ஞானத் தாலாட்டு
ஐயாவுடன் உரையாடல் (5)
‘கிரேட் நியூஸ் ராஜா’, ராம்ஜி போனில் அழைத்தார். நான் ஐயாவுடன் காரில் பயணித்துக் கொண்டிருக்கும் போது இந்தியாவில் இருந்து போன்.
‘சொல்லுங்கள் ராம்ஜி’
‘ஸௌம்யாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அம்மாவும் குழந்தையும் நலம்.’
ராம்ஜியின் சந்தோஷம் அவரது குரலில் கொட்டிக் கிடந்தது. அதில் எனக்கும் மகிழ்ச்சிதான். என்னுடைய மகிழ்ச்சியையும், விசாரிப்புக்களையும் தெரிவித்து போனை வைத்தேன்.
ஐயா கண்களை மூடி அமர்ந்திருந்தார். இந்தியாவுக்குச் செல்ல இருக்கும் அவரை ஹீத்ரோ விமான நிலையத்தில் இறக்கி விடப் போய்க் கொண்டிருந்தேன்.
‘சந்தோஷமான விஷயம். என் மனைவியின் அக்காள் மகள்தான் சௌம்யா. சியாட்டில் நகரத்தில் இருக்கிறார். முதல் குழந்தை…. ஆச்சரியமாய் இருக்கு. சௌம்யாவே குழந்தைனு தோண்றது. குழந்தைக்குக் குழந்தை….’ நான் சொன்னேன்.
‘நல்ல செய்திதான். அதுவும் பெண் குழந்தை என்றால் சுகம்தான்.’
‘ஆம் ஐயா, எங்கள் உறவுகளில் இன்னும் சிலருக்கும் இந்த மாதிரியான சந்தோஷ சமாசாரங்கள் விரைவில் வர இருக்கிறது’, இப்படிச் சொல்லும்போது, மனதுக்குள், அக்ஷயா, தீபா, ஜெயந்த்-வித்யா, என உறவுகளை எல்லாம் நினைத்துக் கொண்டேன்.
‘கர்ப்பத்தில் சிசுவைச் சுமந்து காப்பதும், அதைத் தளிராக வளர்ப்பதும் பெரிய தெய்வீகமான விஷயம். அதனால்தான் தாய்மை மேன்மையானது. அதவும் நமது கலாசாரத்தில், தாய்மைக்குப் பெருமை மிக அதிகம்’ என்றார் ஐயா.
‘ஆமாம். கருவைச் சுமந்து இருக்கும் வயிற்றைப் போலவே, அம்மாக்களின் மனமும் சுமக்கும் போதும், பிறக்கும் போதும், முழுதும் நிறைந்துதான் இருக்கும். அப்புறம் அந்தத் தாலாட்டும், சீராட்டும்….’.
அப்போது ஐயா சொன்னார்.
‘தாலாட்டு என்பது மிகப் பெரிய பாடம், பரிசு. உங்களுக்குத் தெரியுமா?’
‘தாலாட்டு அப்படினா, தூங்க வைக்கிற பாட்டுத்தானே! பொதுவா பெண்கள் நாட்டுப்புறத்திலே பாடறதுதானே’
ஐயா சிரித்தார். ‘தாலாட்டு அப்படிச் சாதரணமான நாட்டுப்புற விஷயம் இல்லை. அது ஒரு உயர்ந்த பண்பாடு….. இப்ப எல்லாம் யாரும் தாலாட்டு பாடறதில்லையோனு தோணறது…. அது மிகப்பெரிய இழப்பு’.
‘ஏன் ஐயா? இந்த அவசர காலத்தில், அதுக்கெல்லாம் எங்கே நேரம் இருக்கு’.
ஐயா சொன்னார்.
‘அப்படிச் சொல்வது தவறு. தாலாட்டுதான் தாய்மொழி. அதுலதான் தாய், முதல் குருவாய் இருந்து குழந்தைக்குப் போதிக்கிறாள். அவளுக்கும் தாலாட்டு என்பது ஒரு போதனை, ஒரு ஆறுதல், அமைதி.’
