இருப்பை உணர்க
ஐயாவுடன் உரையாடல் (16)
“அப்படித்தான் ஆச்சு ஐயா” என்று என் மனதில் அழுத்திக் கொண்டிருந்த கவலைகளை ஐயாவிடம் இறக்கி விட்டுக் கொண்டிருந்தேன்.
அந்த நாளும் கொஞ்சம் கடினமான நாள்தான். ஏன், முந்திய சில வாரங்களாகவே, பலவிதமான சிந்தனைகளும், கவலைகளும் மனதில் பாரமாகத்தான் இருந்தன. அதிர்ஷடவசமாக, ஐயாவுடன் பூங்காவில் வாக்கிங் போகின்ற அந்த வாய்ப்பில், சலிப்பை எல்லாம் வார்த்தைகளில் கொட்டிக் கவிழ்க்க முடிந்தது.
வீட்டிற்கு அருகில் இருக்கும் பூங்காவில் நடந்து கொண்டிருந்தோம். பல வருடங்களாகவே எனக்கு இந்தப் பழக்கம் உண்டு. வேலையை விட்டு வீட்டிற்கு வந்தவுடன், நேரமிருக்கும் போதெல்லாம் பூங்காவில் விரைவாக நடப்பதும், அந்த சமயத்தில் நடந்த செயல்களைப்பற்றி யோசிப்பதும், அடுத்து நடக்க வேண்டியதைப்பற்றித் தீர்மானிப்பதும் ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது.
ஆனால் ஐயா நான் சொன்னதைக் கேட்டதாகவே தெரியவில்லை. அவரது தோள்களைத் தொட்டுச் சொன்னேன்.
“நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ஐயா?”
“ஓ!…ம்… அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள்?”, ஐயா உடனடியாக ஒரு கேள்வியைப் பதிலாகத் தந்தார்.
“வெல், அலுவலகத்தில் ஒரு சில நல்ல மாற்றங்கள் வரலாம். இந்தியாவில் இருக்கின்ற என்னுடைய அக்காவுக்கு உடல்நலம் சரியில்லாததுதான் கவலை. அதற்காக உதவிக்கு ஆட்களை ஏற்பாடு செய்ய வேண்டும். சில திட்டங்கள் இருக்கு.”
மீண்டும் ஐயா அவ்வளவு ஆர்வமாக என்னுடைய பேச்சைக் கவனிக்கவில்லை எனத் தோன்றியது.
அவர் ஒரு பூவனப் புதர் அருகில் நின்றுகொண்டு எதையோ உன்னிப்பாக் கவனிப்பதைப் பார்த்தேன்.
நானும் நின்றேன்.
“என்ன பார்க்கிறீர்கள் ஐயா?”
“உஷ்!” ஐயா என்னை மெதுவாகப் பேச எச்சரித்துவிட்டு, விரலினால், புதருக்குள் சுட்டிக் காண்பித்தார்.
அங்கே ஒரு சிறிய தாய்ப்பறவை தன்னுடைய குஞ்சுகளுக்கு உணவினை ஊட்டிக் கொண்டிருந்தது. குஞ்சுகளும் கீச் கீச் என்று கத்திக் கொண்டு, தங்கள் சொப்பு வாயை மேலும் அகலமாகத் திறந்து கொண்டு, உணவுக்குப் போட்டி போட்டுக் கொண்டிருந்தன. மனதைத் தொடும் ஒரு குருவிக் குடும்பம்.
பக்கத்திலே பரிமளம் கமழும் ரோஜா மலர்கள் இருப்பதைப் பார்த்தேன்.
“எவ்வளவு அருமையான மணம், அழகான வெல்வெட் போன்ற ரோஜாக்கள்! இவற்றை இங்கே நான் பார்த்ததில்லை!” என்றேன்.
ஐயா என்னை ஆச்சரியாமாக பார்த்தார்.
“அப்படியானால், இந்த அழகிய மலர்களை நீங்கள் தினம் நடக்கும்போது பார்த்ததில்லையா!”
“ஐயா, பார்க்காமல் விட்டிருக்கலாம். நான் நடப்பதிலேயே குறிக்கோளாக இருப்பேன். வேறு எதனையும் பார்க்காமல் வேகமாக நடப்பேன்”
இப்படிச் சொல்லும்போது எனக்குள் கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது.
“ம்… அப்படியானால் பூங்காவில் நடை பயில்வது, பழைய காலத்தை நினைப்பதற்கும், வரும் காலத்தை யோசிப்பதற்கும்தானோ!”
