Lifting-the-Floor-boards Tamil

Read in ENGLISH

தரைத்தளத்தைத் தூக்கு

(சமீபத்தில், AI தாக்கத்தால் ஏற்பட்ட பணிநீக்கங்களையும், அதனால் ஏற்பட்ட சில நண்பர்களின் மனவேதனையையும் எழுதத் தூண்டியது)

அந்த அறிவிப்பு வந்தது ஒரு செவ்வாய்க்கிழமை. அது தேவையில்லாத அளவுக்கு கொடூரமான நாள் என்று வாசு நினைத்தான்.

வேலைபார்ப்பவர்களுக்கு, திங்கட்கிழமைகள் அதிர்ச்சிகளுக்கானவை; வெள்ளிக்கிழமைகள் ஆறுதலுக்கானவை. ஆனால் செவ்வாய்க்கிழமை — இன்னும் முழு வாரமும் உன் முன்னால் கிடக்கிறது; உன் துயரத்தை எங்கே வைப்பது என்று தெரியாமல்.
இரண்டு பதவி உயர்வுகளுக்குப் பிறகே, தன் சாவியைப் பெறும் அளவுக்கு போராடிப் பெற்றிருந்த, கண்ணாடிச் சுவர்களைக் கொண்ட அந்த மீட்டிங் ரூமில் அவன் அமர்ந்திருந்தான். அவனுக்கு எதிரே, அவனுடைய வயதில் பாதி வயதுதான் இருக்கும் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். அவளுடைய பதவிப் பெயரையே அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை — “People Experience Partner”. அவள் “பணிநீக்கம்” என்ற சொல்லை, அது ஒரு மருந்தின் பெயரைப் போலவும்போல, மென்மையாகவும் மருத்துவ ரீதியான குளிர்ச்சியுடனும் உச்சரித்தாள், “எல்லாம் நல்லதே ” என்று சொல்லிவிட்டு, “ஆனால்…” என்று தொடர்வதைப் போல.

“வாசு, புதிய AI உதவியுடனான பணிச்செயல்முறைகளுக்கு ஏற்ப உங்கள் பதவி மறுசீரமைக்கப்பட்டுள்ளது,” என்றாள் அவள். “இது உங்கள் பணித்திறனைப் பிரதிபலிக்கும் முடிவு அல்ல.”
அவன் சிரிக்க வேண்டும் என்று நினைத்தான்.

“உங்கள் பணித்திறனைப் பிரதிபலிக்கும் முடிவு அல்ல.”

இருபத்து மூன்று ஆண்டுகால பணித்திறன்! இருபத்து மூன்று ஆண்டுகள் அதிகாலைகளும், நள்ளிரவுகளும், தாமதமான இரவுகளும். மற்றவர்கள் தாங்கள் நேசித்தவர்களுடன் கழித்த ஒவ்வொரு இரவும், ஒவ்வொரு வார இறுதியும், வாழ்க்கையின் ஒவ்வொரு சிறிய இயல்பான தருணமும் மெதுவாக அவனிடமிருந்து விலகிப் போனது. அதற்குப் பதிலாக, இந்தக் கண்ணாடி அறையில் ஒரு இருக்கை. இப்போது, ஒரு இயந்திரம், தான் செய்த வேலையைச் செய்ய முடியும் என்று ஒரு அந்நியர் அவனிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்.
அவன் காட்டப்பட்ட ஆவணங்களில் எந்திரம் போலக் கையெழுத்திட்டான். அவர்கள் கொடுத்த அட்டைப் பெட்டியை எடுத்துக்கொண்டான் — எப்போதும் ஒரு பெட்டியைக் கொடுப்பார்கள். பள்ளியில் ஒரு சிறிய திட்டத்தை முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்லும் குழந்தைக்குப் பரிசு கொடுத்து அனுப்புவது போல!

அவன் மற்ற இளம் பணியாளர்கள் அமர்ந்திருந்த திறந்த அலுவலகப் பகுதியைக் கடந்து நடந்தான்.

தொண்ணூறு பேர்.

அவர்களில் பெரும்பாலானவர்களை அவன்தான் வேலைக்கு எடுத்திருந்தான்.

