Adiguru – Jiva Tattvam

Pages: 1 2
Pages: 1 2

ஆதிகுரு தக்ஷிணாமூர்த்தி துதி

ஆன்ம தத்துவ அருள் வேண்டல்

ஐம்பூதங்கள் – ஆகாயம்

Sri Dhakshinamurthy 1

ஐந்துவகை யாகின்ற பூதவகை யாவதிலே
ஆகாய வெளி யானதே
ஆரம்ப மாகின்ற மூலப் பிரகிருதியின்
அச்சார மான வித்து
விந்துவடி வானதென வேறுவடி வாயுலகில்
விளைகின்ற சக்தி எல்லாம்
வேறானதும் அண்ட வெளியானதும் சிவன்
வேதவடி வான நிலையே
ஜந்துஜன தாவர சகலபொருட் காவுயிர்
ஜகத்திலே விரித்த போர்வை
சக்தியே சிவஞான சித்தியே ஞானகுரு
சங்கரா உனது பார்வை
சிந்தையா காயமென் சீவனுன் உபாயமெனும்
சிவஞான யோகம் அருள்வாய்
சின்மயா நந்தனே உண்மையா தென்முகச்
சீர்வடிவே ஞான குருவே
(1)

ஐம்பூதங்கள் – காற்று

Sri Dhakshinamurthy 2

வேற்றுவி காரமும் வெளியுப காரமும்
விரிக்கப் பரவி யாளும்
விண்ணோ டுலவிடும் தண்ணோ டுலகிடும்
விரிவா கனமு மாகும்
மாற்றுவ தாவன மழையொடு வெயிலென
மாறுதல் சுமந்தி ருக்கும்
மருவிடும் மூச்சிலும் கருவிலும் பேச்சிலும்
மந்திரத் துணை இருக்கும்
காற்றெனுந் தத்துவத் தோற்றமுங் காட்டினை
காலபரி மாணம் விட்டுக்
கல்லால மரத்தமர் வல்லாளனே குரு
கைவல்ய ஞான வடிவே
தேற்றுவ தாமிலகு காற்றான மென்மையே
திருவருட் பேருண் மையே
தென்னவனே ஞானகுரு மன்னவனே சிவஞான
திருவடிவே அருளபயந் தா!
(2)

தீ

Sri Dhakshinamurthy 3

விடியவரும் உதயமெனும் விரிவினிலே அருளவரும்
விரியுங்கதி ரொளியின் வடிவும்
விளையவரும் பயிரில்முளை வித்தினுரு சத்தின்நிலை
விடையவரும் வெப்ப வடிவும்
மடியவரும் மறையுமதி முடிமுதலும் தினகரனும்
மண்ணிலகு மின்னணு விலும்
மலரவரும் நெருப்பினரு வுருவம்பல கருவுடனும்
மயங்கிவரு வழக்கம றியும்
படியவரும் அருளுமடி பயிலவருங் குருவடிவும்
பரவியருள் சிவனுரு வமும்
பார்க்கறிய ஜோதிமயம் பார்த்தறிய ஞானவரம்
பக்திதரும் சக்தி யருளும்
முடியவரும் நல்லறிவும் முனையவரும்
முக்திதரும் மோனவடி வான குருவே
முன்னவனே ஞானமழைத் தென்னவனே மோனநிலை
முற்றுங் கடந்த முதலே!
(3)

நீர்

Sri Dhakshinamurthy 4

வாருலகப் பேருயிர்கள் வாழவே வளியொடு
வந்துறையும் தீயின் அருளால்
வளியாகக் கார்முகில் வழியாகக் கடலாக
வழிந்தோடும் நதிவடிவ தால்
பாருலகப் பலனடைய நீருரவ நலனாகப்
படைத்தருளும் பேரமிர் தமாய்
பாதாதி கேசமுமு நீராதி யானதுடற்
பாத்திரம் படைத்த நிலையால்
சாருமதி யாளருடல் சரிஈரம் என்பதாய்
சத்தியம் நீரின் நிலையே
சங்கரா சிவகங்கை மங்களா சுயம்புவே
சக்திவடி வான கலையே
போருலக ஆசைமதி நீரிளக வைத்தெனை
புதுப்பித்து அருள வேண்டும்
புத்தனே சிவஞான சித்தனே மோனவழி
போதிக்கும் ஞான குருவே
(4)

