(Read in ENGLISH)

சொல்லுக்குள் உண்மை

ஐயாவுடன் உரையாடல் (21)

‘என்ன கேட்கிறாய்?’, காதுகளில் இயர்ஃபோனை மாட்டிக் கொண்டு தீவிரமாகத்h தலையை அசைத்துப் பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்த கீர்த்தியிடம் அய்யா கேட்டார். சிரித்துக் கொண்டே, பட்டனில் கை வைத்துக் கொண்டு கீர்த்தி சொன்னாள், ‘சிவோஹம்’.
தனது கண்களை அகல விரித்தபடி அய்யா என்னைப் பார்த்தார்.
நான் சொன்னேன்.
‘ஆம் அய்யா, அது ஒரு திரைப்படப் பாடல், அவளுக்கு மிகவும் பிடித்தது’.
‘சிவோகம் என்பதன் பொருள் தெரியுமா உனக்கு?’, அய்யா கேட்டார்.
‘இல்லை!’, தலையைத் தெரியாது எனும் பாவனையில் ஆட்டிக் கொண்டே கீர்த்தி சொல்லிவிட்டு இசையுனுள் மீண்டும் ஆழ்ந்திருந்தாள்.
நான் அவசரமாகச் சொன்னேன்.
‘கீர்த்தி, நான் முன்பே சொல்லியிருக்கேன். பயன்படுத்தும் ஒவ்வொரு வார்த்தைக்கும் என்ன பொருள் அப்படினு புரிஞ்சுக்கணும். அது முக்கியம் இல்லையா?’.
எல்லாத் தகப்பனைப் போல, என் குழந்தைகளும் எல்லாம் அறிந்து சிறக்க வேண்டும் என்ற வேட்கை.
அய்யா என் தோளைத் தொட்டார்.
‘இதற்காக ரொம்பப் பதட்டப்பட வேண்டாம். நாம எல்லோருமே தினமும் எவ்வளவு வார்த்தைகளை அர்த்தம் புரிஞ்சுக்காமேயே பயன்படுத்திக் கொள்கிறோம். அதனால் என்ன!’
‘இருக்கலாம் அய்யா. அப்படி நாம் இருக்கக் கூடாது அப்படிங்கிறதுக்காகச் சொன்னேன்.’
‘அப்படியா, ரொம்ப நல்லது. நீங்கள் தினம் அதிகப்படியா பயன்படுத்தினாலும், அதனோட உண்மையான பொருள் புரியாம பயன்படுத்திவரும் சொல் என்ன தெரியுமா உங்களுக்கு?’
என்னிடம் திரும்பிப் பார்த்து அய்யா இதனைக் கேட்டார்.
இது ஒரு டிரிக் கேள்வியா என்று சில நிமிடம் யோசித்தேன். அய்யா என்னை இன்னும் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார் என்பதில் பதிலைச் சொல்ல ஆரம்பித்தேன்.
‘நான்…’.
‘ரொம்ப சரி’, அய்யா எனது பதிலை நான் முடிக்கும் முன்னேமேயே ஏதோ நான் சரியான விடையைச் சொன்னது போல் பார்த்தார்.
‘ஆம். நான் என்னும் சொல்தான் நீங்களும், ஏன், ஒவ்வொருவரும் தினம் தினம் அதிகம் பயன்படுத்தும் சொல். ஆனால் அதன் பொருள் என்ன என்பதைப் பற்றிச் சிந்திக்க இதுநாள் வரை ஒரு சில நிமிடங்களைக் கூடச் செலவு செய்திருக்க மாட்டோம்.’
அய்யாவின் பதில் என்னைத் தாக்கியது. இது ட்ரிக் கேள்வி அல்ல. பொதுவாக நாமெல்லாமே வெட்கி விலகிச் செல்கின்ற முதலான உண்மை என்பதும் நான் தெரிந்து கொண்டிருக்கிறேன். வேதாந்தம் படிக்கும் மாணவருக்குத்தான் நான்-யார் எனும் முக்கியமான கேள்வி வைக்கப்படும் என்பதையும் நான் படித்திருக்கிறேன். உலக வாழ்க்கைக்கு, அப்படியான கேள்விக்கு அவசியம் என்ன என்பதில்தான் எனக்கு வியப்பு.
