அருகில் இருத்தல் (உபாசனை)
ஐயாவுடன் உரையாடல் (3)
ஐயா கண்களை மூடி அமர்ந்திருந்தார்.
நாங்கள் நண்பர் பாலாஜியின் வீட்டுக்கு நவராத்திரி பூஜையில் கலந்து கொள்ள வந்திருந்தோம். குடும்ப நண்பரான ஐயாவையும் நான்அழைத்து வந்திருந்தேன். நாங்கள் வருவதற்குள்ளேயே, நிறைய நண்பர்களும் தத்தம் குடும்பத்துடன் ஏற்கனவே வந்திருந்தனர். உள்ளே ஹாலில் மந்திர உச்சாடனை நடந்து கொண்டிருந்தது. நிறையப்பேர் என்பதால் ஹால் நிரம்பி இருந்தது. ஐயாவும் நானும் ஹாலுக்கு வெளியே இருக்கும் வரவேற்பரையில் அமர்ந்திருந்தோம். அங்கு சில நண்பர்களும் இருந்தனர். பாலா, சிவா, தீபக், முரளி….. எல்லோருடனும் பேசுவதற்கும் வாய்ப்பானது என நினைத்தேன்.
குழந்தைகள் அங்கும் இங்கும் கத்திக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தார்கள். அஜித், தீபக்கின் மகன். பத்து வயதுக்குள் தான் இருக்கும். அவனுக்கு ஐயாவைப் பார்த்ததும் என்னவோ குறுகுறுப்பு போலும்…. ஓடி வந்து அவரைத் தோளில் தொட்டான்.
‘அங்கிள்…. தூங்கரீங்களா… என்ன பண்றீங்க….’
அவனை நான் நிறுத்துவதற்குள், ஐயா மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தார். ஒரு சிரிப்புடன் ‘இல்லை மகனே, நான் என்னைத் தேடிண்டு இருந்தேன்….’ என்றார்.
அஜித்தினால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஹோ ஹோ வெனச் சிரித்தான்.
‘அப்பா, இங்க பாரேன், இந்த அங்கிள் கண்ணை மூடிண்டு அவரையே தேடிண்டு இருக்கார்… ஹா ஹா ஹா….’
நான் கொஞ்சம் பயத்துடனே ஐயாவைப் பார்த்தேன். அவர் ஒருவேளை தியானம் ஏதாவது செய்து கொண்டிருந்தாரோ! தொந்தரவாகப் போய் விட்டதோ!
ஆனால் ஐயாவும் பலமாகச் சிரித்தார்.
‘ஆமாம் மகனே, எந்த மாதிரி முட்டாள் பார் நான்! கண்ணை மூடிக் கொண்டு தேடறேன் பார்!’
ஐயா இப்படிச் சொல்வதைக் காதில் வாங்காமல், ஏதோ ஒரு விளையாட்டுக்கு அஜித் மீண்டும் கத்திக்கொண்டே ஓடிப் போனான்.
‘ஷ்ஷ்ஷ்…… அஜித்… க்வயட்… அங்கே பூஜை நடக்கிறது, சத்தம் போடாதே’ என்றார் அஜீத்தின் தந்தை தீபக்.
‘இருக்கட்டும்…. நவராத்திரினாலே மகிழ்ச்சிதானே. குழந்தைகள் நன்றாகக் கொண்டாட்டும்’ , இப்படிச் சொன்னேன் நான்.
எல்லாப் பண்டிகைகளும், அதிலும் இந்த ஒன்பது அல்லது பத்து நாளைக்கு நடக்கும் நவராத்திரி எல்லோருக்கும் சந்தோஷத்தைத்தான் தருகிறது. இந்த சந்தர்ப்பங்களில்தான், எல்லாக் குடும்பங்களும், ஒரு ஆரோக்கியமான போட்டி மாதிரி, ஒருவருக்கொருவர் உபசரணையும், அன்பும் காட்டி சந்தோஷப்படுகின்றனர். குழந்தைகளுக்கும் குஷிதான்.
ஐயா சொன்னர்.
‘ஆமாம். நம்ம எல்லாருமே சந்தோஷத்துக்காகத்தானே ஆசைப்படறோம். சுக விருத்தி, துக்க நிவர்த்தினு, துயரம் குறையவும், சுகம் நிறையவும்தான் நாம் எப்பவும் குறியா இருக்கோம்.’
சிவா உடனே’ஆமாம். எனக்குக்கூட இந்த சீசனில, டிரைவர் வேலைதான்னாக் கூட, அதுவும் ஜாலியாத்தான் இருக்கு. வொய்ஃப் சொன்ன இடத்துக்கெல்லாம் கார்ல போயாகணும். இன்னிக்கு, இதுக்கப்புறம் இன்னும் நாலு வீடு இருக்கு விசிட்டுக்கு. இருந்தாலும், களைப்பெல்லாம் இல்லை. மகிழ்ச்சி தான்’.
ஐயா மேலும் சொன்னார்.
‘ஆமாம். வாழ்க்கையே அனுபவிக்கத்தானே! நாமெல்லாம் புபூக்க்ஷு – அதாவது, சுகத்தை அனுபவிக்கணும்கிற குறிக்கோளுடன்தான் பிறந்திருக்கிறோம். உடம்பை எடுத்த ஜீவராசிகள் எல்லாருக்கும் இதுதான் இயற்கை. பாருங்களேன், உங்க கையில கல் இருக்குனா, உங்களப் பார்க்கிற நாய் ஓடியே போய்டும். ஆனா, உங்க கையில பிஸ்கட் இருந்தா, அது கூப்பிடாமலேயே வந்துடும். இதெல்லாம் இயற்கை.’
நான் சொன்னேன்.
‘ஆமாம் ….ஆனா மனுஷன் மட்டும் இன்னும் கொஞ்சம் யோசிச்சு, இன்பம் வளர்ந்துண்டே போகணும்னு பாக்கிறான். அதே நேரம், பெரிய துன்பத்தை எல்லாம் தவிர்க்கணும்னு பாக்கிறான்.’
‘அதான் … சுக விருத்தி, துக்க நிவர்த்தி – இதான் நம்ம எல்லாருக்கும் இலக்ஷியமா இருக்கு. எனக்கு லைஃபை எஞ்சாய் பண்ணனும் சொல்றதுல ஒரு தப்பும் இல்லை. அதான் உண்மை. அதுக்காகத்தான் உடம்போட இருக்கிற இந்த வாழ்க்கையே’.
தீபக், தன்னோட ஐ-பாட் கருவியில் எதையோ டைப் செய்து கொண்டிருந்ததை நிறுத்தி விட்டு, நிமிர்ந்து பார்த்தார்.
‘ஆமாம்…… அதுக்காகத்தான் நாமெல்லாம் உழைக்க வேண்டி இருக்கு. உழைச்சாத்தான் சுகம் எல்லாம். கொஞ்சம் டைம்-பாஸ், கொஞ்சம் ஜாலி அப்படினு வேணுமானா இந்த நவராத்திரி பூஜை எல்லாம் இருக்கலாம்… வேறு எதுக்கும் இதெல்லாம் பிரயோஜனம்னு தோணலை’.
இப்படிச் சொல்லிவிட்டு உடனடியாக மீண்டும் தனது ஐ-பாடில் எதையோ தட்டிக் கொண்டிருந்தார்.
தீபக் ஒரு இன்வெஸ்ட்மெண்ட் பாங்கர்…. நிதி முதலீட்டு ஆய்வாளர். சுமார் முப்பத்தைந்து வயது இருக்கலாம். எனக்கும் அவரை ஒரு சில வருடங்களாகத்தான் தெரியும். அமெரிக்காவிலிருந்து, லண்டனுக்கு மாற்றலாகி வந்த சமயத்திலிருந்து…
தீபக் நன்றாகப் பேசுவார். எளிதில் எவரையும் உரையாடலில் ஈர்க்கும் திறன் உள்ளவராகத்தான் நான் அவரைப் பார்த்திருக்கிறேன். தனது மனைவி ஸ்வப்னா, மகன் அஜித் இருவருடனும், அன்று பூஜைக்கு வந்திருந்தார்.
‘எனக்கென்னமோ, நவராத்திரி பூஜையும், அது மாதிரி உபாசனையும், அழமான நிம்மதியையும் சந்தோஷத்தையும் தரும்னுதான் தோண்றது. இல்லைனா, இப்படி ஒரு பண்டிகை ஆயிரம் ஆயிரம் வருஷமா நடந்து வர முடியுமா….’ – இது நான்.
தீபக் என்னைப் பார்த்தார்.
‘இருக்கலாம். ஆனால் நம்ம, நம்ம வேலையைப் பாக்கணும். நம்மளோட உழைப்பும், அதன் வெற்றியும்தான் எல்லா மகிழ்ச்சிக்கும் காரணம். வேற ஒண்ணும் இல்லை’.
‘நிச்சயமாக…’ என்றார் ஐயா.
