01-ஏன் இந்த பூஜை?
Log in to download as PDF

ஏன் இந்த பூஜை?

ஐயாவுடன் உரையாடல் (1)

(Read in ENGLISH)

‘நாளைக்கு விநாயகர் சதுர்த்தி பூஜை’, என்றார் உமா, என் மனைவி.

அதற்குப் பதில் சொல்லும் முன்னேயே,  கீர்த்தி, எங்களது கடைக்குட்டி வியந்தாள்.

‘ஓ, இதானே விநாயகர் பொம்மை பண்ணி, பூஜை எல்லாம்  பண்ணிட்டு, கடல்ல  போய் போட்டுவோமே,  மும்பையிலல கூட பெரிய விழாவா நடக்குமே,  அதானே!’.

‘ஆமாம்’,  அப்படிச் சொல்லிவிட்டு உடனேயே முக்கியமாகப் பட வேண்டும் என்பது போல, ‘ பூஜை பண்ணினால்தான்  நாம் விரும்புவதை எல்லாம் அடைய வாய்ப்புக்கள் வரும்’ என்றேன்.

காவ்யா, பெரியவள், உரையாடலில் கலந்து கொண்டாள்.

‘நான் நினைக்கிறேன், நம்ம இந்து ரிலிஜியன்லாதான், ஒவ்வொரு மாசமும் ஏதாவது பண்டிகைனு வந்துண்டே இருக்கு’.

நான் பதில் சொல்வதற்குள்ளாகவே தொடர்ந்தாள்.

‘அப்பா, ஏன் இந்த மாதிரி பூஜை எல்லாம் பண்றோம்?  நீ எப்பவும் நம்மளோட வேலைகளை எல்லாம் ஒழுங்கா செஞ்சாத்தான் பலன் கிடைக்கும்னு சொல்லுவியே, அப்படினா,  நம்ம வேலையைப் பண்றத விட்டுட்டு பூஜை எல்லாம் பண்றது எதுக்கு?’

‘முயற்சி மட்டுமே நமது குறிக்கோளைத் தந்துடறதில்ல காவ்யா’ என்றேன் நான்.

‘மற்ற பல விஷயங்களும் நம்ம வேலைக்கு இடையூறாவோ, உதவியாவோ இருக்கும்.   சுவாமியை துதிக்கிறது, பூஜை பண்றதெல்லாம் அந்த மாதிரி நிலைமைகளை நமக்குச் சாதமாக மாத்தனும்கிறதுக்காகத்தான்.’

எனக்குத் தெரியும், என்னுடைய பதில் போதுமானதாக இருக்காது என்பது. அதனால், அவளை நிமிர்ந்து பார்த்தேன்.  காவ்யாவோ எதுவும் சொல்லாமல் இருக்க,  கீர்த்தி கேட்டாள்.

‘டாட்,  ப்ரேயர்ஸ் ஹெல்ப் பண்ணுமா என்ன?  ரேஸ் ஓடும் போது,  ஓடறவா எல்லாரும்தான் ஜெயிக்கணும்னு வேண்டிக்கிறா…. ஆனால் யார் நன்னா ஓடரானோ, அவன் தானே ஜெயிக்கிறான்!  அப்படினா, எஃபர்ட் தானே முக்கியம்?’

இந்த மாதிரி உரையாடல் எல்லாம் எங்கள்  வீட்டில் மிகவும் சகஜம்.    நிச்சயமாக, பெரும்பாலான பெற்றோர்கள்கள் தங்கள் குழந்தைகளின் கேள்விகளை ஊக்குவிப்பதுதானே வழக்கம்!

கேள்வி என்பது கல்விக்கு மிகவும் அவசியம்.  அதிலும் ஆன்மீக, தத்துவ அறிவுக்குக்  கேள்வி கேட்பது  என்பது ஒரு ஆரோக்கியமான வழி. மேலும், ஒருவர் கேள்வி கேட்டால், அவர் விஷயம் தெரியாததால்தான் கேட்கிறார் என முடிவு கொள்வது சரியல்ல.  ஒருவர் கேள்வி கேட்பதும், அவருக்கு விஷயத்தைப் பற்றிய அறிவு இருக்கிறது என்பதனாலும் ஆகும்.

அது தவிர, பெற்றோர் வாக்கினை அப்படியே கட்டளையாக நம்பி எடுத்துக் கொள்வது, இக்காலக் குழந்தைகளிடம் எதிர்பார்க்க முடியாத ஒன்று. அது தேவையும் இல்லை. இப்போதெல்லாம், அவர்களுக்கு இண்டெர்னெட்டின் மூலம் பலவிதமான விஷயங்களும் உடனுக்குடனேயே கிடைக்கிறது.  அதனாலேயே, ஆய்ந்து எது உண்மை எது பொய் என் உணர்ந்து கொள்கின்ற பொறுப்பும், சுமையும் அவர்களின் மேல் பலமாக ஏற்றி வைக்கப்பட்டிருக்கிறது.

எனக்கு இந்த இளைஞர்களின் ஆர்வமும், வெடுக் வெடுக்கென கேள்வி கேட்கும் துடிப்பும் பிடித்திருக்கிறது.  இக்கால இளைஞர்கள் கேள்வி கேட்பது என்னவோ, துணிச்சலும், எதிர்ப்பும் உள்ளவர்கள் எனும் தோற்றத்தை வேண்டுமானால் நமக்கு ஏற்படுத்தலாம்;  ஆனால் உண்மையில்,  ஆழ்ந்து அறிந்து கொள்ள வேண்டும் எனும் ஆவலும்,  நியாயமுமே அதில் அதிகம் இருக்கிறது என்பது என் அபிப்பிராயம்.  அதனால், இந்த  உரையாடல் எனக்கு உற்சாகமே தந்தது.

நான் பதில் சொல்ல வாய் எடுப்பதற்குள், வாசலில் அழைப்பு மணி அடித்தது.  போய்த் திறந்தேன்.

அங்கே ஐயா….. எங்களது மிகச் சிறந்த நண்பர்.  என்ன ஒரு சந்தோஷமான வருகை!

ஐயாவை ஒரு  நெருங்கிய நண்பராக எனக்குப் பல ஆண்டுகளாகத் தெரியும்.   இருந்தும்,  அவரை முற்றிலும் நான் அறிவேன் எனச் சொல்லிவிட முடியாது.  ஒரு  திறமையான விஞ்ஞானி எனப் படிப்பும், ஆலோசகர் எனும் தொழிலும் கொண்டு, உலகமெங்கும் பயணித்துக் கொண்டிருப்பவர்.   சமயம் கிடைக்கும் போதெல்லாம் இந்தியா சென்று,  வாழ்க்கையில் நோக்கம் என ஏதுமில்லாதது மாதிரி சுற்றிக் கொண்டிருப்பார்.  அதே சமயம் ஏதோ தொலைத்து விட்ட பொருள் ஒன்று இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தவர் மாதிரியும் போய்க் கொண்டும் இருப்பார்.

