08-விதியை வெல்க

விதியை வெல்க

ஐயாவுடன் உரையாடல் (8)

(Read in ENGLISH)

 

நாங்கள் காவிரியாற்றின் கரையோரத்தில் அமர்ந்து, நதியில் குதித்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.  ஆற்றில் நீர் முழுமையாக இல்லை என்றாலும், நீரின் வேகத்தைத் தூரத்திலிருந்தே பார்க்க முடிந்தது. அதில் விழுந்த இலைகளும், மரக்கிளைகளும், விழுந்த கணத்திலேயே, சுழன்று கொண்டு அலைகளால் சுமந்து இழுத்துச் செல்லப்படுவதைக் காண முடிந்தது. சிறுவர்களின் ஆர்ப்பாட்டமும், அவர்கள் நீரில் குதிக்கும்போது எழும் சப்தமும், எங்கும் ஒரு சந்தோஷ ஆரவாரத்தைப் பரப்பிக் கொண்டிருந்தன.  நான் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு சிலர் நதியின் ஓட்டத்தை எதிர்த்து நீந்திக் கொண்டிருந்தனர். சிலர் வெறுமனே மிதந்து கொண்டு நதியின் போக்கிலேயே போய்க் கொண்டிருந்தார்கள். நதித்துறை எங்கும் சந்தோஷம் பரவிக் கிடந்தது.

கரையில் இருந்த ஒரு பழைய படிக்கட்டில் நானும் ஐயாவும் அமர்ந்திருந்தோம்.  என்னுடைய சகோதரியின் மகன் ஆனந்த் எங்களுடன் இருந்தார். ஆனந்த் சுயமாகத் தொழில் தொடங்க பெரும் முயற்சி செய்து கொண்டிருக்கும் இளைஞர்.  இன்னும் சரியான திருப்பம் வரவில்லை என்றாலும், அவருடைய விடாமுயற்சியினால், ஒரு நல்ல வாய்ப்பு விரைவில் மலரும் என உறுதியாகவே படுகிறது.

நான் திருச்சிக்கு வரும்போதெல்லாம், காவிரி ஆற்றின் கரையோரமாக நடப்பதை விடுவதேயில்லை.  எனக்கு அது அப்படி ஒரு சந்தோஷத்தைத் தருவது. அதிலும் குறிப்பாக ஒரு சில ஆற்றோரப் பாதைகள்  அழகாயும், அமைதியைத் தருவதாயுமிருப்பதை நான் கண்டு வைத்துள்ளேன்.

ஒரு பக்கம் அகண்ட காவிரியின் அழகு. மற்றொரு பக்கம் பச்சைப் பசேலெனப் பரந்த வயல்கள். நெல்லும், கரும்பும், வாழையும் வளர்ந்து கிடக்கும் செழிப்பான பூமி. எப்போதும் அந்த நிலம் ஈரமாகவும், வளமையாகவுமே இருக்கும். பல வண்ணப்  பறவைகளும், பட்டாம்பூச்சிகளும்  கரையோரங்களில் கலகலத்துக் கொண்டேயிருக்கும்.   உயரமானதும், நேரானதும்,  ஒரு சில கோணலாதுமான தென்னை மரங்கள், ஏதோ நதியின் ஓட்டத்தைப் பரிசீலிக்க வந்த காவலர்கள் போல கரையிலே நிற்கின்றன.

அந்தப் பெரிய ஆலமரம், தன் விழுதுகளால் காவிரித் தாயை வருடிக் கொண்டு, தனது குளிர்ந்த நிழலைத் தாரளமாகப் பரவிக் கொண்டு எத்தனையோ காலமாக நின்று கொண்டு இருக்கிறது. அந்த நிழலை வருவோரும் போவோரும், ஒரு தற்காலிக ஓய்வில்லமாக எண்ணி, உட்கார்ந்து விட்டுப் போவது வழக்கம்.  மரத்தின் அடிவாரத்தில், தனியாக, அழகாக ஒரு பிள்ளையார் சிலை இருக்கும்.  இலையும் மலரும் சருகும் தன்மேல் வர்ஷிப்பதை ரசித்தபடியே அப்பெருமான் அங்கே ஆனந்தமாக வீற்றிருக்கிறார். அதனாலேயே அந்த இடமும், அதை ஒட்டிய குறுகிய நதியோரப் பாதையும் மனதை அமைதிப்படுத்துவதாகவே இருக்கிறது.

ஐயாவை திருச்சியில் நான் பார்த்தது ஒரு அரிய வாய்ப்பு.  அவருடன் சிறிது நேரம் கரையோரம் நடந்து விட்டு, அந்தப் படித்துறையில் அமர்ந்து கொண்டோம்.  மாலைக் காற்று முகத்தை வருடிக் கொண்டிருக்க, வெறுமனே, உலகத்தை சாட்சியாகப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தோம்.

பள்ளி நாட்களில் நான் காவிரி ஆற்றின் குறுக்கே பலமுறை நீந்திக் கடந்து விளையாடியிருக்கிறேன். பயமென்று அப்போதெல்லாம்  எதுவும் இல்லை. அதை நினைவுபடுத்துவதுபோல் ஆனந்த் கேட்டார்.

“மாமா, ஆர் யூ கேம்?”