மண்

Sri Dhakshinamurthy 5

மண்ணுலகு என்பதொரு மாயாவி நோதமே
மாபூத மைந்தின் மையம்
மருவிடும் உயிர்க்கெலா முருவமுஞ் சமைத்திடும்
மண்பாண்ட மென்ப தையம்
எண்ணளவு மில்லையிது ஏற்புடைய தாகவுயிர்
எழுச்சிக்கு வைத்த டு
எண்புறமும் விண்வெளியில் கண்பரவும் வரையிலே
ஏதொன்று மில்லை ஈடு
உண்ணுவது முடுப்பதும் ஓடியே உழைப்பதும்
உயர்வதும் அயர்வ தான
உலகியல் யாவுமே நிலவிடப் பொறுமையாய்
உதவிக்கு வைத்த வையம்
பண்ணுதற் கரியனே பரமனே கருணையால்
படைத்துக் கிடைத்த காயம்
பாவித்து நானுலகைச் சேவிக்க வேண்டினேன்
பரசிவனே ஞான குருவே
(5)

கர்மேந்திரியம் – கை

Sri Dhakshinamurthy 6

கைஎன்ப தோர்கரும யந்திரம் தினசரி
காரிய மாற்றும் கருவி
கரங்களே வருங்கால வரங்களே தருவது
கறைபடி யாது கருதி
செய்வதே கையிதால் செய்கை என்றானது
செல்வம் ஈட்டி உதவி
சேருவர் இடத்திலே சேர்த்துக் கொடுத்திடும்
சிறப்பினால் சிவக்கும் உறுதி
மெய்வழி காட்டவும் மெலியர்துணை கூட்டவும்
மேலோர் முன்கூப்ப வும்
மெதுவாய் இணையவும் இதமாய் உதவவும்
மென்கவிதை நன்கெழு தவும்
ஐங்கர னய்யனே ஆதிகுரு சங்கரா
ஆதரித் தருள வேண்டும்
அழகுவிழி மலரனைய நிலவுநகை முகமினிய
ஆதிகுரு வான கலையே!
(6)

கர்மேந்திரியம் – கால்

Sri Dhakshinamurthy 7

ஒருகாலும் சிவநாமம் மறவாத நிலைவேண்டும்
உத்தமர்தம் உறவு வேண்டும்
ஓதறிய ஞானமறை வேதியரின் தவத்திலே
உலகிலே நடக்க வேண்டும்
வருகாலம் வளமாகும் வல்லவரும் நல்லவராய்
வாழ்வாங்கு வாழ வேண்டும்
வையத்தில் நல்லோர்க்கு வழிகாட்டி யாமென்ற
வகையிலே நடக்க வேண்டும்
மறுகாலும் செவியூட நடமாடும் சிற்சபை
மன்னவா மதிசூட வா
மந்திரப் புன்னகையில் மவுனச் சந்நிதியில்
மாயவனே பூர்வ பலனால்
இருகாலும் பற்றினேன் இடரேதும் வாராமல்
இன்னருள் கூட்ட வேண்டும்
ஈசனே இமயகிரி வாசனே ஆலமரும்
இறையவனே ஞான குருவே
(7)

கர்மேந்திரியம் – வாய்

Sri Dhakshinamurthy 8

நாச்சுவை மொழியிலே நச்சினம் மறையவே
நல்லதே பேச வேண்டும்
நாகாத்து நேரத்தில் நலமான வார்த்தைகள்
நாவிலே வீச வேண்டும்
மூச்சான சத்தியம் முகரவேண்டும் மனம்
முளைப்பதே மொழிய வேண்டும்
முன்னே ஓர்சொலும் பின்னே கோள்சொலும்
முறைகேடு ஒழிய வேண்டும்
வீச்சான சுடுசொலை விடவேண்டும் திருவருள்
வேதம் உரைக்க வேண்டும்
வில்லான நாவில்சுடு சொல்லான அம்புகள்
விடுதலை மறைக்க வேண்டும்
பேச்சான கருவியே பெரியவா னத்திடை
பிரதியாக வைத்த தேவே
பெருமானே தென்நோக்கில் உருவான குருஞானி
பேரழகே மோன வடிவே!
(8)

