வேறுபடுத்து (DIFFERENTIATE)
CONVERSATION WITH AIYA (4)
ஐயாவும் ராஜீவும் என்னுடன் இருந்தார்கள். வாரநாசியில், கங்கையின் கரையோரத்தில், அனுமன்-காட் எனும் படித்துறையில் அமர்ந்து கொண்டு, அந்த ஞாயிறு மாலை, ஆம்புலன்ஸூக்காகக் காத்துக் கொண்டிருந்தோம்.
நான் என்ன நடந்தது என்று முதலில் சொல்லி விடுகிறேன்.
அலுவல் விஷயமாகப் புதுடில்லி வந்திருந்த எனக்கு, ஐயா வாரநாசியில் இருப்பதாகத் தகவல் வந்தது. அதனால், அந்த வார விடுமுறையைப் பயன்படுத்தி, அவரைச் சந்திக்கலாம் என்று நினைத்தேன். கூடவே என்னுடன் வேலை பார்க்கும் ராஜீவை அழைத்துக் கொண்டு விமானத்தில் வாரநாசி வந்தோம். வந்தவுடன் ராஜீவின் உறவினரும், வாரநாசியில் வசிக்கும் பெரிய பண்டிதருமான சர்மா அவர்களைப் பார்த்துவிட்டு, அவரையும் கூட்டிக் கொண்டு அனுமன்-காட் படித்துறைக்கு வந்தோம்.
அங்கேதான் ஐயாவைச் சந்திப்பதாக ஏற்பாடு.
மாலை 5 மணி இருக்கும். ஐயாவைப் பார்த்தோம். அவருடைய இந்தியப் பயணத்தில், வாரநாசியில் ஒரு நாள்தான் இருக்கப் போகிறார் என்பதும், அந்த நாளில், அவரை, அதுவும் வாரநாசியில் பார்க்க முடிவதும், ஒரு அதிர்ஷ்டமாகவே நான் நினைத்தேன்.
சர்மா, முதலில் கங்கையில் குளித்து விட்டு, காசி விஸ்வநாதர் கோவிலுக்குப் போய், சாயங்கால தரிசனம் செய்து விடலாம் என்று சொன்னார். ஐயா அதில் ஒன்றும் தீவிர ஆர்வம் கொண்டவராய்த் தோன்றவில்லை. அவர் படித்துறையில் நன்றாக அமர்ந்து கொண்டார்.
சர்மா, ராஜீவ், நான் மூவரும் கிடுகிடுவெனப் படிகளில் இறங்கி, கங்கையில் காலை வைத்தோம். அந்த மாலை நேரத்தில், கங்கையின் நீர் ஒரு இளஞ்சூடாகவே போய்க் கொண்டிருந்தது. ஆசை தீர, ஆனாலும் அவசர அவசரமாக சில முழுகலைச் செய்துவிட்டு, புதிய வேட்டிகளை அணிந்து கொண்டு புறப்பட்டோம்.
அப்பொழுதுதான், அந்தத் துரதிர்ஷ்டமான நிகழ்ச்சி நடந்து விட்டது.
ஒல்லியாயும், வெயிலால் கறுத்து இளைத்த உடலுமாயும், அழுக்கான ஆடையுடன் இருந்த ஒருவன், அப்படியே தள்ளாடிக் கொண்டு படிகளில் இறங்கிக் கொண்டிருந்தான். அவனுடைய கால்கள் வலுவற்று ஆடிக் கொண்டிருந்தன. குடித்திருக்க வேண்டும்! அவன் ஐயாவை நோக்கி வருவதைப் பார்த்தோம். தீடீரென்று அப்படியே சரிந்தான். சட்டென ஐயா தன்னுடைய கைகளை நீட்டி அவனைத் தாங்கிப் பிடித்தார். நானும், ராஜீவும் படிகளைத் தாவிச்சென்று, கைகளைக் கொடுத்து, அவனை அப்படியே மெதுவாகத் தரையில் சரித்தோம்.
அவன் நிச்சயமாகக் குடித்திருந்தான். உடலில் அங்கும் இங்குமாகக் காயங்கள். சேறும், புழுதியும் அப்பிய உடலும், காயங்களில் இருந்து ஒழுகும் இரத்தமுமாக அவன் பரிதாபமாகப் படுத்திருந்தான். ஒருவிதமான துர்நாற்றம் அவன் உடலிலிருந்து வந்து கொண்டிருந்தது. அவன் வேறு எங்கோ முன்னமேயே கீழே விழுந்து அடிபட்டிருக்கிறான் என்று எனக்குத் தோன்றியது.
ஐயா தன் மேல் போர்த்தியிருந்த துண்டை எடுத்து அவனுடைய நெற்றியில் இறுக்கக் கட்டி விட்டார். எனக்கு அந்த மஞ்சள் துண்டு – ஷால் – தெரியும். ஐயாவுக்கு ஒரு விழாவில் வழங்கப்பட்டது. நான் மெதுவாக அவனைத் தொட்டுப் புரட்டி, அந்தப் படியின் மேலேயே அவனது முழு உடலும் இருக்குமாறு வைத்தேன். அவன் உடலில் படிந்த சகதியும், அழுக்கும், இரத்தமும் என் கைகளிலும் படிந்தன.
சர்மா விரைவாக இரண்டு படிகள் மேலே ஏறிக் கொண்டார்.
‘ம்ம்ம்ம். குடிகாரன்.. இந்த மாதிரி ஆசாமிகளை எல்லாம் கங்கை பக்கத்திலேயே அண்ட விடக் கூடாது…. பார், உங்க மேலே என்ன பண்ணியிருக்கான்! போங்கோ, சீக்கிரமா, கங்கையில இன்னும் இரண்டு முக்கு போட்டுட்டு, வேற டிரெஸ் போட்டுண்டு வாங்கோ… இப்பவே சாயங்கால பூஜைக்கு நேரமாயிடுத்து’ என்றார் சர்மா.
ராஜீவ் அப்போதுதான், கீழே கிடந்தவனின் கால்கள் பரந்து கிடப்பதைச் சரியாக மடக்கி, ஒரு மாதிரியாக அவனைப் படுக்க வைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது, அவ்வழியே போன ஒரு நபர் ஐயாவின் பக்கத்தில் நின்றார்.
‘ம்ம். இவனா…. சுடலை! இவன் எப்பவுமே இப்படித்தான்…. பரிதாபக் கேஸ்…’
அவர் நடக்க எத்தனித்த போது, நான் நிறுத்தினேன்.
‘சார், உங்களுக்கு இவனைத் தெரியுமா?’
‘ஆமாம், ஆமாம், இவன்…’ என்று சொல்லிவிட்டு, தெற்கே திரும்பி, சற்றுத் தொலைவில் இருக்கும் மணிகர்ணிகா-காட் படித்துறையைத் தன் கையினால் சுட்டிக் காட்டினார்.
மணிகர்ணிகா படித்துறையில்தான் இறந்தோர்களின் உடல் தகனமும், இறுதிச் சடங்குகளும் நடக்கும்.
‘அங்கே…. அங்கேதான் இவனுக்கு வேலை…. வெட்டியான். பிணத்தை எல்லாம் எரிக்கிறதுதான் இவன் வேலை…. பிறந்ததிலேந்து, இதைத்தான் பண்ணிண்டு இருக்கான்…. ஆனா, எப்பப் பார்த்தாலும் குடியிலேதான் இருப்பான்… அவங்களை எல்லாம் குத்தம் சொல்லவும் முடியாது…. அங்க பாருங்க….. எந்த சமயத்திலேயும் 10-20 பிணம் எரிஞ்சுண்டேதான் இருக்கு…’
இப்படிச் சொல்லிக் கொண்டே அவர் தனது பாதையில் போய் விட்டார்.