‘எப்படி ஐயா, லுலுலாயி, ஆராரோ அப்படினு எல்லாம், ஒரு மாதிரி soothing noise பண்றதுதானே தாலாட்டு! குழந்தைகள் அந்த மாதிரி சப்தம் கேட்டு, அழுகையை நிறுத்திட்டுத் தூங்கிடும். அதுக்குபதிலா, நிறைய ம்யூசிகல் பொம்மை எல்லாம் தான் இப்போ இருக்கே’.
ஐயா என்னை ஆழ்ந்து பார்த்தார்.
‘லுலுலாயினு நாக்கை மடிச்சு ஒரு மாதிரி சப்தம் எழுப்பறது தாலாட்டுக்கு ஒரு பல்லவி மாதிரிதான். “தால்” அப்படினா, தமிழ் மொழியில “நாக்கு”. நாக்கை ஆட்டிச் செய்யற ஒலிக்குத்தான் தாலாட்டுனு பேர். இதைத் “தாராட்டு” அப்படினு மலையாளத்திலே சொல்லுவார்கள். அந்த மாதிரியான ஒலி, குழந்தையை அமைதிப்படுத்தறது என்பது உண்மைதான். ஆனால் அதோடயும் சேர்ந்து, நல்ல நல்ல கருத்துக்களை எல்லாம் பாடறதுதான் தாலாட்டு’.
நான் நினைச்சுப் பார்த்தேன்.
‘யார் அடிச்சு நீ அழற, மாமன் அடிச்சாரோ, மல்லிகைப்பூ கொண்டு வர’ அப்படினு எல்லாம் கேட்டிருக்கேன்.
ஐயா தொடர்ந்தார்.
‘ஆங்கிலத்தில lullaby, கன்னடத்தில “ஜோ ஜோ”, தெலுங்கில “உய்யாலு” அப்படினு எல்லாம் இதுக்குப் பெயர். இது ஒரு universal concept. நம்ம தமிழ் மொழியில, தாலாட்டு என்பது ஒரு இலக்கியமாகவே இருந்திருக்கு. நாயன்மார்கள், ஆழ்வார்கள் எல்லாம் கடவுளை குழந்தையாக ஆராதித்து எவ்வளவு அருமையான தாலாட்டுக்கள் பாடி இருக்காங்க தெரியுமா!’
எனக்கு ஞாபகம் வந்தது. ஆழ்வார் பாடல் ஒன்று வரும்.
‘மாணிக்கங்கட்டி வயிரம் இடைகட்டி – ஆணிப்பொன்னாற்செய்த வண்ணச் சிறு தொட்டில் – பேணியுனக்கு பிரமன் விடுத்தந்தான்- மாணிக் குறளனே, தாலேலோ’
ஐயா தொடர்ந்து சொன்னார்.
‘தமிழ்நாட்டில் பலரும் தாலாட்டை இலக்கியப் படுத்தி இருக்கிறார்கள். இறைவன் பற்றி மட்டுமில்லை. நாட்டுப்புறக் கதை, சமுதாய நீதி அப்படி எல்லாம்…. பாரதியார், பாரதிதாசன் அப்படினு… எத்தனையே அருமையான தாலாட்டு இலக்கியமே இருக்கு’.
கார் விமான நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.
‘ஐயா….. இதெல்லாம் சுவையான விஷயம்தான். ஆனால், உண்மையில் குழந்தைக்கு என்ன புரியும்? அதுக்கு ஒருமாதிரி சத்தம் வந்தால் தூங்கிடும், அல்லது முழிச்சுக்கும். இந்த மாதிரி பாட்டின் பொருள் எல்லாம் புரியுமா என்ன? அதுக்கு என்னமொழி அறிவா இருக்கு?’
ஐயா ஒரிரு நிமிடங்கள் மௌனமாக இருந்து விட்டுச் சொன்னார்.
‘நமக்கு எல்லாமே புத்தியால்தான் உணரப்படுகிறதோ? அப்படி நினைத்தால், அது மிகத் தவறான எண்ணம்.’
‘எப்படி ஐயா, ஒன்றைப் புரிந்து கொள்ள அறிவு வேண்டாமா?’