‘அய்யா, மிகவும் பெருமை வாய்ந்த ஆன்மீகக் கேள்வியான நான்-யார் என்பதைத்தானே நீங்கள் கேட்கிறீர்கள்! இந்தக் கேள்வி வேதாந்தம் படிப்பவர்களுக்கான கேள்விதானே!’ நான் கேட்டேன்.
‘நான்-யார் எனும் இந்தக் கேள்வியே ஒரு வேதாந்தம்தான். இக்கேள்வியை எழுப்பி அதற்கான பதிலைத் தேடுகின்ற எவருமே ஆன்மீகவாதிகள் தான். எனவே கேள்வியை உங்கள் உடமையாக ஏற்றுக் கொள்ளுங்கள். ஒரு சொல்லைப் பயன்படுத்தினால், அதன் உண்மைப் பொருளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள்தானே கீர்த்தியிடம் சொன்னீர்கள்?’
நான் ஓர் புனிதவலைக்குள் சிக்கிக் கொண்டேன் எனப் புரிந்தது.
‘அய்யா, விளக்குங்கள், எனக்குப் புரியவில்லை!’
அய்யா திரும்பவும் கேட்டார்.
‘யார் நீங்கள்? இப்படி ஒரு கேள்வி வந்தால், நீங்கள் எப்படிப் பதில் சொல்வீர்கள், பொதுவாக?’
‘அய்யா, அது கேட்பவர் யார் என்பதைப் பொருத்தது. என் பெயரைச் சொல்வேன், இன்னாரின் மகன் அல்லது இன்னாரின் உறவு, இந்த இடத்தில் வசிப்பவன், இந்த வேலை பார்ப்பவன் – அப்படினு எனக்குச் சம்பந்தமான செய்திகளைச் சொல்லி என்னை அறிமுகப்படுத்திக் கொள்வேன். வேற எப்படிச் செய்ய முடியும்!’
‘கரெக்ட். அப்படித்தான் செய்ய முடியும். ஏனென்றால், உலகம் என்பது, வெளி விஷயங்களை ஆதாரமாக வைத்துத்தான் நடப்பது. அதில் தவறில்லை. ஆனால், உங்களுக்காகவாவது, மற்ற எதையும் சாராமல், நீங்கள் யார் என்பது தெரிந்திருக்க வேண்டுமில்லையா! அதுவும் இல்லையினா, நம் வாழ்க்கை நம்மையே அறியாத அறியாமையிலேயே முடிஞ்சு போய்டுமே!’
அய்யாவின் வார்த்தையில் உள்ள உண்மையின் அழுத்தத்தால் உறைந்து இருந்தேன்.
‘ஆம் அய்யா, தயவு செய்து சொல்லுங்கள். நான் எனும் சொல்லின் உண்மையை நான் எப்படி அறிந்து கொள்வது?’
‘உங்களால் அதை அறிந்து கொள்ள முடியாது!’
அய்யாவின் பதிலால் திடுக்கிட்டேன். நான் யார் என அறிந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் சொல்லி விட்டு, அப்படி அறிந்து கொள்வது முடியாது என்றால், அதற்கு என்ன பொருள்!
‘அப்படியானால் என்ன செய்வது? குழப்பமாக உள்ளது அய்யா’.
இப்படிச் சொல்லிக் கொண்டே, மனதுள் வேதாந்தம் எவ்வளவு புதிராகவும், ஈர்ப்பு சக்தி கொண்டதாகவும் இருக்கிறது என வியந்தேன்.
‘அது உண்மை. உதாரணமாக, நீங்கள் எல்லாவற்றையும் கண்களால் பார்க்கிறீர்கள். உங்கள் கண்களை உங்கள் கண்களால் காண முடியுமா?’
‘முடியாது!’ இப்படி சொன்ன நான், உடனேயே தொடர்ந்து சொன்னேன்.
‘முடியும். ஒரு கண்ணாடியில் பார்க்க முடியும்’.
‘ஆம். நான் என்னைப் பார்க்கணும்னா, எனக்கு ஒரு கண்ணாடி, அதுவும் சுத்தமான ஒரு கண்ணாடி வேணும்.. அதில் என்னை முழுதாகவோ அல்லது ஒரு பகுதியையோ என்னால் பார்க்க முடியும்.’