அவர்கள் அவனைப் பார்த்தார்கள். பின்னர் உடனடியாகத் தங்கள் பார்வையைத் தாழ்த்திக் கொண்டார்கள் — ஒரு இறுதி ஊர்வலத்தில் சவப்பெட்டி கடந்து செல்லும்போது எவரும் செய்வதைப் போல.

யாரும் அவனிடம் விடைபெறவில்லை.

இறுதியில், அவனை உடைத்தது அதுதான்.

பணம் அல்ல. பதவி அல்ல. மிகக் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளால் எழுதப்பட்ட பணிநீக்கக் கடிதமும் அல்ல.
அந்தத் தொண்ணூறு குனிந்த முகங்கள்தான்.

வீட்டில், அமைதி சூழ்ந்து இருந்தது.
அந்த நேரத்தில் அது எப்போதுமே அமைதியாகத்தான் இருக்கும் — ஒரு வாரநாளின் பிற்பகல் மூன்று மணி! யாருக்கும் சொந்தமில்லாத நேரம். மதிய உணவு நேரத்தின் பரபரப்புக்கும் மாலை வேலை முடிந்து வீடு திரும்பும் நேரத்துக்கும் இடையில் நகரமே மூச்சை அடக்கி நிற்கும் நேரம்.

பல ஆண்டுகளாக வாசு இந்த நேரத்தில் வீட்டில் இருந்ததே இல்லை.
சமையலறையில் நின்றுகொண்டு, தன் கைகளால் என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியவில்லை.

அவனுடைய மனைவி மீரா, வீட்டின் பின்புற அறையில் கணக்குப் பார்க்கும் வேலையில் இருந்தாள். கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் வெளியே வந்தாள்.

“ஓ நீங்கள் வீட்டுக்கு வந்துவிட்டீர்கள்,” என்றாள் அவள்.

அது ஒரு கேள்வியல்ல.

அவனுக்கே தெரியுமுன்பே அவள் அவனுக்கு நடந்தை அறிந்திருந்திருக்கலாம்.

மனைவிகளுக்குத் தெரியும்.

வீட்டில் ஏற்படும் மாற்றத்தை, விலங்குகள் வானிலையில் ஏற்படும் மாற்றத்தை உணர்வதைப் போல அவர்கள் முன்னதாகவே உணர்ந்துவிடுகிறார்கள்.
“முடிந்துவிட்டது,” என்றான் அவன்.

அவள் அவனை அணைத்துக்கொண்டாள்.

அவன் தன்னை அவளிடம் ஒப்படைத்தான்.

ஆனால் அந்த அணைப்பு அவனுக்கே பரிச்சயமற்றதாகத் தோன்றியது — அவளுடைய உடலின் வடிவம், அவளுடைய கைகளின் தனித்துவமான அழுத்தம்!

இவ்வளவு நேரம் நின்று, அவளால் அணைக்கப்படுவதற்கு அவன் கடைசியாக எப்போது அனுமதித்திருந்தான்?

மூன்று நாட்கள் அவன் வீட்டைவிட்டு வெளியே செல்லவில்லை.

துண்டு துண்டாகத் தூங்கினான்.

மடிக்கணினியைத் திறந்து LinkedIn-ஐ வெறித்துப் பார்த்தான். அங்கே அந்நியர்கள், “இதை அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி…” என்று தொடங்கும் பதிவுகளைப் போட்டுக்கொண்டிருந்தார்கள்.

அவன் அதை மூடிவிட்டான்.

அவன் செய்யாத தொலைபேசி அழைப்புகளை மனதிற்குள் ஒத்திகை பார்த்தான்.

டோஸ்ட் மட்டும் சாப்பிட்டான்.

நான்காவது நாள், மீரா மிகவும் கவனமாக, உடல்நலக்குறைவிலிருந்து மீண்டு வருபவரிடம் பேசுவது போலச் சொன்னாள்:
“அர்ஜுன் அழைத்தான். கல்லூரியிலிருந்து.”

அவர்களுடைய மகன்.

அர்ஜுன்.

இருபத்தொரு வயது.

“எந்தக் கல்லூரி? என்ன படிக்கிறான்?” என்று வழக்கமாகக் கேட்கும் கேள்வியை வாசு கேட்க வாயைத் திறந்தான்.
பின்னர் மூடிக்கொண்டான்.