‘செயல்தான் பலனுக்கு விதை. உழைப்பாலதான் பயனை எதிர்பார்க்கணும்’.
மெதுவான காற்றில், உள்ளே பூஜையில் எரிந்து கொண்டிருக்கும் ஊதுவத்திகளின் வாசனை நாங்கள் இருக்கும் இடத்துக்கு மிதந்து வந்தது. மேலும், பெண்களும், சிறுமிகளும், தலை நிறைய மல்லிகைப் பூவை வைத்துக் கொண்டு அங்கும் இங்கும் போவதனால், சுகந்தமான மல்லிகையின் மணமும் காற்றில் கலந்து, அங்கே தெய்வீகத்தை இறைத்துக் கொண்டிருந்தது.
ஐயா தொடர்ந்தார்.
‘ஆனால் நம்ம உழைப்பெல்லாமே கடைசியில நமக்கு இன்பத்தையா கொடுத்துடறது?. இல்லையே! பல சமயங்கள்ல, என்னடா, நம்ம பண்றதெல்லாம் இப்படித் துன்பத்திலேயே முடியறதேனு, நாம பல சமயம் கலங்கி நிற்கிறோமே!’
‘ஆமாம் ஐயா, சில சமயம் நாம உழைச்சாலும் பலனில்லாமல், தோல்வியிலதான் இருக்கோம்’, நானும் என் பங்குக்கு ஒரு புகாரை வைத்தேன்.
தீபக் ஐ-பாடை மூடி வைத்தார்.
‘ஓகே, தோல்வி அப்படினு வந்தால், நம்ம அணுகும் முறையிலதான் மாற்றம் வேணும்னு நாம புரிஞ்சுக்கணும். அதுக்கேத்த மாதிரி மாத்திண்டு, நம்ம வேலையைச் செஞ்சுண்டே போகணும். பூஜை, உபாசனை எல்லாம் கொஞ்சம் டைம்-பாஸ் தான்.’
இப்படிச் சொன்னதிலே யாருக்காவது மன வருத்தம் ஏற்பட்டுவிடும் என நினைத்தாரோ என்னவோ, உரையாடல் தொடரவேண்டும் என்பது போல, தீபக் சொன்னார்.
‘வேற எந்த வகையில, இந்த உபாசனை எல்லாம் உதவி பண்றது நமக்கு?’
தீபக்கின் பேச்சு, ஏதோ ஒரு கர்வத்தாலோ, பெருமையாலோ வந்ததாக நான் நினைக்கவில்லை. அவரும் நம்மில் பலரைப் போலத்தான் எண்ணுகின்றார். யாருக்கு இந்த அவசர உலகத்தில், பூஜை, உபாசனை அப்படி எல்லாம் செய்ய நேரம் இருக்கிறது! அதிலும், வேலை அல்லது தொழிலைப் பலப்படுத்திக் கொள்ளும் வயதில், பூஜைக்கா முக்கியத்துவம் கொடுக்க முடிகிறது! உடம்பை வளைச்சு மெலிது பண்ண, யோகா மாதிரி வகுப்புக்களுக்கு வேணுமானால் போவோம்… ஆனால், ஆழமா பூஜை, புனஸ்காரம் இதெல்லாம், நிச்சயமாக முக்கியமாய்ப் படுவதில்லை.
ஐயா தீபக்கினைப் பார்த்துச் சிரித்தார்.
‘சரியாகச் சொன்னீர்கள். சமயம், மறைகள், கடவுள் இதெல்லாம் நம்மளோட அன்றாட வாழ்க்கைக்கு உதவியா இருக்கணும். அப்பத்தான் அதுக்கெல்லாம் ஒரு முக்கியத்துவம் வரும், இல்லையினா, இதெல்லாமே வேஸ்ட்தான்! நீங்க சொன்ன மாதிரி டைம்-பாஸ், ஒரு எண்டெர்டெய்ன்மென்ட்… அவ்வளவுதான். அதனாலதான், நம்மளோட பெரியவர்கள் எல்லாம் யோசிச்சு, வேதங்கள் சொல்றதெல்லாம், மனுஷனோட வாழ்க்கைக் குறிக்கோள், வழிமுறைகள் இதப் பத்தியேதான் இருக்குனு ஆராய்ஞ்சு சொல்லியிருக்கா…’
‘எந்த வழியில.?’ – இப்படிக் கேட்டு, பாலாவும் எங்கள் உரையாடலில் சேர்ந்து கொண்டார்.
நகரத்தில் ஒரு நல்ல வேலையில் பல ஆண்டுகள் பணிபுரிந்து விட்டு, பாலா இப்போது ரிடயர்மெண்ட் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருப்பவர். மாதாந்திர பஜனை, சத்சங்கம் இதிலெல்லாம், நான் பாலாவைச் சந்திப்பதுண்டு. அதிலெல்லாம் அவர் ரெகுலர். ஏதாவது ஸேவை செய்ய வேண்டும் என்றாலும், முதலில் வந்து நிற்பார். இப்போதெல்லாம், அவருக்கும் ஆன்மிக அறிவில் ஒரு ஈடுபாடு இருக்கிறது. அதெல்லாம், வேலை பார்க்கிற காலத்தில், முழுமையாக நமது திட்டங்களில் இருப்பதில்லை.
ஐயா தொடர்ந்தார்.
‘நல்லது, புருஷார்த்தம் அப்படிங்கிற மனிதர்களின் குறிக்கோள்தான் பிரதானமா….. இல்லையில்ல …..அது மட்டுமேதான் வேதங்களின் நோக்கமாய் இருக்கு. நம்ம சாஸ்திரங்களில் எல்லாம், மனிதர்களோட வாழ்க்கைக் குறிக்கோள், வழி முறைகள் எல்லாம் சிறப்பா ஆராயப்பட்டிருக்கு.’
மேலும் சொன்னார்.
‘இப்போ, நீங்க சொன்ன மாதிரி, நம்ம பண்ற செயலைப் பத்தின கேள்வியை எடுத்துக் கொண்டால், அதற்கும் வேதங்கள் நல்ல அறிவுரை தரும். உதாரணமா, நாம் எப்பவுமே மூணு நிலைகளைக் கடந்துதான் எதையும் அடைகிறோம்.’
ஐயா சில நொடிகள் யோசித்து விட்டுத் தொடர்ந்தார்.
‘சம்ஸ்கிருதத்தில ஜானதி, இச்சதி, யயதி – அப்படினு இந்த மூணும் சொல்லப்பட்டிருக்கு. இது ஒண்ணும் மந்திரமில்லை… ரொம்ப சிம்பிள்…. அறிவு, ஆசை, செயல்…. அதாவது ஒண்ணைப் பத்தின அறிவு நமக்கு முதல்ல வேணும் – அது ஜானதி. அந்த அறிவின் பயனால, அந்தப் பொருள் மேல ஆசையோ, வெறுப்போ – ஒருவித இச்சை வரலாம். இது இச்சதி… அந்த இச்சை தீவிரமானா, ஒரு செயல் அல்லது முயற்சி வரும். யயதி ! அந்த செயல் இச்சைக்குத் தகுந்த மாதிரி இருக்கும்….. இதெல்லாம் காமன் சென்ஸ்தான்…. இன் ஃபேக்ட், வேதாந்தமே காமன் சென்ஸ்தான். ஆனால், நாமெல்லாம் விட்டுட்ட காமன் சென்ஸ்’.
ஐயா மீண்டும் கண்களை மூடிக் கொண்டார்.
தீபக் உடனே பதிலளித்தார்.
‘நமக்குத் தெரியுமோ தெரியாதோ, எல்லாத்துக்கும் அறிவு, ஆசை, செயல் அப்படிங்கிற மூணும் இருக்கு…. இதைச் சொல்றதுக்கு எதுக்கு சாஸ்திரம் எல்லாம்…?’
நான் அப்போது எழுந்து, மெதுவாக ஹாலின் கதவினை மூடிவிட்டு அமர்ந்தேன். நாங்கள் பேசும் சத்தம் உள்ளே மந்திரங்களைச் சொல்லிக் கொண்டிருப்பவர்களுக்குத் தொந்தரவாய் இருக்கக் கூடாதே!
ஐயா தொடர்ந்தார்.
‘சரி,,, முதல்ல இந்த மூணு நிலைகளையும் பார்ப்போம். அறிவு அப்படினா, அடிப்படையில், ஒரு பொருளைப் பற்றிச் சரியாக கிரஹித்து அறிதல் அப்படினு பொருள். சம்ஸ்கிருதத்தில கிரஹணம் அப்படினு பேர். சரியான அறிவு, இது ரொம்ப முக்கியம். சுத்தமா ஒரு பொருளைப் பத்தின அறிவு இல்லைனா, அது இக்னரன்ஸ். அறியாமை. சுத்தமா அறியாத பொருள் மேல், நமக்கு ஆசை எப்படி வரும்? அதனால, அது பத்தின செயலும் வராது. நமக்கு அறியாமை வேண்டாம், அறிவுதான் வேண்டும்.’
