Shivanandalahari – Verse 12
12 – எவ்விடத்தில் வாழ்ந்தாலும் எந்தை அடி போற்றி!
जले वा वह्नौ वा वसतु वसतेः किं वद फलम् |
सदा यस्यैवान्तःकरणमपि शंभो तव पदे
स्थितं चेद्योगोऽसौ स च परमयोगी स च सुखी ||१२ ||
ஜலே வா வஹ்னௌ வா வஸது வஸதே: கிம் வத3 ப2லம் |
ஸதா3 யஸ்யைவாந்த: கரண மபி ஶம்போ4 தவ பதே3
ஸ்தி2தம் சேத்3 யோகோ3(அ)ஸௌ ஸ ச பரமயோகீ3 ஸ ச ஸுகீ2 ||12 ||
தன்னின்அகம் பின்னர்வெளியிடம்
இன்னும்வன முன்னும்மலையிடம் – அதுபோலே
கன்னல்மிகு மின்னும்அனலிடை
என்னென்னொரு வண்ணப்புனலிடை
பன்னுந்தவ மென்னும்நிலைகளில் – பயனேது?
திண்ணங்கனி வுண்ணத்தூமனம்
நண்ணத்துதி எண்ணத்தால்சிவம்
முன்னும்மலர்ச் சின்னத்தேனடி – முனிந்தேகின்
நுண்ணத்தறி வெண்ணப்பெருநிலை
வண்ணத்தவ முண்ணப்பரசிவ
முன்னிச்சுக வெள்ளப்புழலுவன் – பெருயோகி
(12)
தனியான மறைவிடத்திலோ, வீட்டிலோ, வெளியிலோ, காட்டிலோ, மலைகளிலோ, நீரிலோ, நெருப்பிலோ (அதாவது, உண்மை தேடும் ஒருவன் எவ்விடத்தில் வேண்டுமானாலும் எவ்வாழ்க்கை நிலையினாலும்) – எங்கு வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்! அதனால் என்ன பயன்? எவனுடைய (காயான) மனம் (அன்பால்) கனிந்து, சம்புவே, நினது திருவடிகளில் எப்போதும் நிலைபெற்றதாக ஆகுமோ, அந்நிலையே யோகம் எனப்படும். அத்தகைய மனிதன் எப்போதும் (சிவ சுகப் பெருவெள்ளமாகிய) இன்பத்தில் நிலைத்திருக்கும் யோகி ஆவான்.
குறிப்பு:
எப்பிறவி வந்தால் என்ன என்றும், மனிதப் பிறவி எடுத்த போது, மாணவன், இல்லறன், வனவாசி, துறவி, அல்லது எப்படியானவானாக வாழ்ந்தால் என்ன, மனம் சிவானந்த வெள்ளத்தின் மூழ்கினால் போதும் என்றும் வியந்த பகவான், இந்தப் பன்னிரெண்டாம் பாடலில், இறையருள் தேடி மலை, குகை என்று அலையாமல், இருக்கும் இடத்திலேயே, தனக்குள்ளேயே பரசிவப் பரசுகப் பரவச நிலையை அடைதலே யோகம் என்று உணர்த்துகின்றார்.
இருக்கும் இடத்திலேயே இருப்பதை, என்றும் இருப்பதாய் உணர்ந்திருப்பது மிகவும் முற்றிய ஞான நிலை. அதனை உணரும் வரை, உள்ளும், வெளியும் உண்மையைத் தேடுகின்ற பணியை நாம் செய்வது தவறாகாது. அத்தேடல் ஒரு அவசியமான அலைச்சலே ஆகும்.
பகவான் ரமணர், தான் யார் எனும் அனுபவத்தை இறையருள் மறைத்து இழுத்ததாலேயே, இருந்த இடத்தை விட்டுத் திருவண்ணாமலைக்கு வந்து தவமியற்றியதாகக் கூறினார்.
பகவான் ஆதிசங்கரரும், காசியிலே, கங்கை நதியில் குளித்தெழுந்து தொழுது, காசி, கங்கை எனப் புனித யாத்திரைகள் எல்லாம் எதற்கு, இவை எல்லாம் ஆன்மனாகத் தன்னுள்ளேயே ஒளிர்ந்து கொண்டிருப்பதை உணரும் போது என்று கேட்கிறார். அந்தப் பெருநிலை விளைவை ஏற்படுத்தவே, இப்பாடல் அமைந்துள்ளதாகத் தோன்றுகிறது. (12)