Soundaryalahari 01
சௌந்தர்யலஹரீ – தோத்திரம் – 01
01: சிவ சக்தி ஒன்றே – நல்வினையே தொழும் தகுதி
न चेदेवं देवो न खलु कुशलः स्पन्दितुमपि ।
अतस्त्वामाराध्यां हरिहरविरिञ्चादिभिरपि
प्रणन्तुं स्तोतुं वा कथमकृतपुण्यः प्रभवति ॥ १॥
ந சேதே₃வம் தே₃வோ ந க₂லு குஶல: ஸ்பந்தி₃துமபி ।
அதஸ்த்வாமாராத்₄யாம் ஹரிஹரவிரிஞ்சாதி₃பி₄ரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வா கத₂மக்ருதபுண்ய: ப்ரப₄வதி ॥ 1॥
01: சிவசக்தி அருளன்றி செயலென்று ஏது!
சிவனார்க்கு ஏதுதிறம்! செயலேது! ஓயுமருட் சீரையரி அரனய னெலாம்
தவசக்தி யாற்பணிவர் தகையற்ற ராய்ப்புனிதந் தருபயனென் றெதுவுமி லராய்த்
தடுமாறு வோர்க்கேது தாயடிகள் தொழுந்தகுதி! தகையெவ்வி தம்மலர் வதோ!
பொருள் (1)
சிவமுடன் சக்தி இணைந்தால் மட்டுமே (ஶிவ: ஶக்த்யா யுக்தோ யதி₃ ப₄வதி) பரம்பொருளான பரமேஸ்வரருக்கும் அனைத்தையும் படைத்தருளும் சக்தி உண்டாம் என்றால் (ஶக்த: ப்ரப₄விதும்), சக்தியான உனை அடைந்தால் அன்றி (ஏவம் ந சேத்); சிறு அசைவும் (ஸ்பந்தி₃துமபி), அவரால் செய்ய முடியாது (ந குஶல:), அல்லவா (ந க₂லு)! அதனால் (அத:), அயன், அரி, அரன் முதலானவர்களாலும் (ஹரி-ஹர-விரிஞ்சாதி₃பி₄:-அபி), தொழப்படுகின்ற உன்னை (த்வாம்), புண்ணியங்களை அடையாதவர்களால் (அக்ருத-புண்ய:), நின்னைப் பணிவதற்கும் (ப்ரணந்தும்), நினது புகழைத் துதிப்பதற்கும் (ஸ்தோதும் வா), எப்படி முடியும்! (கத₂ம் ப்ரப₄வதி)!
விளக்கம் (1)
சிவமுடன் சக்தி இணைந்தால் மட்டுமே, பரம்பொருளான பரமேஸ்வரரால் எதனையும் செய்ய முடியுமாம்! சக்தி இல்லை என்றால், அவரால் இம்மியளவு அசையக்கூட முடியாதாம்! ‘சக்தி-வழிபாடு என்பதற்காக, எங்கள் சிவபெருமானை வலிமையற்றவராகச் சொல்வதா’ எனச் சிவனடியார்கள் சிலருக்குள் கேள்விகள் எழலாம்! ‘நிர்க்குணப் பிரம்மத்தை ஒன்றும் செய்ய இயலாத ஒன்றாகச் சொல்வதா’ என சில வேதாந்த ஆய்வாளர்களும் மனச் சலனம் கொள்ளலாம்! அக்கவலைகளுக்கு இடமில்லை! ஏனெனில் இங்கே உணர்த்தப்படுகின்ற உண்மை அனைவராலும் ஏற்கத்தக்கதே!
‘சிவம்’ எனும் பிரம்மத்தையும், ‘சக்தி’ எனும் பிரம்மசக்தியையும் வெவ்வேறாகப் பார்க்கின்றவர்களுக்கு, அப்படியொரு மனச் சலனம் வரலாம். சிவமும் சக்தியும் வெவ்வேறல்லவே! ‘ஶிவஶக்தி’ எனத் தோத்திரம் தொடங்குவதாலேயே, சிவமும் சக்தியும் வேறல்ல எனும் உண்மையும், பரம்பொருளாகிய சிவத்தில் யாவும் அடக்கம் என்பதும் காட்டப்பட்டது.