‘ஆமாம்’ – இது சிவா.
‘அதனாலதான், நாம் முயற்சி பண்ணி, படிச்சு, நம்ம அறிவை வளர்த்துக்கணும். பூஜை, உபாசனைனு நேரத்தை வீணடிக்காம….’ என்றார் தீபக்.
ஐயா ஒரு சில நிமிடங்கள் மௌனமாக இருந்தார்.
‘உங்களுக்குச் சரியான அறிவு வந்து விட்டால், அது மிகவும் நல்லது. ஏன்னா, சரியான அறிவு இருந்தா, சரியான செயல்களைச் சிந்தித்து அறிய முடியும். ஆனால், நமக்கு எல்லாச் சமயத்திலயும், எல்லா விஷயத்திலேயும், சரியான அறிவு இருப்பதில்லையே! அதானே பிராப்ளம்! அறியாமையா இருந்தாக்கூடத் தேவலை, எப்படியாவது யாரிடமிருந்தாவது, அறிவைக் கத்துக்கலாம். ஆனா, அதுக்குக்கூட, நமக்கு அறியாமை இருக்குங்கிற அறிவு வேணும். ஆனா, தப்பான அறிவு இருந்தா, அதான் மிகப் பெரிய தொல்லை. தப்பான அறிவுனா, ஒண்ணை இன்னொண்ணாப் பாக்கிறது… உண்மையைப் பொய் அப்படினும், பொய்யை உண்மை அப்படினும் நம்பறது! இப்படியெல்லாம் தப்புத்தப்பா புரிஞ்சுக்கிறதுக்கு அன்யதா கிரஹணம் அப்படினு பேர். குறையும் பிழையுமான அறிவு.’
நாங்கள் புரிந்தது எனும்படியாகத் தலைகளை ஆட்டினோம்.
ஐயா தொடர்ந்தார்.
‘சரியான அறிவு இருந்தா சரியான செயலைத் தேர்வு செய்ய முடியும், அதனால நம்ம குறிக்கோளை அடையும் வாய்ப்பு இருக்கு. ஆனால் தப்பான அறிவு இருந்தா, தப்பு வழியும், தப்பான குறிக்கோளும்தானே இருக்கும்! அதோட, தப்பை சரினு நம்பறதால, நமக்கு ஒரு தப்பான நம்பிக்கை – belief system – வந்துடும். இது ஒரு வலுவான போர்வையா மூடிவிடும். அதனால, நல்ல அறிவினை ஏத்துக்க முடியாமப் போயிடும். ஆணவம் வந்துடறதால எதையும் மாத்திக்காம, அப்படியே அறியாமையில இருந்துடுவோம்.’
தீபக் சொன்னார், ‘அதாவது, நம்ம அறிவு தப்பா இருக்குனு தெரிஞ்சா, உடனே சரியான அறிவைத் தேடி அடையணும், அவ்வளவுதானே?’
அவர் சொல்வது சரியாகப்பட்டது. என்றாலும், நான் நினைத்தேன். தவறான அறிவிலிருந்து, சரியான அறிவிக்குப் போவதற்கும், நமக்குள் ஒரு உந்து விசை தேவையல்லவா! நல்ல அறிவைப் பெற வேண்டும் என்ற இச்சை வரவேண்டும் இல்லையா!
ஐயா சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தோம்.
‘நீங்கள் சொல்வதை உங்களால் எப்போதும் செயல் படுத்த முடியும் என்றால், அது மிகவும் சிறப்பு. ஆனால், சரியான அறிவு இருப்பதாலேயே, உங்களால், மகிழ்ச்சி தரும் குறிக்கோளை எல்லாம் அடைந்து விட முடிகிறதா?’
தீபக் பதில் சொல்ல சிறிதும் யோசிக்கவில்லை.
‘நிச்சயமாய் இல்லை. சரியான அறிவோடு, சரியான முயற்சி, செயலும் அவசியம். உதாரணமா, என்னோட உடம்பு ஆரோக்யமா இருக்கணும்னா, நல்ல உணவும், தினசரி உடற்பயிற்சியும் வேணும்கிறது அறிவு. ஆனால் இதை நான் ஒழுங்கா செஞ்சாகணும்!’
‘ஆமாம். சரியான அறிவினால், சரியான முயற்சி எது, செயல் எதுனு நமக்குப் புரியும். ஆனால், அந்த முயற்சியும், செயலும், சரியானதாயும், முழுமையானதாயும் இருக்கணும். ஒழுங்கா தினமும் உடற்பயிற்சி செய்யலைனா, அறிவு இருந்தும், செயல் அரை குறையானால், சரியான பலன் வராது!’
‘சரிதான். நான் சொன்னதும் அதுதான். சரியான முயற்சியை, முழுமையாச் செய்யணும், பாதியில் விடக் கூடாது.’
இப்படி சொன்ன தீபக் உடனேயே, ‘இது ஒவ்வொருவருக்கும் உள்ள பொறுப்பு. இதெல்லாம் பூஜை, உபாசனையால வருவதில்லை. நம்மபாட்டுக்கு, அறிவையும், ஆற்றலையும் அடைஞ்சு முன்னேறிண்டே இருக்கணும்’.
ஐயா சிரித்துவிட்டுத் தொடர்ந்தார்.
‘நம்ம பொறுப்புதான். நம்ம குறிக்கோளை அடைய, அறியாமையும் இயலாமையும் நமக்கு வேண்டாம். அறிவும், ஆற்றலும்தான் வேண்டும்.’
தீபக்கின் பக்கம் சற்றே திரும்பி உட்கார்ந்தார் ஐயா.
‘இப்போ நடுவில இருக்கிற இச்சா சக்தி அப்படிங்கிறதைப் பார்ப்போம். இதுதான் நமக்குள்ள, ஒரு குறிக்கோளை விளைக்கும் சக்தி. எப்பவாவது, எதனால நமக்குள்ள ஆசை வருது அப்படினு நாம யோசிக்கிறோமா? இல்லையே!’
தொடர்ந்தார்.
‘விருப்பம் என்பது நமக்குள்ளேயே விளையும் சக்தி. அறிவு, ஆற்றல் இதெல்லாம் வெளியிலேர்ந்து சம்பாதிச்சுடலாம்…. மத்தவங்க உதவியால கூட சாதிச்சுக்கலாம். ஆனா, ஒரு குறிக்கோளை – அது விருப்போ, வெறுப்போ – ஏற்படுத்துற சக்தி, நமக்குள்ள தான் இருக்கு. அதுக்கு நாம் மட்டுமே பொறுப்பு.’
யோசிப்பது போல் சில நொடிகள் மௌனித்த ஐயா, மீண்டும் சொன்னார்.
‘ஞாபகம் இருக்கா…. நல்ல அறிவைத் தேடி அடைஞ்சு, நல்ல முயற்சியைச் செஞ்சாப் போதும் அப்படினு நீங்க சொன்னீங்க… அப்படித் தேடணும்கிற விருப்பம் எதனால, உங்களுக்கு வருது? அதுதான் இச்சா சக்தி. இதைத்தான் எல்லாப் படைப்புக்கும், செயலுக்கும் முதற்காரணமா நம்ம சாஸ்திரங்கள் சொல்றது. இது எங்கேயிருந்து, எப்படி வருதுனு நம்மால புரிஞ்சுக்க முடியாது. அந்த இச்சா சக்தியைத்தான் ஆதி பராசக்தினு வழிபடறோம். கடவுளுக்குக்கூட, படைக்கணும்னு ஒரு விருப்பம் இருந்ததால்தானே படைக்க முடிந்தது! புரிகிறதா?’
நாங்கள் யாரும் பேசாமல் கவனித்துக் கொண்டிருந்தோம்.
நவராத்திரியில், அறிகின்ற சக்தி, ஆசைப்படுகின்ற சக்தி, முயல்கின்ற சக்தி எனும் இந்தச் சக்திகளைதான், ஞான சக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி எனக் கொண்டாடுகின்றோம்.
பக்கத்து அறையில், ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம ஜபம் நடந்து கொண்டிருந்தது. இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி ஸ்வரூபிணி என நாமங்கள் அர்ச்சிக்கப்படுவதும் காதுகளில் விழுந்தது.
நானும் தீபக்கின் வழியிலே யோசித்துக் கொண்டிருந்தேன்.
விரும்பும் சக்தியும் எனக்குள்ளேதான் இருக்கிறது என்றால், அதைப் பயன்படுத்தி, நல்ல அறிவையும், செயலையும் நாம் ஏன் நாட முடியாது? எதற்கு, உபாசனை எல்லாம்?
சற்று யோசித்து விட்டுக் கேட்டேன்.
‘ஐயா, நம்ம நல்ல குறிக்கோளை விரும்பி, அதுக்கேத்த நல்ல அறிவையும், முயற்சியையும் பண்ணனும், அதானே!’
