விநோதப் பரிசு
ஐயாவுடன் உரையாடல் (13)
ஐயாவை வரவேற்கக் கதவைத் திறக்கும்போது, என்னுடைய மறு கையில் அமேசானிலிருந்து வரவழைத்திருந்த mystery gift இருந்தது.
‘வாருங்கள் ஐயா’, நான் அழைத்தேன்.
என்னுடைய கைகளில் இருப்பதை கேள்விக்குறியிடன் பார்க்கின்ற ஐயாவிடம் சொன்னேன்.
‘இதுவா!கீர்த்திக்கான இரகசியப் பரிசு ஐயா! அவளுக்கு இன்னும் சில நாள்ல பிறந்த நாள் வரும். அதுக்காக! ‘
ஐயா சிரித்துக்கொண்டே இருக்கையில் உட்கார்ந்தார்.
‘ஆமாம் ஐயா, குழந்தையா இருக்கும் போதெல்லாம், சுலபமா பரிசு வாங்கிட முடிஞ்சுது. இப்போ எதை வாங்கித் தரதுனே
புரியலை.அதனாலதான் இந்தமுறை, அமேஸானில் இருந்து mystery gift அப்படினு வாங்கிட்டேன்.எனக்கே இதில் என்ன இருக்குனு தெரியாது.’
‘ரொம்ப நல்லது, விழாவை சிறப்பாக் கொண்டாடுங்கள்’ என்றார் ஐயா.
‘நிச்சயமாய் ஐயா.குழந்தைகளின் பிறந்தநாளைக் கொண்டாடுவதே சந்தோஷம்தான்!’
தொடர்ந்து, இதை ஏன் சொன்னேன் என்று தெரியவில்லை.
‘ஆனால், இப்போல்லாம், என்னோட பிறந்தநாள் அப்படினு கொண்டாடுவதே பிடிக்கலை!’
‘ஏன்?’
‘என்ன இருக்கு ஐயா கொண்டாடுறதுக்கு! ஒன்னும் பெரிசா செஞ்சு சாதிக்கலை. அதனால, கொண்டாட ஒரு காரணமும் இல்லை’.
ஐயா என்னை ஆழ்ந்து பார்த்தார்.
‘பிறந்தநாள் ஒண்ணும் நீங்க சாதிச்சு சம்பாதிக்கறது இல்லை. அதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஏன், எவருமே சாதிச்சு அடையறதில்லை பிறந்த நாள். நிச்சயமாக உங்களோட செயலால், ஒவ்வொரு பிறந்த நாளாய் நீங்கள் அடையலை அப்படிங்கிறது வாஸ்தவம்தான்’.
அதுக்குப் பதில் சொல்வதற்குள் ஐயாவே சொன்னார்.
‘பிறந்த நாள் ஒரு ஆசீர்வாதம்.இறைவனருள் நமக்குக் கொடுத்த வரம்’.
நான் கீழே அமர்ந்தேன். இந்த உரையாடலில் ஒன்று கிடைக்கப் போகிறது என்பது உறுதியாகத் தெரிந்தது.
ஐயா தொடந்தார்.
‘பிறந்த நாள் மட்டும் என்ன, ஒவ்வொரு நாளுமே அனுக்ரஹம்தான், இறையருள்தான். உங்க காரியத்தினாலா, தினமும் விழித்து எழ முடிகிறது, தினமும் தூங்க முடிகிறது! மூச்சு வந்து போறதும், உங்க காரியத்தினாலேயா? இல்லையே!எல்லாமே இறையருள். உலகத்தில் என்னவெல்லாம் அதிசயம் இருக்குனு தேடறதை விட்டு, நம்மையே நாம பார்த்தால், எல்லா அதிசயமும் நமக்குள்ளேயே இருக்கிறது புரியும். ‘
‘ஆமாம் ஐயா,அபூர்வமாய்த்தான் நாம இதப்பத்தி எல்லாம் சிந்திக்கிறோம். மனிதப் பிறவியே மகத்தானதுதான்’
‘ஆமாம். அதனால்தான், ஒவ்வொரு பிறந்த நாளும், இல்லையில்லை, ஒவ்வொரு நாளும் ஆராதிக்கப்படணும். அதனால, பிறந்த நாள்னு ஒரு நாளாவது இந்த மகிழ்ச்சியை, நன்றியை இறைவனுக்குக் கொடுக்கறது முக்கியம்தானே?’
