06. வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க

‘வேகம்’ எனும் சம்ஸ்கிருத மூலச் சொல்லுக்குத் தமிழில்  ‘விரைவு’, ‘குழப்பம்’, ‘விளைவு’, ‘சிக்கல்’ என்றெல்லாம் பொருள் உண்டு.

நம்முடைய மனமே,   ஒன்று விட்டு ஒன்றில் ஓடிக் கொண்டிருப்பதும், குழப்புவதும்,  வினைப் பயனை விளைப்பதும், பிறவிச் சிக்கலில் பிணைப்பதும் ஆகிய எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கிறது.  எனவே மனதின் வேகத்தைக் கெடுப்பதனால், அதாவது, மனதின் அலைக்கழிப்பை நிறுத்தி, எண்ணங்களைச் சீரமைப்பதினால், நமக்கு விடுதலை கிடைக்கிறது.

‘சித்த சுத்தி, த்ருட புத்தி’  அதாவது ‘தெளிந்த மனம், உறுதியான அறிவு’ எனும் நிலையை அடைவதே இறைவனை உணர, நாம் முதலில் அடைய வேண்டிய தகுதி.  இதனை அடையச் செய்வதே பக்தி, யோகம் முதலான பாதைகள்.

பதஞ்சலியின் யோக சூத்திரம்,  ‘யோகம் சித்த விருத்தி நிரோத:’  அதாவது, ‘யோகம் என்பது எண்ணங்களின் எழுச்சியைச் சீர் செய்வது’ என யோகத்தின் இலக்கணத்தைக் காட்டுகின்றது.  அந்த யோகத்தைத் தரும் நல்லாசிரியன் இறைவனே.  அவனே  நம்மை ஆளும் மன்னன்.  எனவே அன்னாரின் திருவடிகளில் பணிவோம் என்பதும் இவ்வரிகளின் பொருள்.

‘வெல்க’ என்பதும் ‘வாழ்க’ என்பதைப் போலவே, இறைவனை வழுத்துகின்ற சொல்.

ஒரு சிலர், ‘வேதம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க’ என இவ்வரியினை உரைப்பர்.

ஆகமம் ஆகி நின்ற பரம்பொருளே, ஆகமமாகிய வேதங்களையும் ‘கெடுத்து ஆளுகின்ற தலைவன்’ என்று மாணிக்கவாசகர் அழைக்கிறார்.

‘கெடுத்து’ என்பதற்கு, ‘முடித்து’ என்பதே இவ்விடத்தில் பொருள்.  வேதம் என்பதற்கு அறிவு என்பது பொருள். உலக வாழ்க்கைக்குத் தேவையான அறவழிகளையும், உயர்வான இறைவனை உணர்வதற்கான ஞானத்தையும் தருவதற்காக அமைந்த அறிவே வேதம் ஆகும். ஆனால், இறைவனை உணர்தல் என்பது, இறைவனோடு உரைதல் அல்லது ஒன்றுதல் என்பதாகும். அது உணரப்படுவது, அறியப்படுவதல்ல. அறிவாகவே ஆகி விடுவது.

நம்முள் ‘அறிபவன் யார்’ எனும் வினாவிற்கு, நமது அறிவினால் எப்படி விடை காண முடியும்!

பொதுவாக ஒன்றை அறிகிறோம் என்றால், அங்கே ‘அறிபவன்’, ‘அறியப்படும் பொருள்’, ‘அறிவதற்கான கருவி’ என மூன்று வேறுபாடுகளும் இருக்கும். அறிவினையும் கடந்து இருப்பதே கடவுள் என்றால், ‘அறிபவன் யார்’ எனும் வினாவிற்கே அங்கே வழியில்லை அல்லவா? அப்படியானால், கடவுளை உணர வேண்டுமானால், அறிவும் முடிய வேண்டும்! அறிவின் முடிவுதான் ‘வேத அந்தம்’ அல்லது ‘வேதாந்தம்’. எனவேதான் ‘வேதம் கெடுத்து ஆண்ட வேந்தன்’ என்பதால், அறிவின் முடிவுக்கு அப்பால், அறிவின் ஒளியாக மட்டுமே, எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல், ஆளுமை கொண்டதாக ஆன்மா இருக்கிறது என்பது பொருளாகிறது.

07. பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க!

பிறவி ஏன் துயரமாகிறது?