ஐயாவுக்குக் கிட்டத்தட்ட என் வயது தான் இருக்கும். எனினும், அவர் முகத்தில் ஒரு முதிர்ச்சி இருப்பதாகப் பட்டது.  அவர் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார்.  சில  சமயங்களில் அவரைத் தேடிக் கொண்டு நான் செல்வதும் உண்டு.   ஏனென்றால்,  அவருடன் உரையாடும் போது, மிகவும் ஆழமான, அதே சமயம்  ஒரு வித நிம்மதியைத் தருவதுமான அறிவினைப் பெறுவதுண்டு.  அவருக்குக் குழந்தைகளுடன் பேசினாலும் சரி, பெரியவர்களுடன் பேசினாலும் சரி, எல்லாம் ஒன்றுதான்.

இவருக்குள் அழுத்தமான ரகசியங்கள் இருக்கும் என்று கூடச் சில சமயங்களில் எனக்குத்  தோன்றும்.  ஒரு முறை,  தான் ஒரு அதிசயமான பயணத்துக்குப் போகப் போவதாகச் சொன்னார்.  அது என்ன பயணம் என்றோ, எப்போது பயணம் என்றோ நான் கேட்கத் துணியவில்லை, அவரும் சொல்லவில்லை!

‘வாங்கோ ஐயா,  மிக நல்லது உங்களைப் பாக்கிறது. இப்போதான் குழந்தைகள் துதி, பூஜை எல்லாம் பத்திக் கேள்வி கேட்டுக் குடைஞ்சுண்டு இருக்கா….’

‘ம்.   அப்படினா, அதப்பத்தி தெரிஞ்சுண்டு, நீங்கதான் சரியான பதிலைச் சொல்லணும்’, தனது காலணிகளைக் கழட்டிக் கொண்டே சொன்னார் ஐயா.

உள்ளே போனோம்.

‘ஹலோ அங்கிள்…  விநாயகர் பூஜை பத்திப் பேசிண்டிருந்தோம்.  எப்பப் பார்த்தாலும் உழைச்சாத்தான் பயன் அப்படினே நான் அப்பா சொல்லக் கேட்டிருக்கேன். அப்படினா, பூஜையால நாம் விரும்பினதெல்லம் கிடைக்கும்கிறது எப்படி’, கேட்டாள் காவ்யா.

‘ரொம்ப சரி…. யார் சொன்னது  ப்ரேயர், பூஜை எல்லாம் நீ விரும்பினதை  எல்லாம் கொடுக்கும்ணு….’, ஐயா பதிலுக்குக் கேட்டார்.

எனக்குக் கொஞ்சம் சங்கடமாய் இருந்ததைப் புரிந்தவர் போல, ‘துதி, பூஜை எல்லாம் நீ விரும்பினதை எல்லாம் கொடுக்காது….. ஆனால், உனக்குத் தேவையானதை எல்லாம் கொடுக்கும்….’ என்றார்.

கொஞ்சம் அமைதி அங்கே!

‘கர்மா அப்படினு சம்ஸ்கிருத வார்த்தை. அதான் செயல் அல்லது ஆக்ஷன்.   கர்மாவுக்குப் பல பொருள் இருந்தாலும், செயல் அப்படிங்கிறது தான் முக்கியம்.   நீ சொன்ன மாதிரி  அதனால், கர்மாதான் பலனைக்  கொடுப்பது.  கர்மா பண்ணாமல் யாரும் பலனை எதிர்பார்க்க முடியாது.’

‘ஆனால், அங்கிள், குழந்தை ஒரு கர்மாவும் செய்யாமலே,  அம்மாக்கிட்டே இருந்து எல்லாம் வாங்கிக்குமே…. அப்போ? ‘,  இது கீர்த்தி.

‘குழந்தைகள் எல்லாம் அவா அம்மாவோட செயலைப் பயன்படுத்திக்கும்’  என்றேன் நான்.

அங்கே ஒரு சில நிமிடங்களுக்கு அமைதி. பிறகு ஐயா சொன்னார்.

‘உனக்குத் தெரியுமா, எல்லாக் குழந்தைகளுக்கும் அந்த மாதிரி அம்மாவின் உதவி கிடைக்கிறது இல்லை.   சில் பேர் அநாதைகள்.  சில பேருக்கு  அம்மா, அப்பா இருந்தும் ஒரு அடிப்படை உதவியும், வசதியும் கிடைக்கிறதில்லை.’

ஐயா பேசிக் கொண்டிருக்கும் போதே, கீர்த்தி கேட்டாள்.

‘அங்கிள், அப்படினா, ஒரு குழந்தை லக்கி, இன்னொன்னு அன்லக்கி … அப்படித்தானே சொல்ல முடியும்?’

‘ம்…. நான் லக்கி அப்படினு நீ நினைக்கிற அர்த்தத்தில சொல்ல மாட்டேன்.  சம்ஸ்கிருதத்தில  அதிர்ஷ்டம் அப்படினு ஒரு வார்த்தை இருக்கு.  தமிழ்ல  அதுக்கு  லக் அப்படிங்கிற மாதிரி நாம் பொருளை நினைச்சுக்கிறோம்’,  ஐயா சொன்னார்.

‘கிட்ஸ்…. நான் முன்னாடியே சொல்லி இருக்கேன். அதிர்ஷ்டம் அப்படினா, கண்ணுக்குத் தெரியாதது …. அப்படினு’,  நான் சொன்னேன்.

அவர்களும் தலையை ஆட்டினார்கள்.

‘அப்படினா,  யாராவது, எந்த முயற்சியும் செயலும் பண்ணாம, ஏதாவது பிரயோஜனம் அடைஞ்சா, அது அதிர்ஷ்டம், அப்படியா’,  கேட்டாள் காவ்யா.

‘ஆமாம் காவ்யா.  அதிர்ஷ்டம் அப்படிங்கிறதுக்கு உண்மையான விளக்கத்தைப் பெற, காரண காரியம் அல்லது cause and effect  அப்படிங்கிற தத்துவத்தைப் புரிஞ்சுக்கணும்.  நம்ம வேதங்களில் இதப்பத்தி எல்லாம் நிறைய ஆராய்ஞ்சு சொல்லி இருக்கு. ‘

உமாவும் ஹாலுக்குள் வந்தார்.  நாங்கள் அனைவரும் ஐயாவைச் சுற்றி உட்கார்ந்து கொண்டோம்.   இது போன்ற முந்தைய அனுபவங்கள் ஒரு உதாரணம்  ஆகும் என்றால், ஒரு இனிய உரையாடல் இனியும் வர இருக்கிறது என்பது தெளிவாகிறது.

ஐயா தொடர்ந்தார்.

‘காரண காரியம் என்பது ஒரு முறையான வாத அறிவு.  நமக்கெல்லாம் தெரியும். எந்த ஒரு விளைவுக்கும் ஒரு காரணம் இருந்தாக வேண்டும், அதேபோல, எந்த ஒரு செயலும் காரணம் என்றாகி, ஒரு விளைவை ஏற்படுத்தும்.  நமது வேதங்கள், இந்த உறவை இன்னும் ஆழமா அனலைஸ் செஞ்சு,  மேலும் அதிகமான விஷயங்கள்  எல்லாம் சொல்லி இருக்கு.  உதாரணமா,   காரணம் உண்டாக்கும் காரியம்  அதாவது செயலினால் வரும் விளைவு,  நமது கண்ணுக்குத் தெரியாமலும் இருக்கும்.  அதாவது,  கண்ணுக்குத்  தெரியாமல்,  காரணத்துக்கு எவ்விதத் தொடர்பும் இருப்பதாகக் காட்டாமல், விளைவுகள் ஏற்படுவதும் உண்டு,  இந்த மாதிரி விளைவுகள், நிச்சயமாக எதிர்காலத்தில்  நமக்கு  வேறு அனுபவங்களைக் கொடுக்கும்’.