“ஆம் ஐயா, அது மிகவும் அவசியம். நல்லதும் கூட. உடம்புக்கும் பயிற்சிக்குப் பயிற்சி ஆச்சு. மனசிலேயும் எதெல்லாம் அடுத்துச் செய்யனும் அப்படினு ஒரு திட்டமும் வந்திடும்.”
ஒரு சில நிமிடங்கள் கழித்து, ஒருவிதச் சந்தேகத்துடன் கேட்டேன்.
“ஏன் ஐயா, இதில் எதுவும் தவறு உள்ளதா?”
“இல்லை. இதில் தவறு, சரி என்பதற்கு ஒன்றும் இல்லை. என்ன, நீங்கள் வாழ்க்கையின் பொருளையே தவற விடுகிறீர்களோ என்பதுதான் நான் யோசித்தது”
“அதாவது?”, நான் அவசரமாக என் ஆவலைக் கேள்வியாக வைத்தேன்.
“வாழ்வதைத்தான் “ என்றார் ஐயா.
“வாழ்வது என்பது, ஒவ்வொரு கணத்தையும் அனுபவிப்பது. Presence அதாவது ‘இருப்பு’ என்பதுதான் நம்முடைய வாழ்க்கையை நிரூபிப்பது, வாழ்க்கையாக விளங்குவது எல்லாம். மற்றவை எல்லாமுமே விபத்தாக விளைந்த பொருட்களே ஆகும்.”
“எனக்குப் புரியவில்லை ஐயா”
“வெல், இந்த மாதிரி மாலை வேளையில் தனியாக நடக்கின்ற அனுபவங்களைக்கூட, கடந்த காலத்துக் கவலைகளிலும், வருங்கால எதிர்பார்ப்புக்களிலும் நீங்கள் கழித்து விட்டால், அப்புறம் ‘இருப்பு’ எனும் இந்தக் கணத்தை இழந்து விடுவீர்களே! இழக்கும் ஒவ்வொரு கணமும் வாழ்க்கையை இழக்கும் கணக்கு அல்லவா!”
அது என்னை ஆழமாகப் பாதித்தது
“ஐயா, ஒவ்வொரு கணமும் வாழ்வது என்பது எப்படி?”
“எளிது! ஒவ்வொரு கணமும் வாழ்வது என்பது, ஒவ்வொரு கணமும் ‘இருப்பு’ என்பதை உணர்வது. ‘இருப்பை’ உணர்வதுதான், அதனை ஊர்ந்து கவனிப்பதுதான் வாழ்க்கை. அதாவது உலகில் எல்லாப் பொருட்களுக்கும் உள்ள ‘இருப்பு’ என்ன என்பதைக் கவனியுங்கள்”
“நான் அப்படிக் கவனிக்கவில்லையா?”.
“அப்படிக் கவனித்து இருந்தால், ரோஜாவை ஏன் பார்த்திருக்கவில்லை?”
“ம்… அது நான் ஆழமான எண்ணங்களில் இருந்திருக்கலாம். அதனால்.”
“எண்ணங்கள்? எண்ணம் என்பது மனத்தின்-வேலை அல்லவா! நாம் பொதுவாகச் சொல்லும் மனம் என்பது, கடந்த காலத்து நினைவிலோ, அல்லது எதிர்காலக் கனவிலோதான் எண்ணங்களாக நின்று கொண்டிருக்கும். மனதிற்கு நிகழ்காலத்தில், ‘இருப்பில்’ இடம் கிடையாது.”
“எனக்குப் புரியவில்லை ஐயா”
“சரி, இங்கே நீங்கள் பார்ப்பது என்ன?”
“ரோஜா மலர்”
“ஆம். ஏனென்றால் உங்கள் கண்களால் அதன் வடிவத்தைப் பார்க்க முடிகிறது. மூக்கினால், அதன் மணத்தை உணரமுடிகிறது. ரோஜா எனும் பெயரினால், அதனைப் பற்றிய எண்ணங்களை உங்களால் வளர்த்துக் கொள்ள முடிகிறது.”
“ஆம். அதனுடைய தனித்துவமான மணமும் எனக்குத் தெரியும். “
“பறவையைப் பார்த்தீர்களா?”
“ஆம். பறவை எனும் பெயர்ச்சொல்லைக் கேட்டவுடனேயே பறவையைப் பற்றிய அறிவும், அவற்றின் பல குணங்களும் மனதில் எழுகிறது”.
