கேள்விக்கென்ன பதில்
ஐயாவுடன் உரையாடல் (7)
ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் நண்பர் திரு V. ஸ்ரீநிவாசன் மின்னஞ்சலில் அனுப்பிய உரையும் கேள்வியும், எனது மனதில் இன்னும் இருந்தது. அதைப் பற்றி ஐயாவிடம் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். கடந்த ஞாயிறு அன்று காலையில், ஐயாவுடன் வாக்கிங் போகும் வாய்ப்பு கிடைத்திருந்ததால், அக்கேள்விக்கென்ன பதில் என்பது நோக்கமாகி விட்டது.
ஐயாவுடன் நானும், உமாவும் நடந்து கொண்டிருந்தோம்.
திரு ஸ்ரீநிவாசன் இண்டர்நெட்டின் மூலம் என்னுள் இறுகப் பதிந்த நண்பர். அவரை நேரில் பார்த்ததில்லையே தவிர, அவரது எழுத்தும் தொடர்பும், எனக்கு அவரை நன்றாகவே அடையாளம் காட்டியிருந்தன. என் பார்வையில், சுருக்கமாகச் சொன்னால், தன்னுடைய ‘மன’ப் பெண்ணுக்கு, சமுதாய நலம், ஆன்மீக வழி, அமுதத்தமிழ் எனும் மூன்று இழைகளையே கோர்த்துக் கோர்த்து எப்பொழுதும் தலையலங்காரம் செய்து மகிழ்பவர். ஏனெனில் அவரது மின்னஞ்சல் எல்லாம் இவை சார்ந்தவையே. இம்முறை அவர் அனுப்பியிருந்த கேள்வி இறந்தவர்களைப்பற்றிய செய்தியை எப்படி அறிவிப்பது என்பதில் விளந்த ஐயம். இதைப்பற்றி எல்லாம் யான் யோசித்ததே இல்லை!
‘ஐயா, யாராவது இறந்து போய்விட்டால், அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும் என்று சொல்வது தவறா? அப்படிச் சொல்லாமல், சிவபதம் அடைந்தார், வைகுண்டப்பதவி அடைந்தார், இயற்கை எய்தினார் என்றெல்லாம் சொல்வதுதான் சரியா? நான் இதைப்பத்தி எல்லாம் நினைச்சதே இல்லை. இப்போ என் நண்பர் கேட்ட தனால் கேட்கிறேன்’ என்றேன் நான்.
ஐயா சற்றே நின்று என்னைப் பார்த்துச் சிரித்தார். தொடர்ந்து நடந்தோம்.
‘உங்களோட கேள்விக்கு நான் எப்படிப் பதில் சொல்றது! நீங்க கேட்கிறது என்னன்னா, நமக்கே உறுதியாத் தெரியாத ஒரு விஷயத்தை, தெரிந்த மாதிரி மத்தவங்களுக்கு எப்படிச் சொல்றதுங்கிறதுதான், இல்லையா? ஒருத்தர் ஒரு இடத்தைவிட்டுப் போனார், இன்னொரு இடத்தை அடைந்தார் அப்படினு எல்லாம் சொன்னா, போற இடம் எது, அடையும் இடம் இது அப்படிங்கிற உண்மை எல்லாம் நமக்குத் தெரிஞ்சிருக்கணும். அதை விட முக்கியமா, போனது யார் அப்படிங்கிற அடையாளமும் உண்மையாத் தெரிஞ்சிருக்கணும். இதெல்லாம் நமக்குத் தெரியும்னு நினைக்கிறீங்களா?’
‘ஐயா, என்ன இப்படிக் கேட்கிறீங்க! புண்ணியம் பண்ணினா சொர்க்கம், பாவமே பண்ணியிருந்தா நரகம், இல்லேனா, உலகத்திலே மீண்டும் பிறவி, இதுக்கு இடையிலே பிதுர்லோகம் அப்படி எல்லாம் நம்ம சாஸ்திரங்களிலே எல்லாம் இருக்கே…… இறைவன் திருவடிகளில் போய்ச் சேரணும்னுதானே பக்தி இலக்கியங்கள் எல்லாம் சொல்கின்றன…. அதனால போற இடங்கள் இவைகளாய்த்தானே இருக்கணும்!’ – இப்படிச் சொன்னேன் நான்.
‘இருக்கட்டுமே, ஆனால் இறந்தவர் இப்படித்தான், இங்கேதான் போய்விட்டார் அப்படினு சொல்றது, நாம அவர்மேல வைச்சிருக்கிற அன்பினாலேயும், மற்றபடி ஒரு நம்பிக்கையினாலும்தானே….. உண்மையான அறிவினால் இல்லையே!’
‘ஆமாம் ஐயா….. வேற வழி இல்லையே…’
‘அதனாலதான் சொல்றேன், உங்களோட கேள்வி, எந்த மாதிரியான வார்த்தைகளால, இந்த அனுமான அறிவிப்பைச் செய்யலாம் அப்படிங்கிறதுதான்.’