ஐயா அமைதியாய் இருந்தார்.

உரையாடலில்,  ஐயா இடையிடையே மௌனமாய் இருப்பது உண்டு.  ஒருவேளை சொன்ன செய்தி, கேட்பவர் மனதிலும் அறிவிலும் தைக்க வேண்டும் என்பதற்காக இருக்கலாம்.

‘அந்த மாதிரியான கண்ணுக்குத் தெரியாத விளைவுகள், ஒரு காலத்தில நமக்குப் பயனோ, துயரோ தரும் போது, அதுக்குத் தான்  அதிர்ஷ்டம்னு சொல்றோம்’,  ஐயா சொன்னார்.

‘ஐயா,  நான் இப்ப பண்ற செயல் எல்லாம்,  இப்ப பலன் தரலைனாலும்,   எப்பவோ ஒருநாள் தரும்… அப்படியா சொல்றேள்?’ கேட்டாள் காவ்யா.

‘ஆமாம், அது மாதிரி நடக்கலாம்.  மத்தவரோட செயலின் விளைவு கூட நமக்கு ஒரு பாதிப்பை உண்டாக்கலாம்.  நீ  டெலிவிஷன்ல பிபிசி ப்ரோக்ராம் ஒண்ணு பாத்தியா…. வெதர் பத்தி காண்பிச்சது….  அதாவது, எங்கேயோ யாரோ ஒரு தும்மல் தும்மினா, அது கூட இன்னொரு இடத்தில வெதரை மாத்திடுமாம். …….  சயின்ஸ் இப்படி எல்லாம் சொன்னா, நாம உடனே அப்படியே எடுத்துக்கிறோம்.  நம்ம வேதாந்தமும் சித்தாந்தமும் அப்படித்தான். அவை எல்லாம் மிக நுண்ணிய அறிவியல்.   அதன்படி,  கரும பலன் உடனடியானு இல்லாமல், எப்பவோ, எங்கேயோ வந்து நம்மை பாதிக்கும் அப்படினு சொல்லி இருக்கு.’

‘அது எவ்வளவு நாள் கழிச்சு, அங்கிள்?’

‘யாருக்குத் தெரியும்…. இந்த வாழ்க்கைக்குள்ளேயோ, இல்லைனா, அடுத்த ஜென்மத்திலேயோ…’

‘அடுத்த ஜென்மம்… நெக்ஸ்ட் லைப்?’

‘இருக்கலாம்…..   இப்ப நாம் தெரிஞ்சுக்க வேண்டியது,   நாம் எதிர்பார்க்காமல் அனுபவிக்கிற எல்லாத்துக்கும், முன்னே பண்ணின கர்மாதான் காரணம் அப்படிங்கிறதுதான்….. அதனாலேயே தான்,   இப்போ நமக்குக் கிடைக்கிற வாய்ப்பு, தடைகள் எல்லாம்….’

‘அங்கிள்… நீங்க சொல்றபடி,  வாழ்க்கையில நாம அடையிற எல்லாத்துக்கும், நம்மளோட கர்மா…. அதாவது நாமதான் காரணம் …. அப்படித்தானே!’  இது காவ்யா.

‘நிச்சயமாய்….  அதாவது நீ தான் உனது அனுபவங்களுக்கு மூலம்.  நீ தான் காரணம்.   நினைச்சுப்பார்…. இதப் புரிஞ்சுண்டா,   எவ்வளவு சுதந்திரம் நமக்கு இருக்கு!  ஆனால். அதே சமயம்,  நமக்கு எவ்வளவு பொறுப்பும் இருக்கு… புரிஞ்சுதா?’

ஐயா ஒரு சிரிப்புடன் சொன்னார்.

கீர்த்திக்கு மீண்டும் ஒரு சந்தேகம்.

‘அங்கிள்…..  அப்படினா,  நம்மதான் நம்ம முன்னேற்றத்துக்கு உழைக்கணும்.  அப்புறம் எதுக்கு ப்ரேயர், பூஜை எல்லாம்’.

ஐயா புன்முறுவலுடன் அவளைப் பார்த்தார்.

‘பூஜை, ப்ரேயர் இதெல்லாம் இருக்கட்டும்… முதலில் கர்மாவைப் பத்தி இன்னும் கொஞ்சம் பார்க்கலாம். கர்மாதான் விளைவுக்கு மூலகாரணம். இது முதல்ல உறுதியாப் புரியணும். புரிஞ்சுதா?’

காவ்யா சொன்னாள்.

‘ஆமாம். புரிஞ்சுது. ஆனால், நம்ம சின்ஸியரா செயல் பண்ணினாலும், எதிர்பார்த்த பயன் கிடைக்காமல் போறதே, அதுக்கு?’

‘ம்…. முதல்ல சரியான பயன் கிடைக்கணும்னா, சரியான முயற்சி வேண்டும். அதுவும் முழுமையாப் பண்ணனும். அதுக்குத்தான் நமக்கு, குருவிடமிருந்தும் , மத்தபடி அனுபவம் உள்ளவர்களிடமிருந்தும் அறிவுரை, வழிகாட்டல் எல்லாம் தேவைப்படுகிறது.’

ஐயா தொடர்ந்தார்.

‘கர்மாவைப் பத்தி இன்னும் தெரிஞ்சுக்கோ.  வேதங்கள் கர்மாவை மூணு வகையாக் காட்டும். சம்ஸ்கிருதத்தில் அவை  காயகம், வாசிகம், மானசம் அப்படினு’.

‘அப்படினா?’

‘உடலை முக்கியமாய் வைச்சுப் பண்ற செயல்…. உதாரணமா நடை, ஓட்டம்,  சாப்பிடறது  இதெல்லாம் காயக கர்மம். காயம் அப்படினா உடல். அதனால காயக கர்மா அப்படிங்கிறது,  உடலை மட்டுமே வெகுவாகச் சார்ந்த செயல்கள்’.

‘வாசிகம் அப்படினா பேசுதல்.  இங்க பேச்சு அப்படினு காமிச்சாலும், பேச்சு முதலான புலனறிவால் செய்யும் செயல்கள். பேச்சல், கேட்டல், பார்த்தல் இது மாதிரி. ‘

கீர்த்தி கேட்டாள்.

‘ஆனால் பேசும் போது, நான் பாடியை உபயோகம் பண்றேனே …’

‘ஆமாம்.   உடல் நிச்சயமாக எல்லாக் கர்மாவுக்கும் உதவியாத்தான் இருக்கு.   ஆனால் பேச்சு எனும் போது,  உடல் முக்கியம் இல்லாமல், ஒரு சப்போர்ட்டா மட்டும் இருக்கிறதால, இது காயக கர்மா இல்லை, புரியறதா?’

‘எஸ் அங்கிள்.  இரண்டும் ஒண்ணுக்கு ஒண்ணு சம்பந்தப்பட்டிருக்கு…. ஆனால், வேற’.

