Adiguru – Jiva Tattvam
ஆதிகுரு தக்ஷிணாமூர்த்தி துதி
ஆன்ம தத்துவ அருள் வேண்டல்
ஞானேந்திரியம் – தோல்
உடலோடு வடிவம் உருவாகும் படிவம்
உணர்வான கைங்கர் யமும்
உரசறிய அறிவிலதை முரசறியும் நெறியும்
உட்தட்ப வெப்ப நிலையும்
திடமோடு வலிவும் திறமோடு விரியும்
தெளிவான போர்வை யிதுவும்
தீர்க்கமுற நிறையும் தேக்குமர நிலையும்
திருத்திய தரத்தில் அமையும்
புடமோடு பொன்னும் பூரணசு கந்தமும்
புத்துணர் வான கலையும்
பொலியட்டும் தேகத்துள் போகட்டும் ஆனந்தம்
பூரணம் அடைய வேண்டும்
தடமோடு சிற்சபை நடமாடும் நாயகனே
தவயோக சிவஞா னனே
தக்கவனே நின்னருளே பக்கபலம் என்னுயிர்
தட்சிண மூர்த்தி குருவே