நான் மௌனமாக இருந்தேன்.
அதுவரை மௌனமாக வந்த உமா, ‘ நமக்குத் தெரிஞ்சதை மட்டும் வைச்சுத்தான் சொல்லனும்னா – இன்னார் செத்துப்போய்ட்டார் – அப்படினு மட்டும்தான் சொல்லணும். ஆனால் அது அவ்வளவு நாகரீகமாக இல்லைதானே!’ என்றார்.
ஐயா சிரித்தார்.
‘போகும் இடம் எதுனு தெரியலை, போனது யார் அப்படினும் விளக்கமாத் தெரிஞ்சிக்கலை. ஆனா போனவரோட திசைக்கு ஒரு பொய்யை எப்படிச் சொல்றதுனு நாம விசாரிக்கிறோம்.’
சொல்லிவிட்டு கொஞ்ச நேரம் மௌனமாக நடந்தார்.
‘இந்த விசாரிப்பு அப்படியே கிடக்கட்டும். இருக்கிறதை முதல்ல புரிஞ்சுண்டா, அது இல்லைனு நமக்குத் தோணும்போது, அதுக்கு என்ன ஆச்சுனு தெளிவாக ஆராய முடியும் இல்லையா’.
ஐயா மீண்டும் உரையாடலுக்கு வந்தது நிம்மதியாக இருந்தது.
‘ஆமாம்…. அத எப்படித் தெரிஞ்சிக்கிறது?’
‘மரணம்தான் அதைப்பத்தி அறிய ஒரே வழி அப்படினு நாமெல்லாம் இருந்துட்டா, மரணம் வரும் வரைக்கும், நாம் தினமும் பயத்துல செத்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். அதனால்தான், தினசரி வாழ்க்கையிலேயே, இந்த உண்மையைப் புரிஞ்சுக்க, நமக்கு ஆழ்துயில் அப்படிங்கிற நித்தியப் பிரளயம் தினம் கிடைக்கிறது.’
‘ஆழ்ந்த தூக்கம் ஒரு மரணம் – அப்படினு ஒரு பழமொழிகூட இருக்கு’ என்றார் உமா.
‘ஆமாம். தூக்கம் என்பது என்ன அப்படினு தெரிஞ்சுக்க, வெளிவிழிப்பு என்பது என்ன அப்படினு முதல்ல தெரிஞ்சுக்கணும்.’
‘அதாவது, இந்த worldly awakeneing state …..’ – இது நான்.
‘ஆமாம். நாமெல்லாம் உலக விவகாரங்களில் ஈடுபட்டிருக்கும்போது, நாம் இருக்கிறோம் அப்படினு, ஒருத்தருக்கும் நிரூபணம் செய்யத் தேவையில்லை. ஏனென்றால், எனக்கு உடல் இருக்கிறது. அது இயங்கிக் கொண்டிருக்கிறது. இது மிகவும் வெளிப்படை. ஆனால் அந்த உடலைத்தான் “நான்” அப்படினு நாம ஒவ்வொருவரும் பொதுவா நினைச்சுண்டிருக்கோம். இருப்பினும் ஏதாவது ஒரு மரணத்தைப் பார்த்தவுடனேயே, நம்மை அறியாமலேயே நாம் எல்லோருக்கும் ஓர் உண்மை வாயினில் வந்துவிடும். அங்கே இருப்பது, வெறும் சடமான உடல், பிணம், அது அந்த நபர் அல்ல அப்படினு. அப்படினா, வெளியே தெரியும் இந்த உடல் நாமாய் இருக்க முடியாது. உடல் ஒரு அவசியமான கருவி. ஒரு பண்டம். அவ்வளவுதான். உடல் நீ இல்லை.’ என்றார் ஐயா.
‘ஆமாம். இது லாஜிக்கலா சரியாகத்தான்படுகிறது. ஆனால், உடல் இல்லாமல் நம்மால் எதையும் செய்ய முடியாதே, எதையும் அனுபவிக்க முடியாதே! எனவே உடல்தானே நம்மை முழுமையாக்குகிறது!’
‘உடல் என்பது, நமது சில அனுபவங்களுக்கு இன்றியமையாததுதான். இன் ஃபேக்ட், நாம் அனுபவிக்க ஆசைப்படும் விஷயங்களின் தன்மைக்கு ஏற்பத்தான், நமக்கு உடலும் அமைகிறது. அப்படித் தேவைக்கேற்ப உடலையும் நாம் விரும்பி அடைய முடியுமாம். அதெல்லாம் வேற தத்துவம்…. அது இப்ப வேண்டாம். நீங்கள் எதைப் புரிஞ்சுக்கணும்னா, உடல் என்பது, நமது செயல்களுக்கும், அனுபவங்களுக்கும் உதவுகிறதே ஒழிய, அது தானாகவே செய்வதோ, அனுபவிப்பதோ இல்லை. அது எப்போதும் சடமே!’
ஐயா முடிப்பதற்குள் நான் கேட்டேன். ‘உடம்பு இல்லாமல், அனுபவம் நமக்கு எப்படி வரும்?’