‘ரொம்ப சரி.   கடைசி கர்மா, மானச கர்மா.  இது மனசாலே மட்டும் நடக்கிற செயல்.  உதாரணமா நினைவு, யோசனை இதெல்லாம்.    இதுல கூட உடலும், புலனறிவும் ஒரு உதவியா இருக்கலாம். கண்ணு பார்க்கிறதால, மனசுக்கு ஒரு செயலைக் கொடுக்கலாம்.  ஆனால், மானச கர்மாவில மனசுதான் செயலாற்றும் கருவி.  இது ரொம்ப நுணுக்கமானது. அதனாலதான், மானச கர்மா அல்லது மனசால செய்யற செயலின் பலன் , மிகவும் நுணுக்கமாயும் ஆழமாயும் இருக்கும்.’

‘அங்கிள், இப்படி எல்லாம் ஆராய்ஞ்சு பார்க்கிறதால என்ன பிரயோஜனம்?’

‘இருக்கு….முதல்ல, செயல் நோக்கத்தில பார்த்தால், நம்ம எப்படி செயலுக்கு நம்மைத் தயார் பண்ணிக்கணும்னு தெரியும்.  மிகச் சரியான வழி  நம்மோட மனம், புலன், உடல் எல்லாம் ஒற்றுமையா, ஒரே குறிக்கோளோட செயல் செய்வதுதான்.   அது ரொம்பக் கஷ்டம். அதனாலதான், நாம் சரியான செயலைச் செய்தாலும், அதனைச் சரியாச் செய்ய முடியறதில்ல.. ஏன்னா,  உடலும், புலனறிவும், மனமும் வெவ்வேற வழியில போயிடறதால….’

கொஞ்சம் அமைதிக்குப் பின் ஐயா தொடர்ந்தார்.

‘இன்னுமொரு பயனும் இருக்கு.  விளைவு பத்திப் பார்க்கும்போது….  இந்தமாதிரி மூணு வகையான கர்மா அப்படினு புரிஞ்சால்,  விளைவுகளும் காயகத்தைவிட வாசிகத்தில் நுணுக்கமாயும், வாசிகத்தைவிட மானசத்தில் நுணுக்காமாயும் இருக்கும்னு புரியும்’.

‘ஐயா, இதிலேர்ந்து என்ன தெரிஞ்சுக்கணும்’, நான் கேட்டேன்.

‘எங்கே எல்லாம் மனதின் ஈடுபாடு இருக்கிறதோ, அங்கே எல்லாம் நம்முடைய பாவனை அதாவது attitude இருக்கும். இந்த பாவனைதான் நாம் செய்யும் செயல்களில் விளைவில் மிகப்பெரிய வித்தியாசத்தை  ஏற்படுத்தும்.’

‘அங்கிள்,  attitude, அப்படினா,  வேலைக்கான நோக்கமா…’

‘ஆமாம்.  அதைவிட  வேலை செய்பவனுடைய நோக்கம் என்பதுதான்  சரி.  எந்த நோக்கத்தில நீ ஒரு காரியத்தைச் செய்யற அப்படிங்கிறது…  செய்பவனுடைய மனநிலை… இதுதான் பாவனை, இது ரொம்ப முக்கியம்.’

‘எனக்குப் புரியலை, விளக்கமாகச் சொல்லுங்கள்’

‘சரி, இப்போ ஒரு தர்மம்னு, நான் பணம் கொடுக்கிறேன். என்னோட நோக்கம்  எனக்குப் புகழ் வரணும் அப்படிங்கிறதுதான்னு வைச்சுக்கோ. அப்போ என்ன விளைவுனா,  பணம் கொடுக்கிறதினாலே, எனக்கு பணம் இழப்பு.  கொஞ்சம் புகழ் கூடுதல், அவ்வளவுதான்.  ஆனா, அதே செயலை,  எந்த எதிர்பார்ப்பும் இல்லாம, உண்மையா சேவையாய் நினைத்து நான் செய்தால்,   அப்போ, இன்னொரு அதிர்ஷ்ட பலனும் எனக்கு வரும். அதுக்குப்  புண்ணியம் அப்படினு பேரு.  அது ஒரு கிரெடிட் அக்கவுண்ட் மாதிரி.  வளர்ந்துண்டே போய், ஒரு சமயத்திலே, நல்ல பயனாய், அதிர்ஷ்டமாய் விளையும்’.

‘அதேமாதிரி, நான் சுயநலனுக்காகக் கெட்ட செயலைச் செய்தால்,  உதாரணமா, ஒருத்தருக்கு  உதவி பண்ற மாதிரி அவரோட சொத்தைத் திருடினால், அதோட அதிர்ஷ்ட பலன்தான்  பாவம் அப்படிங்கிறது.  இது ஒரு டெபிட் அக்கௌன்ட் மாதிரி….  இதுவும் ஒரு காலத்தில வெளிப்பட்டு, நமக்குத் துன்பம், தடை அப்படினு தரும்.  இந்த விளைவு கெடுதி எனக் காட்ட,  அதிர்ஷ்டம்னு சொல்லாமல் துரதிர்ஷ்டம்னு நாம் சொல்லுவோம்.  அதனால, நாமெல்லாம் செயல் செய்யும் போது, நல்ல நோக்கம், பாவனையோடவேதான் செய்யணும்.’

ஐயாவின் வார்த்தைகளில் நாங்கள் அனைவரும் மூழ்கி இருந்தோம், கீர்த்தி அந்த அமைதியை முடிவுக்குக் கொண்டு வரும் வரை….

‘..ம்ம்ம்ம்…  எனக்கு இதெல்லாம் இன்னும்,  ஏன் பூஜை எல்லாம் பண்றோம்கிற கேள்விக்கு எப்படி ரிலேட்டட்னு புரியலை’.

‘நம்ம இன்னும் அங்க போகலை.   முதல்ல செயலைப் பற்றிப் பேசி முடிப்போம்.   நம்ம சரியான  மற்றும் முழுமையான செயல் தேவைனு பார்த்தோம். ஆனால் எந்தச் செயலைச் செய்வதற்கு முன்னால், அதற்கான நோக்கம் ஒண்ணு இருக்கணும்.  அதாவது குறிக்கோள்! அந்தக் குறிக்கோள் நல்லது என்றால், முறையான, முழுமையான செயலைச் செய்யும் போது, நல்ல பலன் விளையும்.  குறிக்கோள் நல்லது இல்லை என்றால், பலன் நல்லதாக இருக்கவே முடியாது!  ….. நம்மில் பலருக்கும், இதிலேதான் பிராப்ளம்.  எது நல்ல குறிக்கோள்னு  நமக்குத் தெளிவாத் தெரிவதில்லை. அதனாலாதான், எது நல்ல குறிக்கோள் அப்படிங்கிற அறிவு நமக்குத் தேவை’.

‘அங்கிள்.  இதிலென்ன கஷ்டம், for example, என்னோட எய்ம் பரீட்சையில் பாஸ் பண்றதுதான் ‘

‘ம்.  பரீட்சையில் பாஸ் செய்த அப்புறம்?’