“சரி, அடுத்த வாரம் இந்த ரோஜாவைப் பார்ப்பீர்களா?”
“பார்க்கலாம். ஒருவேளை பார்க்க முடியாமலும் போகலாம். அது உலர்ந்து கொட்டிப் போயிருக்கலாமே!”
இந்த உரையாடல் எங்கே போகிறது என யோசித்துக் கொண்டே இதைச் சொன்னேன்.
“ஒரு பூவைப் பார்த்தவுடனேயே பூ இருக்கிறது என்று சொல்ல முடிகிறது. அல்லவா?”
“ஆம்”
“பூ என்று சொன்னால், அதனால் பூவைப்பற்றிய அறிவு மட்டுமே வரலாம். ஆனால் பூ இருக்கிறது என்று தெரிய, பூவின் ‘இருப்பு’ அறியப்பட வேண்டும் அல்லவா?”
“ஆம்”
“நாம் இருக்கிறது என்று பார்க்கின்ற ஒவ்வொரு பொருளுக்கும் ‘இருப்பு’ என ஒன்று இருக்கிறது. அந்த ‘இருப்பு’ என்பதுதான் மலரின் இருப்பை நமக்கு உறுதி செய்கிறது. இல்லை என்றால், மலர் என்பது ஒரு வெறும் வார்த்தையாக மட்டுமே இருக்கும். இது புரிகிறதா?”
“புரிகிறது. ஆனால், இதில் இருந்து என்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் சரியாக விளங்கவில்லை”
“மலர் இருக்கிறது, குருவி இருக்கிறது, புத்தகம் இருக்கிறது, அவர் இருக்கிறார் என எதனை எல்லாம் நாம் தெரிந்து கொண்டாலும், ‘இருப்பு’ என்பது மட்டுமே அவற்றின் இருப்பினைத் தருவது. அந்த ‘இருப்பு’ இல்லை என்றால், அது வெறும் சொல் மட்டுமே அல்லவா!”
“ஆம். இருப்பு என்பதுதான் existence.”
“அந்த இருப்பு எல்லாவற்றிலும் ஒன்றுதான். ஒவ்வொரு பொருளுக்கும் மாறுபட்டதல்ல. இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். பெயர், வடிவம், குணம் என இவைதான் மாறி மாறித் தோன்றுகிறதே ஒழிய, அவற்றின் ‘இருப்பு’ மாறவில்லை. இதைப் புரிந்து கொள்ள முடிகிறதா?”
“ஒரு மாதிரி…. அப்படியானால் பெயர், வடிவம் இதெல்லாம் நமக்கு முக்கியம் இல்லையா? அவற்றின் வேறுபாடுகளினால்தானே நாம் எப்படி உலகத்தின் பொருட்களை, விஷயங்களைக் கையாள முடிகிறது! அவை முக்கியம் இல்லையா?”
“எல்லாமும் முக்கியம் தான். ஆனால் நாம் எல்லாவற்றையும் நாமம், ரூபம், குணம் அதாவது பெயர், வடிவம், தன்மை என்ற நோக்கத்தில் மட்டுமே பார்க்க நம்மைத் தயாராக்கிக் கொண்டுள்ளோம். அதனால்தான், நம் புலனறிவால் அறிய முடியாத எதுவும், இருப்பில் இல்லை எனத் தவறாக முடிவெடுத்துள்ளோம். அது மிகப் பெரிய தவறு!”
“இருக்கலாம். ஆனால், நாம் ஒன்றைப் புலனறிவால் அறிய முடியாதபோது, அதற்கு இருப்பு இல்லை எனக் கொள்வதில் என்ன தவறு?”
“கனவில் பல உலகங்களையும் காண்கிறீர்கள். அவை நிஜமா?”
“நிச்சயமாக இல்லை. கனவில் அவை எல்லாம் நிஜமாகத் தோன்றினாலும், கனவு என்பது ரியல் இல்லை. ஆனால் உலகம் ரியல்.”
நான் இதனைக் கொஞ்சம் அழுத்திச் சொன்னேன். ஏனெனில் உலகம் மாயை, அது நிஜம் இல்லை எனச் சொல்லும் வாதங்களில் எனக்கு ஆழ்ந்த இணக்கமில்லை.