‘ஏன் வராது? கனவிலெல்லாம், உலகங்களையும் உயிர்களையும் தன்னுள்ளேயே படைத்து, எல்லாவித அனுபவங்களையும் நீங்கள் பெறுவதில்லையா! அங்கே வெளியுடலுக்கு வேலை இல்லை…. மனம் தானே இதனைச் செய்கிறது?’
‘ஆமாம்…’
‘அதனால்தான் மனதை அதனுடைய தன்மையாகிய எழுச்சி, நினைவு, அறிவு, அகந்தை எனும் மனம், சித்தம், புத்தி, அகங்காரம் ஆகிய உட்கருவிகளாக உணர்த்தப்பட்டு, நமக்குள் அது ஒரு மெல்லுடலாக – சூக்ஷ்ம சரீரமாக – இருக்கிறது என்று நமது சாஸ்திரங்கள் சொல்கின்றன.’
‘அதாவது, உள்ளுக்குள்ளே மெல்லுடல் அப்படினு இருக்கிறதால, நம்மால் கனவிலேயும் சுக துக்கங்களை அனுபவிக்க முடிகிறது. அதையும் உடல் அப்படினு சொன்னதாலே, எல்லா அனுபவங்களுக்கும் உடல் அவசியம் அப்படினு நான் சொன்னதும் தப்பில்லைதானே…..’ – நான் இழுத்தேன்.
சிரித்துக் கொண்டார் ஐயா.
‘அப்படியே போகட்டும். இந்த விழிப்புலக சுக துக்கங்களும், கனவுலக சுகதுக்கங்களும் முழுமையான அமைதியைத் தருகின்றனவா? இல்லையே! நல்ல அனுபவமும் சுகமும் கிடைக்கும்போதெல்லாம், கூடவே துயரமும், ஒரு திருப்தி இல்லாத தன்மையும் வருகிறதே…. இல்லையா.’
‘ஆமாம் ஐயா..’ – அவசர அவசரமாக, உமாவும் நானும் ஒப்புக்கொண்டோம்.
‘முழுமையான ஆனந்தத்தை நாம் உலகில் அனுபவிப்பதே இல்லை. அதுக்குத்தான் இறைவனடியை அடைய வேண்டுமோ? அவர் அருள் செய்தால்தானே நடக்கும்…’ – என்றார் உமா.
‘எல்லாத்துக்கும் இறைவன் மேலேயே பாரத்தைப் போட்டு விடுவதே நமக்கு சுலபமா இருக்கு, இல்லையா!. நான் இறைவனைப் பத்தி எல்லாம் பேசலை. நம்மைப் பத்தியே பேசுவோம். முழுமையான ஆனந்தம் நமக்கு நமது அனுபவத்தில் கிடைக்கிறதா, இல்லையா?’ – ஐயா கேட்டார்.
‘ஐயா, ஏதேனும் குறைகள் இருந்து கொண்டேதானே இருக்கு’
‘எப்போ?’
‘எப்போவும்தான்….. தூங்கினாலும், கெட்ட கனவுகள் வந்து துயரம் தருகிறதே’
‘ஆழ்துயிலில்…..?’
‘ஓ கே, நிம்மதியாத் தூங்கும் போது, சுகமாத்தான் இருக்கு.’
‘அப்படித் தூங்கும்போது, கவலையோ, இன்பமோ ஏது….. ஆண், பெண், பணக்காரன், ஏழை, உயர்ந்தவன், தாழ்ந்தவன் ஏது….. உலகங்கள் ஏது? சூரிய, சந்திரன் ஏது…… பிரிவுகளே இல்லாத நிலை அல்லவா அது? அப்படி ஒரு பூரண ஆனந்த அனுபவம் நமக்குத் தினம் கிடைத்துக் கொண்டுதானிருக்கிறது. ஆனால் அதை உணர்ந்து கொள்கிற ஞானம்தான் இல்லை.’
‘ஐயா….ஆனால் அங்கே மனம் இல்லையே….’
‘உண்மைதான், மனமும் லயப்பட்டு விட்டது. லயம் என்றால் ஒடுங்குதல். அழ்துயிலில் வல்லுடலும் இல்லை, மெல்லுடலும் இல்லை. அப்படியானால், எண்ணமும், செயலும், அவற்றினால் விளையும் அனுபவங்களும் இல்லை.’
‘ஆமாம்…அப்போது ஒன்றுமே இல்லை.’ என்றார் உமா.
‘ஆழ்துயிலில் இருக்கும்போது, “நீங்கள்” இருக்கிறீர்களா இல்லையா?’ – ஐயா உமாவை நோக்கித் தலையைத் திருப்பிக் கேட்டார்.
‘கண்டிப்பாக…. நான் இல்லை என்றால், செத்துவிட்டேன் என்று ஆகிவிடாதா!’