ஐயா பலமாகச் சிரித்தார்.
‘நிச்சயமா… அவ்வளவேதான். அப்படி மட்டும் ஒருவர் இருந்துட்டா, அவர் தான் கர்ம யோகி. ஆனால் அது அவ்வளவு சுலபம் இல்லை. நமக்கு அப்படிப்பட்ட நல்ல ஆசையும் அறிவும் எப்பவுமா இருக்கு? இல்லையே!’
‘அதுக்கு என்ன தேவை?’, நான் கேட்டேன்.
‘நம்மளோட இச்சா சக்தியை டெவலெப் பண்ணனும்’
‘ஏன்?’
கேள்விகள் கேட்பதற்கு ஐயா எப்பவுமே ஊக்குவிப்பார். கேள்விதானே பதிலுக்கு வித்து என்பார் ஐயா.
‘ஏன்’, ‘எப்படி’ என்பதான கேள்விகளாலேதான் அறிவியல் சாதனைகள் நடந்து கொண்டே இருக்கின்றன. ‘இதெல்லாம் யாருக்காக’ எனும் கேள்வியினாலேதான் ஆன்மிக சாதனைகள் நடக்கின்றன. அதனால் கேள்விகள் மூலம் தான், நாம் உலக வாழ்க்கையிலும் சரி, ஆன்மிக வாழ்க்கையிலும் சரி, நல்ல பதிலைப் பெற முடியும்
ஐயா சொன்னார்.
‘நாம் நமது செயல்களுக்கான நோக்கத்தை முதலில் ஆராய வேண்டும். எப்போதும், இதனால் எனக்கு என்ன பயன் என்று யோசிக்க வேண்டும். வேதாந்தமும் இப்படிக் கேட்பதைத்தான் வரவேற்கிறது. பெரிய உண்மைகளை எல்லாம் வேதாந்தம், குருவுக்கும் சிஷ்யனுக்கும் நடக்கும் கேள்வி பதில் வாயிலாகவே காட்டுகிறது. இப்போ நீங்கள் கேட்ட கேள்விக்குப் பதில் இதுதான். இச்சா சக்தியைப் பலப்படுத்தினால் மட்டுமே, நமக்குச் சரியான இன்பம் கிடைக்கும், துன்பத்தையும் விலக்க முடியும்.’
‘ஆனால் இச்சா சக்தி எங்கேயிருந்து, எப்படி வருதுனு நம்மால புரிஞ்சுக்க முடியாது அப்படினு சொன்னீங்களே… அப்படினா எப்படி அதை டெவலப் பண்ண முடியும்?’ – இது தீபக்.
‘அதுக்கு ஒரே வழி, எங்கே இச்சா சக்தி தன்னை வெளிப்படுத்திக்குமோ, அந்த இடத்தை டெவலப் பண்றதுலதான் ….’
புதிர் கேள்வி கேட்கும் ஆசிரியரைப் போல ஐயா கேட்டார்.
‘நம்மோட ஆசைகள் எல்லாம் எங்கே எழுகிறது?’
‘மனசுக்குள்ள…’ என்றேன் நான்.
‘அப்படினா, நம்மளோட கவனம், நம்ம மனசுக்குப் போகணும், அதாவது, ஆசைகள் வளரும் நிலமான மனசைத்தான், நாம உழுது பண்படுத்தணும். எப்படித் தோட்டத்தில பூச்செடியும், பழ மரமும் வரணும்னா, அங்கே நிலத்தைப் பண்படுத்துறோமே, அது மாதிரி…..’
சிவாவுக்கு ஆர்வம் மேலிட்டது.
‘ஐயா, நம்ம மனசு பண்பட்டிருக்குனு எப்படித் தெரிஞ்சுக்க முடியும்?’
‘ம்…. இரண்டு அளவுகோலை வேண்டுமானால் வைச்சுக்கலாம். முதல் ஒண்ணு, மனசைக் குவியவைப்பது. அதாவது focus.’
‘அதாவது, ஒரு நேரத்தில், எடுத்துக் கொண்ட பொருள் அல்லது செயலில் மட்டுமே குறியா இருக்கறது…. அப்படித்தானே’ – இது பாலாவின் கேள்வி.
‘ஆமாம். முதல்ல, குவியிற மனசு எதுக்கு அவசியம்னு கேட்போம். ஏன்னா, உறுதியான ஆசைதான் செயலுக்கும், செயலறிவுக்கும் மூலகாரணம். அப்படி இருக்கும் போது, அந்த ஆசையானது, நம்ம மனசை அலைக்கழித்துக் கொண்டே இருந்தால், நம்ம செயலும், அறிவும் எப்படி சீராய் நடக்கும்? அலைபாயும் மனம், எந்த ஒரு செயலையும் உருப்படியாச் செய்ய விடாது. அதனால, நம்மோட முழுத் திறமையும் – அதாவது அறிவும் ஆற்றலும் – வேஸ்ட்டாப் போயிடும்’.
‘சரிதான். இதுக்கெல்லாம் நிறைய சைக்கோ-மெட்ரிக் டெஸ்ட் எல்லாம் இருக்கு. மேனஜ்மெண்ட் பயிற்சியில எல்லாம், இதப்பத்திப் பேசி, இதுக்கான பயிற்சி எல்லாம் குடுப்போம். செல்ஃப் டெவலப்மெண்ட்!’ என்றார் தீபக்.
மனப் பண்பாடு என்பதெல்லாம், மன ஒழுக்கம் பற்றிய பயிற்சிதான் என்பதைத் தவிர பூஜை முதலான செயல்களினால் இல்லை என்பதைச் சுட்டிக் காட்டவே, தீபக் சொன்னதாக எனக்குப் பட்டது.
ஐயா சொன்னார்.
‘ரொம்ப சரி. தியானம், ஜபம் அப்படிங்கிறதும், அதேமாதிரியான மேனஜ்மெண்ட் பயிற்சிகள்தான். இருந்தாலும், இதப் பத்தி ரொம்ப ஆராய வேண்டியதில்லை’.
ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு ஐயா தொடர்ந்தார்.
‘பண்பட்ட மனம் அப்படினு காட்ட, இன்னொரு அளவுகோல் இருக்கு. அது மனசு எப்படி நிரம்பி இருக்கு அப்படிங்கிறது. அது நல்ல குணங்களால் நிரம்பியிருக்க வேண்டும். கெட்ட குணங்களை விலக்கி இருக்க வேண்டும்.’
‘நல்ல குணம்னா…. அன்பு, கருணை, அஹிம்ஸா…. இதானே’ – பாலா கேட்டார்.
‘ஆமாம். அதுமாதிரி நல்ல பண்புகளை எல்லாம் அறிந்து வளர்த்துக்கணும். நல்ல குணங்களுக்கு, ஸத்குணா அப்படினு பேரு. அதேசமயம், கெட்ட குணங்களையும் கண்டுபிடிச்சு அழிக்கணும். அதாவது துர்க்குண நிவர்த்தி. இந்த கெட்ட குணமெல்லாம், தோட்டத்துல வரும் களைகள் மாதிரி, நாம விரும்பாமலே வரும்! இதைப் பாத்துப் பாத்து, பிடுங்கி எறியணும். நமக்கே தெரியுமே…. சில சமயம் நம்ம குழந்தைகள் பொய் சொன்னாலோ, திருடினாலோ, எப்படி இந்தக் குணமெல்லாம் வருது, நம்ம இதெல்லாம் சொல்லித் தராமலே, வருதே அப்படினு! அவை எல்லாம்தான் களைகள். அதை எல்லாம் அழிக்கணும். திரும்பத் திரும்ப வரும், திரும்பத் திரும்ப அழிக்கணும். வேரோட பிடுங்கி…..’
‘ஐயா, இதெல்லாம் பொது அறிவு தானே……. நல்லவர் வழியில போனா, இதெல்லாம் தானா வந்துடுமே’ – இது தீபக்.
பூஜைகள் எல்லாம் தேவை இல்லை எனும் எண்ணத்தை விட்டுவிட்டு, இன்னும் தீபக் வரவில்லை என்பது புரிந்தது.
பாலா சொன்னார்.
‘நானும் இதுமாதிரி மனசைப் பண்படுத்தற முயற்சி செஞ்சுண்டுதானிருக்கேன். ஆனால் நடக்க மாட்டேங்கிறதே!’
சில நொடிஅமைதிகளுக்குப் பிறகு நான் கேட்டேன்.
‘ஐயா, நல்ல குணங்கள் மனதில் இருப்பதால், என்ன பயன்?’