‘வேண்டும்தான். ஆனால் அறிவால் புரிந்து கொள்ள, முதலில் அதற்கான ஒன்றைப் பதிந்து கொள்ள வேண்டும் அல்லவா?’
‘ஆமாம்.’ என்றேன்.
‘பதிவு செய்வது வெறும் அறிவு அல்ல. அது மற்றொரு ஆதார சக்தி. பதிவு செய்வதை ஆராய்வதுதான் அறிவு. அப்படி ஆராய்வதை மீண்டும் வெளிப்படுத்துவதுதான் ஆற்றல். இந்த அறிவும் ஆற்றலும், வெளிப்பட, ஒரு விஷயம் முதலில் சிந்தையில் பதியப்பட வேண்டும்.’
‘அப்படினா, பதிவு செய்வதற்கு அறிவு வேண்டாமா…’
‘வேண்டும், ஆனால் அதற்குச் சரியான பெயர் உணர்வு. புலனில் உணரப்படுவதை எல்லாம், நமக்குள் விடாமல் பதிவு செய்யும் அந்த சக்தி. இது எல்லா உயிர்களுக்கும் இயற்கையிலேயே இருக்கு.’
‘அப்படினா, குழந்தை நாம பாடறதை, பேசறதை எல்லாம் பதிவு செய்துக்கும், அப்படித்தானே’.
‘நிச்சயமாகப் பதிவு செய்யும். நாம் எல்லோருக்குமே அது பொருந்தும். எப்படி ஒரு கண்ணாடியை வைச்சா, அதுல அதுக்கு முன்னாடி இருக்கிற எல்லாமே பதிவாகிற மாதிரி, நாம பார்க்கிற, கேட்கிற எல்லா விஷயங்களும், நமக்குள்ள எப்பொழு துமே பதிவாயிடும். எல்லாமுமே பதிவாயிடும்.’
ஐயா தொடர்ந்தார்.
‘ஆனால், பதிவாகிற எல்லாமும் நம்மோட சித்தத்தில இருந்தாலும், மனசில நாம எல்லாத்தையும் எடுத்துக்கிறதில்லை.’
‘மனசு வேற, சித்தம் வேறயா…’
‘அந்த ஆராய்ச்சி இப்ப வேண்டாம். இப்போதைக்கு, மனசு அப்படிங்கிற சக்தியை நம்மோட thinking/desiring faculty அதாவது எண்ணம், ஆசைகளின் களம் அப்படினு வைச்சுக்கலாம். சித்தம் அப்படிங்கிறது, பலவகையான நினைவுகளைப் பதிச்சு வைக்கிற களம்னு வைச்சுக்கலாம். சித்தம் ரொம்ப ஆழமானது. அதுல எல்லாமும் பதிஞ்சு இருக்கு. இந்தப் பிறவி மட்டுமில்லை, முன்னே வந்த பிறவி எல்லாத்திலயும் பதிஞ்ச விஷயங்கள் எல்லாம், சித்தத்தில் இருக்கு’.
‘அப்படினா, குழந்தையின் சித்தத்தில், தாலாட்டு அனுபவ உணர்வுகள் எல்லாம் பதிஞ்சுடும். ஆனால், அவை அத்தனையும் மனசுல அறியப்பட்லை, அப்படித்தானே?’
‘கரெக்ட். சித்தத்திலிருந்து சிலவற்றை மட்டும் உணர்ந்து, அதை இறக்குமதி பண்ணி, நம்மோட சொல், செயல் இவற்றில் அதனை வெளிப்படுத்தற சக்தியைத்தான் அறிவு, ஆற்றல் அப்படினு சொல்வது. ஆனால், சித்தத்தில் ஏற்றுமதி பண்ற சக்தி வேற…’.
‘அப்படி எல்லாத்தையும் பதிக்கிறதாலே என்ன பிரயோஜனம்?’
