Adiguru – Jiva Tattvam
ஆதிகுரு தக்ஷிணாமூர்த்தி துதி
ஆன்ம தத்துவ அருள் வேண்டல்
தீ
விடியவரும் உதயமெனும் விரிவினிலே அருளவரும்
விரியுங்கதி ரொளியின் வடிவும்
விளையவரும் பயிரில்முளை வித்தினுரு சத்தின்நிலை
விடையவரும் வெப்ப வடிவும்
மடியவரும் மறையுமதி முடிமுதலும் தினகரனும்
மண்ணிலகு மின்னணு விலும்
மலரவரும் நெருப்பினரு வுருவம்பல கருவுடனும்
மயங்கிவரு வழக்கம றியும்
படியவரும் அருளுமடி பயிலவருங் குருவடிவும்
பரவியருள் சிவனுரு வமும்
பார்க்கறிய ஜோதிமயம் பார்த்தறிய ஞானவரம்
பக்திதரும் சக்தி யருளும்
முடியவரும் நல்லறிவும் முனையவரும்
முக்திதரும் மோனவடி வான குருவே
முன்னவனே ஞானமழைத் தென்னவனே மோனநிலை
முற்றுங் கடந்த முதலே