‘அப்படியானால், ஆழ்துயிலின்போது இருக்கின்ற நீங்கள், வெளியில் இருக்கும் உடலாகவோ, உள்ளில் இருக்கும் மனம் முதலிய மெல்லுடலாகவோ இருக்க முடியாது.’
‘அப்படித்தான் தோன்றுகிறது. ஆனால் ஆழ்துயில் பெரும் ஆனந்தமாய் இருக்கிறது.’ – என்றார் உமா.
‘ஆமாம். ஆழ்துயில் போரடிக்கிறது என்று யாரும் சொல்வதில்லை’ என்றேன் நான்.
ஐயா தொடர்ந்தார்.
‘ஆழ்துயில் ஆனந்தமாய் இருந்தது என்ற நினைவு மட்டும் விழித்தவுடன் வருகிறது. அது எப்படி? ஆனந்தமான நிலையில் இருந்த அனுபவத்தை யாரோ ஒருவர் சாட்சியாகப் பார்த்து, அதனை நினைவு எனும் சித்தத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். அப்போதுதான் மனம் எழும்பொழுது, அறிவினால், ஆழ்துயில் தந்த அனுபவத்தை மீண்டும் நினைவில் கொள்ள முடியும்.’
‘யார் அந்த சாட்சி?’
‘அதுதான் முக்கியமான கேள்வி. அந்த சாட்சி உடலோ மனமோ இல்லை. மேலும் அதனை, உடலின் பொறிகளாலோ, புலன்களாலோ, மனதாலோ அறிய முடியாது. வெளிவிழிப்பு, கனவு, ஆழ்துயில் என எல்லாக் கால அனுபவங்களுக்கும் அது சாட்சியாக இருப்பதால், அது எப்பொழுதும் இருப்பதாகவும் நாம் நிச்சயம் செய்துகொள்ளலாம்’ என்றார் ஐயா.
தொடர்ந்து ‘எப்பொழுதும் இருப்பது என்பதன் பொருள், அது சத்தியம். உண்மை. வடமொழியில் “சத்” என்றால் அந்த நிரந்தரமான உண்மைதான்.’ – இப்படிச் சொல்லிவிட்டு மீண்டும் சிரித்தார்.
‘ம்…. இதெல்லாம் நான் யோசிச்சதில்லை. ஒருத்தர் செத்துப் போய்ட்டார் அப்படினா…’
ஐயா குறுக்கிட்டார்.
‘அதான் கரெக்டா சொல்லிட்டீங்களே….. “செத்துப்போதல்” என்னும் தமிழ்ச் சொல்வழக்கு, உண்மையில் “சத்துப் போதல்” என்பதிலிருந்துதான் வந்திருக்க வேண்டும். “சத்” எனும் அந்த நிரந்தர சாட்சி, உடலை விட்டுப் போய்விட்டது என்பதே அதன் பொருள்.’
‘எங்கே போனது? எப்படிப் போனது? எதற்குப் போனது?’ – பட படத்துக் கேட்டது உமா.
‘நல்ல கேள்விகள்தான். முதலில் புரிந்து கொள்வோம். அந்த “சத்” போனதால், செயலும் அனுபவமும் தந்த வல்லுடல், சடமாக விழுந்து விட்டது. இதை எல்லோராலும் பார்க்க முடிகிறது அல்லவா?’
‘ஆம் ஐயா’
‘அப்படியானால் மெல்லுடலுக்கு என்ன ஆயிற்று?’
‘ம்ம்… ஐயா, மெல்லுடல் என்னாகும்?. அதைத்தான் நம்மால் பார்க்க முடியாதே? அதுவும் வல்லுடல் அழியும்போது அழிந்து விடுமா?’
‘இது ஒரு ஆழ்ந்த கேள்வி. உலக அறிவியல் எல்லாம், மனம் முதலான உட்கருவிகளால் ஆகிய மெல்லுடல் என எதுவும் கிடையாது என்றும், இதெல்லாம் மூளையின் செயலால் கிடைக்கும் சக்தி என்றும், எனவே வல்லுடல் அழிந்தால், மெல்லுடல் என எதுவும் இல்லாது அழியும், அதுவே முடிவு என்பதான கொள்கையுடனும் இருக்கிறது. ஏனெனில் அறிவியல் என்பது, வெளியறிவினால் மட்டுமே நிரூபணம் செய்ய முயல்வது. எனவே அறிவியலால், முற்றிலும் சரியான உண்மையை எப்போதும் காட்ட முடியாது.’
ஐயா மேலும் சொன்னார்.
‘மெல்லுடலுக்கு வல்லுடல் ஒரு சட்டை மாதிரிதான். வல்லுடல் விழுந்தாலும், மெல்லுடல் இருக்கும்.’
‘அப்படியானால், அது எங்கே இருக்கும்…. அதுதான் பேயா?’
‘உண்மையில் பிரேதம் என்பது அதுதான். மற்றொரு வல்லுடல் கிடைக்கும் வரை, மெல்லுடல் அலைந்து கொண்டுதானிருக்கும்.’