நான் சுடலையைப் பார்த்தேன். பரிதாபம், அவன் வாழ்க்கையை வீணடிக்கிறானோ என எனக்குள் தோன்றியது.
சர்மாவுக்கோ அவசரமும், கோபமும் இருப்பது தெரிந்தது.
‘ம்ம்ம்… நினைச்சேன்… குடிகாரன் மட்டுமில்லை, சூத்ரன்…. வெட்டியான். இவனை எல்லாம் நாம தொடக்கூடாது… போங்கோ, இரண்டு பேரும் திரும்பக் குளிச்சுட்டு வாங்கோ.. திரும்பவும் அவனைத் தொடாம…. சீக்கிரம் கோவிலுக்குப் போகணும்.’
அப்படிச் சொல்லிவிட்டு, சர்மா மேலும் இரண்டு படிகளில் ஏறினார்.
ஏறியவர், சட்டென்று திரும்பி எங்களைப் பார்த்தார்.
ஐயா சுடலையின் அருகில் பேசாமல் உட்கார்ந்திருந்தார். சுடலை ஏதோ முணுமுணுத்து உளறிக் கொண்டிருந்தான்.
‘ஒரு ஆம்புலன்ஸைக் கூப்பிடுங்கள். இவனை ஆஸ்பத்திருக்கு அனுப்பணும். இவனுக்கு நிச்சயமா மருத்துவம் தேவை’ .
ஐயா இப்படிச் சொன்னவுடனே, ராஜீவ் தனது அலைபேசியில் ஆம்புலன்ஸை அழைத்தார்.
அதனுடைய வருகைக்காகத்தான் நாங்கள் அப்போது காத்துக் கொண்டிருந்தோம்.
நான் ஒரு டிஷ்யூ பேப்பரைக் கொண்டு என் மேல் படிந்திருந்த அழுக்கையும், இரத்தத்தையும் துடைத்துக் கொண்டிருந்தேன்.
அந்தப் படித்துறை வழியாகப் போய்க் கொண்டிருந்த பலரும், சுடலையின் நிலையைப் பார்த்த உடனேயே, ஏதோ கெட்ட கனவை விட்டுத் தள்ளி ஓடுவது போல, ஒதுங்கிப் போய்க் கொண்டிருந்தார்கள்.
சர்மாவுக்குப் பொறுமை போய்விட்டது.
‘சரி, நான் போகிறேன். கோவிலில் ஆர்த்தி முடியறதுக்குள்ள போகணும்… உங்களை கோவில்ல பாக்கிறேன்’.
இப்படிச் சொல்லிவிட்டு, சர்மா கிடுகிடுவென நடந்து மறைந்தார்.
‘நாம் ஆம்புலன்சுக்கு வெய்ட் பண்ணலாம். நீங்க இரண்டு பேரும் குளிச்சு, அழுக்கெல்லாம் கழுவுங்கோ’ என்றார் ஐயா.
ராஜீவும் நானும் மீண்டும் கங்கை நதியினுள் இறங்கினோம். என் மனம் மிகவும் சங்கடப்பட்டிருந்தது. மூன்று முக்குப் போட்டுவிட்டு, ஈரத்துணியிலேயே துடைத்துக் கொண்டு, மற்றொரு வேட்டியை அணிந்து கொண்டு மேலே வந்தோம்.
ஐயாவின் படியருகில் நின்றோம்.
ராஜீவ் இன்னும் கோபத்தில் இருந்தார்.
‘எனக்கு இது புரியவே இல்லை… ஏன் இந்த ஆளு இப்படிக் குடிச்சுட்டு, நம்ம முன்னாடி கீழே விழணும்… அதைவிட, இந்த 21ம் நூற்றாண்டில, எப்படி, ஒரு மனுஷனை, கீழ்த்தரமா இன்னொரு மனுஷனால நினைக்க முடியுது!’
மேலும் சொன்னார்.
‘என்ன இப்போ…. சுடுகாட்டு வேலையை ஒத்தன் செஞ்சா, அவனைத் தொடக் கூடாதா… தொட்டால், நாம் கெட்டுப் போயிடுவோமா என்ன?’
ஐயாவை நோக்கி வைக்கப்பட்ட கேள்விதான் என்றாலும், ஐயா பதில் ஒன்றும் சொல்லவில்லை.
நான் கேட்டேன்.
‘ஐயா, சர்மா சொன்னது சரியா? இவனைத் தொட்டதினால, நாம திரும்பக் குளிக்கணுமா என்ன?’
ஐயா ஒன்றும் சொல்லாமல் இருந்தார்.
‘நீங்ககூட என்னைத் திரும்பக் குளினு சொன்னீங்களே…’
நான் இப்படிக் கேட்டவுடன் என்னைப் பார்த்தார் ஐயா.
‘நான் உங்களைக் குளிக்கச் சொன்ன காரணம், உங்க இரண்டுபேர் மேலேயும் சகதியும் இரத்தமுமா ஒட்டினதுனாலேதான்…. அதனாலதான், உடம்பைக் கழுவக் குளிக்கச் சொன்னேன்…. இப்போ… இரண்டுபேரும் பளிச்சுனு ஆயாச்சே’ – இப்படிச் சொல்லிச் சிரித்தார்.
‘இல்லை ஐயா, அந்த அர்த்தத்தில் சர்மா சொல்லவில்லை. நாங்க இரண்டுபேரும், இவனைத் தொட்டதினாலேயே, எங்களோட புனிதம் குறைஞ்சு போயிடுச்சு அப்படிங்கிறதுதான் சர்மாஜியின் எண்ணம்’ – என்றார் ராஜீவ்.
‘இருக்கலாம்…. ஒருவேளை அப்படி அவர் நினைத்திருந்தால், அவரோட மனசிலதான் உண்மையிலேயே அழுக்கு இருக்கு. கங்கையில நூறு தரம் முழுகி எழுந்தாலும், அந்த அழுக்கு எப்படிப் போகும்? அதனால, அவருக்குத்தான் புனிதம் குறைஞ்சிருக்கே தவிர, உங்களுக்கு இல்லை’ – மீண்டும் சிரித்தார் ஐயா.
‘நான் இதை மாதிரி முன்னேயே கேட்டிருக்கேன். இந்துக்கள் எல்லாம் சூத்ரன் அப்படினு ஜாதி பண்ணி, சிலபேரைத் தீண்டத்தகாதவன்னு ட்ரீட் பண்றதை… இதெல்லாம் இப்போ, இந்தியாவில சட்டப்படி குற்றம்னாலும், அப்படி நடக்காமலா இருக்கு! என்னைக் கேட்டா, இதெல்லாம்தான் இந்து மதத்தின் குறைகள், பலவீன்ங்கள். ’
இப்படிச் சொல்லி ஒரு மெருமூச்சை விட்டார் ராஜீவ்.
‘ஆமாம், ஜாதிங்கிற பேர்ல, பிறப்பிலேயே இப்படி எல்லாம் வேறுபடுத்தி வைக்கிறது ரொம்ப அநியாயம். இதெல்லாம் எப்படித் தாங்கிக்கிறது!’
நானும் என பங்குக்கு, என் கோபத்தை வெளிப்படுத்தினேன்.
ஐயா எங்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தார்.
‘இல்லை…. இதெல்லாம் நீங்கள் இந்து மதம் அப்படினு சொன்ன ஸநாதன தர்மத்தில துளிக்கூட இல்லை….’
சில நொடிகள் அமைதிக்குப் பிறகு சொன்னார்.