தலையை ஆட்டினேன். “இல்லை ஆனந்த்…. இப்போல்லாம் முன்ன மாதிரி இல்லை.  நீ போய்க் குளி”

எனக்கும் நீந்த ஆசை இருந்தாலும், போகவில்லை.

ஐயாவும் நானும் ஆனந்த் போவதைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.   ஆனந்த் நன்றாக நீந்தக் கூடியவர் என்பது எனக்குத் தெரியும்.  ஆனால் மெதுவாக நதியில் இறங்கி கரையோரமாய் கைகளால் அளவிக்கொண்டிருந்தார்.  ஒருவேளை வயதின் முதிர்ச்சி, அவரையும் நிதானப்படுத்தி விட்டதோ  என நினைத்தேன்.

ஐயாவிடம் நதியில் இருக்கும் ஆனந்தைச் சுட்டிக் காட்டி, “ஐயா, பல வகையிலும் சுயமாத் தொழில் செய்ய முயற்சி எடுத்தும், இன்னும் ஒரு சரியான திருப்பம் இல்லாமல் இருக்கிற இளைஞன்தான் இவர். என்ன காரணமோ தெரியவில்லை. எவ்வளவுதான் முயன்றாலும் வெற்றி, நல்ல திருப்பம் வரவில்லையென்றால் அதற்கு என்ன அர்த்தம்?  இதை விதினு எடுத்துக்க முடியுமா என்ன?”

ஐயா நான் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தாலும், நதியை சுட்டிக் காட்டிக் கொண்டிருந்தார்.

“அங்கே பாருங்கள் அந்தச் சிறுவனை.  அவன் நதியை எதிர்த்து நீந்த முடியாமல் தவிக்கிறான்.”

பார்த்தேன்.

ஒரு பெரியவர் அச்சிறுவனைக் கையைப் பிடித்து இழுத்துக் கரையில் ஏற்றினார்.  அவனோ சிறிதும் கவலைப் பட்டவனாகத் தெரியவில்லை.  மீண்டும் நதிக்குள் குதிக்கத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தான்.

நான் ஐயாவை மீண்டும் பார்த்தேன்.

“எவ்வளவுதான் ஒருவர் முயற்சிகள் செய்தாலும், ஒரு காரியம் நடக்கவில்லை என்றால், அதுக்கு என்ன அர்த்தம்! அதுதான் டெஸ்டினியா! சில சமயம் வாழ்க்கை டெஸ்டினியால் மட்டுமே எழுதப்பட்டிருக்கு அப்படினும் தோணும்.  அதனால நாம என்ன செஞ்சாலும், பெரிசா ஒண்ணும் ஆகிடப்போறதில்ல அப்படினு ஒரு தளர்ச்சி வந்துடுது.  நம்ம்முடைய முயற்சி, உழைப்பு இதுக்கெல்லாம் ஒரு அர்த்தமும் இல்லையா!  நம்மோட சாஸ்திரங்களும், எல்லாம் கர்மா அப்படினு சொல்லிட்டா, நாம என்ன பொம்மலாட்டக்காரன் கையில இருந்து இழுபடற பொம்மைக மாதிரிதானா…!”

ஒருவேளை ஆனந்தின் முயற்சிகளுக்கு  இன்னும் நல்ல பலன்  எதுவும் கிடைக்கவில்லையே எனும் ஆதங்கம் என் குரலில் தெரிந்திருக்கலாம்.

ஐயா என்னைப் பார்த்துச் சிரித்தார்.

“நிச்சயமாய் இது பலருக்கும் ஏற்படும் குழப்பம்தான்.  வாழ்க்கை அப்படிங்கிறது தலை-எழுத்துனு முன்னாலேயே எழுதி வைக்கப்பட்ட கதையா, இல்லை நாம் முயன்று எழுதுகின்ற ஒரு சரித்திரமா – அப்படிக்  குழப்பம் வருவதும் சகஜம்தான்.  நீங்க சொன்னீங்களே,  டெஸ்டினி அப்படிங்கிற சொல். அந்த ஆங்கிலச் சொல்லுக்கு வாழ்க்கையை நிர்ணயிப்பது, வாழ்க்கையில் தவிர்க்க முடியாமல் ஏற்படுவது என்றெல்லாம் அகராதியில் பொருள் இருக்கிறது, இல்லையா!  ஆனால் எனக்கென்னவோ  வாழ்க்கை என்பது டெஸ்டினியால் முற்றிலுமாய் எழுதப்பட்ட கதை என்பதில் உடன்பாடு இல்லை. அப்படியான கருத்தும்  நமது சாஸ்திரங்கள் இல்லை.  எனக்குத் தெரிந்தவரை, தமிழிலோ,  சம்ஸ்கிருத மொழியிலோ டெஸ்டினிக்கு உள்ள பொருள் வரும்படியான சொற்கள் இருப்பதாகவும் தோன்றவில்லை!”

“ஐயா! விதி, நியதி, ஊழ் என்றெல்லாம் சொற்கள் இருக்கின்றனவே!”

“இச்சொற்களுக்கும் ஆங்கிலத்தில் உள்ள டெஸ்டினி எனும் பொருள் இல்லை. இச்சொற்கள் எல்லாம் முறையாக அடைய வேண்டியவற்றை மட்டுமே குறிப்பன.   அவை நமது வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கலாம். ஆனால் அவையே வாழ்க்கை இல்லை.”

சில நொடிகள் கழிந்தபின் ஐயா கேட்டார்.