பகவத்பாதாள் தாம் இயற்றிய ‘ஶிவானந்தலஹரீ’ எனும் ஒப்பற்ற தோத்திரத்தின் முதற்பாடலில்
ப2லாப்4யாம் ப4க்தேஷு ப்ரகடித ப2லாப்4யாம் ப4வது மே |
ஶிவாப்4யா மஸ்தோக த்ரிபு4வன ஶிவாப்4யாம் ஹ்ரு2தி3புனர்
ப4வாப்4யா மானந்த3 ஸ்பு2ர த3னுப4வாப்4யாம் நதிரியம் ||1||
‘கலாப்4யாம்’ என, நிலவைச் சூடிய பராசக்தியைக் குறிப்பிட்டு, அதனையே பாடலின் முதற் சொல்லாக வைத்துத் துவங்குகின்றார். அதனாலேயும் சிவமும் சக்தியும் வேறல்ல எனும் உண்மை துலக்கப்படுகிறது.
‘ஶிவ’ எனும் சொல்லுக்கும் ‘மங்களம்’ எனும் பொருள் உண்டாகையால், ‘ஶிவ’ எனும் சொல்லுடன் தொடங்கும் இந்த முதல் தோத்திரம், ‘மங்களாசரணம்’ என அறிமுக வாழ்த்துப் பாடலாகவும் ஆகின்றது. பாடல்களின் குறிக்கோளும் ‘சிவ-சக்தி ஐக்கியம்’ எனும் பேருண்மை விளக்கம் எனவும் ஆகின்றது.
சிவத்தால் அசையவும் முடியாது எனச் சொல்வது அவரது வலிவின்மையைக் காட்டுவதாக ஆகாதா எனில், அது அல்ல கருத்து! சிவமாகிய பரம்பொருள், ‘பிரம்மம்’- இல்லாத இடம் இல்லை, இல்லாத காலம் இல்லை – அத்தனையையும் நிரப்பி இருக்கிறது என்றால், அது எங்கே போக முடியும்!
அசைவது என்றால், தாம் இல்லாத ஒரு இடத்துக்குள் தம்மை நுழைப்பது என்பதுதானே பொருள்! சிவமில்லாத இடம் ஏது! எனவேதான் பூரணப் பொருளான சிவம் அசைவற்றது எனச் சொல்லப்பட்டது.
சிவம் அசையாமல் எங்கும் நிறைந்திருப்பது என்றால், அது சடமா? சவமா?
இல்லை! சடப்பொருளுக்குத் தனை அறியும் சக்தி இல்லை! தன்னை அறியும் சக்தி என்பதே ‘சித்ஶக்தி’! அந்தச் சித்சக்தியே சிவமாக இருக்கின்றது! அது எதையும் அறியாமல் இருக்கவில்லை! மாறாக, அறிவதற்கு என வேறு எதுவுமே இல்லை என்பதால், வெறும் அறிவாக மட்டுமே, அசையாச் சுகமான ‘ஶிவம்’ என இருக்கிறது.
அப்படியானால் அசைகின்ற இந்த உலகங்கள் எல்லாம் எப்படி வந்தன? அவை எல்லாம் எங்கே நிலை பெற்றிருக்கின்றன? இக்கேள்வியைக் கேட்கின்ற அறிவு, கேட்பவரின் உடலுக்குள் எப்படி வந்தது? கேட்பவரின் உடலும், உலகமும் எப்படி வந்தது? கேட்பவர்தான் யார்?
இதற்கான விடைதான் பராசக்தி – பிரம்மத்தின் சக்தி!
சக்தியே யாதிற்கும் காரணம்! ‘நான் சக்தியற்றவன்’ என இருந்தால், நமக்கே நம்மீது மதிப்பு எப்படி வரும்! சக்திதான் எதனையும் இயக்க வல்லது! எதனையும் தர வல்லது! நாம் ஒரு இறைவடிவை வணங்குகின்றோம் என்றால், அதற்குக் காரணமே, அந்த இறைவடிவம் ஒரு உயர்ந்த சக்தியை உடையது என்பதால்தானே! எனவே எந்த இறைவடிவை நாம் வணங்கினாலும், அந்த இறைவடிவின் சக்தியைத்தான் வணங்குகின்றோம்! அப்படியானால், எல்லாப் பிரார்த்தனைகளும், பூசைகளும் எந்த இறைவடிவத்திற்காக நாம் செய்தாலும், அவை எல்லாமே பராசக்திக்கே சமர்ப்பணம் ஆகின்றது! அதனால்தான், ஶாக்த வழிபாடு செய்பவர்கள், மற்ற இறைவடிவங்களுக்கு வழிபாடு செய்பவர்களையும், சக்தியை வழிபடும் ஶாக்தர்கள் என மதிக்கின்றனர்.
