Arumukar Anthathi Tamil
ஆறுமுகர் அந்தாதி

ஆசியுரை
ஸ்ரீ-ல-ஸ்ரீ கயிலை இரா. நாகநாதசிவம் குருக்கள்
இவ்வுலக இயக்கத்தில் மாயா பாசங்களினால் சூழப்பட்ட, நிலையில்லா வாழ்க்கைதனிலே மனிதர் நிலை தடுமாறும்போது, ஓர்முகமாய் எல்லாம் வல்ல இறைவனை ஏற்றுத் துதிப்பதைத்தவிர வேறு வழியொன்றும் இல்லை என்றுணர்ந்து அம்மனிதர் பணியும் வகையினால், அவர் மனதிலே ஆன்மீக அருள் ஊற்று அற்புதமாய்ச் சுரக்கிறது. விண்ணாய், மண்ணாய், வேராய், விருக்ஷமாய், காற்றாய், கனலாய், காயாய், கனியாய், மனமாய், மதியாய் விரிந்து விளங்குகின்ற இறைவனாகிய மன்னவனை, அதனாலேயே போற்றிப் புகழ்ந்து பேரின்பம் எய்தினர் பெரியோர்கள்.
நாகரீகப் போர்வையிலே அகம் மறைக்கும் இலண்டன் மாநகரினிலே, தமிழ் சுரக்கும் தனிமனிதனாகக் கவிஞர் மீ. ராஜகோபாலன் அவர்களைக் கண்டேன். பக்தியாலும், ஆன்ம தாகத்தாலும் படைக்கப்பட்ட அவரது கவிதைகளை வியந்து வாசித்து மகிழ்ந்தேன். அடுக்கடுக்கான சொற்றொடர்களும், ஆழமான கருத்துக்களும் அழகான கவிதை லயத்துள் அமையப் படைக்கின்ற ராஜகோபாலனிடம், “எந்தை கந்தப்பெருமானது ஆறுமுகத் திருக்கோலத்தைப் பணிந்து, அந்தாதி பாடலாமே” என ஓர் நற்போதினிலே உரைத்தேன். அன்றே அதனைச் சித்தம் ஏற்றுச் சிறப்பாகப் படைத்தார் போலும்!
கவிஞர் மீ. ராஜகோபாலன், ஸ்ரீ ஆறுமுகர் அந்தாதி எனும் இப்புனித நூலில், தடையற்ற தமிழ்நடையில், தத்துவக் கருத்துக்களோடு, தனக்கே உரித்தான எளிய, தெளிய சொற்பதங்களினால், தமிழ்க்கடவுள் திருமுருகன் புகழ்பாடிப் பேறு பெற்றுள்ளார். ஆதியும் அந்தமும் இல்லா ஆறுமுகப்பெருமானை, அந்தாதி எனும் அருட்பாமாலை சூட்டி அழகுற ஆராதித்துள்ளார்.
இந்நாளில், அரிதான இந்த ஸ்ரீ ஆறுமுகர் அந்தாதி எனும் துதிநூலை எல்லோரும் பெற்று, ஓதி உணர்ந்து, உமைமகனின் உயரருள் பெற்றுப் பேரின்பம் அடையுமாறு வேண்டுகின்றேன். இயல் தமிழால் இறைவனை ஏற்றி நிற்கும் நமது கவிஞர் மீ. ராஜகோபாலன் அவர்கள், மனைவி மக்கள், சுற்றம், சுகமொடு, வாழ்க்கையில் எல்லா நற்பேறுகளையும் இனிதாக அடைந்து நின்று, எந்நாளும் இறையருளால் இன்பமொடு வாழ வேண்டி, எல்லாம் வல்ல இலண்டன் ஸ்ரீ முருகப்பெருமானின் இருதாள் பணிந்து இறைஞ்சுகின்றேன்.
வாழ்க வளமுடன்!