கர்மேந்திரியம் – இனக்குறி

Sri Dhakshinamurthy 9

விதவிதமாய் உருவம் விளைபயிரும் மிருகம்
விண்பறவை மண்பிறக்க லாகும்
வித்தெனவே சத்துணர்வு தத்திணைய லாகும்
விந்தெனவே தந்தவர மாகும்
சதிபதியாய்த் தம்பதியாய் சந்ததியாய் வாழும்
சத்தியமே ஜீவனுரு வாகும்
சாருமதி நீருறையச் சேருமிட மாகும்
சரிகிரியா சக்தியது வாகும்
புதுநிதியே புண்ணியனே பூவுலகங் காக்க
புத்திரனைப் பூமகளைத் தருக
பூத்தமலர் தேத்தமிழை நாத்தளரக் கூட்ட
புன்னகையே மன்னவனே காட்ட
பதிமதியே சிரம்வதியும் பசுபதியே ஹரனே
பரசிவனே தென்முகனே வருக
கதியினியே நினதுமலர்க் காலடியே தேவே
கல்லால் அமர்ந்தெனக்கு அருள்க!
(9)

கர்மேந்திரியம் – கழிவாசல்

Sri Dhakshinamurthy 10

உண்டதும் உணவிலே ஒதுங்கிடும் எச்சத்தை
ஓயாமல் பிரித் தெடுக்கும்
ஓடிடும் உதிரத்தில் ஒதுங்கிடும் மிச்சத்தை
உப்பெனத் தடுத் திணைக்கும்
பண்டமும் பழுதறப் பார்த்திடும் வேர்த்திடும்
படைத்துடற் கழிவா சலைப்
பாவித்து நாமுலகில் சேவித்துக் கற்றிடும்
பாடத்தில் அறியும் உண்மை
கண்டதும் கேட்டதும் கைகொள்வ தெதிலும்
கசடறக் கற்க வேண்டும்
கடைவாசல் தேறாத அடையாளங் காண்கையில்
கழித்தவை ஒதுக்க வேண்டும்
தண்டமுன் னடைக்கலம் தட்சிணா மூர்த்தியே
தாயனே விலக்கும் ஞானம்
தரவேண்டும் நந்நிலை வரவேண்டும் சந்நிதி
தத்துவ முத்தி முதலே
(10)

ஞானேந்திரியம் – கண்

Sri Dhakshinamurthy 11

கண்ணே கலையறிவு காணுமதி காரிவிழி
காணப் பிறக்கும் அறிவும்
காருண்ய தானதறி சூர்யப்ர காசமும்
காட்சிக் களித்து உதவும்
மண்ணே ழுலகமும் மகிழவும் மற்றவரை
மதித்துப் பழகும் நிலையும்
மாறாத செழுமையும் மறையாத ஆனந்தம்
மகிழ்ந்தாடும் நன்மக்க ளும்
முன்னே தெரியவும் முக்காலம் அறியவும்
மூடித் திறக்கும் இமையுள்
முதலான சிவநாதன் நடமாடும் தரிசனம்
முற்றும் தெரிய வேண்டும்
தண்ணே யணிபித் தாமறை நாயகா
தாரகா நீயறிய வா
தருமனே குருபரா தயைபுரி சங்கரா
தட்சிணா மூர்த்தி குருவே
(11)

ஞானேந்திரியம் – செவி

Sri Dhakshinamurthy 12

ஒலிக்கு ஆதாரம் ஓங்காரமே மிசை
ஓசைமின் னனுவில் விரியும்
ஓயாத சத்தத்தில் ஒருமித்த மோனத்தை
உணரத் தெரியும் அறியும்
விழிக்கு எட்டாது விரியும்ஏ காந்தமே
வேதவடி நாதம் இதமாய்
விளங்கும் சிவமயந் துலங்கும் உணர்வினை
விரையப் புகட்டும் செவியே
மொழிக்கு உதவட்டும் முக்காலம் உணரட்டும்
மூத்தோர் வார்த்தை அமிர்தம்
முரண்பாடு காணாது தரமான சத்தியம்
முற்றும் கேட்க வேண்டும்
வழிக்கு வல்லவனே வாய்பேசா நல்லவனே
வரமிந்தக் கரமீது தா
வரசிவனே தென்னகத்துப் பரசிவனே ஆதியே
வடிவழகே ஞான குருவே