ஏனென்றால், பொதுவாக பிறவி என்பது, அறியாமை எனும் மாயப் போர்வையில் ஆழ்ந்து கிடக்க வைப்பது என்பதால்தான். ஒவ்வொரு பிறவியும், நாம் உலகில் பெறுகின்ற ஒரு புது அடையாளம். பிறவிகள் தோறும் அடையாளங்கள் மாறிக் கொண்டே இருக்கின்றன என்றால், நாமும் மாறிக் கொண்டே இருக்கின்றோம். அதாவது, மாறாத தன்-நிலையை விட்டுத் தூரே சென்று விடுகின்றோம், அல்லது தந்நிலை இழந்து விடுகின்றோம்.  இதையே பதஞ்சலியின் யோக சூத்திரம்  ‘விருத்தி ஸாரூப்யம் இதரத்ர’  எனக் கூறி, மனதைச் சீர்படுத்த முடியாத ஒருவன்,  அவனுக்குள்  எழுகின்ற எண்ணங்களின் (விருத்தி) வடிவங்களாகவே மாறிக் கொண்டு (ஸாரூப்ய) தன்னிலை இழந்தவன் (இதரத்ர)  ஆகிறான் எனக் காட்டுகிறது.

அறியாமையே பிறவியைத் துயரமாக மாற்றுகின்றது.  அறியாமையினாலேயே, மனதில் எழும் எண்ணங்களினால் ஆளப்பட்டு, சுகம், துக்கம், மயக்கம் எனும் விளைவுகளினால் மாறி மாறிப் பாதிக்கப்பட்டு, பிறவி எனும் சுழற்சியிலேயே நாம் வீழ நேரிடுகிறது.  மயக்கத்தினால், சுகம்-துக்கம், வேண்டுதல்-வேண்டாமை, விருப்பு-வெறுப்பு என எதிர்ப்படையான இருவகைப் பூட்டுக்களால் இறுகப் பூட்டப்பட்டு, செக்கில் சிக்கிய மாட்டினைப் போல, நம்மைப் பிறவிதோறும் உழல வைக்கிறது. இதுவே ‘சம்சாரம்’ எனப்படும்.

எனவே ‘தந்நிலை இழத்தலே’ சம்சாரம் எனும் துயர். ‘பிறந்தாலும், இறந்தாலும், ஆத்மாவாகிய யான், ஒருபோதும் பிறவாதவன், அதனால் இறவாதவன்’ எனும் உண்மையை மறப்பதுதான் சம்சாரத் துயருக்குக் காரணம். அப்படி மறப்பதால்தான், ஒன்றாகிய கடவுள் எனும் உண்மையை விட்டு விலகி, நாம் வேற்றுமையை மட்டுமே பார்க்கிறோம். விருப்பு, வெறுப்பு என வேறுபாடுகள் தோன்றி, சுக-துக்க மாற்றங்களாகிய வலைக்குள் மாட்டிக் கொள்கிறோம். அப்படி மாட்டிக் கொள்வதால், ‘பூரணம்’ எனும் ‘முழுநிறைவு’ நமக்கு ஏற்படுவதில்லை.

‘முழுநிறைவு’தான் முக்தி. அதுதான் சம்சாரத் துயரை அறுக்கப்பட்ட விடுதலை .

உலகமும், உயிர்களும் இறைவனின் திருவிளையாடல் என்றால், படைக்கப்பட்ட தோற்றங்கள் எல்லாமும் ‘சம்சாரம்’ எனும் துயராகிவிடுகிறதே என்ற ஐயம் நமக்கு வரலாம்.

பிறவி என்பதால் மட்டுமே, அது சம்சாரத் துயர் என்பதில்லை. பிறவி எடுத்த போதிலும், ‘தந்நிலை’ இழக்காமல் வாழும் தகைமை ஒருவனுக்கு இருந்தால், அவனுக்குப் பிறவி என்பது ஒரு விளையாட்டாகவும், வாழும்போதே விடுதலை அடைந்தவன் அல்லது ‘ஜீவன் முக்தன்’ எனும் நற்பேறும் வாய்க்கும். எனவேதான், மனிதப் பிறவி ஒரு சம்சாரத் துயர் என்று காட்டிய திருமறைகளே, மனிதப் பிறவி, விடுதலைக்கான மகத்தான வாய்ப்பு என்றும் காட்டுகின்றன.

பிறப்பும், இறப்பும் வெறும் தோற்ற மாயை எனும் பேரறிவினால், உடலோடு வாழும்போதே ஒருவரால் விடுதலை பெற முடியும். இதைக் காட்டத்தான் பகவான் கிருஷ்ணரும், பல்வேறு தவசீலர்களும் அவதரித்து, வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள்.

பிறப்பினை அறுக்கும் அருளினைத் தருகின்ற இறைவன், தன்னைச் சிந்திக்காதவர்களுக்கு மிகத்  தொலைவிலும், சிந்திப்பவருக்கு மிக அருகிலும் இருக்கிறான் என்பதை அடுத்த வரிகளில் காட்டுகின்றார் மாணிக்கவாசகப் பெருந்தகை.

5. ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க

8. புறத்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க

Related Posts

Share this Post