Adiguru – Jiva Tattvam
ஆதிகுரு தக்ஷிணாமூர்த்தி துதி
ஆன்ம தத்துவ அருள் வேண்டல்
ஞானேந்திரியம் – நாசி
வாசனை அறியவே நாசியின் வளியிலே
வடிவறியும் குணமுடைய தாய்
வாயறியும் சுவைமதி போயடையுங் காரண
வகையறியும் மணமுடையதாய்
மாசினை விலக்கியே மூச்சினைப் பழக்கியே
மனமமைதி தரவருவ தால்
மண்பரவு சுகந்தமே நுண்ணறிய வைத்திடும்
மாண்பினை வேண்டு கின்றேன்
பூசனை அறிகிலேன் போதனை பெறுகிலேன்
புனர்வாழ்வு ஏதறிகிலேன்
பூர்வத்தில் செய்தநற் கார்யத் தாலேயே
புண்ணியா உன்னை அறிவேன்
தாசனைத் தனயனைத் தயவிலுன தடியினைத்
தாங்கிடும் ஏழை இவனைத்
தக்கவனாய் தருமநெறி மிக்கவனாய் மாற்றுக
தட்சிணா மூர்த்தி குருவே