எனவே துதிக்கத்தக்கது சக்தி ஒன்றே ஆகும்! அந்த சக்தியானது, சிவமாகிய பரப்பிரம்மத்தின் வலிமை அல்லவா? சக்தியை உடையவனுக்கு ‘ஶக்திமான்’ எனப் பெயர். எனவே சக்திக்குச் செலுத்தும் தோத்திரங்கள் எல்லாம், அச்சக்தியை வெளிப்படுத்துகின்ற சிவத்துக்கே சேரும். பரம்பொருளான சிவம், ‘ஓங்காரம்’ எனும் ஆதார சக்தியாகும். எனவே எல்லாப் பூசைகளும், தோத்திரங்களும் சக்திக்கும் சிவனுக்குமே அர்ப்பணமாகின்றன. ‘ஓம்’ எனும் பிரணவ ஒலி, சிவமாகிய பரம்-பொருளையே குறிக்கின்றது. இந் நுட்பத்தை உணர்த்தத்தான், எல்லா மந்திரங்களுக்கும் ‘ஓம்’ எனும் அடைமொழி முன்வைக்கப்படுகின்றது.
‘ஓம் முருகா சரணம்’, ‘ஓம் கிருஷ்ணாய நம:’, ‘ஓம் ஸ்ரீ ராமச்சந்த்ராய நம:’, ‘ஓம் துர்க்கா தேவி சரணம்’ எனப் பலவகையிலும் வணங்கி, அவரவர்க்கு விருப்பமான ‘முருகன்’, ‘கிருஷ்ணன்’, ‘நாராயணன்’, ‘துர்க்கா தேவி’ ஆகிய இறைவடிவங்களுக்குச் செய்கின்ற எல்லாப் பூசைகளும், அந்த இறை’வடிவங்களின் சக்தியாகிய, அன்னை பராசக்திக்கே உரித்தாகின்றன. அதுவும், எவருடைய சக்தி எழுச்சியாக அன்னை பராசக்தி அருள் பாலிக்கின்றாளோ, அந்த ‘ஓம்’ எனும் பிரணவ ஒலியினால் குறிப்பிடப்படும், உருவற்ற பரம்பொருளுக்கே உரிமையாகின்றன,
சிவனும் சக்தியும் ஒன்று என்றால், ஏன் அவர்களை இருவர்களாகப் பார்ப்பதும், அவர்களது இணைப்பினை உயர்வான பேரானந்தமாகத் துதிப்பதும் போதிக்கப்படுகிறது?
யாவுமாய் நிலையாக நிறைந்திருப்பதும் (ஸத்), அறிவதற்கு என வேறு எதுவுமில்லாததால் பூரண அறிவாக மட்டுமே ஒளிர்ந்திருப்பதும் (சித்), அந்தப் பூரணமான, முழுநிறைவினால், பேரின்பமாய் (ஆனந்தம்) இருப்பதுமான பரம்பொருள் அசைவற்றுத்தானே இருக்கும்! அந்தப் பரசிவத்தை முண்டக உபநிஷத் ‘ஏகாத்ம-ப்ரத்யய-ஸாரம்’ என ஒன்றேயான ‘சச்சிதானந்தம்’ எனப் போதிக்கின்றது.
அப்படியானால், எப்படி எல்லா வேறுபாடுகளும், வேறுபட்ட உலகங்களும், உயிர்களும் விளைந்தன?
இதற்கு விடை தருவதற்கான கருணையினால்தான், வேதங்கள் நமக்கு விளக்க முடியாத ஒரு ஆனந்த அதிசயத்தைக் காட்டுகின்றது. அது, ‘ப்ரகாஶ:’ எனும் பேரொளியாகப் போற்றப்படும் பரம்பொருளுக்குள் எழுந்த ஒரு சிறு துடிப்பு (ஸ்பந்தனம்)! அத்துடிப்பு விளைவித்த எழுச்சியே பிரம்மசக்தியாகிய பராசக்தி! அந்த சக்தியின் எழுச்சியால்தான், பரம்பொருள், தன்னை, ‘தான்’ எனும் தன்னொளிப் பிரகாசம் எனவும் ‘தன்னது’ எனும் ‘சக்தி விலாசம்’ எனவும் அறிகின்றது.