“ஆம். உலகம் ரியல் என்றுதான் தோன்றுகிறது. ஏனெனில் நம்மால் புலனறிவு கொண்டு உலகத்துடன் ஈடுபட முடிகிறது. எனவே உலகை ரியல், நிஜம் எனவே எடுத்துக் கொள்ளலாம். அதற்கு வேதாந்தம் கொடுக்கும் சொல்லான ‘சத்தியம்’ என்பதையே கொடுக்கலாம். உலகம் சத்தியம்தான்.”
ஐயா மேலும் தொடர்ந்தார்.
“ஆனால் இப்போதுதான் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு ‘இருப்பு` உள்ளது என்று கண்டோம். அப்படியானால், உலகம் எல்லாவாற்றுக்கும் ஒரு ‘இருப்பு’ உள்ளது”
“சரி…” இப்படிச் சொல்லிக்கொண்டு, ஐயாவை ஒரு எதிர்பார்ப்புடன் பார்த்தேன்.
“ஒருவருக்கு எதையும் முகர்ந்து அறிகின்ற உணர்ச்சி இல்லை என்று வைத்துக் கொள்வோம். அதனால் அவர் இந்த ரோஜாவுக்கு மணம் இல்லை எனச் சொல்ல முடியுமா?”
“நிச்சயமாக முடியாது! அவருக்குத்தான் அதை அறியும் புலன் அறிவு இல்லையே!”
“அதனால் புரிந்து கொள்ள வேண்டியது என்ன? புலனறிவால் அறிய முடியாது என்றாலும் ‘இருப்பு’ என்பது ஒவ்வொரு பொருளுக்கும் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுதலே ஆகும்.”
“அப்படித்தான் தெரிகிறது” என்றேன் நான்.
“அப்படி என்றால், பெயர், வடிவம், தன்மை முதலியன எப்போதும் மாறிக் கொண்டே இருந்தாலும், எல்லாப் பொருட்களுக்கும் ஆதாரமாக மாறாமல் உள்ளது ‘இருப்பு’ என்பதுதான். உலகம் சத்தியம் என்று நீங்கள் சொல்வதில் எந்த முரண்பாடும் இல்லை. ஆனால் வேதாந்தம் என்ன சொல்கிறது என்றால், நீங்கள் உலகைப் பார்க்கும்போது, அதன் ‘இருப்பை’ முதன்மைப் படுத்தினால், அந்த மாறாத ‘இருப்பு’ மட்டுமே சத்தியம் எனப் புரிகிறது. அதை ‘சத்’ என்ற சொல்லினால் குறிக்கலாம். மற்ற பெயர், வடிவம், தன்மை முதலியன ‘சத்’ எனும் இருப்பை ஆதாரமாகக் கொண்டு எழுகின்ற தோற்றங்கள்தான்.”
என்னுள் ஒரு எழுச்சி பிறந்தது.
“எனக்கு இது தெரியாது ஐயா. நாம் பொதுவாக ஒன்றை அறியும்போது, அதன் சொற்பொருளைக் கொண்டுதானே அறிகிறோம், இல்லையா?”
“அது சரிதான். முதலில் அப்படித்தான் அறிந்து கொள்ள வேண்டும். ஆனால், நம்முடைய அறிவில் இயற்கையிலேயே சில ஆற்றல் இருக்கிறது. சொற்பொருளை அப்படியே எடுத்துக் கொள்ளாமல், இடத்திற்கும், காலத்திற்கும் ஏற்ப பொருளை மாறுபட்டுப் புரிந்து கொள்கிற அறிவு!”
என்னுடைய முகத்தில் பளிச்சிட்ட அறியாமையைப் பார்த்த ஐயா, ஒரு உதாரணத்தைக் கொடுக்க ஆரம்பித்தார்.
“எடுத்துக்காட்டாக, நான் ஒரு கூடை மாம்பழம் வாங்கினேன் என்றால் நீங்கள் என்ன புரிந்து கொள்கிறீர்கள்?”
“நீங்கள் சொல்லியபடியேதான். ஒரு கூடை மாம்பழங்களை நீங்கள் வாங்கியுள்ளீர்கள் என்று. சொற்கள்தான் தெளிவாக இருக்கிறதே!”
“நான் ஒரு மாம்பழத்தை முழுதுமாகச் சாப்பிட்டேன் என்று சொன்னால்?”
“அப்படியானால், நீங்கள் ஒரு மாம்பழத்தை முழுதும் சாப்பிடீர்கள் என்பதுதான்!”
“நான் மாம்பழத்தின் கொட்டையையும் சாப்பிட்டேன் என்றா நினைப்பீர்கள்?”