‘உண்மை ஐயா! ஆனால், நம்மோட உடம்பு வயசாகி, தளர்ந் து அழிகிறதே அப்படினு ஒரு அபாய மணி அடிக்கிற மாதிரியும் இருக்கே! அதனால எப்படிக் கொண்டாட முடியும்?’
‘இருக்கலாம். ஆனால் அந்தக் கவலை, உடம்போட நாம் ஒட்டி, ஆசைப்பட்டு இருக்கிறதால்தான். நீங்க நிஜமாகவே வயசாகி தேய்ந்து போற மாதிரி நம்புறீங்களா?’
‘இல்லை ஐயா… மனசுல எனக்கு எந்த மாற்றமும் இல்லாத மாதிரிதானிருக்கு! ஆனால் உடல் கண்ணுக்கு முன்னாடியே தேய்கிறதே! அதுக்குக் கவலைப்படக் கூடாதா?’ – என் கேள்விக்குள் ஒரு ஆதங்கம்.
‘எதெல்லாம் உருவத்தோட இருக்கோ, அதெல்லாம் மாறி அழிஞ்சிண்டேதான் இருக்கும். அதுக்கு எதுக்குக் கவலை!ஒரு கிழிஞ்ச சட்டையை, எவ்வளவுதான் விரும்பிப் போட்டிருந்தாலும், ஒரு சமயம் தூக்கிப் போட்டுட்டு வேற புதுசா மாட்டிக்கிறது இல்லையா!’
‘ஐயா, சட்டையைப்போய் உடம்போட கம்பேர் பண்ண முடியுமா!’, நான் கேட்டேன்.
‘ஏனாம்!ஒருவேளை, ஒருத்தனோட காலை எடுத்தால்தான் அவனால் உயிர்வாழ முடியும்னா, அவன் என்ன செய்வான். சீக்கிரமாக் காலை எடுத்துத் தன்னைக் காப்பாத்திக்கத்தானே விரும்புவான்! உண்மையிலே, உடம்பு நம்மோட விருப்பம் இல்லை!’
‘அப்படினா, வேற என்ன?’
‘உங்களோட விருப்பம் நீங்கள்தான்! உங்களோடஇருப்பு, எப்பவுமே நீங்கள் இருக்கணும் அப்படிங்கிறதுதான் உங்களுக்கு முக்கியம்.’
‘ஆனால், அதான் உத்தரவாதம் இல்லையே! செத்துப் போனால் நாம் இல்லாமற் போய்விடுவோமே!’
‘இல்லை, நீங்கள் எப்போதுமே இருப்பீர்கள். ஆனால் உங்கள் வெளிப்பாடுதான் மாறிண்டே இருக்கும்’
‘புரியலை ஐயா’.
‘இந்த அறையிலே உங்களால இதுதான் ஒளி அப்படினு அதோட இருப்பைக் காட்ட முடியுமா?’
‘ம்ம்.. நேரடியா இல்லை. இப்போநீங்க, இந்தப் பார்ஸல் எல்லாம் இங்கே இருக்கே, அதைவைச்சு, இந்த அறையில் ஒளி இருக்குனு சொல்லுவேன்’.
‘அப்படியேதான். ஒரு வெளிப்பாட்டின் மூலம்தான் துல்லியமான எதனோட இருப்பும் தெரிகிறது. நீங்களும் அப்படித்தான், உடம்பு அப்படிங்கிற சட்டையை மாட்டிண்டா, வெளிப்பட்டுத் தெரிவீர்கள்.’
நான் சொன்னேன்,
‘பிறப்பு என்பது அப்படி ஒரு வெளிப்பாடு!’
‘ஆமாம். அதனாலதான் அதைக் கொண்டாடணும். நன்றி தெரிவிக்கிற மாதிரியாவது!’
‘அந்த லாஜிக்கில் பார்த்தால், இறப்பும் ஒரு வெளிப்பாடா?’
‘இறப்பு, ஒரு வெளிப்பாட்டுக்கு முன்னாடி இருக்கிற இடைவெளி அப்படினு வைச்சுக்கலாமே?’