‘இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தானே அய்யா, நான் தினமும் கண்ணாடியில் என்னைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.’
அய்யா சிரித்தார்.
‘நல்லது. கண்ணாடி அப்படினு ஒரு பேச்சுக்குச் சொன்னால், அதை நிஜமாகவே கருதி, அதில் பார்க்கப்படுவதுதான் நான் அப்படினு நினைக்கிறீர்கள். அப்படியா? அப்படியானால் கண்ணாடியில் தெரியும் உங்கள் உடல்தான் நான்-யார் என்பதன் பதிலா?’
‘அய்யா, உடல் என்னுடையதுதானே! இல்லையா?’
‘அதுபோலத்தான் உங்கள் சட்டை, உங்கள் கார், உங்கள் வீடு இவை எல்லாமே உங்களுடையதுதான். அப்படியானால், இவையும் நான் எனும் சொல்லின் பொருளா?’
‘இல்லை அய்யா, அவை எல்லாம் என்னை விட்டு வெளியில் இருப்பவை. உடமைகள். என் உடல் என்னை விட்டு வெளியே இல்லையே!’
‘உறுதியாகவா? ஒருவர் இறந்து விட்டால், அவர் போய்விட்டார் என்றும், அவரது உடல் மட்டும் கிடக்கிறது என்றும் சொல்கிறோமே? அப்படியானால், நான் என்னும் சொல்லின் பொருள் உடலையும் தாண்டியதாக அல்லவா இருக்க வேண்டும்?’
‘ஆம், ஒப்புக் கொள்கிறேன். உடலுக்கு உள்ளே மனம் இருக்கிறது.’
‘அப்படியானால், உடல் வெளியில்தான் உள்ளது, அது ஒரு உடமை மட்டுமே என்பதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா?’
ஒப்புக்கொண்ட பார்வையுடன் அய்யாவைப் பார்த்திருந்தேன்.
அய்யா கேட்டார். ‘அப்படியானால், நான் என நீங்கள் சொல்வது, உங்கள் மனதையா?’
‘இருக்கலாம் அய்யா! ஆனாலும் சரியாகத் தெரியவில்லை. ஏனென்றால், என்னுடைய மனம் சரியாக இல்லை, என்னுடைய மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றெல்லாம்,. மனதையும் ஒரு உடமையாகத்தான் நான் பார்க்கிறேன்!’
உண்மையிலேயே என்ன சொல்வதென்று தெரியாமல் இருந்தேன்.
‘அய்யா, என்னையே பார்ப்பதற்கு எந்தக் கண்ணாடி தேவை? நான் வெளியில் இருக்கும் கண்ணாடியைய்ச் சொல்லவில்லை!’.
கண்களில் ஒரு மின்னலைக் காட்டி அய்யா சிரித்தார்.
‘உங்களைக் காட்டும் கண்ணாடியும் உங்கள் மனம் தான். குறிப்பிட்டுச் சொன்னால், உங்கள் மனதின் ஒருபகுதி. பொதுவாக மூடிக் கிடக்கும் அந்தப் பகுதிதான் உங்களின் உள்ளிருக்கும் கண்ணாக மலர்ந்து, உங்களை உங்களுக்கே காட்டித் தருவது.’
‘எப்படி அந்த அகக்கண்ணைத் திறப்பது?’ அவசரமாகக் கேட்டேன்.
‘வெல், முதலில் அப்படி ஒரு அகக்கண் இருக்கிறது என்பதை நீங்கள் உறுதியாகத் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு அது ஏன் மூடிக் கொண்டிருக்கிறது என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.’
‘ஏன் மூடிக் கிடக்கிறது?’
‘அகக்கண் மூடியிருக்கவில்லை. அதனை மற்ற குப்பைக் குவியல்கள் எல்லாம் மூடி மறைத்துக் கொண்டு இருக்கின்றன. அதனால், அகக்கண்ணால் பார்க்க முடிவதில்லை.’
‘தினம் மனதில் வரும் எண்ண ஓட்டங்களை எல்லாம் குப்பைகள் என்றா சொல்கிறீர்கள்?’