“இல்லை… பொதுவாக மாம்பழத்தின் கொட்டையை யாரும் சாப்பிடுவதில்லை. எனவே நீங்கள் முழு மாம்பழத்தைச் சாப்பிட்டேன் என்றாலும், அதன் கொட்டை முதலானவற்றை நீக்கி, பழத்தைச் சாப்பிட்டீர்கள் என்றுதான் அறிந்து கொள்ள வேண்டும். அதுதானே முறை?”
“மிகவும் சரி. இதுமாதிரி நிறைய உதாரணங்களை நாம் காணலாம். அதாவது சொல்லின் பொருளை அப்படியே எடுத்துக் கொள்ளாமல், ஒரு பகுதியைவிட்டு, மற்றொரு பொருளைக் கொடுத்து, பொருத்தமான அறிவினைப் பெறுவது அவசியமே. இதனை சம்ஸ்கிருத இலக்கணம் பாஹ-த்யாக-லக்ஷணம் என்று சொல்கிறது. இது மிகவும் புரியாதது போல் தோன்றினாலும், மிக எளிதாக, நாம் அன்றாட வழக்கில் கையாளுகின்ற ஒரு ஒழுக்கமே ஆகும். அந்த வகையில், நாம் உலகம் சத்தியம் எனச் சொன்னால், அதனை, உலகத்தின் ஆதாரமாக உள்ள ‘இருப்பு’ என்று எடுத்துக் கொள்வது மட்டுமே அவசியமாகிறது. ஏனெனில் அதுதான் மாறாதிருப்பது. பெயர், வடிவம், தன்மை முதலியன தோற்றத்தைத் தந்து மறைகின்றதாக இருப்பதால், அதனை ‘மித்யா’ என மற்றொரு பெயரால் வேதாந்தம் அழைக்கிறது. நாம் பார்க்க வேண்டியது இருப்பாகிய சத்!”
இதுவரை சொன்னதெல்லாம் என்னுடைய மனதில் ஏற்றுக் கொள்ள ஒரு அவகாசம் தேவை என்றோ என்னவோ, ஐயா சில நிமிடங்கள் பேசாமல் இருந்தார்.
பின்பு தொடர்ந்தார்.
“இந்த ‘இருப்பு’ எதுவோ அதில்தான் நம்முடைய கவனம் ஒவ்வொரு கணமும் இருக்க வேண்டும். மற்றதெல்லாம், அந்த ‘இருப்பு’ விளையாட்டாக எழுப்பிகின்ற தோற்ற மாயைதான். இந்த அணுகுமுறையை நீங்கள் எடுத்துக் கொண்டால், நீங்கள் எல்லாவற்றையும் பார்ப்பவராக ஆகிவிடுவீர்கள். பூங்காவில் நடைபழகும் இந்த நேரங்களிலாவது அப்படி நீங்கள் உலகைப் பார்த்தால், நீங்கள் மாறுபட்டவராக, எல்லாவற்றையும் இரசித்து ஏற்பவராக ஆகி விடுவீர்கள். எந்த மாற்றத்தாலும் பாதிக்கப்படாத சாட்சியாக நீங்கள் இருப்பதை உணருவீர்கள். எல்லாவற்றிலும் திடீரென்று ஒர் புனிதத்தன்மை வந்திருப்பதாக உணருவீர்கள்.”
“நான் அப்படி எண்ணிப் பார்த்ததில்லை ஐயா”
“எண்ணத்தை விடுங்கள்.”, ஐயா எண்ணம் என்பதை அழுத்திச் சொன்னார்.
“வெறும் சாட்சியாகப் பாருங்கள். அப்படி ‘இருப்பு’ என்பதையே பார்ப்பதால், எல்லாமும் உங்களுக்கு ஆச்சரியமாக, ஆனந்தமாக இருக்கும். வாழ்க்கை ஒரு அதிசயம், எல்லாமே ஒரு மேஜிக் என்பது போன்ற வியப்பும், மகிழ்ச்சியும் இருக்கும். வாழ்வின் ஒவ்வொரு கணமும், அந்த அதிசயத்தை அனுபவிக்கக் கிடைத்த வாய்ப்பு எனத் தெளியும்.”
நான் முற்றிலும் ஆக்கிரமிக்கப்பட்டவனாக இருந்தேன்.
“ஹலோ….. நீங்கள் இங்கேதான் இருக்கிறீர்களா?”, ஐயா என் தோளைத் தொட்டார்.
