்கியமானது என்னவென்றால், படத்துக்கான கதை, லொகேஷன் எல்லாமே உன் பொறுப்புத்தான். நீதான் உன் வாழ்க்கைப் படத்தின் கதையைத் தீர்மானிப்பவர்.  அதனால், ஒருவேளை அது ஒரு கேலிக் கூத்தாகிட்டால், அதுக்கும் நீதான் பொறுப்பு’.

‘ஐயா, இது பயத்தையும் தருகிறது.  பொறுப்பையும் தருகிறது.  நான் எப்படி ஐயா, என்னோட வாழ்க்கைப் படக் கதையை எழுதுவது, அது எப்படி முடியும்?’

‘நிச்சயமாக முடியும்! நம் ஒவ்வொருவராலும் முடியும்.  ஆனால் என்ன, அதுக்கான தகுதியை முதலில் நாம் அடையணும்.   கிட்டத்தட்ட நாம எல்லோருமே வாழ்க்கையை ஒரு சினிமா மாதிரி வெளியிலே வைச்சுப் பார்க்கவே துணிவதில்லை.  நாம் யார் என்பதைத் தவறாகப் புரிந்து கொண்டதால், பார்க்கிறவன் அப்படிங்கிறதும் விட்டு,  நடிக்கிறவன் அப்படிங்கிறதும் விட்டு,  அந்தப் பாத்திரமாகவே மாறி நம்மை நாம தொலைச்சுடறோம்.   அதுதான் எல்லாத் துயரத்துக்கும் காரணம். அப்படி இருந்தால், எப்படிக் கதையை மாற்றி எழுத  முடியும்? அந்த நம்பிக்கைதான் எப்படி வரும்!’ – இப்படிச் சொல்லிவிட்டு, பின்னே திரும்பிப் பார்த்துச் சொன்னார்.

‘கவலைப்படாதே!   இதுக்கும் வழி இருக்கு.  முதல்ல உன்னை யார் அப்படினு புரிஞ்சுக்கிற வரைக்கும், விசாரித்துக் கொண்டே இரு.   அதுவே தெளிவைக் கொடுக்கும்.  ஒருநாள்,  புத்தம் புது பேப்பரும், பேனாவும் கையில் இருக்கும்.   கதையை எப்படி வேண்டுமானாலும் நீயே எழுதிக் கொள்ளும் பலம் கிடைக்கும்’.

காரின் ஓட்டத்தைத் தவிர, வேறு சப்தம் கொஞ்ச நேரத்துக்கு இல்லை.  கீர்த்திக்கு ஐயா சொன்ன வார்த்தைகள் புரிந்ததா இல்லையா தெரியவில்லை. ஆனால், அவள் இன்னும் புராணத்தில் வந்த சந்தேகத்தில் நிற்கிறாள் என்பது அவளது கேள்வியில் தெரிந்தது.

‘ஐயா.  ஏன் சிவனின் மூன்றாம் கண் மன்மதனை எரித்தது?’

‘மன்மதன் என்பவன் ஆசைகளின் அடையாளம்.   ஆசை என்பதுதான் எல்லாச் செயலுக்கும் வித்து.  ஆசையுடன் செய்யும் செயலால், நமக்கு பந்தம் வருகிறது.  அதுவே துயரத்துக்குக் காரணம்.  ஆனால் ஆசை என்பது, ஆசைப்படுவதற்கு  வேறு ஒரு பொருள் இருந்தால்தானே வரும்?  அதாவது, எங்கே வேறுபாடுகள் இருக்கிறதோ, அங்கேதான் ஆசை வரும். அதனால் துயரம் வரும்.  வேறுபாடுகள் என்பது தோற்றங்களினால், இரண்டற்ற நிலையால் வருவது.  சிவனின் மூன்றாம் கண், ஆனந்தத்தை மட்டுமே தரக் கூடியது. அதன் பார்வையில், வேறுபாடுகள் இல்லை.  அதனால்தான், அந்தப் பார்வையினால், மன்மதன் சாம்பலாகிப் போனான் எனக் கதை இருக்கிறது’.

‘அதற்காகத்தானா சக்தி சிவனிடம் அவருடைய பாதி மூடியிருக்கும் நெற்றிக்கண்ணை அப்படியே வைத்திருக்க வேண்டினார்?’