‘அப்படியானால், ஒரு மரணத்தின்போது, “சத்” வல்லுடலை மட்டும்தான் விட்டிருக்கிறது. மெல்லுடலுக்குள் அது இன்னும் சாட்சியாக இருக்கிறது ….. அப்படித்தானே.’ – என் கேள்வியில் பதிலுக்கான அவசரம் கொட்டிக் கிடந்தது.
‘ஆமாம். அதற்குரிய காரணம் மெல்லுடலின் ஆசைகள்தான். மெல்லுடல் இன்னும் அனுபவிக்க வேண்டிய கட்டாயங்கள்தான் அதனை வீழ்த்தாமல் தொடர்ந்து வைத்திருக்கிறது.’
‘புரியவில்லையே…’ – சற்றே குழப்பத்துடன் கேட்டேன்.
‘மனம்தான் எண்ணங்கள், நினைவுகள், அறிவு, அகந்தை என எழுந்து, “நான்” எனும் உணர்வை, வல்லுடலிலோ, மெல்லுடலிலோ நிறுத்தி, அதன் காரணத்தால், எல்லாவிதச் செயல்களையும் செய்கிறது. மனதில் எழும் ஆசைகளே செயல்களாகி, செயல்களின் பயனெல்லாம், அதன் அனுபவத்திற்காக ஒருவருக்கு வந்து கொண்டே இருக்கின்றன.’
‘அதாவது, நாம ஒண்ணை செஞ்சா அதோட பலனை அனுபவித்தே ஆகணும் அப்படிங்கிற லாஜிக். அதானே.’
நான் படித்திருக்கிறேன், Cause and Effect எனும் காரண-காரிய விதி மிகவும் அழுத்தமானது.
‘அப்படித்தான். பலனை எதிர்பார்த்துச் செய்கின்ற செயல்கள், எண்ணங்கள் எல்லாம், அதற்கான பலனை நாம் அனுபவிக்கும் வரைக்கும், நமது அனுபவத்திற்கு ஏற்ற வல்லுடலை நமக்குத் தேடிக் கொடுத்துக் கொண்டே இருக்கும்.’
‘அப்படினா….. ஒருத்தருக்கு உலகத்தில் ஏதேனும் ஆசைகள் நிறைவேறாமல் இருந்தால், செத்துப் போன பின்னாடியும், அதுக்காகவே உலகத்திலே பிறப்பாரா….?’
‘ஆமாம்….. மெல்லுடலில் சில காலம் இருந்து, மீண்டும் அனுபவங்களுக்குத் தேவையான வல்லுடல் கிடைத்ததும், அதனை எடுத்துக் கொள்கிறது. அதனாலேதான், பிறவி என்பது ஒரு தொடர் சங்கிலி என்றும், வினைகள் என்பது அனுபவங்களை விளைவிக்கின்ற விதைகள் என்றும் இந்த சட்டம்தான் “கர்ம விதி” என்று சாஸ்திரங்கள் சொல்லியிருக்கு.’
‘அப்போ, நம்ம மனசுல எப்போவும் நல்ல எண்ணங்களும், நல்ல ஆசைகளும் மட்டுமே இருந்தால், நல்ல பிறவியும், நல்ல அனுபவங்களும் மட்டுமே கிடைக்கும், இல்லையா?’
உமா ஒரு பெரு நம்பிக்கையுடன் கேட்ட கேள்வி மாதிரி எனக்குப் பட்டது.
‘கண்டிப்பாக…. இதுதான் வாழ்க்கையின் ரகசியம். இதைத்தான் வேதங்கள் “தருமம்” என்ற தலைப்பில், உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் தொடர்ச்சியான நற்பிறவிகளையும், நற்சுகங்களையும் அடைவதற்கான வழியாகக் காண்பிக்கின்றன. இதுதான் வேத ரகசியம்.’
‘இதை எல்லாம் நம்பலைனாலும், நல்ல எண்ணங்களோட இருக்கணும் அப்படிங்கிற ஒண்ணை மட்டுமே ஏத்துக் கொண்டாலே, உலகத்தில் அமைதி நிலவுமே’ – ஆதங்கத்துடன் சொன்னேன்.
‘ரொம்ப சரி. அதுதான் வேதங்களின் நோக்கம்.’
‘ஐயா…..எனக்கு ஒரு சந்தேகம். இந்த “சத்” அப்படிங்கிற சாட்சி, எப்போ மெல்லுடலையும் விட்டுப் போகும்?’
‘மிக நல்ல கேள்வி. நீங்க கேட்டதற்கு இன்னொரு அர்த்தம் என்னன்னா, மெல்லுடலின் ஆசையினால், மீண்டும் மீண்டும் பிறவிகள் வருதே, எப்படி அந்த பிறவிச் சங்கிலியையும் அறுக்கிறது அப்படிங்கிறதுதான். இல்லையா?’
‘ஆமாம் ஐயா, அப்படிப் பிறவிச் சங்கிலியை அறுத்தால், அந்த “சத்” எங்கேதான் போகும்? திரும்பவும் அது பிறவி எடுக்கணும்னா என்ன செய்யும்?’