‘அது நல்லதா, கெட்டதா?’
‘அது உங்களைப் பொறுத்தது! புதுசா சட்டை போட்டுண்டா, அது நல்லதா, கெட்டதா?’ – ஐயா திருப்பிக் கேட்டார்.
‘ஐயா, அது எந்த மாதிரி சட்டை எனக்குக் கிடைச்சது அப்படிங்கிறதைப் பொறுத்தது’
‘அதே மாதிரிதான், எந்த மாதிரி உடம்பு கிடைச்சது அப்படிங்கிறதைப் பொறுத்தே, இறப்பும் நல்லதா, கெட்டதா அப்படினு தெரியும்’.
‘ஐயா, சட்டையை நானே செலக்ட் பண்ணிக்க முடியுமே…. ஆனால்…’
ஐயா குறுக்கிட்டார்.
‘உடலையும்தான்! உங்கள் மனம்தான் அதற்குக் காரணம். அதில் விதைக்கிற ஆழ்ந்த ஆசைகள்தான் வாசனையாய் இருந்து அதை நிறைவேற்ற ஏற்றமாதிரி உடலைப் படைச்சுக்கிறது.’
‘அப்படினா, என்னோட காரியத்தாலேதான் எனக்கு உடல் கிடைக்கிறது, பிறவி கிடைக்கிறது’.
இதை அழுத்திச் சொன்னேன். ஏனென்றால், முன்னே ஐயா, ஒருவரோட காரியத்தால் பிறப்பு நடப்பதில்லை என்று சொல்லியிருந்தார்.
‘ஆமாம்.உங்களோட மனசை நீங்கள் புரிஞ்சுண்டா, அதோட எண்ணங்கள்தான் பிறவிக்குக் காரணம் அப்படிங்கிறதும் புரியும். ஆனால் எல்லாத்துக்கும், இறையருள் வேணும் அப்படினு நான் சொன்னதில் எந்த மாற்றமும் இல்லை’.
‘ஐயா, அப்படினா இறப்பும் ஒரு கொண்டாட்டம்தானே?’
‘அப்படித்தான் இருந்தாக வேண்டும்! சொந்தம் பந்தம் எல்லாம், ஒருத்தர் போய்விட்டாரே அப்படினு துயரப்படலாம். ஆனால், இறந்தவருக்கு வேறொரு வெளிப்பாடு வரப்போவதால், கொண்டாட்டமாகத்தான் இருக்க வேண்டும்.’
‘எனக்கு அப்படி இன்னும் ஒரு உடலோ, வெளிப்பாடோ இனிமேல் வேண்டாம் என்றால்?’
‘வெல்! அதுதான் நிர்வாணம், விடுதலை எல்லாம். மனம் எந்த ஒரு ஆசையும் இல்லாமல் இருந்துவிட்டால், நிர்வாணம் எனும் விடுதலை மட்டும்தான் இருக்க முடியும்.’
‘அப்போ, பிறப்பு இல்லாமல் ஆகிடும், இல்லையா?’
‘ஆம், இறப்பும் இல்லாமல் ஆகிடும்! இதெல்லாம் இப்போ ரொம்ப சிந்திக்க வேண்டாம். முதல்ல, பிறந்த நாளை, இல்லை இல்லை, ஒவ்வொருநாளையும் கொண்டாடப் பாருங்கள். இறையருளுக்கு நன்றி சொல்லி, மனதை எப்படிவேண்டுமோ அப்படி வைத்துக்கொள்ளுங்கள். அதாவது நல்ல உடலுக்காகவோ, இல்லை பிறவிகளற்ற நிர்வாணத்திற்காகவோ!’
‘ஐயா, மனம் ஒரு குரங்கு. அதை அடக்கணும், அழிக்கணும் அப்படி எல்லாம் சொல்வார்களே, நான் என்ன செய்யணும்!’