‘ம்… நல்ல குணங்கள் இருந்தால்தான், நமது அணுகுமுறை சரியாக இருக்கும். அதாவது good attitude நமக்கு வரும். இதுக்கு சத்பாவனா அப்படினு பேரு. ஏன் இது அவசியம்னு கேட்டா, உலகத்துல நம்மோட இன்ப துன்பங்களுக்குக் காரணமே, நாம எப்படி நம்ம அனுபங்களை எதிர் கொள்கிறோம் அப்படிங்கிறதுலதான் இருக்கு. செயல் செய்யும் போதெல்லாம், மனம் அதுல ஈடுபடுகிறது இல்லையா, அப்படினா, மனதின் நோக்கம் அல்லது மனதின் எதிர்பார்ப்புக்கள்தான், நம்ம பண்ற செயலுக்குப் புதிய கோணத்தைக் கொடுப்பன. . அதுனால நம்மோட பாவனைதான், நம்ம செயலைப் பெரிசா பாதிப்பது.’
‘எனக்குப் புரியலை ஐயா’, என்றேன் நான்.
‘எதிலும், எப்படி நம்ம அணுகுமுறை இருக்கு என்பதுதான் முக்கியம். அதுதான் நம்மளோட உண்மையான நோக்கத்தைக் காட்டிக் கொடுப்பது. நோக்கம் என்ன, எதனை எதிர்பார்த்து ஒரு செயலைச் செய்யறோம், மத்தவங்களை நாம் எப்படிப் பார்க்கிறோம் – இதெல்லாம்தான் நம்ம அனுபவிக்கும் சுக துக்கங்களுக்கு முக்கியக் காரணம். உதாரணமா, நான் ஒருத்தருக்கு உதவி பண்ணும் போது, என்னோட உண்மையான நோக்கம் என்ன என்பதைப் பொறுத்துத்தான் அந்த உதவியின் பயன் உருப்படும். கர்ம யோகம் அப்படிங்கிறதுக்கு, சரியான அணுகுமுறைதான் அடிப்படை. நல்ல அணுகுமுறை இருந்தால்தான், செய்யும் கடமைகளைச் சரியாச் செய்ய முடியும். அதேபோல, அதன் பயனா, இன்பமோ, துன்பமோ எது வந்தாலும் சரியா ஏற்றுக் கொள்ளவும் முடியும். சத்பாவனா வரணும்னா, அதுக்கு சத்குணம் அவசியம் தேவை’
ஐயா இப்படிச் சொல்லிவிட்டு, யோசித்துக் கொண்டிருக்கும் தீபக்கை ஆழமாகப் பார்த்தார்.
குழந்தைகள் அங்கும் இங்கும் ஒடிக் கொண்டிருந்தார்கள். கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்தார்கள் போலிருந்தது. திடீரென்று சப்தம். அண்ணாந்து பார்த்தால், மாடிப் படிகளில் தவறி விழுந்து கொண்டிருந்தான் அஜித். டக்கென்று எழுந்தவன், அடி ஏதும் படவில்லை என்றாலும், எல்லோர் முன்னாலேயும் விழுந்து விட்டோமே எனும் வெட்கத்தால், பலமாக அழத்தொடங்கினான். ஓடி வந்து தீபக்கின் மடியில்’தொபுக்’ என விழுந்தான்.
விழுந்தவனுடைய கண்ணீரைத் துடைத்து விட்டுக் கொண்டே, தீபக் கேட்டார்.
‘ஐயா, நீங்கள் சொல்வது புரிகிறது. நல்ல குணம், நல்ல அணுகுமுறை இரண்டும் பண்பட்ட மனமுடையவருக்குத் தேவை. இதெல்லாமும் பொதுவான விஷயங்கள் தானே. பூஜையால் என்ன முக்கியத்துவம் வந்து விடப் போகிறது?’
அஜித் தனது மடியில் அழுது கொண்டிருந்த போதும், தீபக் ஐயாவிடம் கேள்விகளைக் கேட்பதைப் பார்த்த பொழுது, அவர் மிகவும் உன்னிப்பாக உரையாடலில் முழ்கியிருப்பது புரிந்தது.
ஐயா தொடர்ந்தார்.
‘நல்ல குணங்களோட நிறையப் பேர் இருக்கிறார்கள். நல்ல அணுகுமுறையும் கூட அவர்களுக்கு இருக்கலாம். ஆனால், அப்படியும் சிலர் துயரத்திலேதானே இருக்கா…. அவர்களால, குறிக்கோளை அடைந்து சுகமாக இருக்க முடியலையே…. இது ஏன்னு தெரியுமா?’
ஐயாவே தொடர்ந்து பேசினார்.
‘ஏன்னா, அவர்களுக்கெல்லாம், தொடர்ந்து செய்து முடிக்கணும்கிற உறுதி இல்லை. நம்மோட அறிவையும் ஆற்றலையும், உபயோகப்படுத்தி – அதாவது அப்ளை பண்ணி – முயற்சிகளை எல்லாம் முழுசாப் பண்றதுக்கு, திடமான மனம் நமக்கு அவசியம் தேவை. இது எல்லாருக்கும் இருக்கிறதில்ல… நல்லவர் அப்படினா, வலிமையில்லாதவர் அப்படினு ஆயிடக்கூடாது. கருணைக்கும், பலவீனத்துக்கும் சம்பந்தமில்லை. பலம்தான் நமக்குத் தேவை. பலவீனம் இல்லை. பலம் அப்படினா, அது மனதின் திடம், மனவுறுதி. நம்மில் பலருக்கும் இந்தப் பரீட்சையில் தோல்விதான்.’
நான் உடனடியாய் என் தலையை ஆட்டி, என்னுடைய முழு ஒப்புதலையும் அறிவித்தேன்.
எத்தனை தடவை நான், தொடங்கிய வேலைகளைப் பாதியிலேயே விட்டிருக்கேன்! வேலைகளில், என்னோட அறிவுக்கோ, ஆற்றலுக்கோ, அணுகுமுறைக்கோ எந்தக் குறையும் இல்லை. ஆனாலும், பல முறை அவைகளை அரை குறையாய் விட்டிருக்கேனே! எனக்குள்ளே, முடிக்கும் திறனாகிய சக்தி, பலமடையாமல் இருந்திருக்கே! இப்படி நான் யோசித்தேன்.
‘அதுதான் கிரியா சக்தி….. ஒரு செயலை முழுமையாச் செய்து படைக்கும் திறன். இந்த கிரியா சக்தியை டெவலப் பண்றதுக்கு ஒரே வழி, அதுக்கு அடிப்படையான இச்சா சக்தியை டெவலப் பண்றதுதான். அப்படினா, அதோட விளைநிலமான மனசைப் பண்படுத்தறதுதான். இது எப்பவுமே நடந்து கொண்டிருக்க வேண்டிய செயல். இதுதான் சுய முன்னேற்றம் – self development’ – இப்படிக் கூறினார் ஐயா.
‘இதெல்லாம் சொல்றதுக்கு ஈஸி.. செய்யறதுதான் கஷ்டம்’, என்றார் சிவா.
‘ஆமாம். ரொம்ப கஷ்டம்தான். ஏன்னா, இதைச் செய்ய நமக்குத் தேவை நம்மளோட குண மாற்றம். இதான் கஷ்டமான காரியம். பகவான் கிருஷ்ணர், சுண்டுவிரல்ல மலையெல்லாம் தூக்கி இருக்கார். ஆனா அவரால, துரியோதனோட குணத்தை மாத்த முடியலையே’.
ஐயா தொடர்ந்தார்
‘மஹாபாரதத்தில் துரியோதனன் சொல்லுவான். ஜானமி தர்மா ந ச வ்ருத்தி: – அதாவது தர்மம் எதுனு எனக்குத் தெரியும், ஆனால் அதை வளர்ப்பதில்லை. ஜானமி அதர்மா ந ச நிவ்ருத்தி: – அதேமாதிரி, எது அதர்மம் அப்படிங்கிறதும் எனக்குத் தெரியும். ஆனா அதர்மத்தை நான் கைவிடறதும் இல்லை. அதாவது, நல்ல அறிவு இருந்தும், துரியோதனனால நல்ல குணங்களை வளர்த்துக்க முடியலை.’
நமக்கே இது தெரியும். நம்மில் பலருக்கும், முக்கால் வாசி நேரம், எது நல்லது, எது கெட்டது, எது சரி, எது தவறு அப்படினு எல்லாம் தெரியும், ஆனாலும், அதன்படி நடப்பதில்லை. இதற்கு த்ருதி அல்லது மனவுறுதி நமக்கு இல்லாமல் போவதுதான் காரணம்.
நான் சொன்னேன்.
‘ஒருவேளை, அதனால்தானோ, ஸ்ரீ பகவத்கீதையில், குணமாற்றத்தைப் பற்றி மூணு, நாலு பாகங்கள் சிறப்பாச் சொல்லியிருக்கு’.
நான் இதைபற்றி எல்லாம் ஓரளவு ஐயாவிடமிருந்து முன்பே கேட்டிருக்கிறேன்.
‘ஆமாம்’ என்றார் ஐயா.
