Shivanandalahari – Verse 62

62 – சிவபக்தியாம் அன்னைச் சீலம் அடி போற்றி!

आनन्दाश्रुभिरातनोति पुलकं नैर्मल्यतच्छादनं
वाचा शङ्खमुखे स्थितैश्च जठरापूर्तिं चरित्रामृतैः |
रुद्राक्षैर्भसितेन देव वपुषो रक्षां भवद्भावना-
पर्यङ्के विनिवेश्य भक्तिजननी भक्तार्भकं रक्षति ||६२ ||
ஆனந்தா3ஸ்1ருபி4ராதனோதி புலகம்
நைர்மல்யதஸ்1சா2த3னம்
வாசா ஸ1ங்க2 முகே2 ஸ்தி2தைஸ்1ச
ஜட2ரா-பூர்திம் சரித்ராம்ரு2தை: |
ருத்3ராக்ஷைர்ப4ஸிதேன தே3வ வபுஷோ
ரக்ஷாம் ப4வத்3பா4வனா-
பர்யங்கே வினிவேஸ்1ய ப4க்தி ஜனனீ
ப4க்தார்ப4கம் ரக்ஷதி ||62 ||
களித்தவிழி யுதித்தருவி குளித்துபழி யுதிர்த்தநல
வழித்துணிய துடுத்தினிய – வளமான
மொழிக்குவரி சங்குசிவ வழிக்குதவு முங்கதைகள்
அமிழ்த்தமுத மூட்டியுடற் – கணியாக
உருத்திரமுந் திருநீரு முடுத்துயர வேதுணையும்
உற்றசுக முற்றுமனச் – சிறுபிள்ளை
பருத்திருவுந் தியானமணிப் பட்டதிலே தொட்டிலிட்டுப்
பக்தியரும் பேரன்னை – பலமேதான்
(62)

இறைவா, பக்தியாகிய அன்னை, ஆனந்த விழி நீரால் குளியலிட்டு, மேனியெங்கும் மகிழ்ச்சியையும், குற்றமிலா குணங்களை ஆடையாய் அணிவித்து, நல்வார்த்தையாகிய சங்கினால், சிவபுராணமாகிய நினது கதைகளாகிய அமுதினை, நிறைவான உணவாக ஊட்டிவைத்து, ருத்திராக்ஷம், திருநீறு இவற்றைத் துயரறுக்கும் துணைகளாக அணிவித்து, நின்னையே சிந்திகின்ற தியானமாகிற தூளியிலே ஆழ்ந்தயர வைத்து, பக்தி கொண்டவனாக விளங்கும் மனமாகிய குழந்தையைக் காப்பாற்றுகிறாள்.

குறிப்பு:
பக்தி அன்பின் பெருநிலை. ஏனெனில், அது இறைவன்பால் காட்டும் அன்பு. பக்திகொண்டுவிட்டால், படிப்படியாக, உள்ளும் புறமும் மகிழ்ச்சி நிலவும். தூய்மையான மனமும், நன்மை கொடுக்கும் உண்மை மொழியும், அம்மொழியில் எப்போதும் அறமும், இறையுணர்வும் விளங்கும். இறைவனின் பக்தி வெளிப்பாட்டைக் காட்டும் அடையாளங்களான உருத்திராட மாலைகள், திருநீறு முதலிய பூச்சுக்கள் முதலிய உடலில் விளங்கும். அத்தூயநிலையினால், எவ்வகை அனுபவங்கள் வந்தாலும் அவற்றை ஏற்கும் திடமும் நமக்கு ஏற்பட்டு, சிவ நினைவாகிய ஆனந்தத் தியானத்திலே நாம் ஆழ்ந்துவிடுவோம். அந்நிலையை மனம் அடைவதே பெரும் பேறு.
மனமாகிய குழந்தைக்கு, அப்பலனைச் செய்பவள், பக்தியாகிய தாய்.

ஞானகுருவாகிய பகவான் ஆதி சங்கரர், பக்தியின் முக்கியத்துவத்தை இப்பாடலில் காட்டியுள்ளார். (62)

61 – பக்திவழி காட்டிப் பாவிப்பான் அடி போற்றி!

63 – எவ்வழியும் செவ்வழியாய் ஏற்பான் அடி போற்றி!

Share this Post

Leave a Comment