‘பாதி திறந்த பார்வையினாலேயே,  “தோற்றப்பிழை இருக்கிறது, இதனை எல்லாம் தாண்டி, இரண்டற்ற உண்மை ஆனந்தமும் இருக்கிறது, அதனைத் தேடும் வழியுமிருக்கிறது”  என நமக்கு விடுதலைக்கான அறிவு மறைமுகமாக, மறைகள் எனும் வேதங்கள் மூலமாக விளங்குகிறது.  அதேபோல, பாதி மூடிய கண்ணின் கருணையினாலேயே, இறைவனின் சக்தி, தனது லீலைகளைச் செய்து, மாயை எனும் தனது திரையினை வீசி, அண்டங்களின், பிண்டங்களின் படங்களைத் திரையிட்டுக் கொண்டு இருக்கிறது’.

‘ஐயா, எனக்குப் புரியவில்லை!  எதற்காகச் செய்ய வேண்டும்?  இரண்டற்ற அத்வைதமாகவே ஏன் எப்போதும் இருந்துவிடக்கூடாது?  ஏன் இந்த உலகத்தை எல்லாம் சக்தி படைக்க வேண்டும்?’

முக மலர்ச்சியுடன் ஐயா சொன்னார்.

‘இரண்டற்ற அத்வைத நிலைதான் எப்போதும் இருக்கிறது. சிவத்தின் சக்தியோ, தனது விருப்பத்தால்,  மித்யா எனும் திரையிட்டு, இந்த நாடகங்களை எல்லாம் நடத்திக் கொண்டிருக்கிறாள்.  அது ஏன் என யாரால் சொல்ல முடியும்?  வேதங்களே, விளையாட்டாக, பரம்பொருளுக்கும் பொழுதுபோகவில்லையோ என வியக்கிறது.  அதனால், நான் என்ன சொல்வது!   ஆனால், இதில் முக்கியம் என்னவென்றால், இந்த நாடகத்தைப் புரிந்து கொண்டு, நாமே நம்மை அதில் பங்காய் வைக்கவும், அல்லது பார்ப்பவராய் ஒதுங்கி நிற்கவும்,  அந்தப் பரம்பொருளாகவே கலந்து விடவும் நமக்கு உரிமையும் வழியும் தந்திருக்கிறது.  எனவே குறை சொல்லவே நமக்கு வழியில்லை!’

‘எப்போதான் சிவன் மூன்றாவது கண்ணை முழுசாய்த் திறப்பார்?  அப்போ எல்லாமே அழிந்து விடுமல்லவா?’

‘ஆமாம். யாருக்குத் தெரியும்!  நிச்சயமாக, இந்த விளையாட்டு போதும் என்று சக்தி திரையினைச் சுருட்டிவிட நினைத்தால், அந்தக் கணமே, முக்கண் திறந்த மாதிரிதான். எல்லாம் இறைவனுக்குள் அடங்கிவிடும்.  அண்டங்களின் ஆழ்ந்த உறக்கம்தான் அங்கே இருக்கும்.  சாட்சியாக அந்தக் கண் மட்டும் பார்த்துக் கொண்டே இருக்கும்’.

உமா சொன்னார், ‘நான் படித்திருக்கிறேன். ஒருமுறை சக்தி சிவனின் கண்களை முழுதுமாக மூடிவிட முயன்றதை’

‘ஆமாம். அப்படியும்  ஒரு புராணக்கதை இருக்கிறது.பரம்பொருளின் கருணைக் கண்கள் முழுதும் மூடப்பட்டால், ஒளி ஏது?  அந்த ஒரு நொடியிலேயே அறியாமை இருள் மூழ்க, எவருக்கும் விடுதலைக்கான வழி ஏதுமின்றிப் போனது.  தன் தவற்றை உணர்ந்து, உடனே கண்களை மூடிய தன்னையே தண்டித்துக் கொள்பவராக, சக்தி பூமியிலே பார்வதியாகப் பிறந்து, கடுந்தவம் இயற்றி, மீண்டும் சிவனை அடைந்தார் என்பதாகப் போகும்.  முக்கியக் கருத்து,  அத்வைதமான இறைவனின் அருட்கண் ஒளியே எல்லாவற்றுக்கும் ஆதாரம் என்பதே ஆகும்’.

‘ஐயா, சிவனின் மூன்றாம் கண் முழுதும் திறந்ததால், அண்டங்கள் எல்லாம் ஆழ் துயிலில் போகிறது என்றால், அப்புறம் எப்போது மீண்டும் விழிக்கும்?’

‘அண்டங்களும் பிண்டங்களைப் போலத்தான்.  நினைத்துப் பாருங்கள். தினமும் உங்களுக்குத் தூக்கம் வருவதும்,  மீண்டும் விழிப்பு வருவதும், உங்கள் முயற்சியாலா நடக்கிறது?  அதுபோலவே, உலகங்களும் அடங்கி மீண்டும் எழுந்து, மீண்டும் அடங்கி, இப்படி மாறி மாறி நடந்து கொண்டே இருக்கும்’.