‘கீழே உட்காருங்கள்…. இதான் பெஸ்ட் ப்ளேஸ்… இந்த விஷயத்தை விசாரிக்க, இந்த வாரநாசியைவிடச் சிறந்த இடம் எதுவுமில்லை. புனிதமான இந்த கங்கைக் கரையிலதான், இந்த மாதிரி தீண்டாமைங்கிற விவகாரம் பகவான் ஆதி சங்கரரோட வாழ்க்கையிலயும் வந்து, அதன் பலனா, பகவான் சங்கரர் மூலம், நமக்கெல்லாம் மிகப் பெரிய உண்மையும் கிடைச்சது. ஆதி சங்கரர் அவரோட சிஷ்யர் கூட்டத்தோட குளிச்சுட்டு வரும்போது, இந்த சுடலை மாதிரிதான் ஒருத்தன் அவங்களோட பாதையில வந்திருக்கான். அப்போ சிஷ்யர்கள் எல்லா, அவனைத் தள்ளிப்போ தள்ளிப்போனு கத்த, அந்த விவகாரத்தின் முடிவிலதான், சங்கரர் ஒரு பெரிய ஞானத்தைத் தந்தார். அதாவது, ஒருத்தன் வேதமெல்லாம் படிக்கிற பண்டிதனா இருந்தா என்ன, நாயைச் சமைச்சுச் சாப்பிடற புலையனா இருந்தா என்ன, அவன் எல்லா வேற்றுமைக்குள்ளேயும், ஆத்மா ஒண்ணுதான் அப்படிங்கிற உண்மையை முழுதும் உணர்ந்திருந்தான்னா, அவன் மட்டுமே நாமெல்லாம் வணங்கத்தக்க குரு அப்படிங்கிறதுதான்… மிகப் பெரிய விஷயம்.’
நான் சொன்னேன். ‘ஆமாம்… அதுதானே மனீஷா பஞ்சகம் அப்படிங்கிற பாடல்கள்!’
‘ஆமாம். நான் என்ன சொல்ல வரேனா, இந்த சுடலை நமக்கு, இதப் பத்தி யோசிக்கிறதுக்கு, இந்த கங்கைக் கரையிலேயே ஒரு வாய்ப்பைக் கொடுத்திருக்கான்னு தோண்றது. உலகத்துல, ஒண்ணுலேந்து ஒண்ணை, வேறுபடுத்துவதன் ஈர்ப்பும், இழப்பும் என்னனு நாம் எல்லாம் யோசிக்கணும்’
ஐயா சொன்னதைக் கேட்டு, நானும் ராஜீவும், ஐயாவின் அருகிலே உட்கார்ந்து கொண்டோம். ஆம்புலன்ஸ் வரும்போது வரட்டும்!
ஐயா தொடர்ந்தார்.
‘சூத்ரா அப்படிங்கிற வார்த்தைக்குப் பொருளைப் பெரும்பாலும் எல்லோரும் தப்பாத்தான் புரிஞ்ச்சுண்டிருக்கா. நம்மளோட வேதங்களில், ஸநாதன தர்மம் அங்கீகாரம் கொடுத்த சாஸ்திரங்களில்,- பிறப்பினால வேறுபடுத்து – அப்படிங்கிற நியதியோ, கருத்தோ இல்லவே இல்லை. ஜாதி அப்படிங்கிற கொள்கையோ, ஒரு இடத்திலும் இல்லை. பிறப்பை வைச்சுப் பார்க்கிற பார்வை – ஜன்ம திருஷ்டி – அப்படிங்கிற ஒரு தவறு. பிற்காலத்தில புகுத்தப்பட்ட தவறு. அதை வேதங்கள் எப்போதும் ஏற்கலை’
‘ஐயா, அப்படினா, எப்படி இந்த மாதிரி வழக்கங்கள் எல்லாம் வந்தன? நீங்க முன்னாடி சொல்லி இருக்கீங்க… வேதத்திலதான் வர்ண தர்மம் இருக்கு, அதன்படி, மனிதர்களை எல்லாம் பிரித்து ஆயமுடியும் அப்படினு எல்லாம்…. இதெல்லாம்தானே ஜாதி அப்படினு ஆகி, மிஸ்யூஸ் பண்ண ஆதாரமாய் இருக்கு?’ – இது நான்.
‘துரதிர்ஷ்டவசமா, ஆமாம், அப்படித்தான் ஆயிடுத்து. வேதமெல்லாம் படிச்ச பண்டிதன்னு சொல்லிக்கிறவங்க எல்லாம், தப்பா ஒரு கருத்தைப் புரிஞ்சுண்டு, அதனால, தப்பாவே ஒரு வழியைக் காட்டும்போது, சாதரண மக்களுக்கெல்லாம், ஒருவேளை இந்த வேதமெல்லாம் இப்படித்தான் சொல்லுதோ அப்படினு தோணும். அதனால, இந்த வேதமெல்லாம் நமக்கு வேண்டாம்பா அப்படினு ஓடிப் போய்டத்தான் தோணும். இதை எல்லாம் நாம மாத்தணும்… இந்த மாதிரி தப்பா புரிஞ்சுண்டு, தப்பா சொல்லித் தரதை எல்லாம் எதிர்க்கணும்! அப்படி எதிர்த்துத் திருத்தணும்னா, வேதமெல்லாம் வேண்டாம்னு ஓடாம, அதுல என்ன இருக்குனு ஆராய்ஞ்சு, சரியான வகையில புரிஞ்சுக்க உதவி பண்ணனும். இதுக்குத்தான் இந்தக் காலத்துல நிறைய வசதிகள் எல்லாம் இருக்கே….அதை எல்லாம் சரியாப் பயன்படுத்திக்கணும். அதுவும் இளைஞர்கள்தான் இதுக்கு பலமா இருக்கணும்.’
‘ஐயா, என்னை மாதிரி நிறையப் பேருக்கு, இந்த சம்ஸ்கிருதம் அப்புறம் வேதங்கள் பத்திய விஷயங்களை எல்லாம் படிச்சுத் தெரிஞ்சுக்கறதுக்கு வழியில்லையே? அதுக்குத்தான் தெரிஞ்சவங்களைப் பிடிச்சுக் கேள்வி கேக்குறோம்…. சரி, இந்த சூத்ரன், பிராமணன் அப்படிங்கிறதெல்லாம் எதுக்கு?’
ஐயா தொடந்தார்.
‘சம்ஸ்கிருத மொழிப்படி, சூத்ர: அப்படினா, எவன் எப்பவும் சோகத்தில் ஆழ்ந்து கிடப்பானோ, அவன் சூத்ரன் அப்படினு அர்த்தம். அப்படினா என்ன? எந்த நியமமோ, முறையோ இல்லாம, தன்னோட உடலுக்கும், மனசுக்கும் என்ன தோண்றதோ, என்ன வேணுமோ, அதை எல்லாம் நினைச்சபடி செஞ்சுண்டு இருக்கிறவன்தான் சூத்ரன். ஏன்னா, அப்படிச் செய்றவன் எல்லாம், கடைசியிலே துன்பத்திலேயே கிடப்பான் அப்படிங்கிறதாலதான்!’
‘யார் மாதிரி?’ – ராஜீவ் கேட்டார்.
‘குழந்தைகள்! எல்லாக் குழந்தைகளும் சூத்ரன்தான். ஏன்னா குழந்தைக்கு அறியாமை இருக்கு. என்ன வேணுமானாலும் எப்ப வேணுமானாலும் பண்ணும். மனுஷராப் பிறந்த எல்லாரும் ஒருகாலத்தில குழந்தை தானே. அதனாலே, நாம் எல்லாம் பிறக்கும்போது சூத்ரனாகத்தான் பிறந்திருக்கோம். எல்லோரும் சூத்ரன்தான் குழந்தையிலே. இதை முதலில் புரிஞ்சுக்கணும்.’