‘மனதை அடக்கவோ, அழிக்கவோ முடியாது. அதை நமக்கான ஒரு சாதனமாய் மாத்திக்கணும்; மனம்தான் எல்லாத்தையும் பார்க்கிறது. ஆனால் அந்த மனசுக்கு ஒளியைக் கொடுத்து, மனதைப் பார்த்துக் கொண்டே இருப்பதுதான் உங்களுக்குள்ள இருக்கும் உணர்வு. இதெல்லாம் ரொம்ப ஆழமான விஷயம். அப்பறம் பார்க்கலாம். இப்போதைக்கு மூன்று முக்கியக் குறிக்கோளை வைச்சுக்கணும்.’
‘அவை என்ன ஐயா?’
‘முதல்ல, மனசில் விருப்பு, வெறுப்பு இல்லாமல் இருக்கணும். அதுக்கு ஒரே வழி, பலன் கருதாமல் செய்கின்ற பணி, தியாகம் இவை மட்டுமே! அதனோட விளைவாய், உங்களுக்குத் தெளிவான மனம் கிடைக்கும்.’
‘அதுக்கப்புறம்?’
என்னமோ, இந்த முதல் படியை மிக எளிதாய்த் தாண்டிவிடலாம் என்பதுபோல் இருந்தது என் அவசரம்!
‘தெளிவான மனம் மட்டும் போதாது. அது அங்கேயும் இங்கேயும் அலை பாய்வாதாய் இருக்கும்.அதை சமநிலைக்குக் கொண்டுவரணும். தியானம் எல்லாம் அதுக்குத்தான் இருக்கு’
‘தியானம் பற்றி நிறையச் சொல்லியிருக்கீங்க ஐயா. அதனால என்ன பயன்?’
‘மனசுக்கு ஓய்வு, முனைப்பு, விரிப்பு அப்படினு நல்ல வலிமை கிடைக்கும்’.
‘மூன்றாவது என்ன?’
‘முதல் இரண்டு படிகளையும் நீங்க தாண்டியாச்சுனா – அதை நிச்சயமா முயற்சியால செய்துடலாம் – அப்புறம் அறியாமை எனும் திரையை விலக்கிடலாம்.’
‘அது என்ன திரை?’
‘அதுதான் உங்களை, “நான்” அப்படினு, ஒரு தப்பான அடையாளத்தைக் கொடுத்து, மயக்கி வைத்திருப்பது. அது விலகினால், நீங்கள் எப்பொழுதும் இருக்கும் பரம்பொருளாய் மட்டுமே இருப்பது தெளியும்.அப்புறம் பிறப்புஏது, இறப்பு ஏது?அதனால் பிறந்தநாளும் இல்லை, இறந்த நாளுமில்லை!’
எனக்குச் சொல்வதற்கு ஒன்றுமில்லை.
இவ்வளவு நாளும் இதெல்லாம் பற்றி எண்ணிக்கூடப் பார்க்கமால், நாட்களைக் கழித்துவிட்டேனே எனத் தோன்றியது.
‘ஐயா, பெரும் குவியலா எனக்குள் இத்தனை காலமாய் வளர்த்த ஆசாபாசங்கள் எல்லாம் இருக்கே, இதனை எப்போ நான் கழுவி, எப்போ உயர்வடைவது! நான் ரொம்ப லேட்டா?’
ஐயா, வழக்கம்போலத் தோள்கள் குலுங்கச் சிரித்தார்.
‘நிச்சயமாய் இல்லை. மனசுல இருக்கும் குவியல் எல்லாம் இந்த உண்மையை உணர்ந்த அந்தக் கணமே, அந்த அறிவுப் பொறியால் பொசுங்கிப் போய்டும். கவலையே வேண்டாம். அதனால, லேட் எதுவுமே இல்லை. வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்.’
ஐயா செய்தித்தாளை எடுத்துப் படிக்க ஆரம்பித்தார்.
என்னுடைய கைகளில் அமேஸானிலிருந்து வந்த மிஸ்ட்ரி பரிசு இன்னும் உட்கார்ந்திருந்தது. இதயத்துக்குள்ளும், அவிழ்ந்தும், அவிழாமலும் இன்னுமொரு அமேஸிங் மிஸ்ட்ரி பரிசு வந்திருப்பதாகத் தோன்றியது.
இவற்றில் கீர்த்திக்கு எதைக் கொடுக்க வேண்டும் என்பதுதான் நான் இப்போது எடுக்க வேண்டிய முடிவு.
மீ. ராஜகோபாலன்
30-மார்ச்-2017