‘ம்ம்ம்.   இது களைப்புத் தரும் செயலாக அல்லவா இருக்கிறது..’

‘ஆமாம்.  அதுவே களிப்புத் தரும் செயலாகவும் இருக்கலாம். அது  நாம் எப்படிப் பங்கேற்கிறோம் என்பதைப் பொருத்தது.’

‘நமக்கு அதற்கான வாய்ப்பு இருக்கிறதா, என்ன?’

‘நிச்சயமாக.   நம் எல்லோருக்கும் நம் பயணத்தை எப்படி அமைத்துக் கொள்ளவேண்டும் என்ற வழி இருக்கிறது.  இதனைத் தருவதே வேதாந்தம்.  குறையானதும், அழிவதுமான உடலும், மனமுமே உங்களது  உபகரணம் என்றாலும், நீங்கள் குறையற்ற, முழுமையான ஆத்மா எனச் சொல்வதே வேதாந்தம். அதன் வழிகாட்டலினாலேயே நம்முடைய மூன்றாம் கண்ணை நாம் அறியவும், அதன் மூலமே பார்த்து நம்மை நாமே அடைகின்ற மிகப்பெரிய பரிசும்  கிடைக்கிறது.இதனை ஆழ்ந்து சிந்தித்து இருக்கவே சிவராத்திரி பூஜை.’

‘ஓ, அதற்காகத்தான் சிவராத்திரி பூஜை இரவில் நடக்கிறதோ…. இருள் என்பது அறியாமை என்பதாக’, நான் கேட்டேன்.

‘ஆம். அது மட்டுமல்ல, ஆழ்துயில் எனும் ஆனந்த அனுபவத்தையும் இரவுப்பொழுது  நினைவூட்டுகிறது. சிவன் இருக்கும் இடமாக உடல்கள் புதைந்தும், எரிந்தும் இருக்கும் இடுகாட்டையும், சுடுகாட்டையும் புராணங்கள் காட்டுவதன் பொருள்,  உடலும், மனமும் சடலங்களான ஆழ்துயிற் களத்தினைக் காட்டத்தான்.  அவ்விடங்களில், சுடர் விட ஆடும் சிவனே,  அறிவொளியாக ஆழ்துயிலிலும் சாட்சியாக இருக்கும் அகக்கண். பிரதோஷம் என, இனிய மாலையும் இரவும் கூடும் நேரம் சிவனுக்கு உகந்த நேரமாக நாம் கொண்டாடுவதும்,  நம்மை ஆழ்துயிலுக்கு அரவணைத்து அழைத்துச் செல்லும் அந்த நேரத்தைப் பெருமைப்படுத்தத்தான்.   அந்த அரவணைப்பால்,  இரண்டற்ற நிலையில் இருப்பதுதான் நம் இயல்பு.  அதனால்தான்,  அதைத் தவிர்த்த மற்ற எல்லா அனுபவங்களையும், வேதாந்தம் அவஸ்தை அல்லது பாதிப்பு எனக் காட்டியது’

காருக்குள் அப்படி ஒரு அமைதி.விமான நிலையம் அருகில் வந்தாகிவிட்டது.  இந்த இனிய உரையாடல் தொடரட்டும் என்றுதானோ, என்னை அறியாமல் நான் காரை மெதுவாக ஓட்டிக் கொண்டிருந்தேன்!

‘ஐயா, நீங்கள் வேறுசில முவ்வார்த்தைகளைத் தருவதாகச் சொன்னீர்கள்’ – நான் நினைவுபடுத்தினேன்.

‘யெஸ்…. வேதாந்தம் என்பது நம்பிக்கையை வைத்து அடைய வேண்டிய அறிவு அல்ல.  அதற்கு ஈடுபாடு அல்லது ஸ்ரத்தை தேவை. அது அறிவுபூர்வமான கேள்விகளை எழுப்பி, அதற்கான விடையினை விழைகின்ற துணிவு.  எல்லாவற்றையும் அனுபவத்தில் நிரூபணம் செய்து கொள்ள வேண்டும் என்பது வேதாந்த வழி. அவ்வழியினால் நாம் அடையும் பயன்,  வேறு பிறவியிலோ, உலகிலோ  அல்ல,   இப்பிறவியில், இப்பொழுதே, நேரடியாகப் பெறப்படுவதாகும்   அதுக்காகத்தான், நீங்கள் மேலும் ஆழ்ந்து  விசாரிக்க, கேள்விகள் கேட்க, சிலவற்றைச் சொல்கிறேன்’.