‘நான் இப்பவும் சூத்ரனா?’ – நான் கேட்டேன்.
‘குழந்தைகளைத் தவிர, வயதானவனும், நெறி முறைகளைப் படிக்காதவனா இருந்தால், படிச்சாலும் அதன்படி நடக்காம, தன்னோட மனசும், உடம்பும் வேணுங்கிறதுக்கெல்லாம் செஞ்சுக்கிறவான இருந்தால், அவனும் சூத்ரன்தான். அந்த மாதிரி இருக்கிறவனுக்கு அறநெறி அப்படினு ஒண்ணும் கிடையாது. உடம்புக்கும் உணர்ச்சிக்குமே எப்பவும் உணவு தேடிண்டு இருப்பவன். அப்படி இருந்தா அவனும் சூத்ரன்தான்’.
‘நான் இப்பவும் சூத்ரனா?’, நான் திரும்பவும் கேட்டேன்.
‘நமக்கெல்லாம் ஒரு கால கட்டத்தில, நம்ம பெற்றோர்கள் ஒரு குருவைக் காண்பிப்பா… அம்மா, அப்பா, ஆசிரியர்னு அவங்க மூலமா, உலகம்னா என்ன, இங்க எப்படி வாழணும் அப்படினு எல்லாம் கத்துக்க வேண்டி, ஒரு நாள் ஒரு விழா பண்ணி, இவன் இனிமேல் உலகத்துல நடந்துக்க வேண்டிய முறைகளை அறிஞ்சுப்பான் அப்படினு செய்வாங்க! கிறிஸ்தவ மதத்தில, பாப்டிஸம் அப்படிங்கிற மாதிரி… இதல்லாம் நம்ம கலாசாரத்திலயும் இருக்கு. அந்த விழா நடந்த பிறகு, சூத்ரனாக இருந்த குழந்தை, த்விஜன் அப்படினு ஆயிடும்.’
ஐயா ஒரு நிமிட அமைதிக்குப் பின் சொன்னார்.
‘சம்ஸ்கிருதத்தில த்வி அப்படினா இரண்டு, ஜன் அப்படினா பிறந்தவன். அதாவது இரண்டாவது முறை பிறந்தவன் அப்படினு…. அந்த நாள்லேர்ந்து, அவன் சூத்ரன் இல்லை. அவன் த்விஜன்… அவனுக்கு அறநெறிப் பொறுப்பு எல்லாம் இனிமெல் இருக்கு!’
ராஜீவ் கேட்டார்.
‘சரி, இதெல்லாம் சரியாத்தான் இருக்கு. ஆனால் பழக்கத்தில் அப்படி இல்லையே. சூத்ரன், வைசியன், சத்திரியன், பிராமணன் அப்படினு வர்ண தர்மத்திலேயே வேறுபாடுகள் இருக்கே….’
அப்போது மாலைச் சூரியன் சிவப்பாகி, தனது கதிர்களைக் கங்கையின் நீர்ப்பரப்பில் தெளித்துக் கொண்டிருந்தான். அவை பிரதிபலித்து, நாங்கள் அமர்ந்திருந்த படிக்கட்டுகளில் பிராகசித்துக் கொண்டிருந்தது.
ஐயா தொடர்ந்தார்.
‘வேறுபாடுகள்தான் உலகத்தில் இருக்கு. அதை எல்லாம் சிறப்பாய் பார்க்கிறதுதான் மனித வாழ்க்கையில் இயல்பு. நினைச்சுப்பாருங்க…. வேறுபாடுகளே இல்லைனா எப்படி இருக்கும்! எல்லாம் ஒண்ணாத்தான் இருக்கும்…. அதுல என்ன மகிழ்ச்சி இருக்கு! வாழ்க்கையில நாம் எப்போதும் வேறுபாடுகளைத்தான் தேடிப் பார்க்கிறோம். உண்மையிலே, வேறுபாடுகளைத் தேடிக் கண்டுபிடிச்சு, அதைத்தான் பெரிதாக் கொண்டாடுறோம். அதுதான் மனித குணம்’.
‘ஆமாம் ஐயா…. நான் என் மனைவியோட நகைக் கடைக்குப் போனாலே இது புரியும். எல்லா நகையுமே தங்கம்தான் அப்படினாலும், ஒவ்வொரு நகையாக அலசி, அலசி, துளி வேறுபாடு இருந்தாலும் பெரிசாப் பார்க்கிறதுதான் என் மனைவியோட வழக்கம்.’ – இது நான்.
‘ஆமாம். அதிலென்ன தவறு? ஒரு கட்டத்தில அதான் வாழ்க்கையிலே சந்தோஷம் தரும் விஷயம். உலகத்திலே எல்லாமே – நாம ரூப பேதம்… அதாவது பெயரிலேயும், உருவத்துலேயும் இருக்கிற வித்தியாசங்கள்தான், நாம் எல்லாம் தேடறது!’
‘ஆனால் எல்லா நகையிலயும் இருக்கிற தங்கம் ஒண்ணுதானே….’
‘ஆமாம். அது நம்ம பார்வையைப் பொறுத்தது. நாம ஒரு விஷயத்தை எப்படிப் பார்க்கிறோம், நம்ம அணுகு முறை என்ன அப்படிங்கிறதுதான் அந்த விஷயத்தைப்பத்தின அனுபவத்துக்கு ஆதாரம். நாம் ரூப வேறுபாட்டை முதன்மைப்படுத்தி ஒரு விஷயத்தைக் கவனிக்கலாம். அல்லது, அதுக்கான மூலத்தை முதன்மைப் படுத்திக் கவனிக்கலாம். இதுக்கு, காரிய-திருஷ்டி, காரண-திருஷ்டி – விளைவைப் பார்ப்பது, அல்லது மூலத்தைப் பார்ப்பது – அப்படினு பொருள். அதுவே, பின்னாடி, வேற்றுமையைக் காணும் பார்வை, ஒற்றுமையைக் காணும் பார்வை அப்படினு மாறிடும்.’
‘இது இரண்டுல எது சிறப்பு?’ என்று ராஜீவ் கேட்டார்.
‘இரண்டுமே தேவைதான். இந்த உலக வாழ்க்கையிலே நாம ஈடுபட்டிருக்கும்போது, நாமெல்லாம் வேறுபாட்டிலேதானே வாழ்கிறோம்! அதனால, வேறுபாட்டினைக் கவனிப்பது அதாவது கார்ய-திருஷ்டி அவசியம்தான்; அது இயற்கைதான். ஆனால், மாறிக் கொண்டே இருக்கும் உலக வாழ்க்கைக்கு ஆதாரமாக, நமக்குள்ளேயே ஒரு மாறாத அனுபவம் இருக்கிறது. அதுக்கு, மூலத்தைப் பார்க்கின்ற பார்வையைத்தான் நாம் துணையாய் வைச்சுக்கணும். அதாவது காரண-திருஷ்டி.’
‘அப்படினா, எல்லாத்தையும் காரிய-திருஷ்டி, காரண-திருஷ்டி அப்படினு, இரண்டு நோக்கங்களிலயும் பாக்கணும், அப்படித்தானே?’
‘கண்டிப்பா! உண்மை என்பது காரண-திருஷ்டிலேதான் விளங்கும். வெளி அனுபவம் என்பது, காரிய- திருஷ்டிலே விரியும். இரண்டு வகையாலும் பார்த்தால்தான் ஒரு பொருளைப் பத்தின முழுமையான அறிவும், அனுபவமும் நமக்குக் கிடைக்கும்’.