அவ்வகையில் பராம்பிகையான, அந்த பிரம்மசக்தியே, பிரம்மத்திற்கும் தமது பேரழகை இரசிக்கச் செய்யும் தூய கண்ணாடி ஆகின்றது. அதனால் ‘ஈஶ்வத்வ-ப்ரகடனம்’ எனப் பரம்பொருள் தன்னை விளம்பரப்படுததவும், அப்பிரம்ம சக்தியின் எழுச்சியே காரணமாகின்றது. அதனால்தான், பரம்பொருளை ‘ப்ரகாஶ’ எனும் பேரொளியாகவும், பராசக்தியை ‘விமர்ஸரூபிணி’ எனும் பிரம்ம ஒளி விளக்காகவும் வேதங்கள் துதிக்கின்றன.
‘சக்தி விலாசம்’ ஆகிய பராம்பிகை பிரம்ம-ஸ்பந்தனத்தை ஆதாரமாகக் கொண்டு, எல்லாவற்றையும் படைக்கின்றாள். அதனால், பரம்பொருளுக்கு ‘ஜகத்காரணம்’ எனும் அடையாளத்தையும் பெற்றுத் தருகின்றாள். எனவே சிவம் என்பது விதை என்றால், சக்தி என்பது முளைவிட்ட விதை! இவ்விரண்டும் வெவ்வேறல்ல! அதனால் சிவம் தனது ‘ஸ்வாதந்த்ரய ஶக்தி’ – முற்றிலும் தடையற்ற சக்தியில் ஒரு எழுச்சியைக் கொடுத்து, அதனால் ’விமர்ஸரூபிணி’ ஆகிய பராம்பிகையாக அருள்பாலிக்கிறார். தன்னைப் பிரம்மம் என உணரச் செய்கின்ற பிரம்மஞானமாக இருப்பவள் பராம்பிகையே! அதனால்தான் லலிதா சஹஸ்ரநாமம், அன்னையை ‘ஶிவஞானப்ரதாயினீ’ – 727ம் திருநாமம்- அழைக்கின்றது.
பிரம்ம சக்தியான பராம்பிகை உலகங்கள், உடல்கள், உயிர்கள் என எண்ண முடியாத பலவும் படைத்து, வளர்த்து, அழித்து, மறைத்து, அருளி – ஒரு பெரும் தொடர் திருவிளையாடலைச் செய்து கொண்டிருக்கின்றாள். அப்படியான எழிலும் (லலிதம்), விளையாட்டும் (லீலா) செய்வதால்தான், அவள் அன்னையாக, ‘ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி’ எனும் திருநாமம் உடையவளாகத் துதிக்கப்படுகின்றாள்!
‘ஶிவ’ எனும் மங்களமான பூரணத்துக்கு, வடமொழியில் உள்ள மற்றொரு சொல் ‘ஸ்ரீ’ என்பதாகும்.
‘ஸ்ரீ’ எனும் ஒலிக்கு, பிரம்மம், ஞானம், செல்வம், விஷம், சிலந்தி என்பனவாகப் பல பொருள் உண்டு. அன்னையின் ‘ஸ்ரீ லலிதா பரமேஶ்வரி’ எனும் திருநாமமே, ‘ஸ்ரீ’ எனும் பிரம்மத்தைச் சாட்சி ஆதாரமாகக் கொண்டு, திருவிளையாடல் புரிகின்ற ‘லலிதா’ எனும் பரமேஶ்வரரின் சக்தி ‘பரமேஶ்வரி’ எனக் குறிப்பதே ஆகும்.