‘எண்ணங்களின் தொடர்ச்சிதான் மனம். ஆனா எண்ணங்கள் எல்லாம் குப்பைகள் அல்ல. எப்படியான எண்ணங்கள், என்ன பாவனையில் வரும் எண்ணங்கள் எனப் பார்த்தால், அவற்றில் பெரும்பான்மை-யானவைதான் குப்பைக் குவியல்களாக மனதில் நிரம்பி, அகக் கண்ணை மறைக்கின்றன. இப்படி மனதில் குப்பைகள் இருக்கிறது என்பதையும், மனதுக்குள் அகக்கண் மூடிக் கிடக்கிறது என்பதையும் நமக்குக் காட்டவும், நமக்கு ஒரு கண்ணாடி தேவைப் படுகிறது.’
நான் ஆர்வத்தால் குமைந்திருந்தேன்.
‘வேதங்களும், நல்ல குருவும் தான் அந்தக் கண்ணாடி. அதன் மூலம், உங்களின் உள்ளே குவிந்த அழுக்கையும், அவற்றின் பின்னால், அழகைக் காட்டும் அகக்கண் இருப்பதையும் நீங்கள் பார்க்க முடியும். குரு அப்படிக் காட்டி, நமக்குள் ஒரு உத்வேகத்தைக் கொடுத்து, உள்ளத்தைச் சுத்தப்படுத்த ஒரு நல்ல காரணமாக ஆகிறார்.’
‘அய்யா, நான்-யார் எனும் கேள்விக்கான விடை தேடலுக்கு, மனச்சுத்தம்தான் முதற்படி என்று சொல்கிறீர்கள். அப்படித்தானே?’
‘நிச்சயமாக, ஆனால் அது எளிதான செயல் அல்ல. பிறருக்கு நல்லது செய்வது முதலான பல தர்ம நெறிகள் எல்லாமே, மனத் தெளிவுக்காக மட்டுமே!’
‘கடவுளை வணங்குவது?’
‘அதுவும் தான்! ஆனால் கடவுளை வணங்குவது, உலகத்தில் இதைக் கொடு, அதைக் கொடு என வியாபரம் செய்வதற்காக இருந்தால், அவற்றால் நீங்கள் கேட்ட பொருட்கள் கிடைத்தாலும் கிடைக்கலாம், நான்-யார் எனும் கேள்விக்கான மனத் தெளிவு வராது.’.
‘அய்யா, நான்-யார் என நீங்களே சொல்லி விடுங்களேன்’.
‘அது நீங்களே உங்களுக்குள் கண்டுபிடிக்க வேண்டியது. ஆனால், அது மிகவும் உயர்ந்த பலனைத் தரக்கூடியது என்பதை மட்டும் உறுதியாகத் தருகிறேன்.’
மேலும் உந்தப்பட்டுக் கேட்டேன்/
‘அய்யா, நான் யார் எனக் கண்டு கொள்வதற்கு ஏதெனும் அடையாளங்களையாவது தருவீர்களா?’
அய்யா மீண்டும் பலமாகச் சிரித்தார்.
‘அதைச் சொல்லா நான் யார்? அதை எல்லாம் வெளிச்சம் போட்டு வேதங்கள் காட்டி, கூவிக் கூவிக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் நம்முடைய காதுகள்தான் செவிடாக இருக்கிண்றன.’
மௌனம் அங்கே சில நிமிடங்கள் நிரம்பின.
அய்யா மேஜையில் இருக்கும் புத்தகத்தைக் கையால் காட்டிக் கேட்டார்.
‘அந்த மேஜையில் என்ன இருக்கிறது?’
‘புத்தகம் இருக்கிறது’.
‘அந்தப் புத்தகத்தைக் கிழித்து அங்கே போட்டால், பிறகு அங்கே என்ன இருக்கிறது?’
‘ம்ம்… காகிதக் குவியல் இருக்கிறது என்பேன்`.
‘அந்தக் காகிதங்களை எல்லாம் அங்கேயே நான் எரித்துச் சாம்பல் ஆக்கிவிட்டால்?’
‘அப்படியானால் அங்கே சாம்பல் இருக்கிறது. அய்யா, இதெல்லாம் எதைச் சொல்கிறது?’