‘ம்…  ஹாலிடே வரும். அதுல டிரைவிங் டெஸ்ட் பாஸ் பண்ணணும், ஹாலிடே எஞ்சாய் பண்ணனும்’

‘அதுக்கு அப்புறம்…?’

‘ஒருவேளை நல்ல வேலைக்குப் போகணும்’

‘அதுக்கு அப்புறம்’

‘….. யோசிக்கணும்…’

நிச்சயமாய் கீர்த்தி நினைத்திருப்பாள், எப்படி வரப்போகும் நாளில் எடுக்கும் குறிக்கோளை எல்லாம் இப்போவே தேர்ந்து எடுப்பது என்று!

ஐயா தொடர்ந்தார்.

‘குறிக்கோள் மாறிண்டே இருக்கும். இல்லையா? அது இயற்கைதான். அவசியமும் கூட.   நமக்கு அறிவு வளர வளர,  ஆசைகளும் குறிக்கோள்களும் மாறும்.  வாழ்க்கை இப்படியே  மாறி மாறி வந்து கொண்டிருக்கும் ஆசைகளும், குறிக்கோளுமாகவே இருக்கிறது.’

‘ஆமாம் அங்கிள்.  இதைத்தான் அம்மா, அப்பாவும் சொல்லுவா.  படி, வேலை பார், பணம் சம்பாதி, வீடு வாங்கு அப்படி இப்படினு’.

‘ஆமாம் காவ்யா,   முதல் குறிக்கோள் நமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி பண்றதுதான்.  அதுக்கான தகுதிக்குத்தான் படிக்கிறோம்,  வேலை தேடறோம்.   அடிப்படைத் தேவைகள்தான் முதல் குறிக்கோளா இருக்கு.   ஆனால், அது வந்தப்புறம்,  இதத் தாண்டி,  எல்லாத்திலேயும் சுகமும், ருசியும் அதிகமாகத் தேவைப்படறது.  இந்த இரண்டு குறிக்கோள்களும் நாம் எல்லோருக்கும்  இருக்கு… இது இயற்கைதான்.  இவை இரண்டுக்கும், அர்த்த, காம என்று பெயர்.  தமிழ்ல சொன்ன பொருள், இன்பம்……‘

‘ஆமாம்.  பொருளையும் இன்பத்தையும் குறிக்கோளா வைச்சுக்கிறது  எல்லோருக்கும் தேவைதானே ‘ என்றேன் நான்.

‘நிச்சயமாக,  இவை இரண்டும் அடிப்படைக் குறிக்கோள்தான்.  புருஷார்த்தம் எனும் மனிதர்களின் குறிக்கோள்’

‘அப்போ நம்ம வேலை பண்றதெல்லம் பொருள், இன்பம் இதுக்குத்தான்,. அதிர்ஷ்டம் எப்படி பொருள், இன்பம் எல்லாம் தரும்?’,  இது காவ்யா.

‘இதுக்கு இன்னும் ஆழமா நம்ம சாஸ்திரங்களைப் புரிஞ்சுக்கணும்.  நான் சுருக்கமாச் சொல்றேன்.   நம்ம பண்ற கர்மா  அதாவது செயல்களோட அதிர்ஷ்ட பலன் எல்லாம் – அது பாவமோ, புண்யமோ – நமக்கு மூணு வகையிலே பாதிப்பைத் தரும்.’

ஐயா சில நொடிகள் யோசித்து விட்டுத் தொடர்ந்தார்.

‘முதல்ல அது உபாதினு சொல்லப்படும்  உடலை நமக்குக் கொடுக்கிறது’.

ஐயா இப்படிச் சொல்லும்போதே காவ்யா கேட்டாள்.

‘என்ன….  என்னுடைய உடலுக்குக் காரணம், என்னோட அதிர்ஷ்டமான கர்ம பலனா?’

‘ஆமாம் காவ்யா….  நமது உடலை நாம்தான் சம்பாதித்திருக்கிறோம்.  அதோட நிறைக்கும், குறைக்கும் நாம்தான் பொறுப்பு!’

ஐயா தொடர்ந்து சொன்னார்.

‘இரண்டாவதாய், அதிர்ஷ்டமான கர்ம பலன் தான், நாம் அனுபவிக்கிற விஷயங்களை நமக்காகப் படைக்கிறது.  இவைகளுக்கெல்லாம்  ‘விஷய’ அல்லது வெளிப்பொருட்கள் அப்படினு பேரு. அவற்றைத்தான் நாம் சுகம், துக்கம்னு அனுபவிக்கிறோம்’.

‘அங்கிள், எனக்குப் புரியலை’

‘சரி,  ஒரு பொருளை நீ அனுபவித்துச் சுகம் காண்கிறாய் அப்படினா, அந்தப் பொருளை நீ அடைந்ததற்கான காரணம் உன்னோட கரும பலன் தான்.’

‘மூன்றாவது என்ன?’  –  கீர்த்தியின் ஆவல் வெளிப்பட்டது.

‘அது லோகம் அப்படிங்கிற நமது அனுபவ உலகம்.’

நான் குறுக்கிட்டேன். ‘ஐயா, லோகம் அப்படினா, உலகம் தானே?’

‘ஆமாம்,  ஆனால் பௌதிகமான பூமியோ அண்டமோ இல்லை.  லோகம் அப்படினா, அது நாம் ஒவ்வொருவரும் அனுபவிக்கும் உலகம்.  நீங்கள் இந்த பெரிய லண்டன் நகரில் வசிப்பவராக இருக்கலாம்.  உங்களுடைய உலகம் இந்த  லண்டனில் உங்களுக்கு இருக்கும் அனுபவமும், அனுமானமும்தான்.   லண்டனில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அனுபவ உலகம் இருக்கிறது.  புரிஞ்சுதா?’

‘புரிஞ்ச மாதிரி இருக்கு….. அப்படினா சுவர்க்க லோகம், நரக லோகம் அப்படிங்கிறதெல்லாம்…?’

‘எவ்வளவோ அண்டங்கள், உலகங்கள் எல்லாம் இருக்கலாம்.   யாருக்குத் தெரியும்!  சயின்ஸ் இதைத் துரத்தி துரத்தி, தலையப் பிச்சுக்கும்…   நான் சொல்றது, நம் அனுபவ உலகம். அதுதானே முக்கியம்!  எந்த மாதிரி பூமியில் இருந்தாலும், அனுபவ உலகம்தான் நமது லோகம்.  அது சுகமாகவே இருந்தால் அதுதான் சொர்க்கம்.  துயராகவே இருந்தால் அதுதான் நரகம்!  நம்ம வாழ்க்கையை எடுத்துப்போமே!   இங்க நாம் வாழற வகையிலேயே சொர்க்கமும், நரகமும் இங்கேயே இருக்கே!’

ஐயா இப்படிச் சொன்னார்.

‘இது ரொம்ப இன்ட்ரஸ்டிங்!  யாராவது  டிப்ரஸ் ஆகி, கவலைப் படும்படியே இருந்தால், அதுதான் நரகம்… இங்கேயே…. அப்படித்தானே!’ என்றாள் காவ்யா.

‘சரியாய்ச் சொன்னாய்,  அதிர்ஷ்டமான கர்மபலன்தான் அப்படி சுக, துக்க அனுபவ உலகங்களை நமக்குத் தருவது’.