அன்னை ‘ஸ்ரீ லலிதா பரமேஶ்வரி’ தனது திருவிளையாட்டில், தாம் எடுத்துக் கொண்ட படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்தொழிலுக்கும் காரணமாக, ஐந்து சக்திகளைக் கொண்டிருக்கிறாள். அன்னையின் ஆணைப்படியே படைத்தலுக்கு ‘ப்ரஹ்மா’ எனும் அயனும், காத்தலுக்கு ‘விஷ்ணு’ எனும் அரியும், அழித்தலுக்கு ‘ருத்ரன்’ எனும் அரனும் பணியாற்றுகின்றார்கள். இந்த முத்தொழிலின் இரகசியத்தைக் காக்க, அறியாமை எனும் போர்வைக்குள் உலகங்களையும், உயிர்களையும் மறைக்கின்ற மாயா-சக்தியைத் தனது ஆயுதமாகக் கொண்டு ‘மஹேஶ்வரர்’ விளங்குகின்றார். படைக்கப்பட்ட அனைத்தையும் விடுவிக்கின்ற பேரருளாக ‘ஸதாஶிவன்’ இருக்கின்றார். இவ்வைந்து பிரம்மசக்திகளயும் தனது ஈர்ப்பினால் ஆளுமை செய்வதால், அன்னைக்குப் ‘பஞ்சதளாயசாக்ஷி’ முதலான திருநாமங்கள் இருக்கின்றன. அன்னைக்கு ஆதரவாக இருக்கின்ற, அந்த ஐந்து தெய்வங்களுமே, பராசக்தியின் அருளில்லாவிடில். அதாவது, அவளது திருவிளையாடல் இல்லை எனில், சக்தியற்ற சடங்களாகின்றன என ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில் ‘பஞ்சப்ரேதம்’ எனக் காட்டப்பட்டது. தனது விளையாடலான ஐந்தொழிலுக்கும் ஏவலர்களாகத்தான், எத்தனையோ சக்தி வடிவங்களைத் தெய்வங்களாகவும், திக்-பாலகர்களாகவும், படைத்து ஆளுமை புரிகின்றாள். அப்படியானால், அன்னையின் பெருமை எத்தனை சிறப்பானது! இதனையே பகவத்பாதாள் வியந்து துதிக்கிறார்.
‘முத்தொழில் புரிபவர்களான அயன், அரி, அரன் மூவருமே, பராசக்தியான உன்னைப் பணிகிறார்கள் என்றால், உனது பெருமைதான் எத்தனை! அப்படியாயின், என்னைப் போன்ற எளிய, நற்கருமங்கள் எதுவும் செய்யாத ஏழைகள் எப்படி உன்னைப் பணிந்து துதிக்கவும், உனது புகழை வியக்கவும் முடியும்?’
பகவத்பாதாள் நமக்காகவே இப்படியான கேள்வியை, இத்தோத்திரத்தின் கருவாக வைக்கின்றார். நின்னைப் பணிவதற்கும் (ப்ரணந்தும்), நினது புகழைத் துதிப்பதற்கும் (ஸ்தோதும் வா) என இரண்டு முக்கியமான சாதனங்களையும் இதிலே தருகின்றார். பணிதல் என்பது நம்மை முற்றிலும் இறைவனது திருவடியில் அர்ப்பணித்தல்! இறைவனைப் புகழுதல் என்பது, இறைவனைப் பற்றிய அறிவைப் பெற்று, அதனால் இறையருளை வியந்து போற்றுதல். எனவே மேன்மையான பக்தி என்பது நல்லடக்கத்தையும், நல்லறிவையும் கொண்டு இறைச்சக்தியைத் தொழுதல் ஆகும்!
நாம் சக்தியை வழிபாடு செய்வதற்கான நற்கருமங்களைச் செய்திருக்கிறோமா எனும் கேள்விக்கான பதிலும் நமக்கு இப்பாடலைப் பயில்வதிலேயே கிடைக்கின்றது.
‘சௌந்தர்யலஹரீ’ எனும் ஒப்பற்ற தோத்திரங்களை, நாம் இப்போது படித்துக் கொண்டிருக்கிறோம் என்றால், நாம் புண்ணியம் செய்யாதவர்களாகவா இருக்க முடியும்! நற்பேறு நாம் பெற்றதனாலேயே, நமக்கு இத்துதிமாலையைக் கையில் ஏந்திப் பயிலும் பெரும் பாக்கியம் கிடைத்திருக்கிறது அன்றோ! எனவே நாமெல்லாம் நற்கருமங்கள் செய்தவர்கள்தான்! செய்பவர்கள்தான்! எனினும், “அன்னையே, உன்னை ஆழ்ந்து அறிந்து உணர்ந்து உய்வதற்கு, யான் என்ன செய்ய வேண்டும்! அதற்கும், நீயே எனது ஞானகுருவாக இரு! ‘ஸ்ரீவித்யா’ என்றாலே, ‘ஸ்ரீ’ எனும் பிரம்மத்தில் சேர்க்கின்ற அறிவு என்பதல்லவா பொருள்! அந்த ‘ஸ்ரீவித்யா’ நினது திருநாமமல்லவோ!” – இப்படியான ஆழ்ந்த விழைவை இத்தோத்திரம் நமக்குள் விளைக்கின்றது.