“நீங்கள் கர்மா என்றும் சொன்னீர்கள் அல்லவா?”

“ஆம் ஐயா,  நான் கர்மவிதி பற்றி ஓரளவு படிச்சிருக்கேன்.  இந்த உலகத்தில், மற்ற உலகத்தில் அப்படினு நம்ம வாழ்க்கையை நமது கர்மாக்கள் மட்டுமே நிர்ணயிக்கும் அப்படினு…. அப்படினா, நம்மோட விழுப்பம், முயற்சி, உழைப்பு அதுக்கு என்ன பதில்?  ஒருவேளை எல்லாம் காரணமில்லாமல் ஒரு random event மாதிரி நடக்கிறதா?”

ஐயா புன்முறுவலிட்டார்.

“ஒப்புக் கொள்கிறேன்.  இதெல்லாம் கொஞ்சம் குழப்பம்தான்.  சாஸ்திரங்கள் எல்லாம் படிச்சவங்களுக்கும் இந்த மாதிரி குழப்பங்கள் வருவது உண்டு.  நீங்கள் மஹாபாரதம் படிச்சிருக்கீங்களா?” – ஐயா கேட்டார்.

“ஓரளவுக்கு.  கதை ஒரு மாதிரி தெரியும். ஆனால் அதனோட முழுப் பொருளையும் புரிஞ்சிண்டதாய்த் தோணலை!”

“சரி, ஏன்னா, நீங்க கேட்ட கேள்வியைச் சார்ந்து ஒரு சில கருத்துக்கள் மஹாபாரதத்திலே இருக்கு. அதுக்காகக் கேட்டேன்.”

அப்போது ஆனந்த்  எங்களை நோக்கி வந்தார். தலையெல்லாம் சொட்டச் சொட்ட நனைந்திருந்ததால், அவரிடம் துடைத்துக் கொள்ளத் துணியினைக் கொடுத்துக் கொண்டே, ஜாடையாகச் சொன்னேன்,   பக்கத்தில் அமர்ந்து, ஐயா சொல்வதைக் கேள் என்று.

“திரௌபதி ஒரு மகத்தான கேரக்டர்.  மஹாபாரதத்தில் மிக முக்கியமான பாத்திரம்.  வாழ்க்கையில் மிகவும் துயரப்பட்ட, குறிப்பாக கௌரவர்களால் அவமானப்படுத்தப்பட்ட, ஆழமாகக் காயப்படுத்தப்பட்ட பெண்மணி அவர். ஆனாலும்,  மஹாபாரதத்தில் அவர்தான் மிகவும் புனிதராகவும், இறையருளும், உண்மை அறிவும் உடையவராக விளங்குபவர்.  காட்டிலே ஒருவருக்கும் தெரியாமல் உலவ வேண்டிய கட்டாயம் பாண்டவர்களுக்கு இருந்ததல்லவா? அப்போது ஓர்நாள், தருமம் தவறாதவரான யுதிஷ்டிரனுடன் அருகில் இருந்த திரௌபதி,  ஏன் இந்த வாழ்க்கை இப்படி அமைகிறது, அறவழியில் நடக்கின்ற யுதிஷ்டிரனும் அவரைச் சார்ந்தவர்களும் காட்டில் அலைந்து துயரடைகிறார்கள், ஆனால் கெடுவழியில் செல்லும் துரியோதனன், கௌரவர்கள் எல்லாம் அரண்மணையில் வாழ்ந்து எல்லாச் சுகங்களையும் அனுபவிக்கிறார்கள், இது என்ன நியாயம், எனச் சில கேள்விகள் கேட்கிறார்.”

நான் குறுக்கிட்டுச் சொன்னேன்

“அதற்கும் கர்மாதான் காரணமோ”.

“ஆம். அதைத்தான் யுதிஷ்டிரனும் பதிலாகச் சொன்னார். மஹாபாரதத்தில்,  யுதிஷ்டிரன் திரௌபதியின் கேள்விக்குப் பதிலாக, கர்ம விதிகளைப் பற்றி எல்லாம் விளக்குகின்றார்.   ஆனால், இதெல்லாம் திரௌபதிக்குத் தெரியாதது  அல்ல.   ஒரு சிறு சஞ்சலத்தால் தமது மனக் குமுறலை அவ்வாறு காட்டி இருந்தாலும், திரௌபதி அப்படிக் கேட்டது யுதிஷ்டிரனுக்கும், மற்ற பாண்டவர்களுக்கும் கர்ம விதியினை நினைவூட்டி அதனால் அவர்களை மேலும் உறுதி பெறச் செய்ய வேண்டும் என்பதற்காகவே. உண்மையில், இறுதியில் திரௌபதியே கர்ம விதியினையும்,  வாழ்க்கையில் ஏற்படும் சோதனைகளை எல்லாம் நாம் எப்படிக் கையாள வேண்டும் என்பதையும் யுதிஷ்டிரனுக்கு போதிக்கின்றார்.”

“எப்படிக் கையாள வேண்டும் ஐயா?” – என் ஆவல் மிகையானது.

ஐயா ஆனந்தின் முகத்தைக் கூர்ந்து பார்த்துக் கேட்டார்.

“நமது குறிக்கோள் ஆற்றின் எதிர்க் கரையை அடைய வேண்டும் என்றால்,  நாம் இங்கேயே உட்கார்ந்து இருப்பதால் அது நடந்து விடுமா?”