ஐயா சிரித்தார்.
‘இப்போ “அது அது”னு சொல்லி ஒரு “சத்” இருக்குனு கேட்டீங்களே, அது எதுனு முதல்ல புரிஞ்சுக்கணும். “நான் யார்” அப்படிங்கிற கேள்வியை விடாம பிடிச்சுண்டா, ஒரு நல்ல குருவின் தயவாலே, “நான்” தான் அந்த “சத்” அப்படினு நமக்குப் புரிஞ்சுடும்.’
‘எதுக்கு குரு வேண்டும்? இதெல்லாம் நாம் படிச்சே தெரிஞ்சுக்கலாமே, இப்போதான் இண்டர்நெட்டிலே எல்லாமே கிடைக்கிறதே!’
‘ம்…. நிறைய படிச்சுத் தெரிஞ்சுக்கலாம்தான். ஆனால் முன்னேயே சொன்னபடி, சாட்சியாய் இருக்கிற “சத்”, நமது புலனறிவினாலோ, மனதாலேயோ, அறிவாலேயோ அடைய முடியாது அப்படிங்கிறதாலே, “நான்தான் சத்” அப்படிங்கிற உணர்வு – pure effulgence of consciousness – ஒரு சமயத்தில் நமக்குள் வரும்போது, “அது தான் நீ” அப்படினு சட்டுனு நமக்கு உணர்த்தத்தான் குரு என்பவர் தேவை. “அதுதான் நீ” அல்லது “தத்வமஸி” அப்படிங்கிற மஹா வாக்கியத்தின் உண்மைப் பொருளைச் சுட்டிக் காட்டுவதுதான் குருவின் கருணை.’
மனசுக்குள் பகவான் ரமணரும், பரமாச்சாரியப் பெருந்தகையும் மின்னலாய்த் தோன்றினாற்போல ஒரு மென்நினைவு.
‘ஐயா, அப்படி நம்மைப் புரிஞ்சுக்கிறதுக்கும், நாம் பிறவிச் சங்கிலியிலிருந்து விடுபடுவதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது?’
‘இதுவும் மிகச் சிறந்த கேள்விதான். மெல்லுடலில் ஏற்றி வைக்கப்பட்ட ஆசைகள் தான் அனுபவத்திற்கான செயலையும், பயனையும் விளைத்து, அதை எல்லாம் ஒரு வினைப்பலன் மூட்டையாகக் கட்டி வைத்திருக்கிறது. இந்த வினைப்பலன் மூட்டைக்கு என்ன காரணம் என்றால், “நான் சத்” எனும் உண்மை தெரியாமல், “நான் இந்த மனம், உடல்” என்றெல்லாம் அறியாமையால் அகந்தை கொண்டு வாழ்வதால்தான்.’
‘அதாவது அறியாமைதான் மூலகாரணம்.’
நான் தீர்மானமாகச் சொன்னேன்.
‘கரெக்ட். இந்த அறியாமைக்குத்தான் “அவித்யா” என்று பெயர். இந்த அறியாமையும், அதனால் விளையும் வினைமூட்டைகளும் – காரண சரீரம் – அல்லது காரணஉடல் எனும் பெயருடன், மூன்றாவது உடலாக நம்முள் பின்னிக் கிடப்பதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன.’
‘வல்லுடல் என்பது வெளியில் இருப்பது. மெல்லுடல் என்பது மனம் முதலான உள்ளுடல். காரண உடல் என்பது, இந்த உடல்களுக்கான காரணங்களைச் சுமந்திருக்கும் அறியாமை. அப்படித்தானே’.
புரிதலைச் சரிபார்த்துக் கொள்ள உமா கேட்டார் போலிருக்கிறது.
‘அது மிகவும் சரி உமா’
‘அப்படியானால், தர்மப்படி வாழ்வதால் காரண உடலில் நன்மை மட்டுமே பயனாக விளைந்து, அதன் விளைவால், நமக்கு எப்பொழுதும் நற்பிறவி கிடைக்கும். ஒருவேளை, உலகில் பிறவியே வேண்டாம் என்றால் என்ன செய்வது?’ – நான் கேட்டேன்.
‘ரொம்ப சிம்பிள், இரண்டு வழி இருக்கு.’
ஐயா இப்படிச் சொன்னவுடன் கவனமாகக் கேட்டேன். ஐயா சிம்பிள் என்று சொல்வதனால், அது ஒன்றும் எளிமையாக இருந்து விடப் போவதில்லை.
கூர்ந்து கேட்டேன்.
‘ஒண்ணு, நமது வினைப்பலன் மூட்டைக்குள் மேன்மேலும் எதுவுமே சேராமல் பார்த்துக்கொள்வதுதான். அது எப்படி முடியும்? அதற்கு இரண்டு படிகள் இருக்கின்றன. ஒன்று, பலனை எதிர்பார்க்காமல் நாம் நமது கடமைகளைச் செய்வதுவருவது. இதுக்குத்தான் “கர்ம யோகம்” அப்படினு பெயர். அப்படிச் செய்தால், செய்யும் எச்செயலாலும், பாவ புண்ணியங்கள் நம்மை ஒட்டவே ஒட்டாது. அதனால் காரணஉடல் நலிந்து போய்விடும்.’
