Shivanandalahari – Verse 19
19 – வினைத்தீயில் புடமிட்டு விளக்குவான் அடி போற்றி!
दुरन्ते संसारे दुरितनिलये दुःखजनके |
मदायासं किं न व्यपनयसि कस्योपकृतये
वदेयं प्रीतिश्चेत्तव शिव कृतार्थाः खलु वयम् ||१९ ||
து₃ரந்தே ஸம்ஸாரே து₃ரிதனிலயே து₃:க₂ஜனகே |
மதா₃யாஸம் கிம் ந வ்யபனயஸி கஸ்யோபக்ருதயே
வதே₃யம் ப்ரீதிஶ்சேத்தவ ஶிவ க்ருதார்தா₂: க₂லு வயம் || 19 ||
துட்டமுடி வானமிகு – பலபாவம்
துட்டநிலை யேகிவருந் துட்டபிற வானசுழித்
தொட்டபிர மாவின்விதி – துவளாதே
விட்டுவிட வேசிவனே இட்டமதுவோ கரவு
நட்டமது ஏதுகதி – நினதாகும்
சட்டமதுவோ அதனால் பட்டுஅறிவோ மெனவேப்
பத்தர்நல மாகிவருள் – பலமேகும்
(19)
தீய ஆசைகளை வளர்த்து, தீயவர்களின் நட்பில் திளைத்து, தீய முடிவிலேயே இணைக்கும் பாவமான செயல்களைச் செய்து, பிறவிப்பிணி எனும் சுழலில் தத்தளிக்கும்படியான எனது வினைப்பயனைத் தாங்கள் இன்னும் அழிக்காமல் இருப்பதன் நோக்கம், அவற்றை விதியாக என் தலையில் எழுதிய பிரம்ம தேவனின் எழுத்து பொய்க்காமல் இருக்கத்தானோ! (அனலிட்ட பொன்னாக, வினையிலிட்டு) நாங்கள் கடைத்தேற இதுவே தங்கள் காட்டும் கருணை என்றால், அதைவிட நற்கதி வேறு என்ன, பரசிவனே!
குறிப்பு:
சிவ சுகப் பெருவெள்ளம் வேண்டி வணங்கினும், உலக வாழ்வில் துயர் நமக்குத் தொடர்ந்து இருக்கிறதே! மேலும் மேலும் வினைகள் செய்வதால், விதிப்பயன் மூட்டைகளும் பெரிதாகிக் கொண்டே இருக்கின்றனவே!
நம் தலை விதியினை மாற்றும் வல்லமை இருப்பினும், ‘கர்ம பல தாதா’ எனும்படி, நாம் செய்த வினைகளுக்கேற்ற பலனைக் கொடுக்கின்றவராகவே இறைவன் இருப்பதன் நோக்கம், நாம் உண்மை உணர்ந்து, பலனை எதிர்பார்க்காது செயல் செய்யவும், அச்செயல்கள் எல்லாம் நலமுடையதாய் இருக்கவும், அவ்வழியினாலேயே சிவ சுகப் பெருவெள்ளப் பயனை அடைய வேண்டும் என்பதற்காகத்தான்! ஆதலால், எது வரினும் அதை அப்படியே ஏற்று, எப்போதும் மாறாத முனைப்புடன் பரம்பொருள் நினைவால் மட்டுமே வாழ்வைக் கழிப்பதே நந்நிலைக்கு வழி. இதை உணர்த்துவதே இப்பாடலின் நோக்கம்.
இப்பாடலில் ‘கஸ்ய + உபக்ரு2தயே’ எனும் சொல்லில் கஸ்ய என்பது பிரம்மாவினுடைய எனும் பொருளில் வருவதால், ‘பிரம்மாவின் விதி’ என்று தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. பிரம்மா, படைப்பதற்கு முன்பு, ‘க:’ அல்லது ‘யார்’ என்று தன்னை ஆன்ம விசாரணை செய்து முதலில் அவ்வுண்மையை உணர்ந்து கொண்டபின்பே படைக்க ஆரம்பித்தாரம். அதனால் ‘க:’ என்னும் பெயரும் பிரம்மனுக்கு உண்டு. (19)