சற்றே கூச்சத்துடன் ஆனந்த் சொன்னார்.

“இல்லை… அது எப்படி, ஆற்றை நீந்திக் கடக்கணும். அதுக்கான வேலையைச் செய்யனும்”

“ரொம்ப சரி!  உழைப்பு… effort …நிச்சயமாய் வேணும்” – இது நான்.

“ஆம்.  Effort,  the Right Effort வேணும்.  வடமொழியில் இதுக்குப் பெயர் பிரயத்தனம்.  யத்தனம் என்றால் முயற்சி, பிரயத்தனம் என்றால் பெரிய, அல்லது சரியான முயற்சி. நந்முயற்சிங்கிறது அருமையான தமிழ்சொல்”.

“ஐயா, ஒருவேளை  நீச்சல் தெரியாது அப்படினா, நான் வேற வழியைத்தான் தேடுவேன். படகு வருமா, அல்லது யாரேனும் என்னைச் சுமந்து போவார்களா அப்படினு…”

“இருக்கட்டுமே… அதுவும் நந்முயற்சிதான் – அதுதான் முக்கியம்”.

“நிச்சயமாய் ஐயா.”

“அதனால,  இப்போ உங்களுக்கு நீந்தத் தெரியும், நீந்தியே கடக்கப் போறேன் அப்படிங்கிற முடிவும் நீங்க எடுத்துட்டீங்க அப்படினு வைச்சுக்குவோம்.   அப்புறம் அந்தக் காரியத்தைச் செய்ய வேண்டியதுதான் பாக்கி. ஏனென்றால், நீங்கள்  சுதந்திரமாக ஒரு முடிவை எடுத்தாகிவிட்டது. அதுதான் உங்களோட freewill.”

“நான் ஒருவேளை நீச்சலடித்துக் கடக்க விரும்பலைனா?”

“அதுவும் உங்களோட freewill தான்.   உங்களோட சுதந்திரமான தீர்மானம் எதுவோ, அதுவே உங்களோட செயலை ஆரம்பிக்கச் செய்கின்ற விசை.   அப்படிச் செய்தால் மட்டுமே அங்கே கர்மா விளைகிறது”

“ஐயா, நீங்கள் சொல்வதன் பொருள்…  என்னோட freewill தான் என்னுடைய கர்மாவை விளைவிக்கிறதா?”

“அப்படி அல்ல.  உங்களுடைய freewill தான் கர்மாவை ஆரம்பிக்கத் தூண்டுகோலாக இருக்க வேண்டும் என்பதே நான் சொல்ல வந்தது.  நம் எல்லோருக்கும், நாம் எதைச் செய்யலாம், எதைச் செய்ய வேண்டாம் என்பதைச் சுதந்திரமாகத் தீர்மானிக்க உரிமையும், கடமையுமிருக்கிறது.  இது ஒரு மிகப் பெரிய வலிமை. இதனை நாம் உணர்ந்து கொள்வது அதைவிட மிக முக்கியமானது. அதுவே வெற்றிக்கான முக்கியப் படி.”

ஐயா என்னைப் பார்த்துச் சொன்னார்.

“படித்த்து ஞாபகத்தில் இருக்கிறதா! பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத்கீதையில் அர்ச்சுனனுக்குச் சொன்னதை! அர்ச்சுனன் தன்னுடைய freewill எது எனத் தெரியாமல், போரிடுவோம் அல்லது அந்தப் போர்க்களத்தைவிட்டுப் போய்விடுவோம் என்றோ, எந்த முடிவையும் எடுக்க முடியாமல் நின்றானே.  அப்போது இறைவன் அவனுக்குச் சுட்டிக்காட்டியது அதிகாரத்வம் எனும் தன்னுள்ளேயே சுதந்திரமாகத் தீர்மானிக்கின்ற வலிமையே ஆகும்.  அதுவே நாம் செய்யும் எல்லாச் செயல்களுக்கும் உந்துகோலாக இருக்க வேண்டும்.”

ஆனந்த் கேட்டார்.

“நானும் அப்படி தீர்மானத்துடன்தான் முயற்சி செய்கிறேன், ஐயா. ஆனாலும் என்னோட குறிக்கோளை அடைவதில் தடைகள் வந்து கொண்டேயிருக்கே!”

ஆனந்த் கேட்டது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. தன்னுடைய அணுகுமுறைக்கு மற்றவர்களது கருத்துக்களைக் கேட்க  முயல்வது நல்ல மாற்றம்தானே!

“நான் நீந்திக் கடக்கிறதைப் பத்திக் கேட்கிறேன்.  நதியில் அதோட வேகம் அதிகமா இருந்தால், நாம் நீஞ்சிப் போனாலும், எதிர்க்கரையிலே நாம நினைச்ச இடத்துக்குப் போகமுடியாம ஆகலாம்.  அதுனால, நம்ம பண்ற செயலால் மட்டும் எல்லாம் சரியா நடந்திரும்னு சொல்ல முடியாதே”

ஆனந்த் மீண்டும் நதிக்கரை உதாரணத்துக்கே திரும்பியது, ஒருவேளை தனது சொந்த விஷயங்களைப் பேச வேண்டாம் என்றிருக்கலாமோ எனத் தோன்றியது.

ஐயா சொன்னார்.