நான் வெறுமனே அவரைப் பார்த்தேன்.
“நீங்கள் மூச்சு விட்டுக் கொண்டுதான் இருக்கிறீர்களா?”
“ஆமாம் ஐயா, நிச்சயமாக”, சட்டென்று பதில் சொன்னேன்.
“எப்போ கடைசியா, அதை நீங்கள் செக் செய்தீர்கள்?”, இப்படிச் சொல்லி, ஐயா உரக்கச் சிரித்தார்.
இதை ஐயா கேட்கும் வரை, நான் மூச்சு விடுவதைப் பற்றி நினைத்தும் பார்க்கவில்லை. அவர் கேட்ட பிறகுதான் கவனம், மூச்சு விடுவதில் போனது. கவனித்த பிறகு, மூச்சு வருவதும் போவதுமே ஒரு பெரிய காரியம் போல ஆனது,
ஐயா சிரித்து முடித்தார்.
“உங்களை மூச்சைக் கணக்கிடச் செய்யவேண்டும் என்று நான் இதைச் சொல்லவில்லை. நாம் எதனை முக்கியமாகக் கவனிக்க வேண்டுமோ அதனைக் கவனிப்பதில்லை என்பதைச் சுட்டிக் காட்டவே அப்படிக் கேட்டேன். மனதின் கட்டுப்பாட்டில் நீங்கள் இருக்கும் வரை, உங்களால், ‘இருப்பு’ பார்க்கப்பட மாட்டாது. மனம் புலனறிவினால் தூண்டப்பட்டு, தோற்ற மாற்றங்களையே சுற்றிக் கொண்டிருக்கும். அதையே சத்தியம் என நினைத்து, அதனால் துயரப்பட்டிருக்கும்.”
ஒரு சில நொடிகளுக்குப் பிறகு ஐயா கூறினார்.
“இப்படி ஓய்வாகப் பூங்காவில் நடக்கும்போதேனும், உங்கள் மனதைக் கழட்டி விடுங்கள். எளிமையாக, எல்லாவற்றையும் பார்க்கின்ற சாட்சியாக இருந்து பழகுங்கள். நிச்சயமாகப் பிறகு மனதை எடுத்துக் கொண்டு, உலகத்தில் செய்ய வேண்டிய செயல்களில் ஈடுபடலாம். ஆனால் எப்போதும், எல்லாவற்றிலும் ஊடுருவி இருக்கும் ‘இருப்பு’ என்பதை மறந்து விடாமல் பாருங்கள். ஏனென்றால் அதுதான் உங்கள் இருப்பு. வாழ்க்கை!”
நவம்பர் மாதக் குளிர் மாலை நேரம் என்பதால், சில்லென்று காற்று முகத்தில் படர்ந்து, கன்னங்களை எல்லாம் உறைய வைத்துக் கொண்டிருந்தது. ஆனால், நான் காற்றின் ‘இருப்பை’ இரசித்துக் கொண்டிருந்தேன். காலடியில் மிதிபடும் சருகு இலைகளின் ஸ்பரிசத்தில் அவற்றின் ‘இருப்பை’ உணர்ந்து கொண்டிருந்தேன். எங்கு பார்த்தாலும் ‘இருப்பு’. பார்க்க வேண்டிய பொருட்கள் எல்லா இடத்திலும் திடீரென்று அதிகரித்து விட்டதுபோல் தோன்றியது.
இதனால் என்ன பயன்?
இப்படி ‘இருப்பு’ என்பதில் ஆழ்ந்த பார்வையை வைத்துக் கொண்டிருப்பதால் என்ன பயன் வந்து விடப் போகிறது?
ஐயாவிடம் இந்தக் கேள்விகளை எல்லாம் கேட்க வேண்டும் என நினைத்தால், அவரோ மிக வேகமாக நடந்து கொண்டிருந்தார். அப்படியானால், அன்றைய பொழுதுக்கான உரையாடல் முடிந்தது என்றுதான் பொருள்.
“நாளை அவரைப் பிடித்துக் கொள்வேன்” – இப்படி நான் மனதுக்குள் நாளைய திட்டத்தைப் போட்டபோது, ஓர் சின்ன குற்ற உணர்ச்சி வந்தது நிஜம்தான். அதனைத் தள்ளிவிட்டதும் நிஜம்தான்!
மீ. ராஜகோபாலன்
14 நவம்பர் 2017