‘இந்த மாதிரி நல்ல குணங்களால, நம்ம மனம் பண்படுத்தப் பட வேண்டும் அப்படிங்கிறதுதான் இப்போ நாம முக்கியமாப் புரிஞ்சுக்க வேண்டியது.’
‘ஐயா, இது எப்படி சாத்தியம்? தோட்ட வேலை எல்லாம் நானே செய்யறதில்ல… ஆனால் தோட்டக்காரனைப் பாத்திருக்கேன். அவன் களையைப் பறிக்கிறது எப்பவுமே நடந்திண்டிருக்கு…. அது ஒரு நான்-ஸ்டாப் வேலை! அதை நீங்கள் ஒரு உதாரணமா சொன்னதைப் பார்த்தா, நம்ம மனசைப் பண்படுத்தி வைச்சுக்கறதும், ஒரு நான்-ஸ்டாப் வேலை தானே? எப்படா களை வருதுனு பாத்து, அதை எல்லாம் பிடுங்கி எறிஞ்ச்சுண்டே இருக்கணும்….. நிறைய நேரம் ஆகாதா….’
இப்படிக் கேட்டார் தீபக்.
‘மனசைப் பண்படுத்தற செயலுக்கு ஆரம்பம், முடிவுனு எல்லாம் நேரம் கிடையாது. இது ஒரு தொடர் பணி. வாழ்க்கைங்கிறது என்ன.. அது அனுபவங்கள் கோர்த்த சங்கிலிதானே… இந்த அனுபவங்கள் எல்லாம் நம்ம மனசிலேதானே நடக்கிறது! அதனால, நான் தோட்ட வேலையை உதாரணமாச் சொன்னாலும், மனசைப் பண்படுத்தறதுங்கிறது, வாராந்தர தோட்ட வேலை மாதிரி இல்லை. இது எப்பவுமே நமக்குள்ள நடக்கிற தினசரி யுத்தம், யக்ஞம்!’ என்றார் ஐயா.
‘ம்… அப்படினா எனக்கு ஒரு கிக்-ஸ்டார்ட் வேணும்’ என்றேன் நான்.
‘என் மனசுல நிறைய கெட்ட குணங்கள்தான் இருக்கு… ஆன்மிக நோக்கமோ, உயர் தத்துவங்களோ மனசுல நிலையா இருக்கிறதில்லை… சுருக்கமாச் சொன்னா, என்னோட மனசு, என் வீட்டுக்கு முன்னாடி இருக்கிற டிரைவ்-வே மாதிரி. சீர் இல்லாமல், நிறைய பாசமும், களையும் விளைஞ்சு கிடக்கிற மாதிரி தான் இருக்கு.’
ஐயா சிரித்தார்.
‘அப்படினா, உங்களுக்கு ஒரு கிக்-ஸ்டார்ட் கண்டிப்பா வேண்டும்தான்…. நம்ம எல்லாருக்கும் இந்த மாதிரி, நம்மளப் பத்தி ஒரு எண்ணம் வந்திருக்குமே…. எத்தனை தடவை, நம்ம துணிமணி வைக்கிற அலமாரியைத் திறந்து பார்த்துக் கலங்கிப் போயிருக்கோம்! குப்பையா இறைஞ்சு கிடக்கிறதெல்லாம் ஒழுங்கு படுத்த முடியலையேனு கவலைப் பட்டிருக்கோம். அப்பல்லாம் தோணும், யாராவது இந்த ஒருமுறை, எல்லாத்தையும் துடைத்து, அழகாக் கொடுத்துட்டா, அப்புறம் நம்மளே நல்லபடியா வைச்சுக்கலாம்னு.. இல்லையா? இந்த மாதிரி நம்ம, நம்மளோட மனசைப் பாத்துக் கலங்கும் போதுதான், பூஜை, உபாசனை எல்லாம் நமக்கு உதவி செய்கிறது.’
‘உபாசனை அப்படினா?’
‘சம்ஸ்கிருத்ததில உபா அப்படினா உயர்ந்த அல்லது, மிக அருகில் அப்படினு பொருள். ஆசனம் அப்படினா இருக்கை. உபாசனா அப்படினா, மிக அருகில் இருத்தல், அல்லது மிக உயர்ந்து இருத்தல். மிக இருகில் இருத்தல் அப்படினே வைச்சுக்கலாம்.’
‘மிக அருகில் அப்படினா? எதுக்கு அருகில்?’ தீபக் கேட்டார்.
‘இந்தக் கேள்விக்கு நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும்’ என்றார் ஐயா.
தொடர்ந்து,’உங்களுக்கு அருகில் யார்’ என்றார்.
‘அப்பா’ என்றான் அஜித், தனது குட்டி விரல்களால் தீபக்கைச் சுட்டிக் காட்டியபடி.
அவனும் எங்கள் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்தான் போலிருக்கிறது.
‘ஷ்ஷ்….’ என அவனை அடக்கிய தீபக், ‘ஐயா, என் பக்கத்தில் இருப்பவர்தான் என் அருகில் இருக்கிறார்’ என்றார்.
‘இல்லை. நீங்கள் எங்கிருந்தாலும், உங்களுக்கு மிக மிக அருகில் இருப்பது யார்? இன்னொரு மாதிரி கேட்டால், எப்பவுமே, உங்களை விட்டுப் பிரியாமல் இருப்பவர் யார்?’
எனக்கு உபாசனை என்பது பூஜை பற்றிய விஷயம் எனப் புரிந்ததால், இந்தக் கேள்விக்கு பதில் கடவுளாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றியது.
உடனே ‘கடவுள்தானே?’ என்றேன்.
ஐயா என்னைப் பார்த்தார்.
‘எனக்குக் கடவுளைப் பற்றி இன்னும் தெரியாது. அதனால அவரைப் பத்தி பேசப் போறதில்ல…..’
நாங்கள் அமைதியாக இருந்தோம்.
உள்ளே இருந்து மணியோசை கேட்டது. பாராயணம் எல்லாம் முடிந்து தீபாரதனை ஆரம்பிக்கப் போகிறது என நினைத்தேன்.
ஆனால் நாங்கள் யாரும் நகரவில்லை. ஐயாவினையே பார்த்துக் கொண்டிருந்தோம்.
‘எது, புற அறிவு எதுவுமில்லாமலே அறியப்படுவது?’
நாங்கள் அப்பொழுதும் பதில் சொல்லவில்லை.
‘எது, காது, மூக்கு என எல்லாப் புலனறிவாலும் காட்டப்பட முடியாததாய் இருந்தாலும், தன்னைக் காட்டிக் கொண்டே இருப்பது?’
நாங்கள் காத்துக் கொண்டிருந்தோம்.
‘அதுதான் “நான்” எனும் உணர்வு. நம் ஒவ்வொருவருக்குள்ளும் உயிர்த்துக் கொண்டிருப்பது. இருட்டில் இருக்கும் போதும், உங்களுக்கு நீங்கள் இருப்பது தெரியாமலா இருக்கிறது! அந்த நான் எனும் இருப்புதான், நம்ம ஒவ்வொருவருக்கும் மிக மிக அருகில் இருப்பது’.
‘ஐயா, உபாசனை அப்படினா, நான் என் பக்கதிலேயே இருப்பது…. அதாவது, நான் நானாக இருப்பது’ – தீபக் வியப்புடன் கேட்டார்.
‘ஆமாம். தான் தானாக மட்டும் இருப்பது’
‘ஏன் அப்படி இருக்கணும்? அதனால என்ன பிரயோஜனம்’ – இப்படிக் கேட்டார் சிவா.
அவருக்கும் இப்பொழுது கேள்வி கேட்கும் பழக்கம் தொற்றிக் கொண்டு விட்டது.
‘உங்கள் மனம்தான் டிரைவ்-வே. அதுதான் எல்லாச் செயல்களையும் ஓட்டுகின்றது. நடத்துகின்றது. அந்த டிரைவ்-வே சுத்தமா, உறுதியா, நல்ல அழகா இருக்கணும்னு அறிஞ்சுண்டோம். ஆனா நம்ம நிலைமையோ வேற…. மனம்கிற இந்த டிரைவ்-வே பாசி படிஞ்சு வழுக்கிண்டு, ஒரே அழுக்கா இருக்கு. இதைக் கொஞ்சம் கொஞ்சமா சுத்தம் பண்ணனும், ஆனா அதுக்கு நிறைய நேரம் ஆகும்னு தோண்றது. ஏதாவது உடனடி நிவாரணம் தேவை….. சரியான கெமிக்கல் எல்லாம் போட்டு, தண்ணீரைப் பீச்சி அடிச்சு, யாராவது சுத்தம் பண்ணிக் கொடுத்தா தேவலைனு தோண்றது. அப்படிப் பண்ணினால்தான், இந்த டிரைவ்-வேயின் சுத்தமான கிரனைட் பளிச்சுனு தெரியும். அப்படி சுத்தமாயிட்டா, இனிமே நம்ம அதை அழுக்குப் படியாமல் பாதுகாக்கலாம்…. இப்படி எல்லாம் நமக்கு உதவி வேண்டியிருக்கில்லையா?’