“அப்படியும் ஆகலாம். உங்களுடைய நந்முயற்சி முதலில் ஒரு பங்கு. ஆனால் மற்ற பங்கு என்ன அப்படிங்கிறதும் முக்கியம். நதியின் வேகம், உங்களது நீந்தும் திசையை மாற்றிவிடக்கூடும் என்பதும் உண்மை. அதனால், நீங்கள் அடைய வேண்டிய இலக்கினைத் தவறவிடக் கூடும்.”

“ஆமாம். அதனாலதான் சொல்றேன். நம்ம கையில ஒண்ணும் இல்லை!”

“தவறு” என்றார் ஐயா.

“நீங்கள் பிரயத்தனம் எனும் நந்முயற்சியை முதலில் தீர்மானிக்கும்போதே, நதியின் வேகத்தால் பாதிப்பு ஏற்படும் என்ற அறிவினையும் எடுத்துக் கொண்டு, அதற்குத் தக்கபடியான  மாற்றங்களையும் பிரயத்தனத்தில் நீங்கள்  ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.   நதியின் போக்கும், வேகமும் எப்படி உங்களுடைய பாதையை மாற்றுமோ, அப்படியே உலக வாழ்க்கையில் உங்களது பாதையையும், பயணத்தையும் மாற்ற வருகின்ற விசைதான் கர்மபலன் என்பது.”

“என்ன அது?”

“ம்ம்ம்…எந்தவொரு செயலுக்கும் ஒரு விளைவு உண்டு.  கொஞ்சமோ, அதிகமோ, ஏதோ ஒரு அளவில் அந்த விளைவினால் ஒரு பாதிப்பும் உண்டு.  செயலை விருப்பத்துடன் செய்யும் எவரும், அதனால் வரும் விளைவை அனுபவித்தே ஆகவேண்டும்”.

“சரி”

“விருப்பத்துடன் செய்யும் செயலே கர்மம் எனப்படுவது. தமிழில் அதற்கு வினை எனப் பெயர்.  அப்படிச் செய்த வினைகளின் விளைவுதான் ஊழ், விதி என்றெல்லாம் சொல்லப்படும் வினைப் பலன் – அதுதான்  கர்மபலன்.”

ஐயாவின் மௌனம் கலைய சில நிமிடங்கள் ஆனது.

“நமது சாஸ்திரங்கள் கர்மபலனை இரண்டாகக் காட்டுகின்றன.  முதலாவது திருஷ்டபலன் அல்லது கண்ணெதிர்-பலன்.  செய்த வினைக்குப் பலனாக நாம் நேரடியாக அனுபவிக்கும் இன்ப துன்பங்கள்.  எடுத்துக்காட்டாக, ஒரு திருடன் பிடிபட்டு அவனுக்கு சிறைத்தண்டனை கிடைத்தால், திருட்டு எனும் வினைக்கு, சிறைத் தண்டனை என் வினைப்பலனாக நாம் சம்பந்தப்படுத்தி,   திருஷ்டபலன் எனக் கொள்ளலாம்.”

“இரண்டாவது வகை கர்மபலன் என்ன?”

“அது அதிர்ஷ்டபலன்  என்பது. அதாவது கண்ணுக்குத் தெரியாத பலன். நம்முடைய வினையினால் ஒரு விளைவு ஏற்பட்டு, ஆனால், அது பின்னொரு காலத்திலோ, பின்னொரு வாழ்விலோ அதற்கான பாதிப்பைக் கொடுக்கும். அதுதான் அதிர்ஷ்ட பலன் என்பது.  நாம் எந்த முயற்சியும் செய்யாமலேயே,  ஒரு நல்லதோ, கெட்டதோ  நமக்கு ஏற்பட்டால், அதற்கு அதிர்ஷ்டபலன்தான் காரணம்.  வழக்கத்தில் இதனை அதிர்ஷ்டம் அல்லது துரதிர்ஷ்டம் என நாம் அழைக்கிறோம்.”

உடனடியாக ஐயா சொன்னார்.

“ஞாபகத்தில் இருக்கட்டும். கர்மபலன் என்பது நல்லதையும் செய்யலாம், கெட்டதையும் செய்யலாம்.  மேலும் அதன் விளையும் பாதிப்பு பெரிதாகவும் இருக்கலாம், சிறிதாயுமிருக்கலாம். எப்படி இருந்தாலும், பாதிப்பு என்பது நிச்சயம் இருக்கும் என்பதை மட்டும் நாம் மறக்கக்கூடாது.”

“ஐயா, எங்கே, யாரால் இந்த கர்மபலன் எல்லாம் சேமிக்கப்பட்டு, கணக்கில் வைத்து, விநியோகம் செய்யப்படுகிறது?” –நான் கேட்டேன்.

“ம்.. அதெல்லாம் ஆராயப்பட வேண்டிய விஷயம். மற்றொருநாள் சிந்திக்கலாம். இப்போதைக்கு, கர்மங்களை எல்லாம் கணக்கிட்டு, அதற்கான பலனை எல்லாம் சேமித்து, சரியான நேரத்தில், சரியான அளவில் கொடுக்கும் பொறுப்பு கடவுளுக்கு இருக்கின்றது என வைத்துக் கொள்வோம்.  இது மிகப் பெரிய பொறுப்பு. அதனால்தான் கடவுளுக்கு, வினைப்பயன்விளைப்பான் அதாவது கர்மபலதத்தா எனும் பெயரினைச் சாத்திரங்கள் தருகின்றன.”

