Shivanandalahari – Verse 72
72 – ஆதார மானதிரு அடியுடையான் அருள் போற்றி!
भित्वा महाबलिभिरीश्वरनाममन्त्रैः |
दिव्याश्रितं भुजगभूषणमुद्वहन्ति
ये पादपद्ममिह ते शिव ते कृतार्थाः ||७२ ||
பி₄த்வா மஹாப₃லிபி₄ரீஸ்₂வரனாமமந்த்ரை: |
தி₃வ்யாஸ்₂ரிதம் பு₄ஜக₃பூ₄ஷணமுத்₃வஹந்தி
யே பாத₃பத்₃மமிஹ தே ஸி₂வ தே க்ருதார்தா₂: || 72 ||
பவச்சந்நிதி திருமெய்மறைமறை
இடத்தன்வழி இருளைஐயற – இடித்தேகி
நமச்சிவமய நமசிவநமஎனத்
தவச்செம்மொழி பலிசுரவழிபட
பதச்செம்மலர் பதியணியரவுறப் – பெருந்தேயம்
அகழ்த்ததுநிதி அதுவெனப்பதமல
ருயர்த்துந்துதி அரஹரசிவமென
நிகழ்த்துந்தர முந்திறமுந்துவர் – அவரேதான்
பிறப்பிந்தரு மந்தருநந்நியல்
இறப்பற்றரு ளுந்திடவந்திட
சிறப்புற்றுரு சிந்திடவந்தினி – சேர்வாரே!
(72)
தியானம் எனும் மையினை உற்று நோக்கி, அதன் மூலம் நற்புதையல் இருக்கும் இடத்தைத் தெளிந்துணர்ந்து, பிறகு அந்நந்நிதியை அடையத் தடையாய் இருக்கும் காரிருட் தடங்களை எல்லாம் உடைத்துத் தாண்டி, இறைவனின் திருநாம மந்திரங்களாகிய பலிகளைக் கொண்டு தேவர்களால் தொழப்படுவதும், அரவங்களை அணிகலனாகக் கொண்டவையுமான உமது திருவடித் தாமரையாகிய பெரு நிதியை, எவர் மேலே எடுத்து வருகிறார்களோ அவர்களே, இப்பிறவிப் பயனை அடைந்தவர்கள் ஆவார்கள்.
குறிப்பு:
தியானம், முன்பு மனமாகிய குழந்தை துயிலும் தூளி என்று காட்டப்பட்டது. பிறகு, பக்தி நாணில் தொடுக்கப்பட்ட அம்பாகவும் காட்டப்பட்டது. இப்பாடலிலே தியானம், புதையலைச் சுட்டிக் காட்டும் மந்திர மை வித்தை எனக் காட்டப்படுகிறது. அவ்வாறு புதையலைக் காட்டுவது மட்டுமல்லாமல், அவ்விடத்திற்குக் கூட்டிச் செல்வதுமான திறனையும் தியானமே தருகின்றது.
தமிழில், தியானம் என்பதனை சிவச்சிந்தனை என்றும், புதையல் இருக்கும் இடம் என்பதை, ‘திருமெய்மறைமறை இடம்’, அதாவது மறைகள் கூறும் உண்மையாகிய பரம்பொருளை மறைத்திருக்கும் இடம் என்றும், ‘ தம:பிரதேசம்’ எனும் சொல் காட்டும் இருள் நிலத்தை, அறியாமையாகிய இருள் மற்றும் அறிவிருந்தும் திடமில்லாமல் ஏற்படும் ஐயம் எனக் காட்ட ‘இருளைஐயற’ எனவும், ‘ஈஸ்வர நாம மந்த்ரை:’ எனும் சொற்றொடருக்கு, ‘நமச்சிவமய நமசிவநமசிவ’ எனவும், ‘உத்வஹந்தி’ என உயர்த்துகின்ற செயலுக்கு விளக்கமாக, ‘உயர்த்துந் துதி அரஹர சிவம்’ எனவும், மொழிபெயர்ப்பிலே, கருப்பொருளுக்குக் களங்கமில்லா வகையிலே, மிகைப் படுத்தப்பட்டது. (72)