‘இதிலே பாருங்கள், உங்களுடைய பதில்களில் எல்லாம், ஏதோ ஒருபொருள் இருக்கிறது என்றே சொல்லி வந்தீர்கள், இல்லையா? ஒரு புத்தகம், காகிதக் குவியல், சாம்பல் என்று. அதாவது ஒன்று தொடர்ந்து எப்போதும் இருக்கிறது.’
‘ஆமாம்!’ எனக்குள் ஆர்வம்.
‘இருத்தல் என்பதை நீங்கள் உணர்த்தச் சொல்லிய சொல் இருக்கிறது என்பது. அந்த இருக்கிறது என்பதுதான் நிலையான உண்மை. ஆனால் அதன் தோற்றம் மாறிக் கொண்டே இருக்கிறது என்பதும் நிலையான உண்மை. தோற்றம்தான் நிலையற்ற உண்மை.’
கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தேன்.
‘இருக்கிறது என்பதே சத்தியம்.. தோற்றங்கள் தான் அழியும்,. இருக்கிறது எனும் உண்மை அழியாது. உங்களின் தேடலில், இதனை ஒரு அடையாளமாக வைத்துக் கொள்ளுங்கள்.’
‘அய்யா, அப்படியானால், நான் எப்போதும் இருக்கிறேனா?’
‘எப்போதும்! எப்போதும் இருத்தல் என்பதே எல்லாவற்றிலும் உள்ள உண்மை. எல்லாமுமாக இருப்பதாலேயே ஈஸ்வரன். எல்லாவற்றிலும் இறைந்து இருக்கிறது என்பதே இறைவன். எனவே நான்-யார் எனும் உங்களின் தேடலில், எது உங்களிடத்தில் எப்போதும் அழியாமலே இருக்கிறது என்பதைக் கவனித்துப் பாருங்கள். அதுவே நான்-யார் எனபதன் விடையை நோக்கி உங்களைக் கொண்டு செல்லும்.’
மகிழ்ந்து வியந்து நான், அதற்கான க்யாரண்டியையும் கேட்டேன்
‘அய்யா, நான் எப்போதும் இருக்கிறேனா? மரணம் எனக்கு இல்லையா?’
‘நீங்கள் சாகவே மாட்டீர்கள். உங்களுடைய தோற்றம் காலப் போக்கில் மாறிவிடும். இதில் உள்ள வித்தியாசத்தை ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள். மரணம் என்பது உங்களைச் சார்ந்த மற்றவர்களுக்கு வேண்டுமானால் ஒரு சில காலங்களுக்குத் துயரத்தைத் தரலாம், ஏனெனில் அவர்களுக்கு உங்களுடைய தோற்றம் இல்லாமற் போய்விட்டது என்பதால். ஆனால் புரிந்து கொண்டுவிட்ட உங்களுக்கு மரணம் இல்லை! அதனால் துயரம் இல்லை!’
நாங்கள் வெறுமனே அமர்ந்து இருந்தோம். ஓர் நல்லமைதி அங்கே நடனமிட்டுக் கொண்டிருந்தது. முதன்முறையாக எனக்குள் ஓர் பயமின்மையும், அதே சமயம், படபடப்பான சுகமும் இருந்தன.
அப்போதுதான் கீர்த்தி தன் காதுகளில் மாட்டியிருந்த இயர்ஃபோனைக் கழட்டிவிட்டுக் இதமாகக் கேட்டாள்.
‘என்ன ஆச்சு! எல்லோரும் அமைதியாய் இருக்கேள்!’
நான் அவளைப் பார்த்துச் சிரித்து விட்டு அய்யாவிடம் கேட்டேன்.
‘அய்யா, நான்-யார் எனும் ஆய்வுக்கு வேறு அடையாளங்கள் இருந்தால் தருவீர்களா?’
அவளுடைய பங்கிற்குக் கீர்த்தியும் கேட்டாள்.
‘சிவோகம் அப்படினா என்ன?’
அய்யாவின் பதிலுக்காகக் காத்திருந்தோம்.

மீ. ராஜகோபாலன்
26-December-2018

Related Posts

Share this Post