‘இதுக்கும், சூத்ரன் அப்படிங்கிற வழக்கத்துக்கும் என்ன சம்பந்தம்?’ என்றார் ராஜீவ்.
‘நான் முன்னேயே சொன்ன மாதிரி, நம்ம சாஸ்திரங்கள் எல்லாம் – பிறப்பால் எந்த வேறுபாட்டையும் பார் – அப்படினு சொல்லலை. ஆனால், வேற மூணு வழியில, சாஸ்திரங்களும், மனிதர்களை வேறுபடுத்து அப்படினு சொல்லி இருக்கு.’
‘எவை அவை?’
‘ஒண்ணு ஒத்தரோட குணத்தை வைச்சு வேறுபடுத்துவது. அதாவது குண-திருஷ்டி. நம்ம எல்லோருக்கும் வெவ்வேறு குணங்கள் இருக்கு. சிலர் ரொம்ப சாது, எளிமை, அஹிம்ஸாவாதி அப்படி. சிலருக்கு இயற்கையிலேயே லீடர்ஷிப் குவாலிடி இருக்கும். இந்த மாதிரி குணங்கள் எல்லாம் இயற்கையிலேயே இருக்கும். அது போலவே, நம்முடைய பயிற்சியாலயும், நடைமுறையாலயும் அமையும். இந்த குண வேறுபாடு மிகவும் அவசியம். ஏன்னா, குணத்தைப் பொறுத்துத்தான், ஒருத்தரோட வாழ்க்கை, வேலை, தொழில் இதெல்லாம் சரியா வரும். குணத்துக்கேத்த வேலை, வேலைக்கேத்த குணம் – இப்படிப் பொருத்தமா இருந்தால், எவ்வளவு நல்லது!’ என்றார் ஐயா.
‘மற்ற பார்வை?’
‘இன்னொரு பார்வை, ஒருத்தர் எடுத்துக் கொண்ட தொழில் அடிப்படையில ஒருவரை வேறுபடுத்துவது. இதுக்குப் பெயர் கர்ம-திருஷ்டி. இதெல்லாம் இந்தக் காலத்துல சரியா வராமல் இருக்கலாம். ஏன்னா, நாமெல்லாம், ஒரு நேரத்திலேயே பல வேலைகளை இப்பவெல்லாம் செய்ய வேண்டி இருக்கு. ஆனால், அந்தக் காலத்துல, சமுதாய வளர்ச்சிக்குனு, தொழிலைப் பிரிச்சு, மக்கள் அவங்க அவங்க குணம், திறமைக்கேத்த மாதிரி எடுத்துண்டாங்க’.
‘ஆமாம். மேற்கு நாட்டில் எல்லாம், பேக்கர், பட்லர், ஸ்மித், மில்லர் அப்படி எல்லாம் குடும்பப் பெயர் இருக்கே….அதெல்லாம், அந்தக் காலத்துல அவங்க குலத்தொழிலாய் இருந்தது அப்படிங்கிறது தான்.’ என்றேன் நான்.
‘ஆமாம். அப்படித்தான் ஸநாதன தர்மத்திலேயேயும், வர்ண தர்மம் அப்படினு பிரிச்சது. இதெல்லாம் விட முக்கியமான பார்வை, நம்ம ஸநாதன தர்மத்துக்கே உரித்த்தானதுதான். அதுதான் அறிவுப் பார்வை – அல்லது ஞான-திருஷ்டி. அதாவது, மனிதர்களை அவர்களது அறிவின் முதிர்ச்சியை வைத்து வேறுபடுத்துவது.’
‘ஐயா, இதைக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்’
‘சாதாரணமா, நாம பிறந்தது அனுபவிக்கத்தான். வாழ்க்கையை சந்தோஷமா அனுபவிப்போம் அப்படிங்கிறதுதான் நம்மளோட குறிக்கோள். அதுவே இயற்கை. அந்த சந்தோஷத்துக்கு, நாம பயத்தையும் துன்பத்தையும் வேண்டாம்னு தள்ளறோம். பாதுகாப்பையும், இன்பத்தையும் கொண்டானு கேட்கிறோம். இதைத்தான் சூத்ரனாய் இருக்கும் போது, எந்த ஒரு நியமும், முறையும் இல்லாமத் தேடிண்டு இருந்தோம்.’
ஐயா ஒரு நிமிடம் கண்களை மூடிக் கொண்டிருந்தார்.
‘நாம எல்லோருமே அப்படித்தான். அதுதான் முதல் படி. சூத்ரா அல்லது போகி – அனுபவிப்பவன் – அதுதான் நம்மளோட ஆரம்ப நிலை’.
‘அப்புறம்தான், நாம சரி எது, தப்பு எது எல்லாம் கத்துக்கிறோமே! சூத்ரனிலேர்ந்து, த்விஜன் அப்படினு மாறிடறோம்னு சொன்னீங்களே!’ – இது நான்.
‘ஆமாம். தர்மம் அப்படினு இருக்கு, இது நல்ல வழி, இது கெட்ட வழி என்றெல்லாம் தெரிஞ்சுண்டு, அதுக்கப்புறம் தர்மத்தின்படி நடக்கிறதுக்கு நாம முயற்சி பண்றோம். அந்த மாதிரி விஷயம் எல்லாம் தெரிஞ்சு நடக்கிற இரண்டாவது நிலையில, நாம இருந்தால், அப்போ நாம் அறப்படி நடப்பவன், விஷயம் அறிந்து நடப்பவன் – அதாவது தர்மி, அல்லது விஷயி – அப்படினு ஆயிடறோம்.’
‘நாமெல்லாம் அப்படித்தானே இருக்கோம்!’ –ராஜீவ் உறுதிப் படுத்திக் கொண்டார்.
‘ஆமாம். உலகத்திலே பெரும்பாலானவர்கள் விஷயிதான்…. முக்கால் வாசி நேரம்! ஆனால் சில சமயம், தர்மம் தவறும் போதோ, அல்லது தர்மம் எதுனு தெரியாமல் இருக்கும்போதோ, நாமெல்லாம் சூத்ரனாகவும் ஆயிடறோம்.’
‘நாம் அதுக்கு மேலேயும் போக முடியுமா?’, நான் கேட்டேன்
‘ஆமாம். இப்படியே உலகத்தில், வெளிப் பொருட்களிலேயும், விஷயத்திலேயும் இன்பத்தைத் தேடற விஷயிக்கு, ஒரு சமயத்துல, தர்மப்படி நடக்கிற காரணத்தால், மனசுக்குள்ள, இதெல்லாம் விட வேற இன்பம் இருக்கானு தோணும். நம்ம அனுபவிக்கிற சுக துக்கங்களுக்கெல்லாம் என்ன மூல காரணம்னு பார்க்கிற காரண-திருஷ்டி தோணும். உண்மை எது,பொய் எதுனு கேள்வி அவனுக்குள்ளே வந்துண்டே இருக்கும்.’
‘இதெல்லாம் ஆடோமேடிக்காக நமக்கு வருமா, எல்லோருக்கும் வருமா?’
‘ஒரு கட்டத்துல, எல்லோருக்கும் தான். தர்மத்தின் வழி நடக்கும் போது, மெதுவா, நாம செய்யற கர்மம் எல்லாம், ஒருவிதத்தில கர்ம யோகமாய் மாறிடும். இந்தக் கர்ம யோகதோட பலன்தான், மனசுக்குள்ள எது உண்மை, எது பொய் அப்படினு எழும்பற கேள்வி, அதனால வரும் எழுச்சி எல்லாம்’.
‘அதனால என்ன பயன்?’