அவனுக்கே அந்தப் பதில் தெரியவில்லை.

மனைவியிடம் அதைக் கேட்பது, அவனால் இன்னும் தாங்கிக்கொள்ள முடியாத ஒன்றை ஒப்புக்கொள்வதாகிவிடும்.

அவன் அதைத் தவறவிட்டிருந்தான்.

எல்லாவற்றையும் தவறவிட்டிருந்தான்.

கல்லூரியைத் தேர்ந்தெடுத்தது.

முதல் நாள்.

முதல் பருவத்தில் வீட்டை நினைத்து வந்த தொலைபேசி அழைப்புகள்.

பாடப்பிரிவு மாற்றங்கள்.

மீரா தனியாகச் சமாளித்த அந்தச் சிறிய நெருக்கடி.

அந்த நேரத்தில் அவன், இப்போது நினைவுக்குக்கூட வராத ஒரு நகரத்தில், காலாண்டு இலக்குகளைப் பற்றிய ஒரு கூட்டத்தில் அமர்ந்திருந்தான்.

அவன் புத்தக அலமாரியிடம் சென்று ஒரு புகைப்படத்தைக் கண்டெடுத்தான்.

பதினாறு வயதான அர்ஜுன் – பள்ளிச் சீருடையில்.

இளம் வயதினருக்கே உரிய அந்தப் புன்னகையுடன் — மகிழ்ச்சி என்பது நிச்சயம் கிடைக்கக்கூடிய ஒன்று என்பதைப் போலப் புன்னகைத்துக் கொண்டிருந்தான்.
வாசு அந்தப் புகைப்படத்தை கையில் பிடித்துக்கொண்டு நின்றான். அவனுக்குள் ஒரு குறிப்பிட்ட வகையான தோல்வியின் பாரம் இறங்கியது.

எந்தப் பணித்திறன் மதிப்பீட்டிலும் இடம்பெறாத தோல்வி அது.

அன்று மாலை, பல ஆண்டுகளுக்குப் பிறகு அவன் ஒரு காரியத்தைச் செய்தான்.

நடந்தான்.

எங்கே செல்வதற்காகவும் அல்ல.

சும்மா நடந்தான்.

தன் வசிப்பிடத்தைச் சுற்றியிருந்த தெருக்களில் நடந்தான்.

அருகிலிருந்த பூங்காவைச் சுற்றி நடந்தான்.

அதை இப்போதுதான் உண்மையாகப் பார்த்ததுபோல அவனுக்குத் தோன்றியது.

பத்தாயிரம் முறை காரில் கடந்து சென்றிருந்தபோதெல்லாம் பார்த்த ஒரு பேக்கரி அங்கே இருந்தது.

ஆனால் ஒருமுறைகூட உள்ளே சென்றதில்லை.

அந்தப் பூங்காவில், ஒவ்வொரு மாலையும் ஒரே பெஞ்சில் அமர்ந்து புறாக்களுக்கு உணவளிக்கும் ஒரு முதியவர் இருந்தார்.

“இந்த மனிதர் பல ஆண்டுகளாக இதைத்தான் செய்கிறார்,” என்று வாசு நினைத்தான்.

“நான் ஒருமுறைகூட நின்று பார்த்ததில்லை.”

அவன் நின்றான்.

அடுத்த பெஞ்சில் அமர்ந்து, ஒழுங்கற்ற கூட்டமாக வந்து சேரும் புறாக்களைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

முதியவர் அவனைப் பார்த்தார்.

“முதல் முறையா?” என்று கேட்டார்.

“ஆம், முதல் முறை,” என்று ஒப்புக்கொண்டான் வாசு.

முதியவர் புறாக்களைப் பார்த்தபடியே தலையசைத்தார்.

“நாமெல்லாம் இங்கே இருந்தாலும் இல்லாவிட்டாலும் இவை இங்கே வந்துகொண்டே இருக்கும். உலகம் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கும். அதுதான் ஒரு ஆறுதல்.”

அவர் சொன்னது ஒரு சிறிய விஷயம்தான்.