நிச்சயமா அதுமாதிரி உதவி, நமக்கெல்லாம் அவ்வப்போது தேவைதான்.
‘அந்த உதவிதான் உபாசனையில் கிடைப்பது. எப்போ நான் எனும் அந்த உள்ளுணர்விலேயே ஒன்றி இருக்கிறோமோ – அப்போ, அந்த ஒளி – எதனால நம்மோட மனம், புலன், பொறிகள் எல்லாம் வேலை செய்யறதோ அந்த ஒளி – பளிச்சினு அடிக்கும்… அந்த ஒளி பட்டவுடனேயே மனசு சுத்தமாயிடும். நிர்குண, நிர்விக்கல்ப, நிஷகலங்க, நிர்மல…’
நான் இடை மறித்தேன்.
‘இதெல்லாம் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தில், சக்தியின் பெயர்கள் அல்லவா?’
‘ஆமாம். மனம் அப்படித்தான் துடைச்சு வைச்ச சிலேட் மாதிரி ஆயிடும். அங்கே ஒரு குணமும் இல்லை. சரி, தவறு அப்படினோ, நல்லது, கெட்டது அப்படினோ எதுவும் இல்லை. குழந்தையோட மனசு மாதிரி… பரிசுத்தமாயிடும்.. அதுதான் சாந்தி….பூரணமான அமைதி. அதுதான், நான் என்பதோட உண்மையான தன்மை. அந்த அனுபவம் ஒரு நொடியோ, சில நிமிடமோ, சில மணியோ எப்படி வேணுமானாலும் ஏற்படலாம். எனக்குத் தெரியாது. ஆனால், அருகில் அமர்தல் அப்படிங்கிற உபாசனையில், அந்த ஒளியைத் தேடிக் கொண்டு இருந்தால்கூட நமது மனம் சுத்தமடையத் தொடங்கிவிடும்.’
ஐயா இப்படிச் சொல்லிவிட்டுக் கண்களை மூடிக் கொண்டது, அவரும், அவரது பக்கத்திலே அமரப் புறப்பட்டு விட்டாரோ எனத் தோன்றியது.
பாலா குறுக்கிட்டார்.
‘ஐயா, நீங்கள் மனதில் நல்ல குணங்கள்தான் வேண்டும்னு சொன்னீங்க…. ஆனால் நிர்க்குணா அப்படி எல்லாம் ஆகி, நாம ஒரு குணமும், எண்ணமும் இல்லாதவராய் ஆகிட்டோம்னா…’
ஐயா சிரித்து கொண்டே சொன்னார்.
‘ஓ, அப்படித்தான் ஆகிவிட்டால் என்ன!’ – ஓரிரு நொடிகளுக்குப் பிறகு தொடர்ந்தார்.
‘இல்லையில்லை….. உபாசனையிலிருந்து வெளில வந்தா, உங்க மனசு சுத்தமா இருக்கும். ஒண்ணும் எழுதாத சிலேட் மாதிரி. அதுல நம்ம முயற்சியின்படி, சரியான நல்ல குணங்களை சுலபமாச் சேத்துக்கலாம்.’
‘அப்புறம் திரும்பவும் கெட்ட குணங்களும் வந்துடுமே?’
நான் என்னுடைய கவலையை அவசரமாய்த் தெரிவித்தேன்.
‘ஐயா, நானும் உபாசனை எல்லாம் செய்து பார்த்து விட்டேன். இதனாலெல்லாம் நான் சுத்தமான மனசுள்ளவனா ஆயிட்டேனா…. நிச்சயமா இல்லை!’
ஐயா ஆறுதலாகச் சொன்னார்.
‘கவலைப் படாதீர்கள். உபாசனையைத் தொடர்ந்து செஞ்சா, மனசு கொஞ்சம் கொஞ்சமா சுத்தமாயிடும். அது மட்டுமில்லை. மனசுல வைராக்கியம் அப்படிங்கிற பூச்சும் பூசினதாயிருக்கும். டிரைவ்-வேக்கு மெழுகு மாதிரியான பூச்சு மாதிரி. அந்தப் பூச்சுல அழுக்கு ஒட்டாது! களைகள் முளைக்காது! அப்படி உங்க மனசு டெவலெப் ஆகி வரும் போது, உங்களுக்குள்ளேயே நிறைய மாற்றங்கள் எல்லாம் வரும். சின்ன பொய் கூட ஆழமா வலிக்கும். இப்போ சரினு ஏத்துக்கிற சின்னச் சின்ன தப்புக்கள் கூட, அப்புறம் ஏத்துக்க முடியாமல் போய்டும். அதாவது, எப்படி டிரைவ்-வே மெயிண்டனஸ்-ஃப்ரீ – அதாவது பராமரிப்புத் தேவையில்லைங்கிற நிலைக்கு வந்துடுமோ, அந்த மாதிரி மனசும் சத்குணம், சத்பாவனம்னு நிறைஞ்சிடும். உறுதியும் நிலைப்படும்’.
தீபக் கேட்டார். ‘அப்புறம் எதற்கு, இந்த மாதிரி சுவாமி அலங்காரம், மந்திர பாராயணம், தீபம் இதெல்லாம்.’
‘ம்… இதெல்லாம் ஒரு கருவிகள்தான். ஒரு நொடியைக் கொடுத்துடலாம் – பஜனைப் பாட்டில் எப்பவானும் மனசைத் தொடற வேளை வரலாம்.. கடவுளோட அலங்காரத்தில, தீபாரதனை ஒளியில – எதிலேயாவது, எப்பொழுதாவது அந்த நான் எனும் ஒளி வரலாம். அந்த ஒளியினால, உங்க பக்கத்திலே உங்களை இருத்திக்கலாம். அதான் உபாசனையோட பயன். அதுக்கான உபகரணங்கள்தான் இந்த மந்திர பாராயணம், பாட்டு, பூஜை எல்லாமே…’
பாலாவும் நானும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.
நாங்கள் மாதாந்திர பஜனை வகுப்புக்கள், சத்சங்கங்கள் என அவ்வப்போது சந்தித்துக் கொள்வதுண்டு. இயந்திரத்தனமாக, துதிப்பாடல்களைப் பாடுவதுள்ளே, வேறொன்றையும் தேட வேண்டும் என எனக்கு லேசாகப் புரிந்தது.
‘ஐயா. நாங்கள் இதெல்லாம் செஞ்சுண்டு வரோம். எனக்கு நிறைய ஸ்லோகம் மனப்பாடமாத் தெரியும். சஹஸ்ரநாமா எல்லாம் நிறையத் தரம் சொல்லுவேன். ஆனால், நீங்க சொன்ன இந்த உபாசனை எனக்கென்னமோ இன்னும் கிடைக்கலை. நான் என்ன தப்புப் பண்றேன்…’
நான் தயங்கியபடியே கேட்டேன்.
ஐயா என்னை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் சொன்னார்.
‘நீங்கள் செய்வதெல்லாம் ரொம்ப நல்ல செயல்கள். தொடர்ந்து செய்யுங்கோ…. ஆனால் சரியான அணுகுமுறையோட…. சத்பாவனை ரொம்ப முக்கியம். இதைவிடவும் முக்கியமான ஒண்ணு…. அது இருக்கானு பாத்துக்கணும்…. அதான் சரணாகதி…. உண்மையான, முற்றுமான சரணாகதி இருக்கணும்.’
நான் சரணாகதி என்பது முற்றிலும் பணிதல் என்று கேட்டிருக்கிறேன்.
நான் நமஸ்காரங்களை செய்கிறேன். கடவுள் முன்னேயும் சரி, பெரியோர்களிடமும் சரி. அதுபோதாதா!. சரணாகதி என்றால் வேறு என்ன? யோசித்தேன்.
ஐயா தொடர்ந்தார்.
‘சரண் அடைதல் அப்படினா, சண்டைல தோத்துப்போயி, ஜெயிச்சவன் கால்ல விழறது அப்படினோ, பயந்துண்டு, பலசாலியா இருக்கவனுடைய கால்ல விழறது அப்படினோ நினைக்கிறது தவறு. இங்கே சரணாகதி அப்படினா, தன்னை அர்ப்பணித்தல். அந்த அர்ப்பணிப்பு, நிபந்தனை இல்லாத அன்பினாலேயும், ஆழமான நம்பிகையினாலேயும், அசைக்க முடியாத உறுதியினாலேயும்தான் நடக்கும்’.
ஐயா அஜித்தைப் பார்த்தார்.