ஞானேந்திரியம் – நாக்கு

Sri Dhakshinamurthy 13

பக்குவ மறியவும் பற்சுவை புரியவும்
பல்லிடை அடங்கி ஆளும்
பாம்பனைய நாவிலுரு வாகுமுமிழ் நீரெனும்
பசியமுது வசியமுற நான்
சற்குண வாளனே சங்கரா சுயம்புவே
சனகாதி முனிவ ராதி
சாரணரும் ஓங்காரக் காரணம் அறியவே
சாட்சியமர் வான தெற்கு
திக்குற நின்றநிலை நெக்கு நெக்குருகி
திருவடியில் தினமடிய நான்
தேடுவது அடையவே நாடுவது அறியவே
தேவரிணை யாக உலகில்
நற்குண மடைந்துபரி பக்குவ நிலைகடந்து
நாவமுது கூட வைப்பாய்
நாதவடி வேபரம மோனவடி வானசிவ
நாகமணி யோக நிலையே

ஞானேந்திரியம் – நாசி

Sri Dhakshinamurthy 145

வாசனை அறியவே நாசியின் வளியிலே
வடிவறியும் குணமுடைய தாய்
வாயறியும் சுவைமதி போயடையுங் காரண
வகையறியும் மணமுடையதாய்
மாசினை விலக்கியே மூச்சினைப் பழக்கியே
மனமமைதி தரவருவ தால்
மண்பரவு சுகந்தமே நுண்ணறிய வைத்திடும்
மாண்பினை வேண்டு கின்றேன்
பூசனை அறிகிலேன் போதனை பெறுகிலேன்
புனர்வாழ்வு ஏதறிகிலேன்
பூர்வத்தில் செய்தநற் கார்யத் தாலேயே
புண்ணியா உன்னை அறிவேன்
தாசனைத் தனயனைத் தயவிலுன தடியினைத்
தாங்கிடும் ஏழை இவனைத்
தக்கவனாய் தருமநெறி மிக்கவனாய் மாற்றுக
தட்சிணா மூர்த்தி குருவே!
(14)

ஞானேந்திரியம் – தோல்

Sri Dhakshinamurthy 15

உடலோடு வடிவம் உருவாகும் படிவம்
உணர்வான கைங்கர் யமும்
உரசறிய அறிவிலதை முரசறியும் நெறியும்
உட்தட்ப வெப்ப நிலையும்
திடமோடு வலிவும் திறமோடு விரியும்
தெளிவான போர்வை யிதுவும்
தீர்க்கமுற நிறையும் தேக்குமர நிலையும்
திருத்திய தரத்தில் அமையும்
புடமோடு பொன்னும் பூரணசு கந்தமும்
புத்துணர் வான கலையும்
பொலியட்டும் தேகத்துள் போகட்டும் ஆனந்தம்
பூரணம் அடைய வேண்டும்
தடமோடு சிற்சபை நடமாடும் நாயகனே
தவயோக சிவஞா னனே
தக்கவனே நின்னருளே பக்கபலம் என்னுயிர்
தட்சிண மூர்த்தி குருவே!
(15)

ஐந்துறைவாயு – பிராணவாயு

Sri Dhakshinamurthy 16

இதயம் இருக்கும்நுரை ஈரல் இயக்கும்முறை
ஈர்க்கும் மூச்சின் அளவில்
இணையும் உயிருமுடல் பிணையும் நேருரிமை
இயலும் உயிரின் வாயு
நிதமும் உடலில்கசி நீரின் தாகம்பசி
நிறையச் சீர் அளந்த
நிலையே பிராணமய கலையே நானறிய
நிஜமே பேரறிவு தா
உதயம் ஆகியது உள்ளம் மாறியது
உயரும் நந்நிலை யிதே
உயிரின் சாசுவதம் ஓடும் சுவாசமென
உணரும் நல்லறிவு தா
பதியும் பாதிமதி முடியும் பாசுபதி
பரனே சிவமய சுதா
பயனே மெளனகுரு தயவே தாரகனே
தட்சிணா மூர்த்தியலங் காரா!
(16)