ஆனால், கோட்டுப் பையில் கிடைத்துவிட்ட ஒரு நாணயத்தைப் போல அந்த வார்த்தையை வாசு பாதுகாத்துக்கொண்டான் — எதிர்பாராமல் கிடைத்த ஒரு சிறிய கருணை அல்லவ அது!

அடுத்த சில வாரங்களில், அவனுக்கு சில விஷயங்கள் நடக்கத் தொடங்கின.

ஒருவேளை எப்போதுமே நடந்துகொண்டிருந்த சில விஷயங்களை அவன் புதிதாக கவனிக்கத் தொடங்கினான் என்று சொல்லலாமோ!

ஒரு வாரநாள் காலையில் அவன் அருகில் இருந்த சுவாமி அய்யப்பன் கோயிலுக்குச் சென்றான்.

வாரநாள்!

கற்பனை செய்து பாருங்கள். அந்த நாட்களில் கோவிலுக்குப் போனவனா அவன்!

கோவிலில், அர்ச்சகர் அவனைப் பார்த்ததும்,

“வாசு! வெகு நாட்களாக உன்னைப் பார்க்கவே இல்லை. வா,” என்றார்.

கோயில் முற்றத்தில் அவனை உட்கார வைத்தார்.

தேநீர் கொடுத்தார்.

குறிப்பாக எதையும் பேசாமல் பேசிக்கொண்டிருந்தார்.

வாசு எழுந்து செல்லும்போது அர்ச்சகர் சொன்னார்:

“உன் அப்பா ஒவ்வொரு வியாழக்கிழமையும் இங்கே உட்கார்ந்திருப்பார். ‘அலுவலகம் நான் இல்லாமலேயே இயங்கிவிடும். ஆனால் இந்த முற்றம் நான் இல்லாமல் இயங்காது’ என்று அவர் சொல்வார்.”

வாசு மிக மெதுவாக வீட்டிற்குத் திரும்பி நடந்தான்.

அவன் மகன் அர்ஜுனுக்கு தொலைபேசியில் அழைத்தான்.

எந்த முன்கூட்டியே தயாரித்த உரையும் திட்டமும் இல்லை.

முன்பெல்லாம் எப்போதோ கிடைக்கும் பத்து நிமிட அவகாசத்தில், அவசரமாகப் பேசும் மனிதனின் குரலும் இல்லை.

அன்று இரவு – எந்த அவசரோ, திட்டமோ இல்லாமல் அவன் அர்ஜூனிடம் கேட்டான்:

“உன் படிப்பைப் பற்றி எனக்குச் சொல்லு. எல்லாவற்றையும் கேட்க விரும்புகிறேன்.”

சிறிது நேரம் அமைதி- கேட்கப்பட்டதற்கே ஆச்சரியப்பட்ட ஒரு மகனின் அமைதி.

பின்னர் அர்ஜுன் நாற்பது நிமிடங்கள் பேசினான்.

தான் படிக்கும் கணக்கீட்டு மொழியியல் பற்றி.

தான் மதிக்கும் ஒரு பேராசிரியரைப் பற்றி.

அழிந்துபோகும் நிலையில் உள்ள மொழிகளுக்கான இயந்திர மொழிபெயர்ப்பு பற்றிய ஒரு திட்டத்தைப் பற்றி.

AI muthalaa ஒரு பாடத்தை எப்படியோ நேசிக்கத் தொடங்கிவிட்டதைப் பற்றி.

வாசு கேட்டுக்கொண்டிருந்தான்.

உண்மையாகக் கேட்டுக்கொண்டிருந்தான்.

அப்போது அவனுக்குப் புரிந்தது.

தான் ஒரு நிர்வாகியாக மாறிக்கொண்டிருந்தபோது, தன் மகன் ஒரு தனி மனிதனாக வளர்ந்துவிட்டான்.

அவன் கற்பனை செய்திருந்த அர்ஜுனின் எந்த வடிவத்தையும் விட, இப்போது இருக்கும் அந்த மனிதன் சுவாரஸ்யமானவனாகவும் முழுமையானவனாகவும் இருந்தான்.

அழைப்பின் முடிவில் அர்ஜுன் கேட்டான்:

“அப்பா, நீங்கள் நலம்தானே! எவரிதிங் ஓகே?”

“நலமாக இருக்கக் கற்றுக்கொண்டு இருக்கிறேன், ஐயாம் ஃபைன்!” என்றான் வாசு.