“பலனை எதிர்பார்க்காமல் கடமைகளை மட்டும் செய்தால் போதுமா?”
‘போதாது. அதுவே முதல் படியாக இருக்க வேண்டும். அப்படிச் செய்யும்போது, இயற்கையாவே நமது மனம் சுத்தமாகிவிடும். அதைத்தான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் “சித்த-சுத்தி” அப்படினு ஸ்ரீ பகவத்கீதையில் சொல்கிறார்.’
ஒரிரு நிமிடங்களுக்குப் பிறகு ஐயா சொன்னார்.
‘அப்படிச் சுத்தமா மனதை எப்பவுமே வைச்சுக்கணுமே…. அதானே ரொம்ப கஷ்டம். அதுக்கு நமக்கு உறுதியான அறிவு, “ திட புத்தி” வேணும். அதுதான் இரண்டாவது படி. அப்படி அமைதியான மனமும் உறுதியான புத்தியும் கிடைக்கிறதுக்குத்தான் யோக சாத்திரம், பக்தி மார்க்கம் அப்படினு எல்லாம் பலவித நல்ல வழிகள் நமக்கு சாஸ்திரங்களில் இருக்கு.’
‘அப்படினா, நல்ல மனதும், பலன் எதிர்பார்க்காத செயலும், அதிலேயே திடமான அறிவையும் நிலையாக வைத்திருந்தால், காரணவுடல் என்பது நலிஞ்சுபோய், வினை மூட்டைகள் எல்லாம் தீர்ந்து போய்டும். அப்படித்தானே?. அப்போ, மெல்லுடலுக்கு மேலும் மேலும் உடல் எடுக்க வேண்டிய அவசியம் எதுவும் இருக்காமல், அதுவும் விழுந்துடும்’
இப்படிச் சொல்லிவிட்டுக் கேட்டேன், ‘ஐயா, அப்படினா, அந்த “சத்”’ எங்கேதான் போகும்?’
‘அந்த “சத்” எங்கே போகும்னு பார்க்கறதுக்கு முன்னாடி, இரண்டு வழினு சொன்னீங்களே…. இரண்டாவது வழி என்ன? ‘ – உமா ஞாபகப்படுத்தினார்.
‘இரண்டாவது வழிதான் ஞான மார்க்கம். இதை மார்க்கம்னு சொல்றதுகூட சரியில்லை. ஏன்னா ஞானம் என்பது பாதை இல்லை. அதுவே குறிக்கோள். அதாவது, “சத்” என்பதே நான். அப்படிங்கிற உண்மையை – இதுதான் ஆத்ம ஞானம் – உணர்ந்துவிட்டால், அதன் பெரும் ஜோதியில் நமது அறியாமை எனும் இருள் மறைஞ்சு போய்விடும். அதன் நெருப்பில், நமது வினை மூட்டைகள் எல்லாமும் எரிஞ்சு போய்விடும். அதாவது காரணஉடல் முற்றிலும் காலி. அப்படியானவனுக்குள், வெறும் சத்தாகவும், அதை உணர்ந்திருக்கும் ஞானம் அல்லது சித்தாகவும், முழுமையான ஆனந்தமாகவும் – அதாவது “சச்சிதானந்தம்” என்றபடி அது விளங்கும். அப்படிப்பட்டவருக்குத்தான் “ஜீவன் முக்தர்” அப்படினு பெயர்.’
‘அப்போ, அந்த ஜீவன் முக்தருடைய வல்லுடல், மெல்லுடல் எல்லாம் என்ன ஆகும்?’
‘காரணஉடல் எரிந்து போய் விட்டாலும், தற்போதிருக்கும் மெல்லுடலுக்கும், வல்லுடலுக்கும் காரணமாய், பலனைக் கொடுத்துக் கொண்டிருக்கும் முன்வினையின் ஒரு பகுதி – அதுதான் “பிராரப்த கர்மம்” என்பது – அது ஓயும் வரை, மெல்லுடலையும் வல்லுடலையும் வைத்திருக்கும். எனினும், ஜீவன் முக்தரின் மெல்லுடல், தூய்மையாய் வெறும் சாட்சியாய் மட்டுமே இருக்கும். அவருடைய வல்லுடல் தேய்ந்து கொண்டே இருந்து, பிராரப்த கர்மத்தின் பலனால் அனுபவிக்க வேண்டியவற்றை எல்லாம் வல்லுடலில் வாங்கிக்கொண்டு இருக்கும். பின் ஒருநாள் அதுவும் விழுந்து விடும்.’
‘ஐயா, “சத்” எங்கே போகிறதுனு சொல்லவே இல்லையே…..’ – நான் முன்பு கேட்ட கேள்விக்கே திரும்பினேன்.