ஆசிகளுடன்
கயிலை இரா. நாகநாதசிவம் குருக்கள்,
இலண்டன் ஸ்ரீ முருகன் கோயில்,
28 – 7 – 2005
நூல் அறிமுகம்
குருவாய் வந்தருளிய தமிழே உருவான ஸ்ரீ முருகப்பெருமானை அமுதூறும் மொழியாலே அடியார்கள் பாடிப்பணிந்து அகமகிழ, அவனருளாலே படைக்கப்பட்டதுதான் இந்த அரியநூலான ஸ்ரீ ஆறுமுகர் அந்தாதி. எப்போதும் சிவநாமம் ஏந்தி, திருமேனி தவயோகமாகி, தொண்டர்பணி செய்யும் பேரடியார் வழிவந்த கயிலை ஸ்ரீ நாகநாத சிவாச்சாரியரின் மனதில் உதித்த எண்ணத்தை ஆன்மாவில் பதித்து, அருமை நண்பர் கவிஞர் மீ. ராஜகோபாலன், ஸ்ரீ ஆறுமுகர் அந்தாதி எனும் அருள் மணம் கமழும் பாமாலையாகத் தொடுத்து அளித்துள்ளார்.
“மழையாக மொழியூற” எனும் விநாயக வணக்கப்பாடலிலேயே ஆசிரியரின் தன்னடக்கமும், பரந்த மனதும் வெளிப்படுகிறது. மழை என்றும் ஒருவருக்கென்று பெய்வதில்லை. சிற்பியில் விழுகின்ற சிறுதுளி முத்தாவது போல், குருவருளால் உருவான இந்த தெய்வீகப்பாமாலை, இலண்டனில் மட்டுமின்றி குன்றுதோராடும் குமரன் குடி கொண்ட இடமெல்லாம் பரிமளிக்கும். ஒருமனதோடு ஆறுமுகனின் திருவடி நினைத்து, இவ்வந்தாதியால் துதித்தால், இருளடர்ந்த மனதில் ஒளி கூடும். உண்மை சுகம் விளையும். கல்லைக் கட்டிக்கொண்டு கடலில் விழுந்தால் கரைசேர முடியாதல்லவா? ஆசாபாசத்தால் ஆதிக்கப்பட்ட நெஞ்செமெனும் கல்லைக்கட்டிக் கொண்டு, பிறவிப்பெருங்கடலை நாம் எவ்வாறு கடப்பது? அதனாலேயே, கிரெªஞ்ச மலையைத் தகர்த்த முருகவேல் எம்முடைய மனமாகிய மாமலையைத் தகர்த்து அருள் தாராதோ என வேண்டுகிறது ஒருபாடல்.
கந்தர் அலங்காரத்திலே மொழிக்குத்துணை முருகா எனும் நாமங்கள் எனத்துதிக்கிறார் அருணகிரிநாதர. “ஓம்” என்பது பிரணவம். அகார ரூபமான இறைவனும், உகார ரூபமான இறைவியும், மகார ரூபமாகிய ஆன்மாவும் “முருகா” எனும் நாமாவில் அடங்கியிருப்பதாலேயே, அருணகிரியார் “நாமங்கள்” எனப் பன்மையிலே குறிப்பிட்டுள்ளார். “ஆறுமுகர் அந்தாதி” எனும் தலைப்பிலேயே உள்ள முதல் மூன்று எழுத்துக்குள் (அ, இ, உ எனும்) பிரணவப்பொருள் மறைந்திருப்பதால், இந்தப் பாமாலை தமிழ்கூறும் நல்லுலகிற்கு மற்றுமொரு வரப்பிரசாதம்.
நாம் வாழ்கின்ற காலம் மட்டுமின்றி எதிர்காலத்தின் பிரதிநிதியாய் உலகெங்கும் பிறந்து வளர்கின்ற குழந்தைகளும் இந்நூலைப் படித்து, உணர்ந்து, பயன்பெற வேண்டும் எனும் நோக்கத்திலே, சேவற்கொடியேந்திய சேயோனின் அந்தாதியை, தமிழிலும் ஆங்கிலத்திலும் தந்துள்ள செயல், இந்நூலுக்கு மேலும் பெருமை சேர்க்கிறது. வந்தவினையும் வருகின்ற வல்வினையும் கந்தனென்று சொல்லக் கலங்கும் – என்பதைப்போல, இவ்வந்தாதியைப் பாராயணம் செய்வதால், எந்தவினையும் நம்மை அணுகாது. சுவாசிப்பதால் மட்டுமே மனிதர்களாகிய நாம், இவ்வருட்பாடல்களை மனதார வாசிப்பதாலே, புனிதர்களாவோம். நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்
குருஜி ஸ்ரீ கல்யாணசுந்தரம்
இலண்டன்