ஆனந்த் கேட்டார்.

“அப்படியானால், என்னுடைய வாழ்க்கையில் என் முயற்சி எதுவும் இல்லாமலேயே எந்தப் பாதிப்பு ஏற்பட்டாலும், அது என்னுடைய  கர்மபலன் – அப்படித்தானே?”

“ஆம்… அதுபோலவே நல்ல பலன் உங்கள் முயற்சி எதுவுமில்லாமலே ஏற்பட்டாலும், அதுவும் உங்கள் கர்மபலந்தான்”

“அப்படினா, எனக்கு கர்மபலத்தினால் வரும் பாதிப்பை என்னால் தவிர்க்கவே முடியாதா?”

“தவிர்க்க முடியாது! ஆனால் அதனைத் தாங்கிக்கவும், அதையே சாதனமாக மாத்திக்கவும் உங்களால் முடியும். கர்மவிதியைப் புரிந்து கொள்வதாலும், அதற்கேற்ப நம்முடைய பிரயத்தனங்களைச் செய்வதாலும், வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சவால்களைச் சமாளிக்க முடியும்….. இங்கே நதியை எதிர்த்து நீந்துவது போல…”

ஆனந்த் ஈர்ப்புடன் இருந்தார்.

“ஐயா, நதியை நான் எதிர்த்து நீந்தவேண்டும் என்பதும் அவசியமில்லை.   நான் கொஞ்சம் தள்ளிச் சென்று நீந்த ஆரம்பித்தால், நீரின் போக்கிலேயே சென்றும் எதிர்க்கரையில் சேரமுடியும் இல்லையா?”

“ஆமாம், அதனால்?” ஐயா சந்தோஷமான சிரிப்புடன் சீண்டினார்.

“அப்படினா, நான் எதிர்க்கிற நதியின் வேகத்தையே பயன்படுத்திக்கிறேனே.  நீங்க சொல்ற கர்மபலனால் பாதிப்பு வந்தால் அதையும் உதவிக்காக மாற்றிக்க முடியும்தானே!”

ஆனந்தின் தீவிரமான உரையாடல் எனக்கு மகிழ்ச்சியையும் வியப்பையும் அளித்தது.

“உறுதியாக!” மகிழ்ச்சியுடன் சொன்னார் ஐயா.

“உங்களது நந்முயற்சிமட்டும் போதாது,  கர்மபலனால் ஏற்படும் விளைவுகளையும் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதையும், அதை ஏற்றுச் சாதிக்கவேண்டும் என்பதில் உறுதி கொண்டுவிட்டால் உங்களுக்கு அதனால் வலிமை உயரும். முன்பு நீங்கள் `ஏமாற்றம்` என நினைத்திருந்ததெல்லாம் `ஏன் மாற்றம்` என ஆகக்கூடாது எனத் தோன்றும். அதனால், உங்களால் மேலும் சாதிக்க முடியும்.”

“நாம் அதற்கு என்ன செய்ய வேண்டும்?” – ஆர்வத்தால் நான் கேட்டேன்.

ஐயா ஆனந்தையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்.

“ஆனந்த்! நீங்கள் இப்போ சொன்ன மாதிரி… நதியில் வேறிடத்திலிருந்து நீந்தத் தொடங்கலாம்… எப்போது வேகம் குறையும் எனக் கணித்துத் தொடங்கலாம்.  அப்படி எல்லாம் உங்கள் பிரயத்தனத்தை சீர் செய்து கொள்ளலாம்! இதற்குத் தேவையான அறிவுதான் முக்கியம். அந்த அறிவைப்பெற உங்களுக்கு நலா வழிகாட்டிகள் தேவை. எனவே நல்லோர்களின் நட்பையும், அவர்களது வழிகாட்டலையும் தேடுதல் மிகவும் முக்கியம்.”

ஆனந்த் இடைமறித்துச் சொன்னார்.

“நான் இந்த நதியைக் குறுக்கே நீந்திக் கடந்திருக்கிறேன். ஒருசமயம், மறக்கவே முடியாது…. நான் நதியின் நடுவிலே இருக்கேன்… என்னோட கண், நீர்ப்பரப்பை ஒட்டி இருந்தது.  திடீர்னு பார்த்தா, கரை எதுவும் தெரியலை.  ஏதோ கடல் மாதிரி எங்க பார்த்தாலும் தண்ணீர்.  என்னால் நீந்த முடியலை. கால் அப்படியே மறத்துப்போச்சு.   அப்பறம் மெதுவா அப்படியே தண்ணீரோடேயே போய், சுதாரிச்சு நீந்தி வந்துட்டேன். பயங்கரமான அனுபவம் அது.”

அதை எதற்கு ஆனந்த் சொன்னார் எனக்குப் புரியவில்லை. இருந்தாலும், எனக்கு இதுவும் ஒரு பாடமாகப் பட்டது.

“எவ்வளவுதான் திறமை இருந்தாலும், பிரயத்தனம் எல்லாம் நல்லாப் பண்ணினாலும், சில சமயம், வாழ்க்கை நம்மள கதி கலங்க வைச்சுடும்.  என்ன செய்யறதுனு தெரியாம ஒரு குழப்பம் வந்துடும். அப்போ துயரமும், பயமும் வந்துடுதில்லையா!” – நான் சொன்னேன்.

தொடர்ந்து சொன்னேன்.