“முதன்முறையாக… உண்மையாக.”

அவன் முன்பு ஒதுக்கி வைத்திருந்த சிலவற்றை அல்லது, எடுக்கத் துணிவில்லாமல் விட்டுவிட்டதை மீண்டும் எடுத்துக்கொண்டான்.

இளம் வயதில் அவனுக்கு கவிதை மீது எப்போதும் அன்பு இருந்தது.

அவன் கவிதைகள் எழுதுவான் — மோசமாகத்தன் இருக்கும், ஆனால் மகிழ்ச்சிதருவதாக இருக்கும்! பின்னர், ஒரு நண்பர் அவனது கவிதையைக் கேலி செய்தபோது, எழுதுவதை விட்டுவிட்டான்.
இப்போது மீண்டும் எழுதத் தொடங்கினான்.

ஒரு நோட்டுப் புத்தகத்துடன் பேக்கரியில் அமர்ந்து எழுதுவான்.

ஒருநாள் கடைக்காரர் அவனிடம் கேட்டார்.

“என்ன எழுதுகிறீர்கள்?”

வாசு உண்மையாகப் பதிலளித்தான்:

“என்னவென்று இன்னும் தெரியவில்லை. ஆனாலும், அதுதான் என்னை ஈர்க்கிறது>”

அவன் பகவத்கீதையைப் படிக்கத் தொடங்கினான்.

கடமையாக அல்ல – ஒரு உரையாடலாக.

அதில் எப்போதோ அவனுக்காகக் காத்திருந்த ஒரு வரியை அவன் கண்டான்:

“உனக்கு உரிமை செயலில் மட்டுமே; அதன் பலன்களில் அல்ல.”

இருபத்து மூன்று ஆண்டுகளாக அவன் பலன்களைத்தானே துரத்திக்கொண்டிருந்தான்.

இப்போது அவனுக்குப் புரிந்தது — இந்த மரம் இத்தனை காலமும் கனிகளைத் தந்துகொண்டே இருந்தது. பலனை எதிர்பார்க்கமால் இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும். பக்கத்தில் இருக்கும் சமூக சேவை மையத்தில் தன்னை இணைத்துக் கொண்டான்.
அவன் மற்றவர்களுக்குக் கல்வி கற்பிக்கவும் தொடங்கினான்.

வாரத்திற்கு ஒரு மாலை, ஊதியம் எதுவுமின்றி, அந்த சமூக மையத்தில் புதிதாக குடியேறியவர்களுக்கு ஆங்கிலமும் CV எழுதுவதும் கற்றுக்கொடுத்தான்.
தனக்குக் கற்பிப்பது மிகவும் பிடித்திருப்பதை அவன் கண்டுபிடித்தான். ஆசிரியராக இருக்கும்போதும், “எனக்குத் தெரியாது — நாம் சேர்ந்து கண்டுபிடிப்போம்” என்று மாணவர்களிடம் மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டிய அந்தப் பணிவையும், நேர்மையையும் நேசித்தான்.
கற்பிக்கும் அந்த வகுப்பறை, கண்ணாடிச் சுவர்களைக் கொண்ட முந்தைய அலுவலக அறைக்கு முற்றிலும் எதிரானது.

அங்கே அவனுடைய அதிகாரம் அவனுடைய சம்பளத்தைப் பொறுத்திருந்தது.

இங்கே, அவனுடைய அதிகாரம் அவன் உண்மையாக இருப்பதற்கான விருப்பத்தைப் பொறுத்திருந்தது.

ஒருநாள், அவனைத் தேடி சில ஆலோசனைப் பணிகள் வந்தன.

நல்ல விஷயங்கள் சில சமயம் நாம் அவற்றை வற்புறுத்தித் தேடுவதை நிறுத்திய பிறகும் தாமாகவே வந்து சேரும்.
முன்னாள் சக ஊழியர் ஒருவர், இப்போது ஒரு நடுத்தர அளவிலான நிறுவனத்தில் இருந்தார். பெரிய குழுக்களை நிர்வகிப்பதில் அனுபவமுள்ள ஒருவரும், வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே பணியாற்றத் தயாராக இருப்பவருமான ஒருவர் அவருக்குத் தேவைப்பட்டார்.