ஐந்துறைவாயு – அபான வாயு

Sri Dhakshinamurthy 17

சரியளவு சக்தியும் சரீர சுத்தியும்
சாற்றமுது தேற்றறி தலும்
சாதனமே ஆனதுடற் சேதனமே குறையான
சங்கடம் விலக்கு நிலையும்
கரியமில வாயுவென உயிரறியும் மூச்சினால்
கரைத்துவிட முயற்சி யிதனால்
கைங்கர்ய மாற்றுமிச் செளகர்ய மானது
கடைவாசல் காக்க வேண்டும்
பரிவுடைய தயவினால் பரசிவ னருளினால்
பழுதிலா துடல் உதவியால்
பக்குவ மடையவும் நற்குண அமைதியும்
பரிபூரண நல மருளவும்
திரியளவு மனமுதிர தெரியுமதி ஜோதியே
தீபம் ஏற்றி அருள்க
தென்னவனே நிலவனைய புன்னகையி லாசனே
தேவகுரு வான வடிவே!
(17)

ஐந்துறைவாயு – உதானவாயு

Sri Dhakshinamurthy 18

கண்டத்தில் நிற்குநற் காற்றுவடி வானதே
கணக்கிட்டு நாத வடிவை
கற்பிக்கும் ஆதாரம் கழுத்துக்குத் தேவாரம்
கவளத்துச் சாத முணவை
பிண்டத்தில் சேர்ப்பிக்கும் பேரறிய சாதகம்
பெயரிலே உதான வாயு
பேச்சுக்கும் மூச்சுக்கும் பேணிடும் சுகத்துக்கும்
பெருந்துணை யான மாயம்
பண்டத்தில் உடலெனும் பாவத்தில் நானெனும்
பவித்திரம் மறைத்த காயம்
பாவிக்கும் ஆணவம் மேவிக்கும் காரணம்
பனியென விலக்க வேண்டும்
அண்டத்தில் உலகெலாம் ஆக்கிய சாக்கியா
ஆனந்தத் திருத் தாண்டவா
ஆண்டவா திருவருள் வேண்டவா குருவடி
அடைக்கலம் நமச்சி வாயா!
(18)

ஐந்துறைவாயு – ஸமானவாயு

Sri Dhakshinamurthy 19

உதரத்தில் நிறையும் உணவமுது கறையும்
உருசீ ரணமாக உதவும்
உருசத்துப் பிரியும் சரிசத்துப் பரவும்
உருவாகும் அணுவில் ஆக்கும்
அதரத்தில் சுவையும் அந்தத்தில் பசியும்
ஆக்கிஉரு வாக்கி நேயம்
ஆதார மாகவுடல் தாதாய் அமைவது
அருஞ் சமான வாயு
மதுரத்தில் பூவில் மாய்கின்ற வண்டாய்
மாயத்தில் மோகத்தில் நான்
மாளாமல் உடலெனும் கோளான சாதனம்
மண்ணுலகு பயன் படுத்த
சதுரத்தில் சதுரமாய் சரிநிகர பொருத்தமாய்
சாதித்து வாழ வேண்டும்
சனகாதி முனிவரின் கனகாதி வள்ளலே
சங்கரா சிவ சம்புவே
(19)

ஐந்துறைவாயு – வியானவாயு

Sri Dhakshinamurthy 20

தொட்டநிலை பட்டசுகம் சுட்டவடு கிட்டவளி
மொத்தவுணர் வத்தனையுங் காட்டும்
தோலின்அரு காமையிருந் தாளும்உடல் ஓடும்
தோற்றமிது காற்று வடிவம்
திட்டமுடன் நட்டநடு விட்டமிது தண்டுவடம்
திரியுமிது உயிரின் உணர்வாய்
தினவிலது வ்யானமெனும் திறனும்நல மாகட்டும்
தெய்வமுன தருள்உபயந் தான்
பட்டவினை கிட்டும்விலை கெட்டநிலை ஆகாது
பரசிவனே காக்க வேண்டும்
பகலவனாய் குருபரனாய் புகலுமொழி மோனத்தில்
பக்கத்தில் சேர்க்க வேண்டும்
கட்டளையே கிட்டியது கருணைவிழி எட்டியது
காலடியை மேலமர்த்த வா
காலம்அனு கூலமெனக் காட்டுங்கரு ணாகரனே
காதலினி மேலுனது தாள்!
(20)