“நானும் படிச்சிருக்கேன்.  மிகப் பெரிய நீச்சல்காரர்களும் சில சமயம் நீரில் மூழ்கிச் செத்தார்கள் என்று”.

“ஆம்.  நமது கர்மபலனின் பாதிப்பு சில சமயம் நம்மை வலிமை அற்றவர்களாகச் செய்வதும் உண்டு.   கர்மவிதியைப் புரிந்து கொண்டால், எப்படி ஆனந்த் கொஞ்ச நேரம் நதியின் போக்கிலேயே போய்,  சுதாரித்து மீண்டாரோ, அப்படி நாமும் தப்பி விடலாம். ஆனால், கர்மவிதியைப் பற்றி அறியாமல், வாழ்க்கையின் சவால்களைச் சந்திக்கத் துணிந்தால், அது குழப்பத்தைத்தான் தரும்.  எனவே நாம் துணையினைத் தேடுவது அவசியம்.”

“யாருடைய துணை?”

“மிகச் சிறந்த துணை கர்மபலதத்தாவாகிய கடவுளின் துணைதான்! அவர்தானே நீதியும் கருணையும் உடையவர்.”

“நீங்கள் சொல்வது பிரேயரா…”

“ஆம்.  இறைவனை வேண்டுதல். பிரார்த்தனை.”

“எப்படி பிரார்த்தனை நமக்கு உதவி செய்ய முடியும்?  நமக்குச் செயல் வேண்டும் அல்லவா?  நடு ஆற்றில் தத்தளிக்கும்போது  அதை எதிர்த்து நீந்துகின்ற உடல் பலம், செயல் தானே வேண்டும்.   பிரார்த்தனை எதற்கு?  செயல்தானே முக்கியம்?”

“பிரார்த்தனை ஒரு செயல் இல்லை என்று ஏன் நினைக்கிறீர்கள்?” – ஐயா கேட்டார்.

“இறைவனை வேண்டுதல் ஒரு செயல். அது ஒரு நற்கர்மம், நல்வினை! நம்முடைய சாஸ்திரங்கள் காயிக கர்மம், வாசிக கர்மம், மானஸ கர்மம் என உடல், வாக்கு, மனம் ஆகிய மூன்றாலும் இறைவனைத் துதிப்பதே பிரார்த்தனை எனக் காட்டியுள்ளதால், பிரார்த்தனை என்பது ஒரு செயல் என்றும்,  நல்வினை என்றும் புரிந்துகொள்ளுங்கள். எனவே பிரார்த்தனை செய்வதால், நல்ல கர்ம பலன் விளைகிறது. அவை நல்லனவே செய்யும்.    ஒருவேளை கருணையுள்ள கடவுளும் நம்முடைய பிரார்த்தனைக்கு இரங்க மாட்டாரோ என ஐயம் வந்தாலும்,   பிரார்த்தனையாகிய நல்வினையின் பலனை இறைவன் நமக்குத் தரவேண்டிய கட்டாயம் இருக்கிறது அல்லவா?”

ஓரிரு நிமிட மௌனத்திற்குப் பிறகு ஐயா தொடந்தார்.

“பிரார்த்தனையின் திருஷ்டபலன் என்ன தெரியுமா? அது நமக்குள் ஏற்படுத்தும் நல்ல மாற்றங்கள்தான். இறைவனை வேண்டுபவரின் மனதில் நல்ல எண்ணங்கள் உயரும். அவரது குணங்கள் நல்லனவாக மாறும். எதையும் எதிர்கொள்ளவும், நிதானமுடன் நடந்து கொள்ளவும் அவரால் முடியும்.   இது ரொம்ப முக்கியம்.  அவரால்தான், எதிர்நீச்சல் போடவும், அப்போது ஏற்படும் சவால்களைப் பொறுமையாக சோதித்துச் சமாளிக்கவும் முடியும்.”

“பிரார்த்தனை தரும் அதிர்ஷ்ட பலன் என்ன?”

“அது இறைவனின் கருணை.  இதைச் சரியாகப் புரிந்து கொள்ளுங்கள். இறைவனின் கருணை என்பது புண்ணியம் எனும் நல்வினைப் பயனால் மட்டுமே அடைய முடிவது. புண்ணியமே  இறைவன் நம்மேல் காட்டவேண்டிய அருளினைச் சம்பாதித்துத் தரும் கருவி. அதுவே அதிர்ஷ்ட பலன். இறைவனின் கருணை நமது பிரார்த்தனையால் மட்டுமே அடையக் கூடியது.  அதனால்தான், கெட்டவர்களான அசுரர்களும்கூட, பிரார்த்தனை செய்தே இறைவனின் கருணையினைப் பெற்றார்கள்.  இது கர்மவிதி!”

“அப்படியானால், நாம் சும்மா பிரார்த்தனை மட்டுமே செய்தால் போதுமே! அதனால் போதுமான புண்ணியம் கிடைத்து, எல்லாச் சவால்களையும் சந்திக்க முடியாதா?”

“அப்படி எளிதில் ஆவதில்லை. அதற்கான உயர்வும் நாம் இன்னும் அடையவில்லை.  பிரயத்தனம் எனும் நந்முயற்சி, பிரார்த்தனை எனும் வேண்டுதல், ஏற்புடமை ஆகிய கர்மபலனைச் சந்திக்கும் துணிவு – இவை மூன்றுமே நமக்கு வேண்டும். அப்போதுதான் நாம் சரியாகச் சாதிக்கவும், சுகப்படவும் முடியும்”

ஐயா  தொடர்ந்தார்.

