Shivanandalahari – Verse 82
82 – அரியரனாய் ஆகிநின்ற அய்யன் அடி போற்றி!
घोणित्वं सखिता मृदङ्गवहता चेत्यादि रूपं दधौ |
त्वत्पादे नयनार्पणं च कृतवान् त्वद्देहभागो हरिः
पूज्यात्पूज्यतरः स एव हि न चेत् को वा तदन्योऽधिकः ||८२ ||
பா₄ர்யாத்வமார்யாபதே
கோ₄ணித்வம் ஸகி₂தா ம்ருத₃ங்க₃வஹதா
சேத்யாதி₃ ரூபம் த₃தௌ₄ |
த்வத்பாதே₃ நயனார்பணம் ச க்ருதவான்
த்வத்₃தே₃ஹபா₄கோ₃ ஹரி:
பூஜ்யாத்பூஜ்யதர: ஸ ஏவ ஹி ந சேத்
கோ வா தத₃ன்யோ(அ)தி₄க: || 82 ||
உப்பரிகை உற்றிடபம் – உருபாதி
அப்புமுமை கற்றுவரா ஹப்பயண முற்றதுணை
நட்புடமை நற்றுநடம் – படுதாளம்
ஒப்புமிசை தட்டவிழி அர்ப்பணமு முற்றுவரை
உட்கலவை உற்றிருமால் – அதனாலே
நப்புலமு மிக்கபணி வற்புதமு தக்கமிகை
எப்புரமு மொப்பரெவர் – எழில்நாதா!
(82)
(முப்புரங்களை எரித்த சிவபெருமானின் வில்லில் பூட்டிய) கணையாகவும், (அவர் அமரும் வாகனமாகிய) இடபமாகவும், அவரது பாதி உடலான உமையாகவும், (பரம்பொருளின் திருவடிகளைக் கற்றுணர நிலத்தைத் துளைத்த) வராஹம் எனும் பன்றியாகவும், அரனின் நட்பாகவும், (சிவ நடனத்திற்குத்) தாளமிடுபவராகவும், தனது கண்ணையே மலராக அளித்து சிவபிரானைத் துதித்தவராகவும், சிவனின் ஒரு பாதியான சக்தியாக விளங்குபவருமான திருமால், அப்பெருமைகளாலே, துதித்துப் பணியத் தக்கவரில் முதன்மையானவராக இருக்கிறார். இல்லையெனில் (அத்தகைய பெரும் தகைமை கொண்டவர்) வேறு எவரே இருக்கிறார்கள், ஓ, தூயவள் துணைவா!
குறிப்பு:
‘கலாப்யாம்’ எனத் தொடங்கும் ஶிவானந்த₃லஹரீ பாடல் திரட்டில், பரம்பொருளை சிவமும் சக்தியுமாக இணைந்த பேரருளாகவே நாம் தொழுகின்றோம். சத், சித், ஆனந்தம் எனும் நிலையான அறிவும் ஆனந்தமுமாக விளங்கும் சிவம், தாம் வெறும் சாட்சியாக இருக்க, ஆக்கி, வளர்த்து, அழித்து, அணைத்து அருள்கின்ற செயல் விளக்கமாக அப்பரம்பொருளின் சக்தி விளங்குகிறது.
சிவத்தின் செயல் விளக்கமான சக்தியே, திருமால் எனவும் போற்றப் படுகின்றது. சக்தியாகவும், திருமாலாகவும் வழிபாடு செய்வதெல்லாம், பரம்பொருளான சிவத்தின் பொருட்டே அமைகின்றது. இதனைக் காட்டவே, திருமாலின் உருவங்களாகவும், செயல்களாகவும் விளக்கப்பட்ட புராணக் கருத்துக்களை, பகவான் ஆதி சங்கரர் இப்பாடலில் காட்டி இருக்கின்றார்.
சிவன், விஷ்ணு எனும் வேறுபாடுகளும், சைவம், வைஷ்ணவம் எனும் பலவழிப் பாதைகளும், எப்படி ஆழ்ந்த தூக்கத்தில் எல்லா வேறுபாடுகளும் அற்று இருக்கும் நிலையில் மறைகின்றனவோ, அவ்வாறே, ஆன்மாவாகிய தன்னுள் ஒளிரும் தகைமையை உணரும்போது, ஶிவானந்த3லஹரீ எனும் பரசிவ சுக வெள்ளத்தில் நனைக்கப்பட்டு, ஒன்றேயான ஒளியில் விளைந்து இருக்கும் நிலையிலே, மறைந்து போகும்.
எனவே சக்தி வழிபாடு என்பதும், அச்சக்தியின் வெளிப்பாடான எல்லாத் தெய்வங்களின் வழிபாடு என்பதும், இறுதியில் தன்னுள் விளங்கும் பரம்பொருளாகிய ஆன்மனைத் தொழுது ஒடுங்கும் செயலே என்பதுதான் இப்பாடலின் உட்கரு.
அந்நிலையினை அருள்வதே ஶிவானந்த3லஹரீ எனும் பரசிவ சுகவெள்ளத்தின் வித்தாகிய பரம்பொருள் நினைவு. ஆன்ம உணர்வு எனும் பெருநிலை அது. அதனையே இப்பாடல் உணர்த்துகின்றது. (82)