‘அப்படினா, நாம் எப்படி எப்பவுமே சுகமாய் இருந்து, சுவர்க்க லோகவாசியாய் இருப்பது?’ – நான் கேட்டேன்.

‘ம்… சரியான வழிகளில் செயல் புரிந்து, புண்ணியமாய்க் குமிச்சுக்க வேண்டியதுதான்!  எது நல்ல செயல், நல்ல நெறி அப்படிங்கிறதுதான் தர்மம்.  அந்த வழிமுறைதான் அறம்.  அதனாலதான், அதை முதலில் சேர்த்து, தர்ம, அர்த்த, காம  அல்லது அறம், பொருள், இன்பம் அப்படினு மூணு குறிக்கோள் அல்லது புருஷார்த்தம் அப்படினு  முக்கியமாய் நமக்கெல்லாம் இருக்கு. இதுதான் நமது வேதங்கள் காட்டுவது’.

எல்லாக் கருத்துக்களும் பொருத்தமாக விழுவதாக எனக்குப் பட்டது.

கீர்த்தி கேட்டாள்.

‘சரி அங்கிள்.  அப்படியானால்,  நாம் தருமம் என்ன அப்படினு தெரிஞ்சுண்டு, அதுக்கான  வேலையைச் செய்ய வேண்டியதுதானே,  எதுக்குப் பூஜை எல்லாம் பண்ணனும்?’

எங்கே தான் முதலில் ஆரம்பித்த கேள்வியை விட்டுவிட்டு, உரையாடல் வேறு எங்காவது போய்விடுமோ என அவளுக்குப் பயம்.

ஐயா அவளைப் பார்த்தார்.

‘நான் உன் கேள்வியை மறக்கவில்லை குழந்தை….  ஒருத்தன்,  தர்மம்  என்ன அப்படிங்கிறதெல்லாம் புரிஞ்சுண்டு, அதன்படி கர்மங்களை எல்லாம் விடாமல்  செஞ்சுண்டு வந்தால் அதுவே போதும்.  ஏன்னா அவனுக்கு work itself is worship.  அவன்தான் கர்ம யோகி’.

‘அப்படி இருக்கிறது கஷ்டமா?’

‘ஆமாம்.   ஆனால் அப்படி இருக்கிறது அவசியம்.  தர்மப்படி செயல் செய்வதில் அதிக கஷ்டம் இல்லை.  ஆனால், நம்ம பாவனை – attitude – அது தான் பிராப்ளம்.’

‘ஏன்,  அது மனசு சம்பந்தப்பட்டது, அதனாலேயா?’

‘ஆமாம். மனம் அப்படிங்கிறது புரிஞ்சுக்க  மிகவும் கஷ்டமானது.  அது பத்தி நாம இப்போ விவாதிக்க வேண்டாம்.  ஆனால், நல்ல பாவனை இருக்கணும்னா, நல்ல, தூய்மையான  மனசு இருக்கணும். அதோட, நிலையாய்,  குறிப்பா இல்லாமல் போனா,  மனசு அலைக்கழிந்து போயிடும்’.

அப்போது அமைதி நிலவியது.

நினைத்துப் பார்த்தேன்,   நமது செயல்தான் நம்மை உருவாக்குகிறது. செயல்களுக்கு ஆளுமை கொண்ட மையம்தான் மனது.  அப்படிப்பட்ட மனம் ஒருநிலைப்படாமல் அலைந்தால், நமது நமது செயல்கள் எப்படி ஒழுங்காக இருக்கும்!

ஹாலில் இருக்கும் ஒவ்வொருவர் மனமும் இதுமாதிரி, மனதை எப்படி ஆளுவது என்றே யோசித்துக் கொண்டிருக்க வேண்டும்.

காவ்யா மௌனத்தை உடைத்தாள்.

‘அங்கிள், ஒருவன் சரியான செயலை எல்லாம் சரியாக, நல்ல பாவனையோட செஞ்சாலும்,  அவனுக்கு ஃப்ரீடம் இல்லைனுதான் நான் நினைக்கிறேன்.  ஏன் தெரியுமா….. சுகமாய் இருக்கணும், கஷ்டம் இல்லாம வாழணும்னா,   அவன் இந்த மாதிரி தொடர்ந்து வேலை பண்ணிண்டே இருக்கணும் அப்படினு ஆயிடுதே….. அப்ப இது ஒரு செக்கு மாடு மாதிரி தானே….  நல்ல கர்மாவை நல்ல படியா, நல்ல பாவனையோட திரும்பத் திரும்ப பண்ணிண்டே இருக்கணும்போல இருக்கே…. இது எப்படி உண்மையிலேயே freedom அப்படினு ஆகும்?’

ஐயா சொன்னார்.

‘இது உண்மையிலேயே அற்புதமான கேள்வி காவ்யா.. ஆமாம்,.  ஆனால்,  அப்படி இருப்பவன், அவனுடைய தர்ம வழியின் பயனால், ஒருநாள் இந்தக் கேள்வியைப் புரிஞ்சுப்பான்….  எதுக்கு இந்த மாதிரி  நல்ல உடலை சம்பாதிச்சுண்டு, கர்மம்  செஞ்சு,  பிறந்து பிறந்து சுத்திண்டு இருக்கணும்…. இந்த விலங்கு எதுவும் இல்லாமல் சுதந்திரமா, ஆனாலும், நிரந்தர சுகவாசியா இருக்க முடியாதா அப்படினு கேள்வியோட முழிச்சுப்பான்.’

‘அப்படியும் இருக்க முடியுமா’ – உமா கேட்டார்.

‘ஆமாம்.  அதுதான் இறுதியான, மேன்மையான குறிக்கோள்.  வேதங்கள் இதனை இறுதியான, நான்காவது புருஷார்த்தமாக – மோக்ஷம் அல்லது முக்தி அப்படினு காட்டறது.  தமிழில் சொன்னா வீடு பேறு.  அதுதான் உண்மையான விடுதலை. சுதந்திரம்… இதுதான் வேதங்களின் சாரம்’.

‘இதப்பத்தி எல்லாம் எதாவது புத்தகம் இருக்கா?’ – கீர்த்தி கேட்டாள்.

அவளுக்கு எல்லாம் சுருக்கமாய் கைக்கு அடக்கமான புத்தகத்தில் இருக்க வேண்டும்!

ஐயா சொன்னார்.

‘வேதங்கள் என்பது புத்தகமில்லை.  வேத சாஸ்திரம் எல்லாம் புத்தகத்தில் பிரிண்ட் பண்ணிக் கிடைத்தாலும்,   வேதா என்றாலே அறிவு அப்படினு புரிஞ்சுக்கணும்.  வேதாந்தம் அப்படினா வேதத்தின் முடிவு.   கடைசி சாப்டர் அப்படினு இல்லை. அறிவின் முடிவு.  அதாவது எங்கே அறிவும் முடிந்து போகிறதோ, அங்கேதான் உண்மை இருக்கிறது. அதில் திளைப்பது தான் முக்தி, விடுதலை…. வேலையே செய்யாமல் சுகமாக இருப்பது….’