“புராணங்களில் நீங்கள் ஒருவேளை படித்திருக்கலாம். இறையடியார்கள் பலர் இறைவனை வேண்டுதலின் மூலமே அரிய பல சாதனைகளைச் செய்தார்கள் என்று. இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், அந்த அடியார்கள் எல்லாம் முற்பிறவிகளில் செய்த நல்வினையால், அதிகமான புண்ணியத்தை முன்பே சேர்த்துள்ளார்கள் என்பதே. நமக்கோ, நம்முடைய கர்மபல சேமிப்பு எவ்வளவென்பதே தெரியாது. எனவே, நாம் முன்னே சொன்ன மூன்றையும் உறுதியாகச் செய்ய வேண்டும்.”

“அப்படினா, புராணங்கள் மிகையாச் சொல்வதாகிறதா?”

“இல்லை.  மிகைபோலத் தோன்றினாலும், ஆழ்ந்த உண்மையைத்தான் புராணங்கள் முதன்மையாக வைக்கின்றன.  இப்போ நாம் பேசிக்கொண்டிருந்த கருத்துக்கள் எல்லாம், நமது புராணங்களில், சாஸ்திரங்களிலும் சொல்லப்பட்டனதான். எவ்வளவோ இருக்கு நாம் படித்துத் தெரிந்து கொள்ள..” – ஐயா இதனை ஒரு  ஏக்கத்துடனும், உறுதியுடனும் சொன்னார்.

எனக்கு மஹாபாரதம் பற்றி ஐயா முன்னே சொல்லத் தொடங்கியது நினைவுக்கு வந்தது.

“ஐயா, நீங்கள் மஹாபாரதம் பற்றி….”

“ஓ, யா… துயரக்காலத்தை நினைத்துக் கேள்வி எழுப்பிய திரௌபதிக்கு யுதிஷ்டிரன் கர்மவிதியைப் பற்றி எல்லாம் விளக்கினாலும், இறுதியில் திரௌபதியே கர்ம விதிகளையும், வாழ்க்கையையும் எப்படிக் கையாள வேண்டும் என யுதிஷ்டிரனுக்கும் மற்றவர்களுக்கும் சொல்லுகின்றார்.  சிலர், உலகில் எல்லாமே ஒரு விபத்துபோல மட்டுமே விளைகிறது என்பர். வேறு சிலர், உலகில் எல்லாமே இறைவனின் கட்டளைப்படி மட்டுமே நடக்கிறது என்பர்.  மற்றவர் உலகில் எல்லாமே நம்முடைய செயலால் மட்டுமே நடக்கிறது என்பர்.  ஆனால், உண்மையில், இவை எல்லாமுமே எல்லா விளைவுகளுக்கும் காரணம். இதை உணர்ந்து அவற்றைக் கையாளும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே அவர் தரும் முக்கியக் கருத்து”.

“இதிலிருந்து நாம் அறிவது என்ன?”

“முதலில் உங்களுடைய சுதந்திரமான தீர்மானத்தைச் சரியாகச் செய்யுங்கள். அதற்கு ஆழமான சிந்தனையும், அறிந்தோர், அனுபவம் உடையோர் ஆகியோரின் ஆலோசனையும் முக்கியம். பிரயத்தனத்திற்கான வழி, வகை, வளம்,  இடம், காலம் என எல்லாவற்றையும் தீர்மானியுங்கள்.  அதை முதலில் செய்தாகி விட்டதென்றால், செயலைச் செய்வதே அடுத்த படி!”

“அவ்வளவுதானா!”

“ஆம்,  அவ்வளவே. செயலைச் செய்ய ஆரம்பித்துவிட்டால், அதன் பிறகு வரும் விளைவை எல்லாம் கடவுளிடம் விட்டுவிடுங்கள்.  கர்மபலதத்தாவாகிய கடவுளுக்கு அதுதானே முக்கியமான வேலை!  அதனால், எது வந்தாலும், அது இறைவனின் கருணையாக,  பிரஸாதம் என ஏற்றுக் கொள்ளுங்கள்.”

“நாம் செய்கிற செயலுக்கேற்ற பலனைத் தருவதுதான் கடவுளின் வேலை அப்படினா, பிறகு கடவுளை எதற்குத் துதிக்க வேண்டும்… வேலையைச் சரியாச் செய்தால் போதுமே!”

ஒரு தயக்கத்துடனே நான் கேட்டேன்.

“இக்கேள்வி பலராலும் முன்பே கேட்கப் பட்டதுதான். வேதங்களை அறிந்தவர்கள் கூட அப்படிக் கேட்டிருக்கிறார்கள்!  உங்களுக்குப் புராணத்தில் வரும்  தக்ஷனின் கதை தெரியுமல்லவா?  எல்லாம் அறிந்தவனான தக்ஷன், `கர்மபலதத்தா` எனும் வேலைதானே கடவுளுக்கு, அதனால், அவரைவிட நாம் செய்யும் கர்மமே முக்கியம் என இறைவனைத் தழுவாமலே எல்லாச் செயலயும் செய்தான்.  இருந்தும் இன்னல்பட்டு அழிந்தான்!”

“ஏன்?”

“%9

Related Posts

Share this Post