‘நிறைய….. சித்தம் நம்மோட புதையல். அதுதான் நம்மோட நிதிப் பெட்டி. அதுக்குள்ள நாம ஆழ்ந்து துழாவினா, முன்னே பதிஞ்சது எல்லாம், நம்முடைய அறிவுக்குள்ள, மனசுக்குள்ள வரும். இதெல்லாம் வேதாந்தம் காட்டி இருக்கு. இப்போ சயின்ஸ்லேயும் இதெல்லாம் நிரூபணம் ஆயிருக்கு. ஒருவரை ஹிப்னோடைஸ் அதாவது வசியத்துயிலில் வைத்து விசாரித்தால், அவர் சித்தத்தில் பதிந்த சிந்தனைகள் எல்லாம் வெளியே வருமாம். அவை பற்றி எல்லாம் அவருக்கு முன்னமேயே அறிவு ஏதும் இல்லை.’
எனக்கு வியப்பாக இருந்தது.
ஐயா சொன்னார்.
‘அதனால்தான் குழந்தைகளுடன் அம்மாக்கள் பேசும் உரையாடல்கள், பாடல்கள் எல்லாம், மொழி எதானாலும், மொழியில்லாத சப்தம் என்றாலும், குழந்தைகளின் சித்தத்தில் அவை பதிந்துவிடும். அந்த ஆரம்ப கால உணர்வுகள்தான், குழந்தைளோட நிதிப்பெட்டி. அதுக்குள்ள, அதனால் நம்ம நல்லதையே போடணும். தாலாட்டு என்பது அதுக்குத்தான்.’
விமான நிலையத்தில் நின்றது என் கார்.
ஐயா சொல்லிக் கொண்டிருந்தார்.
‘கர்ப்பத்திலே குழந்தை இருக்கும் போதே இந்தத் தாலாட்டைத் தொடங்கலாம். பிரகலாதனுக்கு அவரோட அம்மா செஞ்ச மாதிரி. ஆனாலும், தாலாட்டை நாம் தூங்க வைக்கவே பயன்படுத்திறதாலே, குழந்தைக்கு 3 அல்லது 4 மாசம் ஆனதிலேர்ந்துதான் பொதுவா தாலாட்டு பாடுறோம்.’
நான் சிந்தித்துப் பார்த்தேன்.
இந்தக் காலத்து, இளம் அம்மாக்கள், அதுவும், ஆங்கில அறிவே அதிகம் பழக்கத்திலும், உணர்விலும் கொண்டிருக்கும் அவர்களுக்குத் தமிழிலும், மற்ற மொழிகளிலும் இருக்கும் தாலாட்டு புரியுமா?
என் மன ஓட்ட்த்தை உணர்ந்தாற்போல் ஐயா சொன்னார்.
‘தாலாட்டுபுரிய வேண்டும் என்பதில்லை. அது பதிய வேண்டும். தூங்க வைப்பதுதான் தாலாட்டு என்பது ஒரு உண்மை. ஆனால் அது ஒரு விழிப்புணர்வையும் கொடுப்பது என்பது பேருண்மை. குழந்தைக்கு மட்டுமில்லை, பாடும் அம்மாவுக்கும் இந்த அனுபவப் பயன் கிடைக்கும்’.
‘சரியாகத்தான் சொன்னீர்கள் ஐயா. நான் எனக்குத் தெரிந்த இளம் மற்றும் எதிர்கால அம்மாக்களுக்கும் இதைச் சொல்கிறேன். சரி, எந்த மாதிரியான தாலாட்டைப் பாடுவது?’