‘அது எங்கேயும் போகாது…. அதனால் போகமுடியாது.’
‘ஏன்?’
‘ஏனென்றால், போக்கும் வரவும் இல்லாப் பொருள் அது. இடைவெளி இன்றி எல்லா இடத்திலும் இறைந்து கிடப்பது அது.’
‘இறைந்து கிடக்கிறது என்றால், omnipresent. அதானே’ – கேட்டேன்.
‘ஆமாம். அதனாலே தான் அதற்கு “இறைவன்” அப்படினு ஒரு பேர்.’
‘ஓ, மனசைக் கடந்து உள்ளே இருப்பதால் அது “கடவுள்”. அதுவே எல்லா இடத்திலும் இறைஞ்சு கிடப்பதால் “இறைவன்”. அப்படித்தானே’ – நான் மகிழ்வுடன் கேட்டேன்.
‘ஆமாம். “இறந்து போய்விட்டார்” என்று தமிழில் சொல்வதுகூட ஒருவேளை “இறைந்து போய்விட்டார்” என்ற பொருளிலேயே இருந்திருக்க வேண்டும். அதாவது, சத், எல்லா இடத்திலும் இறைந்து கிடக்கிறது.’
‘இதெல்லாம் ஏன் எல்லோருக்கும் புரியும்படி யாரும் சொல்லித் தருவதில்லை!’
உமாவின் கேள்வியின் ஆதங்கம் எனக்கும் புரிந்தது.
‘எது புரிய வேண்டுமோ அது புரியவேண்டிய காலத்தில் புரியும். ஆனால், எல்லா உண்மைகளின் உதாரணமாகத்தான் நமது சாஸ்திர சம்பிரதாயங்கள் எல்லாம் இருக்கின்றன. நாம்தான், நம்பிக்கையும், பண்பும் பூத்த கேள்விகளைக் கேட்டுப் பொருள் காண வேண்டும். நீங்கள் பார்த்திருக்கலாம்…. சில வழக்கங்களில், இறுதிச் சடங்கு செய்யும் மகன், நீர் ஒழுகும் ஓட்டைப் பானையைச் சுமந்து சுற்றி வந்து, போட்டு உடைப்பான். இதற்கு இப்படியும் நாம் பொருள் கொள்ளலாம்’.
ஐயா என்ன சொல்லப் போகிறார் எனக் கவனமாகப் பார்த்தேன்.
‘சலனங்கள் உடைய நீர்தான் மனமாகிய மெல்லுடல். மண்பானைதான் வல்லுடல். அப்பானைக்குள் நிரவி இருக்கும் வெற்றிடம்தான் “‘ஸ்த்” ஆகிய ஆத்மா. மரணத்தையே மாயை விலக்கும் விளக்கமாகவும், வீழ்ந்த உடலையே குருவாகவும் எண்ணி, அதனைச் சுற்றிவரும்போது, பொத்துவிட்ட பானையின் நீர் கொட்டித் தீர்ப்பதுபோல், தனது மெல்லுடல், காரணவுடற் சுமைகளை எல்லாம் கொட்டித் தீர்ப்பதற்கு, அந்த மகனும், அதனைப் பார்க்கும் மனிதர்களும், உறுதி கொள்ள வேண்டும். பானையைப் போட்டு உடைக்கின்ற செயல், இம்மூன்று உடற்கூறுகளும் அழியக்கூடியன எனக் காட்டத்தான். அப்படிப் பானை உடைந்தால், அதில் இருந்த வெற்றிடமாகிய “வெளி”, பரவியிருக்கும் “பரவெளியில்” பிரிவின்றிக் கலந்து விடுகிறது. அப்படியே, “சத்” ஆகிய ஆத்மா, பரமாத்மாவுடன் கலந்து விடுகிறது. அதுவே பூரணம்.’
ஐயா இப்படிச் சொல்லிவிட்டு, வீட்டை நோக்கித் திரும்பவும் நடக்கத் தொடங்கினார்.
என்ன காரணத்தாலோ, அவரைவிட்டுச் சில அடிகள் பின்னாலேயே நாங்கள் நடந்தோம்.
வழக்கத்துக்கு மாறாக, அன்று நாங்கள் வெகுதூரம் நடந்திருக்கிறோம். பெரிதான வாழ்க்கைப் பயணத்தைப் பற்றி நினைத்துப் பார்த்தால், இந்நடைப்பயணம் மிகச் சிறிதுதான். ஆனாலும் இதில் கற்றுக் கொண்ட பாடம் மிகவும் அரிதென நான் நினைத்தேன்.
முதலில் கேட்ட திரு V. ஸ்ரீநிவாசனின் கேள்விக்குத் தீர்மானமான பதிலை, ஐயா இன்னும் எனக்குத் தந்திருக்கவில்லை. எனக்கும் அக்கேள்வியிலோ, பதிலிலோ, ஆர்வம் இனி இருக்கப் போவதாகத் தெரியவில்லை.
மௌனமாக நடந்து கொண்டிருந்தோம்.