‘என்ன!  அறிவைத் தேடிண்டு போய், கடைசிலே அறிவு முடிஞ்ச இடத்துல சேரணுமா?’   – காவ்யா கேட்டாள்.

‘ஆமாம்… கிட்டத்தட்ட அது மாதிரி தான்.   நான் சொல்ல வந்தது என்னன்னா….  நாம் வாழ்க்கையில முதல்ல இருந்த நிலைக்கும், பின்னால தேடற நிலைக்கும், ஒரு பெரிய  shift இருக்கு பார்த்தியா….. .  முதல்ல, சுகம் எதுனு தெரியலை. அதனாலே,  எதெல்லாம் சுகம் மாதிரி இருக்கோ அது பின்னாடி போக, எல்லா வேலையும் செய்து, செய்து களைத்துப் போயிடறோம்.  இதுக்கும் மேலேயும் பெரிய சுகம் இருக்கணும்னு தோணும்போதுதான் ஞானம் தெரியறது….  அந்த ஞானம் வரும் போது, முக்தி அப்படினா பூரண சுதந்திரம்னு தெரியும் போது, நம்மளோட பாவனைகளை நாம மாத்திக்க வேண்டியிருக்கு.  அதாவது, மனம் மாறணும்.’

‘அங்கிள்…. நான் வெளியிலே போகணும்…. அதுக்கு முன்னால, எப்படி இதெல்லாம் பூஜை பத்திக் கேட்ட கேள்விக்குத் தொடர்புனு தெரிஞ்சுக்கணும்’  – கீர்த்தியின் அவசரம் புரிந்தது.

‘ஆமாம். அதப் பத்தித்தான் சொல்லப் போறேன்.  செயல்கள் நிறைந்த நம்ம வாழ்க்கைக்கு, மனம் தான் முக்கியமான மையம்னு பார்த்தோம். அதனால், மனசைத் தெளிவு பண்ணவும், திடம் பண்ணவும் நமக்கு சரியான tools and methods தேவை.  அது நல்ல பாவனையோட இருந்தாத்தான்,   உலக வாழ்க்கையில சுகத்தையும்,  பிறகு நிரந்தரமான சுகமான முக்தியையும் நம்மால  நாட முடியும். அதுக்கு உதவி பண்ற மாதிரியே, வேதங்களும், முதலில் கர்ம காண்டம்  அப்படினு தர்மத்தைச் சொல்லி, நம்முடைய முதல் மூன்று அறம், பொருள், இன்பம் எல்லாத்துக்கும் உதவும்.   பிறகு ஞான காண்டம் அப்படினு, வேதாந்தம் முக்தியை பத்திச் சொல்லும்.  நம்ம கேள்விக்குப் பதில், இந்த இரண்டு பகுதிக்கும் பாலம் மாதிரி இருக்கிற உபாசன காண்டம்  அதுல இருக்கு…. ‘

‘உபாசனா அப்படினா’ – இது காவ்யா.

‘துதி, தியானம், பூஜை இதுமாதிரி விஷயம் எல்லாம் உபாசனையில் இருக்கு… இதெல்லாம் நிச்சயமா மனதை நேர்முகப்படுத்தித் தெளிய வைக்கத்தான்.’

ஐயா இதனை உறுதியாகச் சொன்னார்.

‘இது மெடிடேஷன் மாதிரியா’ – கீர்த்தி கேட்டாள்.

‘இல்லை.  உபாசனையில் மெடிடேஷன் மாதிரியான ஒழுக்கம் எல்லாம் இருந்தாலும்,   மனக் கட்டுப்பாட்டு என்பது பெரிய விஷயம்.   மனம் அப்படிங்கிறது ஒரு குறிப்பிட்ட உறுப்பு இல்லை.  சயின்ஸ் இன்னும் மனம் அப்படினா என்னனு சொல்ல முடியாமல் இருக்கு.  நமது வேதங்களின்படி, மனம் அந்த கரணம் எனும் மெல்லுடல்;  அது எல்லாம் தழுவிய ஒரு நிலை.  அதுக்கு Concentration  பயிற்சி எல்லாம் நல்லதுதான். ஆனாலும்,  நிலையான மன ஒழுங்கு அதனாலே எல்லாம் வராது.  மனசுக்கு அன்பு, கருணை, இரக்கம், பணிவு இது மாதிரி நிறைய சத்குணங்களைக் கொடுக்கணும்.  என்னோடது அப்படிங்கிற  பாவனையிலேர்ந்து  எல்லோருக்கும்  பொதுங்கிற பரந்த உணர்வு வரணும். அது தான் மன ஒழுக்கம்’.

ஐயா ஒரு சில நிமிடங்கள் அமைதியாய் இருந்தார்.

‘நம்ம பெரியவர்கள் எல்லாம் , இதப் பத்தி எல்லாம் நல்லா யோசிச்சு, சோதிச்சு பல வழிமுறைகளைக் கொடுத்திருக்கிறார்கள்.  உதாரணமா  உருவமில்லாத வழிபாடு, உருவ வழிபாடு, ஒலி உணர்வு, கலை உணர்வு, யோகம், தியானம் அப்படி இப்படினு  நிறைய வழிகளில்  எல்லாம் மனசைச் செம்மைப் படுத்த உபாயம் கொடுத்திருக்கா…’

பிறகு சொன்னார்.

‘சநாதன தர்மம் அப்படிங்கிற நமது  கலாசாரம், இந்த மாதிரி, நம்ம வாழ்க்கைக்குத் தேவையான எல்லாத்தையும் கலந்து, பெரிய விருந்தாய் படைச்சிருக்கு….. .   இதை எல்லாம் புரிஞ்சுண்டு,  நாம் எஞ்சாய் பண்ணலாம்.   அதிலே, எந்த வழி நமக்கு சாதகமாக இருக்கோ, அதை நாம  எடுத்துக்கலாம்….  அப்படி எடுத்த பின்,  செய்ய வேண்டிய நியதிப்படி நாம் செய்தால், அது தான் பூஜை. துதி, உபாசனை எல்லாம்.  இதெல்லாம் மனதைத் தூய்மைக்கு உள்ளாக்கத்தான்.  இப்போ  விநாயகர் வடிவில் செய்யும்  உபாசனை,  விநாயகர் சதுர்த்தி பூஜா…. கிருஷ்ணர் வடிவில் கொண்டாடும் போது, கிருஷ்ண ஜெயந்தி….. எல்லாம் ஒண்ணுதான்’

ஐயா நிறுத்தினார்.

உமா எழுந்து சமையல் அறைக்குச் சென்றார். ஏதேனும் தின்பண்டங்கள் கொடுக்க வேண்டும்.  ஐயாவுடன் பேசும்போது, நேரம் போவது தெரியாமல் போய்விடுகிறது.

கீர்த்தி தன் கேள்வியை விடவில்லை.

‘அங்கிள்,  அப்புறம் ஏன் so many times, so many ways…பூஜை எல்லாம்’.

‘உனக்கிட்ட எவ்வளவு தங்க வளையல் இருக்கு கீர்த்தி‘ – ஐயா கேட்டார்.

‘நிறைய… in fact, நான் இன்னும் வாங்கப் போறேன்.  ஏன்?’

