Adiguru – Vidya Tattvam
ஆதிகுரு தக்ஷிணாமூர்த்தி வழிபாடு
வித்யா தத்துவ அறிவு விளக்கம் வேண்டல்
மாயா,காலம், நியதி, கலை, அராகம், வித்யா,புருடன் எனும்
வித்யா தத்துவ அறிவு விளக்கம் வேண்டல்.
சுத்தாசுத்த தத்துவெனும்படி, சக்தியாகிய மாயை விளைக்கின்ற காலம் எனும் நேரம், அக்காலத்துக்குள் விளங்கும் நியதி எனும் விதி, நியதிக்கேற்பப் பரவும் கலை எனும் குண வேறுபாடு, அக்குண வேறுபாட்டை ஒட்டி எழும் அராகம் எனும் இச்சை, இவற்றுடன் இயங்கும் அறிவு – இவ்வைந்தும் வெளிப்பட்டு, அதன் மூலமாக வெளிப்படும் புருடன் எனும் தத்துவமாகக் காட்டப்பட்டது.
மாயா
சுத்தாசுத்த மெனும் சூக்குமத்தின் விரிவாய்
சுடரருளும் பட விருளுமாய்
சூழகிலம் யாவையும் ஆழிருளின் சரிவாய்
சூடிய போர்வை யிதுவாய்
கத்தாய்க் காலமாய், கலையாய்ப் பேதமாய்,
கருமவிதி எனும் நியதியாய்
கருதும் அராகமெனும் கவரும் ஆசையாய்
கட்டுள்ள அறிவு எனதாய்
இத்தாய் இல்லையாய் இலாதது இருப்பதாய்
இயக்கிடும் மாயப் போர்வை
ஈதன்றோ யாதையும் ஈரதாய்ப் பேதமாய்
இருத்தியே விரித்த கோர்வை
அத்தா அடைக்கலம் அருள்விளக் காலிருள்
அழித்தெனைக் காக்க வேண்டும்!
ஆதிகுரு வாயுண்மை நீதிதரு மோனமுனி
தக்ஷிணா மூர்த்தி குருவே!
காலம்
அண்டமுத லணுவதாய் அத்தனையின் வித்துமாய்
ஆதிகடை யளக்க லாதாய்
அருவுருவ மருமமாய் அத்துவிதச் சித்துமாய்
ஆனசிவம் அசைவிசை யதால்
கண்டவடி வாகியதி கற்பிதமாய் அற்புதமாய்
காலமெனும் மூலம் அரிதே
கட்டிவுயிர்ப் பயணத்தைச் சுட்டிமுத லிறுதியாய்
கணக்கீடும் அளவு கோலே!
சென்றமுற் காலமினிச் சேரவருங் காலவினைச்
செய்தபொதிப் பை அழியவே
செய்க இக்காலம் இக்கணம் இப்பொழுது
செயலறிவு மனம் குவியவே
மன்றநட ராசனே கொன்றை யணிஈசனே
மாசக்தி தத்துவம் அருள்க!
மறைமுதலே அருளபயம் மவுனவடி வாலுபயம்
தருகதென் முகத் தெய்வமே!
நியதி
நியதிஎனும் சட்டமிது நீள்தருமத் திட்டம்
நிச்சயத் தமையும் தருமம்
நீதியிது பலனெதனெ நிர்ணயப் படுத்திடும்
நீள்வினைத் தனையும் கருமம்
அயமுதல் புழூஈராய் ஆனவுயிர்த் தத்துவம்
அத்தனையும் விதியின் உபயம்
ஆகுமெவர் நானெனும் ஆணவத் தால்வினை
ஆக்கிடின் அமிழ்த்தும் வலையம்
நயமுடனே சுயவுணர்வும் நான்யார் எனுமறிவும்
நட்டுவினை விட்ட வகையால்
நானிலம் இருத்துவினை போய்விடும் திருப்புமுனை
நன்மை பேருண்மை நியதி!
தயவுடனே ஞானமளித் தனயனெனைக் காப்பது
தந்தையே உந்தன் தகுதி!
தண்முறுவ லாலிதயம் பண்புறவே மோனநிலை
தக்ஷிணா மூர்த்தி குருவே
கலை
கலையான தத்துவம் கலையாத வித்தகம்
கண்டுணறும் அறிவின் மூலம்
கருவாகி குணங்களின் உருவாகி சத்விகம்
கடிரஜஸ் தாமஸமு மாகும்
பலவாக உணரவும் கலையாக விரியவும்
பரவியுள தாய்த் தெரியவும்
பற்பலவாய் அற்புதமாய்ப் நிற்பெதெலாம் பரசக்தி
பதியுங்கலா தத்தவ மாகும்
நிலையாகும் சிவமெழில் இயலான சக்தியே
நிகழ்த்திடும் சலனம் இதனால்
நீண்டும் குறுகியும் தோன்றியே மாறுபட
நிறைத்திடும் கலையின் வடிவம்
தளையாவும் விடுபடத் தலைமேலுன் னடிபட
தந்தையே தண்டனிட்டேன்
தாயுமென ஆனசிவத் தூயமணித் தீபமே
தக்ஷிணா மூர்த்தி குருவே
அராகம்
வேண்டுமெனும் இச்சையே விளைப்பது விரிப்பது
விருப்பமே பொறுப்பின் வித்து!
விழுப்பமாம் ஆசையை எழுப்பவே அராகமெனும்
வித்தையே தத்துவ முத்து!
மீண்டுலகம் சுரக்கவும் மேலுயிர்கள் பிறக்கவும்
மிகுதியாய்ப் பலவும் பலவாய்
மிகைப்படச் செயலகளும் பொருட்களும் பேதமாய்
மிகுத்திடக் கலக்கும் மத்து!
மாண்டுலகில் மீண்டுயான் தோண்டுகுழி ஆமையாய்
மயங்கவோ ஆசை கொள்வேன்?
மன்றாடிக் கேட்கிறேன், மன்றாடும் ராசனுன்
மவுனமினிக் கண்டு கொண்டேன்!
தூண்டுமதி ஒளியிலே துண்டுமனம் ஒடுங்கியே
துரீயம் காண வைப்பாய்!
துல்லியமே தென்முகத்துத் தூமணியே அருள்கவே
தூயவனே ஆதி குருவே
புருடன்
கருவதாய்ச் சைதன்யக் காந்தமதி விரிவாய்க்
கலங்கிடா ஒளிவிளக்க மாய்
கரையிலாப் பரவலாய் நிரவலாய் பயிராய்க்
கலவிடா ஆன்ம நிலையாய்
புருடனாய் ஒருவனாய் விரிந்தமா வடிவினால்
புவனமாய்ப் பரவும் மாயம்
பூத்தபிர கிருதியினைக் கோர்த்தபல் லுயிராய்ப்
புகுந்தருளும் தத்துவ கலையே!
சிறுவனாய்ப் பிழையனாய் உருநிலை அறியனாய்
சித்தம் கலங்கி யானோ
செத்துயிர்ச் சிக்கலில் செக்கிலிடு மக்கெனச்
சேதனம் அவிந்து போவேன்?
தருவதாய்த் தண்முக முறுவலால் அழைத்தனை!
தலைவநின் தாளென் மதி!
தடுத்தாள்க மனத்திருள் கெடுத்தாள்க தேவனே
தக்ஷிணா மூர்த்தி குருவே