‘சொல்லுங்கள் ஐயா’

‘வாழ்க்கையில் நமக்குத் தேவை இன்பம், அதற்கான பொருட்கள்,  மேலும் இவற்றை ஈட்டவும் அனுபவிக்கும் நேர்மையான வழிகள்.  இதனை தர்மம், அர்த்தம், காமம் அல்லது அறம், பொருள், இன்பம் என வேதாந்தம் காட்டுகிறது.  தர்மம்தான் முதலில் இருக்கிறது.  அதைப் புரிஞ்சுக்கணும்’.

‘சரி, அடுத்த மூன்று?’

‘விருப்பத்தை அடைய செயல் செய்ய வேண்டும்.  நாம் செய்கின்ற எல்லாச் செயல்களையும் மூன்று வகையில் அடக்கலாம். அவை உடலால் செய்வது, வாக்கால் செய்வது, மனதால் செய்வது.  காயிக, வாசிக, மானஸ கர்ம எனும் இவை மூன்றும் சாதனத்ரயம் எனப்படும்.’

ஐயா தொடர்ந்தார்.

‘செய்யும் எந்தச் செயலுக்கும் பலன் விளையாமல் போகவே போகாது.  நமக்கு, மூன்றுவிதமான பலன்களே எல்லாவற்றையும் தருகின்றன.  ஒன்று  நாம் விரும்பிய பொருளை அடைதல்.  இது விஷ்ய-ப்ராப்தி எனப்படும்.  இரண்டாவது, அடைந்தவற்றை அனுபவிக்க ஏதுவான உடல் நலனும், மன வளமும்.  இது உபாதான-ப்ராப்தி ஆகும்.  மூன்றாவது, நாம் நன்றாக அனுபவிப்பதற்கு ஏற்ற இடமும், சூழலும் வேண்டும். இது லோக-ப்ராப்தி ஆகும்.  எனவே, இம்மூன்றையும் ‘சாத்ய-ப்ராப்தி’ என்ற பெயரால் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்’.

‘ஐயா, நாம் இந்த மாதிரி பலனை எப்போதும் அடைய முடிவதில்லையே?’

‘செய்த செயலுக்கேற்ற பலன் இப்பிறவியில் இல்லை என்றாலும், வரும் பிறவியிலாவது கிடைக்கும்.’

‘சரி ஐயா, இப்படி முயற்சி செய்து, பலனை எல்லாம் பெற்று அனுபவித்து வந்தால், அதுதானே சுகம்?’

‘இல்லை.  இந்த சுகங்களை எல்லாம் தேடி அனுபவித்தாலும், இவைகள் எல்லாம் நிறைவானவை அல்ல.  மூன்றுவிதமான குறைகளால்அவை  மூடப்பட்டுள்ளன.  ஒன்று, அவை எல்லாமும் துயரத்திலேயே முடிகின்றன.  இரண்டு, எவையும் முழு நிறைவைத் தருவதில்லை. மூன்று, அப்படி விரும்பிய பொருட்கள் நம்மை அடிமைப் படுத்திவிடுகின்றன.  இவற்றை வேதாந்தம், துக்க-மிஸ்ரிதம், அதிருப்தி-கர்த்த்வம், பந்த-கத்வம் என அழைக்கின்றன.  இந்த முவ்விடர்களையும், தோஷத்ரியம் என நினைவில் கொள்ளுங்கள்.’

‘ஐயா, குழந்தைகளுக்குப் புரிந்ததா எனத்தெரியவில்லை. நிச்சயமாக நான் ஒப்புக்கொள்கிறேன்.  சுகமென்று நினைத்ததெல்லாமே முடிவில் துயரத்தில்தான் முடிகின்றன.  இதெல்லாம் தெரிஞ்சு இருந்தும், பின்னே ஏன் அதன் பின்னாடியே நாம் போகிறோம்?’ – நான் கேட்டேன்.

‘ஆமாம்,  நாம எல்லாருமே இப்படித்தான்.  இதெல்லாம் தெரிஞ்சிருந்தாலும், தாளாத ஆசையினால், அதையே தேடி, ஸம்ஸாரம் எனும் துயரத்திலேதான் கிடக்கிறோம்.  இதை மாத்தணும்னா, நாம மாறணும், நம்மளோட அப்ரோச் மாறணும்.  இயற்கையிலேயே, நமக்கு மூன்று குணம் இருக்கு. த்ரிகுணா – சுருக்கமாச் சொன்னால், சோம்பல் அல்லது தமஸ், உணர்ச்சி அல்லது ரஜஸ், பொறுமை அல்லது ஸத்வம்.  இந்த மூன்றையும் சரியாப் நாம் பராமரிக்கவில்லை என்றால், அவற்றின் விபரீதக் கலப்பினாலே, நம்மால் தூய்மையாக உயர முடியாது.’