‘எத்தனையோ இருக்கு. இண்டர்நெட்டில் பார்த்தாலே கிடைக்குமே! கதைகள், புராணங்கள், நீதிகள் என்று எவ்வளவோ நல்ல விஷயங்களைத் தரும் பாடல்கள் எல்லாம் தமிழ், சம்ஸ்கிருதம், கன்னடம்னு எல்லா மொழிகளிலும் இருக்கே… அதெல்லாம் பாடலாம். ஆனால் என்னை மாதிரி வேதாந்திகளைக் கேட்டால், விவேகாநந்தர் சுட்டிக் காட்டினாரே – அம்மாக்களுக்கு எல்லாம் அம்மா அப்படினு, புராணத்தில் வரும் மதாலசை அப்படிங்கிற அம்மா! அவரோட நோக்கம் ரொம்பப் பிடிக்கும். அவர் தன்னோட குழந்தையை, “நீ ஆத்மா, இறப்பில்லாதவன், சத்தியம்” அப்படிஎல்லாம் பாடியே வளர்த்தாராம். அந்த ஆழ்ந்த உண்மைகளை நாமும் நம் குழந்தை மனசுல பதிச்சு வைச்சுட்டா நல்லது. ஏன்னா, எப்படியும், “நான் யாருனு காட்டு, கண்ணைக் காட்டு, உன்னைக் காட்டு” அப்படினு எல்லாம் குழந்தைக்கு, உடல்தான் தான் அப்படினு பொய்யாக் காண்பிச்சுக் கொடுத்து, அதுக்கும் மேலே, “நீ என்ன ஆகப்போற, டாக்டரா, இஞ்சினியரா” அப்படி எல்லாம் கேட்டு, ஏதோ வேறு ஒண்ணா ஆகிடணும்னு ஒரு பயத்தையும், பொறுப்பையும் அதன் தலையில் கட்டித் திண்டாட வைக்கத்தான் போறோம். அதனால, என்றாவது அந்தக் குழந்தை தன்னோட உண்மையை உணர்ந்து ஆனந்தமா இருக்கணும்னா, அதோட நிதிப்பெட்டிக்குள்ள, சத்தான விஷயங்களைப் போட்டு வைக்கறது நல்லது. அது நம்ம கடமையும் கூட. அப்பா, அம்மாவின் பெரிய பொறுப்பே இதுதான். அதனால, அந்த மாதிரி தாலாட்டு பாடச் சொல்லு’.
சொல்லிக் கொண்டே ஐயா பெட்டியை எடுத்துக் கொண்டு இறங்கிச் சென்றதை சிறிது நேரம் பார்த்து விட்டுப் புறப்பட்டேன். மனதுக்குத் தோன்றிய வரிகளை ஒரு தாலாட்டாக எழுதிவைத்தேன். (கீழே இருப்பது).
எனக்குத் தெரிந்த சிலருக்கு மின்னஞ்சலில் அனுப்பி விடலாம். பரிசாக இல்லாவிடினும் அவர்களுக்கு இது ஒரு பாடமாகவாவது இருக்கும் என்று யோசித்துக் கொண்டே வீட்டுக்குக் காரை ஓட்டினேன்.
மீ. ராஜகோபாலன்
04 நவம்பர் 2014
ஞானத் தாலாட்டு
சீரார் சிந்தனையுள் சிவமான தற்பரமே (1)
பாட்டொலியில் தூங்கி பதவுரையில் எழுவாயே
ஆட்டுமென் உயிர்த்தூளி அன்பே ஆராரோ (2)
பொன்னே பூரணமே பொலிவே நீஎன்றும்
கண்ணே நிலையான கற்பகமே ஆராரோ (3)
உள்ளதுணர் நிறைவே ஒன்றே ஒளிமுத்தே
நல்ல துயில்பழகும் நல்லமுதே ஆராரோ (4)
கருவில் திருவாகி கைநிறையச் சுகமாகி
உருவில் ஒளியான ஒண்முத்தே ஆராரோ (5)
நந்நீர் நதிமுடிந்த நாதனோ இளநிலவு
பன்னீர் தெளித்தயரும் பாலமுதே ஆராரோ (6)
ஆயர் குலவொளியே அறுமீன் வளர்முருகே
தூய மணிவிளக்கே தூரியமே ஆராரோ (7)
சிறுகா லுதைத்துச் சிரிப்பாயே சிவானாரின்
மறுகால னுதைத்த மணிப்பதமே ஆராரோ (8)
ஆட்டுகின்ற தூளிக்குள் ஆடாத ஆத்மஒளி
கூட்டுவது காணுகையில் குறையேது ஆராரோ (9)