அந்தகரணம் – மனம்

Sri Dhakshinamurth 21

மனிதராய்ப் பிறக்கினும் மன்ஹிதன் எனும்படி
மற்றோர்க் கிரங்கும் குணமோ
மன்னிக்கும் மேன்மையோ கண்ணியம் அன்பெனும்
மரியாதை அறிய வில்லை
கனியெனச் சிவமயம் கைக்கெட்டும் பொழுதிலோ
காயெனவே மாய உலகே
கைவல்ய மென்றுமனம் பொய்சொல்வ தானது
கடிதளவும் பிடிக்க வில்லை
புனிதராய்ச் சிறப்பதோ போதனை பிறப்பதோ
புக்ககம் புகக் கிடைப்பதோ
போதகனே ஆதிசிவ சாதகனே நாதசம்
பூரணனே அருள வேண்டும்
தனியராய் தவத்தினாய் தண்முகச் சிரிப்பினாய்
தட்சிணா மூர்த்தி யானாய்
தானறியும் மனத்திறம் நானறியச் செய்கவே
தருமபரி பாலன் குருவே!
(21)

அந்தகரணம் – சித்தம்

Sri Dhakshinamurthy 22

சித்தமே நிறையவளர் சிந்தனை நினைவுமலர்
சீலமன சாட்சி எனவே
சீவனே மூடிஉயிர் போகையில் ஏகுமுடல்
சேரவழி காட்டி யதனால்
சத்தமே மறையமனச் சாந்தியே நிறையமதி
சந்தோஷ மாக வளர
சாட்சிமனக் கண்ணாடி காட்சியினி தாகவே
சத்தியம் அருள வேண்டும்
நித்தமே நல்லநெறி நேர்மை எண்ணவழி
நினைவெலாம் உந்தண் முகம்
நிலவட்டும் சிந்தனை நிறையட்டும் ஆனந்தம்
நீடித் திருக்க வேண்டும்
தத்தமே நின்னடிமை தண்டமே சமர்ப்பணம்
தாரணியின் ஆதி குருவே
தருமபரி பாலகனே ஹரசிவசு தாகரனே
தட்சிணா மூர்த்தி அருளே!
(22)

அந்தகரணம் – புத்தி

Sri Dhakshinamurthy 23

எண்ணும் எழுத்தும் ஏட்டுக் கல்வியும்
எத்துணை படித்த போதும்
எதிர்காலம் ஏதென்று தெரியாத வேதனை
ஏனிந்த மதி வாதனை
பண்ணும் பரதமும் பலகலை அறிவியல்
பாடம் படித்தும் என்ன
பதவியும் பட்டமும் உதவுமோ நமனுடை
பரீட்சை விதித்த நாளே
விண்ணும் விளைபயிர் வித்தும் முளையணு
விதமும் உயிரும் பலவும்
விஞ்ஞான மென்பதும் மெஞ்ஞான மிழப்பதும்
விவேகம் என்றாகு மோ?
கண்ணும் காணாதநிலை கடவுள்நான் நானெனக்
கற்பதே புத்தி அழகு
கடவுளுன தருளுபயம் திடமெனது சத்தியம்
கல்லால் அமர்ந்த தேவே!
(23)

அந்தகரணம் – அகங்காரம்

Sri Dhakshinamurthy 24

நான் நானெனும் வீண் ஆணவம்
தான் தன்னுள் காணும்
நன வானது கன வாயினும்
நிஜமா மெனு மாயம்
ஊனா னதும் உடலா னதும்
உண்மை எனும் பாரம்
உணர்வோ மதி உணரா தது
உதிரும் அகங் காரம்
நான் யார்அது நீயே யெனும்
ஞானம் வர வேண்டும்
நம னாயுதம் வரும் நாளிலும்
சிவநாமந் துணை யாகும்
வான் மாலனும் மண் நான்முகன்
காணா தணா மலையே
வடிவே குரு பரனே அருள்
வாடா மலர் முகனே!
(24)

Pages: 1 2

Related Posts

Share this Post

Leave a Comment