‘இதுக்கு என்ன வழி?’

‘குண மாற்றம்தான் வழி.  பகவத்கீதையின் முக்கியமான கருத்தே, குணத்தில் மாற்றம் வரணும் அப்படிங்கிறதுதான்.  நம்மை நாம மாத்திக்கணும்.  அதைவிட்டு நாம் உலகத்தை மாத்தறேனு, முட்டாள்தனமா இருக்கோம்.   இதுக்கான  மிக எளிய, மிகப் பக்கத்தில் இருக்கிற பாதைதான், நமக்குள்ள இருக்கிற மூன்றாம் கண்ணைப் புரிஞ்சுக்கிறது.  அதைச் செய்தால், அப்புறம், நம்முடைய குணங்கள் மாறும். நோக்கங்கள் மாறும். அறம், பொருள், இன்பம் என்பதை விட்டு, வீடு அல்லது மோக்ஷம் அப்படிங்கிற சுதந்திரம்தான் நமது குறிக்கோளா ஆகிடும்.  மோக்ஷம் அப்படினா, செத்தபிறகு எங்கோ போவது இல்லை. இங்கே, இப்போ, முழுமையான நிறைவும் விடுதலையும் கொண்டு இருப்பது.  அது கிடைத்ததா அப்படிங்கிறதுக்கு அடையாளம், எதிலும் வேறுபாடு பார்க்காத பண்பு.’

‘ஐயா, மோக்ஷம் கிடைத்தால், நான் எக்ஸாம் எழுத வேண்டிய அவசியம் இருக்கா? ‘ – கீர்த்தியின்  கேள்வி இது.

ஐயா சிரித்தார்.

‘கீர்த்தி, மோக்ஷம் கிடைத்தாலும், நீ எக்ஸாம் எழுதியாகணும்.  ஆனால், நீ அப்போ ரொம்ப ஹாப்பியா எழுதுவாய்.  தோல்விபற்றி கவலைப்பட மாட்டாய்.  ஏன்னா, நீ தோற்க மாட்டாய்!’ – ஐயா இப்படிச் சொல்லிக்கொண்டு, என்னைப் பார்த்துப் புன்னகையுடன் கண் சிமிட்டினார்.

விமான நிலையம் வந்து விட்டது.  கீழே இறங்கிக்கொண்டே, ‘கீர்த்தி, உன்னுடைய ஸாதன-த்ரயம்  ஷார்ப்பாக இருக்கட்டும்.  அதில் மட்டும் இப்போ கவனம் வை. ஒருநாள் நான் சொன்ன கருத்தெல்லாம், உனக்கு நல்ல பலனைக் கொடுக்கும்!’

ஐயாவை அனுப்பிவிட்டுக் காரில் திரும்பிக் கொண்டிருந்தோம். எல்லோர் மனதிலும் உரையாடலின் பதிவு இன்னும் பசுமையாக இருந்தது.

‘சாதன-த்ரயம், சாத்ய-த்ரயம், தோஷத்ரயம், த்ரிஅவஸ்தா, த்ரிகுணா….. ஸோ மெனி த்ரீஸ் டுடே!’   காவ்யா இப்படிச் சொல்லி நினைவு படுத்திக் கொண்டாள்.

அப்போது என்னுடைய மொபைல் போன் ஒலித்தது.  உமா எடுத்துப் பார்த்துவிட்டுச் சொன்னார்.

‘இது 3-நெட்வொர்க் அழைப்பு.  333 அப்படிங்கிற நம்பரைக் கூப்பிட்டால், அருமையான தள்ளுபடி எல்லாம் இருக்காம்.’

கீர்த்தி கத்தினாள். ‘ நோ…..வேண்டாம்…. ஏற்கனவே நிறைய மூணு இன்னிக்குக் கேட்டாச்சு’

நிச்சயமாக!  போனை ஸ்விட்ச்-ஆப் செய்தாகிவிட்டது.   ஐயாவுடன் உரையாடியதில், எல்லோரும் சிவராத்திரிக்கு ஸ்விட்ச்ட்-ஆன் !

ஓம் நமசிவாய

 

மீ. ராஜகோபாலன்

21-February-2017

 

 

Related Posts

Share this Post