பூங்கா நறுவளியாய் புகுமுன்னை வாசனையாய்
நீங்காய் வினைகனித்து நிறைவுறவே ஆராரோ (10)
வல்வினையும் வலிக்காது வருவினையும் பழிக்காது
நல்விளைவே நானுணரும் நற்சுகமே ஆராரோ (11)
போர்த்த உடற்போர்வை புகுமனமும் வெறுமாயை
ஆர்த்த ஒளியான்மா ஆவாரா ராராரோ (12)
நானே நின்பெயரே நமக்கெலா மப்பெயரே
தானே தானறியும் தவத்துயிலே ஆராரோ (13)
மொட்டு மலர்தலென முகிழ்த்தவிழு ஞானமலர்ப்
பட்டுத் துணிப்பந்தே பாலமுதே ஆராரோ (14)
எவராய் வளர்ந்தாலும் எப்போதும் தன்னுள்ளே
தவறாமல் நோர்ப்பாய் தத்துவமே ஆராரோ (15)
இன்னாசை வெறுப்பு இவ்விரண்டு பூட்டுகள்
தன்னால் திறந்துடைக்கத் தக்காயே ஆராரோ (16)
அன்பால் உள்நிரப்பி அடுத்தோரைத் தானாக
கண்பால் கண்டுவளர் கற்பகமே ஆராரோ (17)
எல்லாம் இறையாக எல்லோர்க்கும் இனிதாக
நல்லாய் நீவளர்வாய் நற்பொருளே ஆராரோ (18)
- உண்மை அறிந்தவரால் உணரப்படும், சிந்தனைக்குள் சாட்சியான சிவமாகிய அமிர்தமே, குழந்தையாகவே – தூங்கு
- உயிராகிய தூளியை ஆட்டிப் பாடும் தாலாட்டின் ஒலியிலே உறங்கி, அதன் பொருளிலே விழித்து எழவே – தூங்கு.
- பொன்னே, கண்ணே, நீ பூரணம், பூரணம் தரும் கற்பகம் – தூங்கு.
- உள்ளது (சத்), உணர்வு (சித்), நிறைவு (சுகம்) என ஆகி, ஒன்றாக விளங்கும்ஒளியே, தூங்கப் பழகவே – தூங்கு.
- கர்ப்பத்தில் விளைந்து கையில் கொள்ளாத சுக முத்தே – தூங்கு.
- கங்கை முடிந்த சிவனாக, பன்னீர் தெளித்த பிறை நிலவாய்ப் பால் வடியும் அமுதமே – தூங்கு.
- ஆயர் கண்ணனாய், கார்த்திகை வளர்த்த கந்தனாய், மணி விளக்கே, துரீயம் எனும் அறிதுயிலில் – தூங்கு.
- காலனை உதைத்த சிவனைப் போல, உனது சிறு காலினை உதைத்துச் சிரித்தபடியே – தூங்கு.
- தூளி ஆடினாலும், ஆடாது நிலையாய் இருக்கும் உன்னால் என் குறை தீர்க்கிறது; தன்னை உணர் ஆத்மனே – தூங்கு.
- பூங்காவின் காற்றாய் முன் செய்த கர்ம வாசனையில், காய்த்த வினைப் பயனைக் கனித்து உதிர்க்க வந்த அழகே – தூங்கு.
- முன்வினை வருத்தாது; இனி செய்வினை கேடற்றதாகட்டும்; தன்னை ஆத்மாவாக உணர்ந்து சுகமாய் வளரவே – தூங்கு.
- உடல் ஒரு ஆடை; மனமும் வெறும் மாயை; உள்ள திகழும் ஒளியான ஆன்மாவே – தூங்கு.
- ‘நான்’ எனும் உன் பெயரே நாம் எல்லோருக்கும் உள்ள பெயர். அது “தான்” எனும் உண்மை உணர்ந்து – தூங்கு.
- மலரும் மொட்டாய், ஞானம் விளைந்து, பட்டுப் போல் – தூங்கு.
- எப்படிப்பட்ட மனிதராய் உலகில் வளர்ந்தாலும், தனக்குள் ஆத்மா என உணர்ந்து வாழவே – தூங்கு.
- விருப்பு, வெறுப்பு என இம்மாதிரி எல்லா இரட்டைப் பூட்டுக்களையும் உடைத்து வாழவே – தூங்கு.
- அன்பால் அனைவரையும் தானாகவே பார்த்து வளரவே – தூங்கு.
- யாவும் கடவுளாய்க் காணும் இனியவராய் வளரவே – தூங்கு.