‘எல்லா வளையலும் ஒரே உலோகம் தான்.  ஆனால் உனக்கு தினுசு தினுசா தேவைப்படறது இல்லையா…  தப்பில்ல…. அது மாதிரிதான் பூஜைகளும்… . தினுசு தினுசா பண்ற தெல்லாம் நம்மளோட விருப்பத்துக்கும் இன்பத்துக்கும் தான்.’

காவ்யா குறுக்கிட்டாள்.

‘அப்படி தினுசு தினுசா, வேற வேறயா பண்ணும் போது,   கடவுள் ஒண்ணுதான் அப்படிங்கிறது மறந்து போயிடுமே….  எதுக்குக் கடவுளை கும்பிடறோம்னு  மறந்துட்டு, ஒருத்தருக்கு ஒருத்தர், சுவாமி பேர்ல சண்டை போட்டுக்கிறோமே…. இப்ப உலகத்தில நடக்கிறதே….’

அவள் மதப் பூச்சுப் பூசிய சண்டைகளையும் அநீதிகளையும் வெகுவாக வெறுப்பவள்.

‘ஆமாம். இது மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம்தான். அதனால்தான், இந்த மாதிரி கேள்விகளை எல்லாம் நான் விரும்பறேன்.  கேள்விகள் உண்மையான அறிவுக்காக இருந்தால்,  நிச்சயமாய் அந்த அறிவு கிடைக்கும்’.

ஐயா தொடர்ந்தார்.

‘இந்த விநாயகர் சதுர்த்தி பூஜையை எடுத்துக்கோ… களிமண்ணில ஒரு பொம்மை செஞ்சு, அதைக் கடவுளா நினைச்சு பூஜை எல்லாம் பண்ணி,  பிறகு தண்ணீர்ல கரைத்து, களிமண்ணாகவே திரும்ப மாத்திடறோம்…  பூஜை பண்ற அந்த உருவத்துல, நம்ம நம்மையே பதிக்கிறோம்.  உன் அப்பாட்ட கேள். சொல்லுவார்.  யார் ஒழுங்கா  பூஜை பண்ணும்போதும்,   இரண்டு நிச்சயமான நியதிகள்  இருக்கு.  ஒண்ணு  ப்ராண ப்ரதிஷ்டா…. அப்படினா, நம்முடைய உயிர் ஒளியை – ஆத்மாவை – அந்த உருவத்துக்குள்ள  இருப்பதாக பாவனை செய்வது.   மற்றது, பூஜை முடிந்த பிறகு, சிறிது நீரோ, பாலோ அருந்துவதன் மூலம், அந்த உருவத்தில் அமர்த்திய பிராண சக்தியை மீண்டும் நமக்குள்ள ஏத்துக்கிறது….’

‘இதற்கு என்ன அர்த்தம் ஐயா’, நான் கேட்டேன்.

இதெல்லாம் நானும் செய்து கொண்டிருந்தாலும்,  இவற்றின் ஆழமான உண்மையை இதுவரை  அறிந்திருக்கவில்லை.

‘இது காட்டுவது என்ன….. எல்லாப் பூஜைகளும், நமக்குள்ளேயே இருக்கும் கடவுளுக்குத்தான்.  வெளிலே இறைஞ்சு கிடக்கும் இறைவன்தான், நம் உள்ளத்தைக் கடந்து கடவுள் அப்படினு இருக்கிற ஆத்மா.   இந்த ஆத்மாவுக்குத்தான் எல்லா பூஜைகளும். இந்த ஆத்மாதான் எல்லா உயிரிலும் கோர்த்துக் கிடப்பது.  ஆத்மாவின் ஒளிதான், நமது சடமான உடல், அறிவு, மனம் எல்லாத்துக்கும் உயிரைத் தருவது.  இதப் புரிஞ்சுக்கத்தான்  இந்த விநாயகர் பூஜை எல்லாம்…’

தொடர்ந்தார் ஐயா.

‘விநாயகப் பெருமான்,  இரண்டில்லாத இறைவனைக் குறிக்கிறார்.  பரப்பிரம்மம். அதைத்தான் நாம் எல்லாவிதமான உருவம், பெயர் எல்லாம் வைச்சுக் கூப்பிடறோம்.’

உமா சொன்னார் ‘விநாயகப் பெருமான் நமக்கு வரும் தடைகளை எல்லாம் போக்குபவர்’.

‘ஆம்,  அவருடைய கருணையில் நமது பாவனை மாறி, நல்ல வழியில நடக்க முடியும். தருமப்படி வாழவும் மனசு உறுதியா இருக்கவும் உதவி செய்யும்.’

‘ஐயா,  வேத மந்திரங்கள் எல்லாம் படிச்சதில்ல…. சரியா பூஜை எல்லாம் பண்ணத் தெரியாது. அப்படி இருக்கும் எங்களுக்கெல்லாம் என்ன வழி?’ – நான் ஆர்வமாய்க் கேட்டேன்.

‘கவலைப் பட வேண்டாம்.  விநாயகப் பெருமான்  கருணாமூர்த்தி.   அவரை அர்ச்சிப்பதும், மகிழ்விப்பதும் ரொம்ப ஈஸி…   களிமண்ணைப் பிடிச்சு வை.  தோட்டத்திலேயிருந்து இலை, தழை, புல், பூ அப்படினு பறிச்சு, அன்போட  அவரோட பாதங்களில் போடு.  உருகிக் கேள். உடல், உணர்வு, மனம், அறிவு எல்லாம் ஒண்ணா வைச்சுண்டு,  பிரார்த்தனை பண்ணு. அப்படி இருக்கும்போது,  ஒரு நொடியாயினும், உண்மையான பணிவு இருந்தால்,   ஆத்மன் அருள் கிடைக்கும்.    ஒருமைப்பட்ட மனமும், நல்ல பாவனையும் வரும். அதனால, நாம் செய்யற செயல்கள் சரியாயும், முழுமையாயும் அமையும். நல்ல பலனைக் கொடுக்கும்…. இப்பவே பலனும்,   அதோட அதிர்ஷ்டமான பலனும்…..’.

ஐயா நிறுத்தினார்.

உமா, அப்பொழுது பலகாரங்களுடன் ஹாலுக்குள் நுழைந்தார்.

காவ்யாவும், கீர்த்தியும் எழுந்தனர்.

‘தாங்க்ஸ் அங்கிள்…  நிறைய  யோசிக்க விஷயம் எல்லாம் தந்ததுக்கு…’

சொல்லிக் கொண்டே புறக்கடைக் கண்ணாடிக் கதவுகளைத் திறந்தனர்.  சில்லென்று மாலைத் தென்றல்,  உள்ளே ஓடி வந்து தழுவியது.

‘எங்கே போறே’, உமா கேட்டார்.

இரண்டு பேரும்  ஒரே குரலில் சொன்னார்கள்.

‘தோட்டத்துக்கு,  களிமண்ணும், புல்லும் கொண்டு வரப்போறோம்.  விநாயகர் பூஜைக்கு….’

நான் சட்டென ஐயாவை, நன்றியைக் கண்களில் சுமந்து  பார்த்தேன்.

அவருடை கண்களில், புன்முறுவலாக ஒரு மின்னல் தெரிந்தது.

 

மீ. ராஜகோபாலன்

25 Aug 2014

 

Related Posts

Share this Post