வாசு சம்மதித்தான்.

ஆனால் அதற்கான நிபந்தனைகளைத் தானே வகுத்துக்கொண்டான்.

இரண்டு நாட்கள் – அதற்கு மேல் இல்லை.
வார இறுதி மின்னஞ்சல்கள், போன் அழைப்புகள் இல்லை.
எப்போதும் “தயாராக” இருக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.

அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது — உலகம் அவனுடைய நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டது.

அப்போது அவன் ஒரு விஷயத்தைக் கற்றுக்கொண்டான்:

‘உலகம் நீ எதைத் தருகிறாயோ அதைப் பெற்றுக்கொண்டு, அதற்கு மேலும்மேலும் கேட்கும். நீ எதை மறுக்கிறாய் என்பதில்தான் திறமை இருக்கிறது’.
பணம் போதுமானதாக இருந்தது.

கண்ணாடி அறைகளும், பெட்டிகளும், அடையவேண்டிய காலாண்டு இலக்குகளும் இருந்த முந்தைய காலத்தின் பண வீச்சு அல்ல.
ஆனால் போதுமானது!
வாழ்வதற்குப் போதுமானது.
அர்ஜுனுக்கு கொஞ்சம் கூடுதலாக அனுப்புவதற்குப் போதுமானது.
பதினைந்து ஆண்டுகளாகப் பேசிக்கொண்டிருந்தும் ஒருபோதும் செல்லாத ஒரு கடற்கரைக்கு மீராவுடன் விடுமுறைக்குச் செல்லப் போதுமானது.
இறுதியில் அவர்கள் அந்த விடுமுறைக்குச் சென்றார்கள்.

ஒரு பாறை விளிம்பில் நின்று கடலைப் பார்த்தார்கள்.

கடல் — தன் தொன்மையான, அக்கறையற்ற, அதே நேரத்தில் ஆறுதலளிக்கும் இயல்பில் தொடர்ந்து அலை பாய்ந்து இயங்கிக்கொண்டிருந்தது.

மீரா சொன்னாள்:

“நீங்கள் மாறிவிட்டீர்கள்.”

“நான் அதே மனிதன்தான்,” என்றான் அவன் – “நான் வேறு ஒருவராக இருப்பது போல நடிப்பதை மட்டும் நிறுத்திவிட்டேன்.”

அவள் அவனுடைய கையைப் பிடித்தாள்.

அவன் அவளை அனுமதித்தான்.

முன்போல, அவன் தன் தொலைபேசியைப் பார்க்கவில்லை.

ஒரு வியாழக்கிழமை மாலை — சுவாமி ஐயப்பன் கோவிலின் பிரகார மண்டபத்தில் அமர்ந்திருந்தான்.

அர்ச்சகர் அவனிடம் சொன்னார்:

“உலகம் முழுவதும் புதையலைத் தேடிச் சென்ற மனிதன், இறுதியில் தனது வீட்டின் தரைப்பலகைகளுக்குக் கீழேயே அந்தப் புதையல் இருப்பதைக் கண்டுகொண்ட கதையைத் தெரியுமா?”
“தெரியும்,” என்றான் வாசு.

“அப்புறம்?”

“அப்புறம்…”

வாசு சிரித்தான்.

“நான் இப்போதுதான் தரைப்பலகைகளைத் தூக்கத் தொடங்கியிருக்கிறேன்.”

அர்ச்சகர் மனமாரச் சிரித்தார். அந்த முழுமையான, மகிழ்ச்சி நிறைந்த சிரிப்பின் ஒலி கோயில் முற்றம் முழுவதும் பரவியது.

வாசு மாலை நேரத்தின் சூரிய ஒளி தன்னைப் பிரகாசப்படுத்துவதை அறியாதவனாக அமர்ந்திருந்தான்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, முதன்முறையாக அவனுக்குத் தோன்றியது —

எதற்கும் தாமதமாகிவிட்டது என ஓட வேண்டியதில்லை! – எங்கும் செல்ல வேண்டிய அவசியமில்லை! இங்கே இருப்பது மட்டுமே போதும். இங்கே இருப்பதே போதும்.

மீ. ரா

Mee. Ra

 

Related Posts

Share this Post