‘அதன் பயன்தான் விவேகம். பகுத்தறிவு. எது நித்தியம், எது நிலையற்றது அப்படினு ஆராயும் அறிவு. அது வர ஆரம்பித்தவுடனே, உங்களோட வாழ்க்கையில முக்கியத்துவம் – பிரயாரிடி – மாறிடும். அற்பப் பொருள் மேல இருக்கிற ஆசை எல்லாம் போய்டும். அந்த நிலையிலே இருப்பவன் தான் விவேகி. அவனுக்குத்தான் இந்த மாதிரி விஷங்களை எல்லாம் கேட்கணும், ஆராயணும்னு தோணும்’.
‘விவேகி அப்புறம் எப்படி உயர முடியும்’
‘விவேகத்தால வரக்கூடிய முக்கிய பிரயோஜனம் – வைராக்கியம். அப்படினா, பற்றிலாத்தன்மை.’
‘பற்றிலாத்தன்மையா? அப்படினா துறவா? எல்லாத்தையும் விட்டுட்டு சந்யாஸம் எடுத்துக்கிறதா?’ – என் கேள்வியில் அவசரம் இருந்தது.
‘இல்லை, கண்டிப்பாக இல்லை. வைராக்கியம் என்பது எதையும் பற்றில்லாமலே பற்றி இருப்பது. சூத்ரன், விஷயி என்பவனுக்கெல்லாம், எல்லாத்திலேயும் அதிகமான உணர்ச்சியும், மோகமும், பற்றுமிருக்கும். அப்படி இருந்தால் என்ன ஆகும்? அதீதமான ஆசை, பற்று வந்தால், அறிவு தெளிவா இருக்காது. பற்று அப்படிங்கிறது பாசமாய் மாறி, வழுக்கி விட்டுடும். இங்கிலீஷ்ல சொன்னா எல்லாச் செயல்களிலும், you should be engaged not entangled! சிக்கல் இல்லாமல் எதிலும் ஈடுபாடு இருந்தால்தான் அதிலேர்ந்து விடுபடறது ஈஸி! அதுக்குத்தான் வைராக்யம் வேணும்.’
‘அப்படினா, அது வெறுப்புதானே?’
‘இல்லை.. வைராக்கியம்னா வெறுப்பு இல்லை. உண்மையிலேயே வைராக்கியமனா, நமக்கு ரொம்பப் பிடிச்ச பொருள் மேலேயே, பிடிப்பில்லாமல் இருக்கிறதுதான்.’
‘அது ரொம்பக் கஷ்டம்’
‘ஆமாம், வைராக்கியம் இல்லாதபோது, அது ரொம்பக் கஷ்டம்தான். அதுனாலதான், நாம படிப்படியா முன்னேறணும். இப்போ சொன்ன மாதிரி – தர்மி, விவேகி அப்படினு… இவனைப் பாருங்கோ! இந்த சுடலை, கீழே கிடக்கானே…. இவன் எவ்வளவோ சாவைப் பார்த்திருக்கான்… தினம் எவ்வளவோ உடலை எரிக்கிறான். இந்த அனுபவத்தினால, இவனுக்கு மரணத்தைப் பத்தி பயமா இருக்கும்? இருக்காதே! நம்மளே இங்க உட்கார்ந்து, மணிகர்ணிகா படித்துறையில நடக்கிறதை எல்லாம் கொஞ்ச நேரம் பார்த்தாலே, நமக்குள்ளேயே விவேகம் வந்துடுதே! கொஞ்சம் வைராக்கியமும் வருமே! அப்படிப் பார்க்கும் போது, மரணம், பயம் தராது. மரணம் அதுக்கப்புறம் ஒரு பெரிய கேள்வியா இருக்காது, வாழ்க்கைதான் ஒரு கேள்வியா மாறும்! அப்படி வைராக்கியம் வரும் போது, ஸ்வீட் சாப்பிடணும், நகை வாங்கணும்கிற விஷயங்களா மனசுல முக்கியம் பெறும், இல்லையே! அந்த சில நிமிடங்களுக்காவது, அப்படி ஒரு வைராக்கியம் வருமே. நான் என்ன சொல்றேனா, அப்படிப்பட்ட வைராக்கியத்தை, வாழ்க்கை முழுதும், எல்லா நேரத்திலேயும் நிலையாப் பிடிச்சுக்க நாமெல்லாம் வழிபண்ணிக்கணும்’ என்றார் ஐயா.
‘அதுக்கப்புறம்?’
‘அதுக்கப்புறம் வைராக்யம் அடைந்தவன் – அதாவது விராகி – அப்படினு நாம ஆயிடறோம். அப்படி ஆவதுதான் இருமுறை பிறந்தவன் எனும் பெருமைக்குப் பலன்.’
‘எல்லோராலேயும் அப்படி ஆக முடியுமா?’
‘எல்லோரும் ஆக முடியும், எல்லோரும் ஆக வேண்டும்’ – அழுத்தமாகச் சொன்னார் ஐயா.
தொடர்ந்து சொன்னார்.
‘அப்படி ஒரு வைராக்கிய சக்தி மட்டும் வந்தால், நம்மளோட ஆசைகள் எல்லாம் மெதுவா அடங்கிடும். அப்படினா என்ன? அலைபாயற மனசு அமைதியாய் இருக்க ஆரம்பிக்கும். அந்த அமைதியை அழுத்திப் பிடிச்சுண்டு, அதை இன்னும் அப்படியே டெவலப் பண்ணி, சுத்தமாயும் அமைதியாயும் மனசை வைச்சுக்க முடியறதுதான், இதோட பலன். அப்படி இருந்தால் அதுதான் அடுத்த நிலை – சாந்த: – அமைதியானவன் அப்படிங்கிற உயர்வு’.
‘ஐயா, அப்படி அமைதியடைந்தவன் யார்? அவனுக்கு என்ன அடையாளம்?’ , ராஜீவ் கேட்டார்.
‘அப்படி அமைதியானவன் எல்லோரையும் சமமாய்ப் பார்ப்பான். அவனுக்கு இருப்பது சம-திருஷ்டி – அதாவது எல்லோரிடமும் ஒற்றுமை காண்பது. ஏன்னா, அவனோட மனசுல அலைச்சல் இல்லை. அவனுக்குக் காரிய-திருஷ்டி கம்மியாயிடும். காரண-திருஷ்டிதான் முக்கியமாய் இருக்கும். அதனால, வெளியாகத் தெரியும் நாம, ரூப வேறுபாடுகளை, அவன் பெரிசா எடுத்துக்கறது இல்லை’.
‘அப்படினா, அமைதியானவர், இந்த சுடலை மாதிரியான ஆட்களையும் சமமாகப் பார்த்து, மரியாதை கொடுப்பார் இல்லையா?’
இப்படி நான் கேட்ட பொழுது, என் மனதில் சர்மாவைப் பற்றிய எண்ணம் வந்து போனது.
‘நிச்சயமாய். 100% உறுதியாய்’, சிரித்தார் ஐயா.
‘அப்படி அமைதியான மனதை அடைந்த பிறகு என்ன நடக்கும்?’
‘அப்போதான், பிராமணன் எனும் நிலையை அடைவதற்கான தகுதியே ஒருத்தனுக்கு வரும்’.
‘என்ன? புரோகிதம் பண்ணுகிற பிராமணன் மாதிரியா?’
‘இல்லை. புரோகிதம் செய்பவர் எல்லோரும் பிராமணர் என்று ஆவதில்லை. பிராமண குலம் என்று ஜாதி அடிப்படையில வழக்கத்தில் சொன்னாலும், வேதங்கள் சொல்ற பிராமணன் எனும் நிலை, வெறும் பிறப்பால் வருவதில்லை.’
‘அப்படினா பிராமணன் யார்?’
