Tribute to MS Subbulakshmi – Tamil
(Read in ENGLISH) எம்மெஸ் அம்மா, எங்கே நீ போய்விட்டாய்! பக்தியை, பரவசத்தை, பாரத சுதந்திரத்தை சக்தியை, ஸ்வரலயத்தால், சங்கீத சாஹசத்தால் கொட்டி எம்மை வளர்த்துவிட்டு கோதின்றி வாழ்ந்துவிட்டு சட்டென்று சரஸ்வதியின் சந்நிதிக்கோ போய்விட்டாய்? அம்மா எனும் அரிய சொல்லுக்கு உரிய பொருளே உன் பிறவி! ஒருவருக்கு இறையவனே உரியவகைத் திறமைகளைக் கருவினிலே வைக்கின்றான்; கண்டுஅதைக் கற்றுணர்ந்து திருவெனவே விளக்கேற்றித் திசைபடவே செய்தல்கடன், குருவருளே இதற்கு வரம், குறிப்பிட்டுக் காண்பித்தாய்! காட்டுக்குயிலாக கண்கொள்ளா வானத்தின் விண்மீனின் துளியாக வீட்டுக்குடமாக விளக்காக, திரைப்படத்தின் விமரிசனப் பொருளாக கூட்டுக்கிளியாக குவிந்திருப்பாய்! நல்விதியின் பிரதிபதியாய் சதாசிவனார் பாட்டுப்புயலாக பாரதத்து மணியாக, பவித்திரத்து அணியாக