Adiguru – Jiva Tattvam
ஆதிகுரு தக்ஷிணாமூர்த்தி துதி
ஆன்ம தத்துவ அருள் வேண்டல்
கர்மேந்திரியம் – கால்
ஒருகாலும் சிவநாமம் மறவாத நிலைவேண்டும்
உத்தமர்தம் உறவு வேண்டும்
ஓதறிய ஞானமறை வேதியரின் தவத்திலே
உலகிலே நடக்க வேண்டும்
வருகாலம் வளமாகும் வல்லவரும் நல்லவராய்
வாழ்வாங்கு வாழ வேண்டும்
வையத்தில் நல்லோர்க்கு வழிகாட்டி யாமென்ற
வகையிலே நடக்க வேண்டும்
மறுகாலும் செவியூட நடமாடும் சிற்சபை
மன்னவா மதிசூட வா
மந்திரப் புன்னகையில் மவுனச் சந்நிதியில்
மாயவனே பூர்வ பலனால்
இருகாலும் பற்றினேன் இடரேதும் வாராமல்
இன்னருள் கூட்ட வேண்டும்
ஈசனே இமயகிரி வாசனே ஆலமரும்
இறையவனே ஞான குருவே