‘எவன் பார்ப்பனனாயும், பார்த்தவனாயும் இருக்கிறானோ அவனே பிராமணன். அதாவது Seekers and Seers of the Brahmam are the brahmana.’
‘பார்ப்பனன், பார்த்தவன்…. என்ன பொருள்?’
‘ஒருவனுக்கு விவேகம், வைராக்கியம், சாந்தி ஆகிய குணங்கள் வந்தவுடன், அவனுக்குக் காரிய-திருஷ்டி வெறும் உலக விவாகரங்களுக்கு மட்டுமே இருக்கும். ஆனால் உண்மையில் அவன் பார்ப்பது எல்லாம் காரண-திருஷ்டிதான். அதனால், மூலத்தை மட்டும் பார்க்கும் அவனுக்கு, எல்லா வேற்றுமைக்குள்ளும் ஒற்றுமைதான் தெரியும். அதனால், சமதிருஷ்டி- யாவும் சமம் எனப் பார்ப்பவன் அவன். அதனால் அவன் பார்ப்பனன். ‘
‘பார்த்தவன் அப்படினா?’
‘பார்ப்பனன் நல்ல குணங்களுடன் சம நோக்குடன் இருந்தாலும், அவன் இன்னும் கற்றுக் கொண்டுதான் இருக்கிறான். எல்லாம் ஒன்று என அவன் பார்த்தாலும், எல்லாவற்றுக்குள்ளும், ஒன்றாக இருப்பது என்ன என அவனால் இன்னும் உணரப்படவில்லை. அதுக்காக, தன்னோட வாழ்க்கையை மொத்தமாய், வேத அறிவுக்கும், உண்மை ஆய்வுக்கும் அவன் தியாகம் பண்ணிடுவான். அதுதான் பிராமணன் என்பதில் முதல் நிலை. வர்ண தர்மத்திலே, இதைத்தான் விப்ர: அல்லது விப்ரன் அப்படினு சொல்லி இருக்கு. ஜிஞ்ஞாசு அல்லது அறிவை விழைபவன் அப்படினும் சொல்லலாம்’.
‘பூணூல் போட்டுக்கிறது அவங்களுக்கு ஒரு அடையாளமா?’
‘நாம வெளித் தோற்றங்களை, காரிய-திருஷ்டியான வேறுபாடுகளைக் கடந்த நிலையைப் பத்திப் பேசிண்டிருக்கோம். இருந்தாலும், உங்க கேள்விக்குப் பதிலாச் சொல்லணும்னா – பூணூல் போட்டுக்கிறது பழைய காலத்துல எல்லோருக்கும் பொதுவா இருந்தது. சூத்ரன் என்பன் த்விஜன் என மாறினான் எனக் காட்டும் அடையாளமாய் பூணூல் இருந்தது.’
‘அப்படினா, பூணூல் எல்லா ஆண்களுக்கும் இருந்ததா?’
‘ஆமாம். எல்லா ஆண்கள், எல்லாப் பெண்களுக்கும் கூடத்தான். அப்படித்தான் ஒரு காலத்தில இருந்திருக்கு. அதுக்கான ஆதாரங்கள் எல்லாம் இருக்கு. ஆனா இதெல்லாம் வழக்கத்துல மாறிப் போயாச்சு. நாம புரிஞ்சுக்கணும்.. பூணூல் எல்லாம் ஒரு சிம்பல்…அடையாளம் தான். இதனோட உண்மையான அர்த்தம் எதுனு புரியாம, இதைப் போட்டுக்கிறதுனால, எந்தவிதப் பயனும் இல்லை’.
‘அடையாளத்தைத் தவிர்த்து, பூணூல் போட்டிருப்பதால் வேற என்ன பயன்?’
‘அதோட குறிக்கோளே, அதை அணிந்தவனுக்கு ஒரு அறிவைச் சுட்டிக் காட்டத்தான். த்விஜனாயோ, விப்ரனாயோ – அதாவது தர்மப்படி உலகத்தில் வாழும் மனிதனாயோ, வேதம் பயிலவும், ஒற்றுமைக்கு மூலத்தை ஆராய முயலும் மனிதானாயோ – இருக்கத்தான் இந்த நூலை நீ அணிந்திருக்கிறாய் அப்படினு அவனுக்கு எப்போவும் உணர்த்தத்தான். அவன் எப்பவும், சாந்தனாக, விவேகியாக, தர்மியாக – அவன் எந்த நிலையில் இருக்கானோ, அதற்கேற்ப உலகத்தில் நடந்துக்கணும் அப்படிங்கிறதுக்காகத்தான்.’
‘அதுக்கு அப்புறம்?’ – ராஜீவின் ஆவல் வெளிப்பட்டது.
‘இப்போ மனம் அமைதியானதுனால, அவனால் ரொம்ப சுலபமா ஃபோகஸ் பண்ண முடியும். அவனோட ஆசையும், உண்மை யினை அடைவதில் மட்டுமே அப்படிங்கிறதால, அவனுடைய மனசும், உண்மையை மட்டுமே நாடும். அந்தப் பக்குவத்திலதான், அவனால் ஜபம், தியானம், யோகம் இந்த மாதிரி பயிற்சிகளில் எல்லாம் ரொம்ப ஈஸியா ஈடுபட்டு, அதன் பலனாய் யோகி அப்படிங்கிற நிலையை அடைய முடியும். இங்கேதான் அவனுக்கு ஞான யோகத்துக்கான ஆரம்பப் படிகள் இருக்கு.’
‘அப்போ, நான் யோகா வகுப்புக்குப் போறேனே…. நான் யோகியாக முடியாதா? – ராஜீவ் ஒரு ஆதங்கத்துடன் கேட்டார்.
‘நிச்சயமா அப்படி முடியாது. நீங்கள் போகிற யோகா வகுப்பெல்லாம் மிக நல்லது. உங்களுக்கு ஒரு ஒழுக்கத்தைக் கொடுக்கும். ஆனால், நான் சொல்ற யோகம் இது வல்ல. ஞானத்திற்கு அழைத்துப் போகிற பயிற்சிதான் யோகம். யோகிதான் பிறகு ஞானியாய் ஆகிறான். அவனுக்கு வெறும் காரண-திருஷ்டிதான் இருக்கும். ஞானம் அப்படிங்கிறது, எல்லா வேற்றுமைக்குள்ளும், மாறாத சத்தியமாய், ஒற்றுமைப் படுத்துவதாய் இருக்கிற உண்மை எதுனு புரிந்து உணர்வது. அது, அவனுக்குள்ளேயும், அது போலவே எல்லோருக்குள்ளேயும் கோர்த்திருக்க ஆத்மா அப்படிங்க்கிற சத்தியம் புரியணும். அப்போதான் அவன் ஞானி. அந்த ஞானியின் பார்வையில், எல்லோரும் சமம் என்பது மாறி, எல்லோரும், எல்லாமும் ஒன்று எனும் பார்வை வந்து விடும்’.
‘அப்படினா, ஞானிக்கு, இந்த சுடலையும் தானும் வேறு இல்லைனு தோணுமா?’
‘நிச்சயமாய். உடல் தான் வேறுபடுத்துவது. உள்ளே கோர்த்திருக்கும் உயிரொளி ஒன்றுதான். அப்படி உலகத்தைப் பார்ப்பவன்தான் உண்மையில் பார்த்தவன் – ஞானி – பிராமணன்.’
‘ம்ம்ம்… அப்படினா அவனுக்கு இந்த உலகத்தில வேறுபாடுகளே கிடையாதே! அவனால் உலகத்தை அனுபவிக்க முடியாதே, ஏன்னா, உலகப் பொருட்கள் எல்லாம் வேறுபாட்டினால்தானே விளங்குகின்றன, இல்லையா’
ஐயா ஆழமாகப் பார்த்தார்.