‘இந்தக் குழந்தையைப் போல….. எப்படி காலில் அடிப்பட்டவுடனே, அப்பாதான் கதினு ஓடி வந்து, அவர் மடிலே விழுந்து, அந்த நொடியிலேயே எல்லாம் அப்பா பார்த்துப்பார்னு, கவலைப்படாம இருக்கோ, அது தான் சரணாகதி. அதுதான் முழுதான அன்பு, நம்பிக்கை, உறுதி எல்லாம். அந்த மாதிரித்தான் நம்மளோட அணுகுமுறையும் கடவுள்கிட்ட இருக்கணும். சரணாகதி அப்படிங்கிறது, நம்ம பொறுப்பு மூட்டைகளை எல்லாம் கடவுள்கிட்ட ஏத்தி விட்டுடறது….. அப்படிப் பண்ணிட்டா, நமக்கு சுமையே இல்லை. பூரணமான சுதந்திரம். அப்படி ஒரு நம்பிக்கை வரணும்’.
‘ஏன்?’
கேள்வி கேட்பது கடமை எனக் கற்றிருந்ததால், நான் கேட்டேன்.
‘ஏனென்றால், சுமைகளை இறக்கி வைத்தால்தான் விடுதலை. அந்த உண்மையான சுதந்திரத்தில்தான், நிரந்தரமான இன்பம் இருக்கு. அப்படினா, சரணாகதி ஒண்ணுதான், நிம்மதியையும், பூரண சுகத்தையும் தரும்’.
‘ஆனால், இதெல்லாம் கஷ்டம். ஏன்னா….’, தீபக் தயங்கினார்.
‘கஷ்டத்துக் காரணம் நம்மளோட கர்வம். தான் அப்படிங்கிற மமதை. இது குறையான அறிவால, நாம வளர்த்துவிட்ட தவறான நம்பிக்கை வலைகள். அப்படியே நம்மளை நாம வளர்த்து விட்டுட்டோம். இதெல்லாம் இயற்கையில நடக்கிறதுதான். இந்த அஹங்காரம்தான் நம்ம சரணாகதி பண்ணவிடாம தடுக்கிறது.’
‘இதை எப்படித் தாண்டுவது?’, பாலா கேட்டார்.
‘அதுக்கு ஒரே வழிதான் இருக்கு’
ஐயா இதற்கு ஏதேனும் மந்திரம், சடங்கு, பூஜை, விரதம் என்று ஒன்றைச் சொல்லப் போகிறார்…. ஒரு வேளை தீர்த்த யாத்திரை, கோவில் பயணம். என்னவாக இருக்கும்? நான் ஐயாவின்பதிலை எதிர்பார்த்து இருந்தேன்.
‘கடவுளுக்கெல்லாம், பூஜை செய்யும் போது, எதைக் கொடுப்பீர்கள்?’ ஐயா கேட்டார்.
‘எனக்குத் தெரியும், எனக்குத் தெரியும்!’, அஜித் தனது கையைத் தூக்கி, பதில் சொல்ல விழைந்தான்.
‘லட்டு, பாயசம், வடை, வாழைப்பழம், ஆப்பிள்…’ – அடுக்கிக் கொண்டிருந்த அஜித்தை அடக்கினார் தீபக்.
‘ஷ்… அஜித்’.
‘ஆமாம். இந்த மாதிரி நல்ல நல்ல சாப்பாடெல்லாம் சுவாமிக்கு முன்னாடி வைக்கிறோம். அதுவும், சுவாமி ஒண்ணும் சாப்பிடாதுங்கிற நம்பிக்கையிலேதான்! ஏன்னா, நாம சாப்பிட வேணுமே!’
ஐயா இப்படிச் சொல்லும்போது, கிளு கிளுவெனச் சிரித்தான் அஜித்.
‘இதெல்லாம் தப்பில்லை. நம்ம கடவுளுக்கு எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம்…. நம்மால முடிஞ்சதெல்லாம். ஆனாலும், நம்ம நமக்குப் பிடிச்ச யாருக்காவது ஒரு அன்பளிப்பு கொடுக்கணும்னா, என்ன கொடுப்போம்?’
ஐயா இன்னுமொரு கேள்வியை வைத்தார்.
‘ஓ, நல்ல விலை உயர்ந்த பொருள் ஏதாவது’ – இது சிவா.
‘ஏதேனும், அபூர்வமான பொருள்….’ – இது பாலா.
நான் சொன்னேன்.’ ஆமாம்….. ஏதாவது ஒரு பொருள்… முக்கியமா, யாருக்குக் கொடுக்கிறேனோ, அவர்கிட்ட இல்லாத ஒரு பொருள்…’
ஐயா என்னை ஆழ்ந்து பார்த்தார்.
‘நல்லது.. கடவுள்கிட்ட இல்லாத பொருள் கொடுக்கணும்னா, எது கடவுள்கிட்ட இல்லை… ஆனால் உங்ககிட்ட இருக்கு…. விலை அதிகமா, அபூர்வமா….’
இது ஐயாவின் அடுத்த கேள்வி.
யோசிச்சுப் பார்த்தோம். எப்படிக் கடவுளிடம் இல்லாத பொருள் ஒன்று இருக்க முடியும்?
ஐயாவே எங்கள் ஐயத்தைக் களைந்தார்.
‘அகங்காரம் அல்லது கர்வம்….. இது கடவுளிடம் இல்லை. சூரியனிடம் இருட்டு இல்லாதது மாதிரி. இது அவருக்கு அபூர்வமானது. நமக்கிட்ட இது இருந்தா, நம்மளோட சுகமே போயிடறதுனால, அகங்காரத்துக்கு மிகப் பெரிய விலையத்தான் நாம் கொடுத்திருக்கோம். அதனால, நம்மளோட அகங்காரத்தைத்தான் கடவுளிடம் நாம் கொடுக்க முடியும்! அவரே அதை எடுத்துக்கட்டும்.’
எங்களுக்கு ஒரு பெரிய சுமையை விட்டது போல் நிம்மதி.
கடைசியாக, கடவுளிடம் இல்லாத, கடவுளிடம் சமர்ப்பிக்க வேண்டிய சுமை ஒன்றை, நம்மிடமே இருப்பதைக் கண்டுபிடித்தவிட்ட நிம்மதி.
‘ஆனால், இதை எப்படிக் கொடுப்பது?’ சிவா கேட்டார்.
‘முன்னே சொன்ன சரணாகதிதான். அகங்காரத்தினால்தான், நான், என்னோடது அப்படிங்கிற சுயநலம் வருது. அந்த சுயநலம்தான் அறியாமையில் கிடத்திடறது. சரியான சத்பாவனை என்ன? நானல்ல, என்னுடையது அல்ல அப்படிங்கிற அணுகுமுறைதான். இதைத்தான் நாம் எப்பொழுதும் பூஜையிலே சொல்றோம்…. ஆனால் கொஞ்சமும் புரிஞ்சுக்காம!’
ஐயா ஒரு சில நொடிகள் யோசித்து விட்டுச் சொன்னார்.
‘நம: நமோ அப்படினு எல்லாம் சொல்வதன் பொருள், நானல்ல, என்னுடையதல்ல அப்படினு காட்டத்தான். நமாஸ் அல்லது நமஸ்காரம் எல்லாம் இப்படிஅகங்காரத்தை சுவாமிக்கிட்ட கொடுக்கிற செயல்கள்தான். தரையில தலையை முட்டி நமஸ்காரம் பண்றது, சில பேர் தலை மயிரை மொட்டை அடிச்சுக்கிறது – இதெல்லாமே, என்னோட ஆணவம் இப்போ எங்கிட்ட இல்லை. உனக்கே கொடுத்துட்டேன் அப்படினு காட்டத்தான். இதைப் புரிஞ்சுண்டால் ரொம்ப நல்லது’.
ஐயா நிறுத்தினார்.
நாங்கள் ஒருவிதக் களிப்பினால் உறைந்து இருந்தோம்.
பூஜை முடிந்து விட்டதால், மஹா பிரசாதம் பெற்றுக்கொள்ள வாருங்கள் என பாலாஜி உள்ளிருந்து அழைத்தார்.
நாங்கள் எழுந்தோம்.
அஜித் மட்டும் கண்களை மூடிக் கொண்டு, தீபக்கின் மடியில் கிடந்தான். அவனை தீபக் கைகளினால் மெதுவாக அழுத்தினார்.
‘எழுந்திரு அஜித் – நீ தூங்கறயா?’
அஜித் பதில் சொன்னான்.
‘இல்லை. நான் என்னைத் தேடிண்டிருக்கேன்’.
ஐயா பலமாகச் சிரித்தார். தீபக் புருவத்தை உயர்த்தி வியந்தான்.
அப்பொழுது அவருடைய ஐ-பாட், ஸ்டாக் மார்க்கெட் அறிவிப்பைத் தெரிவிக்கும் ஒலிகளை எழுப்பிக் கொண்டிருந்தது. ஆனால் தீபக் அதனைச் சிறிதும் லக்ஷியம் செய்யவில்லை.
நாங்கள் எல்லோரும் மஹா பிரஸாதம் பெறுவதற்கு உள்ளே சென்றோம்.