‘ஆமாம். ஆனால் எனக்குச் சொல்லத் தெரியாது. ஞானி எப்பொழுதெல்லாம் அந்த உயர்ந்த ஞானத்தில் நிலைத்து இருக்கானோ – அப்போதெல்லாம் அவனுக்கு உலகம் என்பதே இல்லை. எல்லாம் ஒன்றாகிய ஆத்மாதான் இருப்பு. அவன் அப்படி இருப்பது தான் ஞான நிஷ்டை. சிவபெருமான் மாதிரி…… இறுதியான உறுதியான ஆனந்த நிலை. அப்படி இருப்பவன்தான் ஞான நிஷ்டன் – அல்லது ஜீவன் முக்தன் எனப்படுபவன். அதுவே மனிதர்களின் கடைசிப்படி.’
ஐயா கண்களை மூடிச் சில நிமிடங்கள் உட்கார்ந்திருந்தார்.
பிறகு சொன்னார்.
‘ஆனால் நான் யார் அதைப் பற்றிப் பேச? எனக்கு எப்படித் தெரியும்? சாஸ்திரங்கள் சொல்வது என்னவென்றால், அப்படிப்பட்ட ஜீவன் முக்தன், நிஷ்டையில் இல்லாத போது, உலகத்தில் சும்மா அலைந்து கொண்டிருப்பான். கீழேயும் கீழாக நாம் கருதுபவர்களையும், மேலேயும் மேலாக நாம் கருதுபவர்களையும் ஒரே சமநிலையில் பார்த்து, அவர்களுக்கும் பணிவிடை செய்து கொண்டிருப்பான். அவனுக்கு காரிய திருஷ்டி, காரண திருஷ்டி இரண்டும் இருந்தாலும், அவனுடைய ஞான வைராக்கியத்தினால், இதெல்லாம் அவனுக்கு முடிகிறது.’
‘ஐயா, நான் எந்த நிலையில இருக்கேனு எனக்குத் தெரியலை. எது முக்கியம்? எப்படி நான் இந்த மாதிரியான முன்னேற்றத்துக்கான வழிகளைத் தேடறது?’
இப்படிக் கேட்டுக் கொண்டே, நான் ராஜீவைப் பார்த்தேன். அவரும் மிகவும் ஆழ்ந்த பார்வையுடன் ஐயாவைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
‘இதுக்கெல்லாம் அடிப்படைத் தகுதி – சிரத்தை – அதாவது நல்ல நம்பிக்கையும், அந்த நம்பிக்கையோட சரியா, முழுமையாச் செய்யும் செயலும்தான். சிரத்தை இல்லாமல், ஒண்ணுமே நடக்காது’
இப்படிச் சொல்லிக் கொண்டே, ஐயா தனது கடிகாரத்தைப் பார்த்தார். அப்படிப் பார்த்தாலே எனக்குத் தெரியும். அவர் இனி பேச விரும்பவில்லை என்று.
சிரத்தை பற்றி, இன்னொரு நாள் அவரிடம் பேச வேண்டும்.
அந்த நேரம் சூரியன் முற்றிலும் மறைந்து விட்டான். ஆம்புலன்ஸ் வந்த பாடில்லை. ஆனால், ஒரு பெண்ணும், ஒரு சிறுவனும் எங்களை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தார்கள்.
‘சாமி….ரொம்ப நன்றி சாமி, நன்றி. இந்த ஆளு இப்படித்தான் அடிக்கடி வேலை முடிஞ்சா விழுந்து கிடக்கும்…இந்த ஊர்ல யாரும் கவனிக்க மாட்டாங்க சாமி… .நீங்க ஊருக்குப் புதுசு போல இருக்கு…. இது என் புருஷந்தான் சாமி. நான்தான் தினம், எங்க விழுந்து கிடக்குனு பார்த்து, கூட்டிக்கிட்டுப் போவேன். இங்க ஆம்புலன்ஸ் எல்லாம் வாராது சாமி…. நான் பாத்துக்கிறேன். நீ போ….’
அவளுக்கு மூச்சு வாங்கியது.
உறுதியாக நின்ற அவளது கண்கள் உலர்ந்து இருந்தன. எல்லாக் கண்ணீரையும் கங்கையிலேயே கொட்டித் தீர்த்திருப்பாள் போல் இருந்தது. எங்களை மெதுவாகத் தலை வணங்கிவிட்டுக் கூட இருந்த சிறுவனிடம் சொன்னாள்.
‘எலே….. படகை எடு…. எல்லோரையும் கூட்டிட்டுப் போ…. கங்கம்மா ஆரத்தி வரப்போகுது…. நதிக்கு நடுவுல கூட்டிப் போய்க் காமி….’
இப்படிச் சொல்லிவிட்டு, என் கையிலும், ராஜீவ் கையிலும் ஒரு பேப்பர் கவரைத் திணித்தாள்.
ஐயா சிரித்துக் கொண்டே எழுந்தார்.
‘போங்கள்…. இந்த மாலைப் பொழுதை இன்பமாய்க் கழியுங்கள். நான் லண்டனில் பார்க்கிறேன்’ – இப்படி சொல்லிவிட்டு, ஐயா படியேறி நடந்து மறைந்தார்.
சிறுவன் எங்களைக் கூப்பிட்டான். அவன் பின்னாடியே சென்ற நாங்கள், ஒரு சில நிமிடங்களில், கங்கை நதியின் நடுவில், அவனுடைய படகில் அமர்ந்திருந்தோம்.
இருளாகி விட்டது. கரையில் கங்கை ஆர்த்தி ஆரம்பமாகிவிட்டது. அப்போது ராஜீவின் அலைபேசி மணி அடித்தது. எடுத்தார். அங்கே சர்மா.
‘நல்ல வேளை , நீங்கள் எல்லாம் வரலை. இங்கே ஒரே கூட்டம். கோவிலுக்கு வெளியே பெரிய க்யூ. நான் இங்கே ருத்ரம் எல்லாம் சொல்லிண்டே நிக்கறேன். ஆனால் இன்னும் நேரம் ஆகும்னு தோண்றது. சுவாமியை தரிசனம் பண்ண முடியும்னு தோனலை. அதனால, நான் வீட்டுக்கு போறேன். ராத்தரி வீட்ல பார்க்கலாம்.’
ராஜீவ் போனை அணைத்தார். சுடலையின் மனைவி கொடுத்த கவரை நாங்கள் இருவரும் பிரித்தோம். உள்ளே, கொஞ்சம் கசங்கிய படம் – காசி விஸ்வநாத சுவாமியின் படம். சிலிர்த்தது.
நானும் ராஜீவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். அப்போது ஆரத்தி மணிகள் ஒலித்தன. கங்கா ஆரத்தி ஆரம்பமானது. ஆச்சாரியார்கள் கைகளில் பெரிய தீபங்களை எடுத்து, மேலும் கீழும், வட்டமுமாக ஆட்டி, புனித கங்கையைத் தொழுதார்கள். அந்தக் கண்கொள்ளாக் காட்சியில், தீபங்களின் ஓளிச் சிதறல், கங்கை நதியின் மேல் பரவி, நதிப் போர்வை, ஒரு நட்சத்திரப் புதையலை மறைத்து வைத்திருக்கிறதோ எனும்படியான பிரமையைத் தோற்றுவித்தன.
நான் தீப ஆராதனையைக் கவனிக்க முயன்றேன். என் கண்ணீரோ, மெல்லிய திரையாகி, அந்த ஒளிவெள்ளத்தை மறைத்தது.
மீ. ராஜகோபாலன்
13 Oct 2014