33-தெய்வத்தின் மகள்கள்
தெய்வத்தின் மகள்கள்
ஐயாவுடன் உரையாடல் (33)
“கவலைப்படுகிறீர்கள் போலிருக்கிறதே”, ஐயா என் தோளில் மெதுவாகத் தட்டிக் கொண்டே கேட்டார்.
எப்போதும் போல, அவரைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தது.
“இல்லை ஐயா, கவலைப்படவில்லை! முடிவான தீர்வு தேவைப்படுகின்ற ஒன்றைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன்! இப்போது நீங்கள் இங்கே வந்துவிட்டதால், முடிவு கிடைத்தாக நான் நிம்மதியாக இருக்கிறேன்.”
ஐயா சிரித்தார்!
“இப்பொழுது எந்தக் குற்றத்தைச் செய்துவிட்டாதாகக் கவலை?”
நான் சிரித்தேன்.
“இது ஒரு குற்றமாக இருக்காது என்று நம்புகிறேன். கடந்த ஞாயிறு அன்று, மஹா ருத்ர ஜப யக்ஞம் முடிந்த பிறகு, என் மனதில் ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது.”
“ஆமாம், நானும் அந்த வைபவத்தை இண்டர்நெட்டில் லைவ் ஸ்ட்ரீமாகச் சில நிமிடங்கள் பார்த்தேன்! இங்கிலாந்தில் அப்படி ஒரு நல்ல நிகழ்ச்சி நடப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதுவும் சிறு குழந்தைகள், சிறுமிகள் உட்பட ஸ்ரீ ருத்ரம் ஓதுவதைப் பார்க்கையில் மிகவும் வியப்பாக இருந்தது.”
ஐயாவால் என் மனதுள் எழும் எண்ணங்களைப் படிக்க முடியும் என்ற உணர்வு எனக்கு எப்போதும் உண்டு. இப்போதும் அதைத்தான் அவர் செய்கிறாரோ என யோசித்தேன்!
“ஐயா, அதுதான் எனக்குப் பதிலைத் தேடும் கவலையைத் தூண்டியது.”
நான் படபடத்துச் சொன்னேன்!
“அன்று ஆர்வமுடன், ஒரு சில தாய்மார்கள் மற்றும் சிறுமிகள் தாமாக முன்வந்து ஸ்ரீ ருத்ரம் ஓதுவதைப் பலரும் பாராட்டினாலும், ஒரு சில அறிஞர்கள் அதனைப் ‘பாபம்’ என்று கருதினார்கள் என்றால், அதனால் கவலை கொள்ள வேண்டியது அவசியமில்லையா?”
ஐயா சிரித்தார்!
“பாபம்? ம்ம்ம்…. அது ஒரு பெரிய வார்த்தை! ஒன்றை விழைந்து ஆவலினால் நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலிலும், ‘புண்யம்’ மற்றும் ‘பாபம்’ ஆகிய இரண்டும் விளைகின்ற சாத்தியம் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அப்படி இருக்கும்போது, ஒரு சிலர் ‘பாபம்’ என்பதையே பொருட்டாகப் பார்த்தால், அப்படியே பார்த்துவிட்டுப் போகட்டும், அதில் உமக்கு என்ன கவலை?”
“ஐயா! பெண்டிர் வேதமந்திரங்களைச் சொல்வது பற்றிய பல விவாதங்கள் என்றுமே உள்ளன என்பதை நான் அறிவேன், மேலும் பல ஆசார்யர்கள் கூட, இதற்கான பதிலை வெவ்வேறு கருத்துக்களால் வெவ்வேறு விதமாக வலியுறுத்துகின்றனர். என்னுடைய கேள்வி இதுதான்: வேதமந்திரங்களைச் சொல்லப் பெண்களுக்குத் தகுதி இல்லையா? அதிலும் குறிப்பாக ஸ்ரீ ருத்ரம் சொல்வது…?”
ஆவலுடன் ஐயாவைப் பார்த்தேன்.
“வேதமாகிய சுருதியில் அத்தகைய நியமங்கள் எதுவும் நேரடியாகக் கொடுக்கப்படவில்லை என்பதே என் அறிவுக்குள் தெரிவது. ஆனலும், பெண்கள் வேதம் கற்பதைத் தடைசெய்யும் தெளிவான சில உத்தரவுகளையும் ஒரு சில ஸ்மிருதிகளிலும், புராணங்களிலும் காணலாம். இதற்குப் பகவான் பாதராயணரை மேற்கோள் காட்டிப் பல ஆச்சார்யர்கள் கூறியிருப்பதையும் கேள்விப்பட்டிருக்கலாம்.”
ஐயா ஒரு ஸ்மிருதி வாசகத்தைச் சொன்னார்.
“ஸ்த்ரீ ஸுத்ரா த்விஜபந்தூனாம் த்ரேயி ந ஸ்ருதிகோசரா |
கர்மஸ்ரேயசி மூதானாம் ஸ்ரேய ஏவாம் பவேதிஹா |
இதி பாரதமாக்கியனாம் க்ருபயா முனினா க்ரதம் ||”
அந்த ஸ்ம்ருதி வசனத்தைச் சொல்லிவிட்டு என்னைப் பார்த்தார்.
“ஐயா, ஆனால் இது ஒரு கருத்துக் குழப்பமாகத் தெரியவில்லையா?”
“அப்படித்தான் இருக்கிறது! ஸ்ருதியாகிய வேத்தில் குறிப்பிடப்பட்ட, மற்றும் ‘பிரம்மவாதிநிகள்’ என்று போற்றப்படுகின்ற லோபமுத்ரா, வாக், ஷ்ரத்தா, யாமி போன்ற பல பெண்டிர்கள் எல்லாம் வேதச் சான்றோர்களாக இருந்திருக்கிறார்கள்! அவர்கள் வேதம் பயின்றவர்கள் மட்டுமல்ல, வேதங்களின் ஆழ்ந்த உண்மையினை தெளிவுபடுத்துகின்ற போதகர்களாகவும் இருந்துள்ளனர்.”
“ஐயா, ஆனால், வேதம் ஓதுவதற்கும், ‘வேதாத்யானம்’ செய்வதற்கும் தகுதி பெற, ‘உபநயனம்’ மற்றும் பிரம்மச்சரிய-ஆஸ்ரமத்தில் ஈடுபட்டிருத்தல் போன்ற முன்நிபந்தனைகள் எல்லாம் இருக்கின்றன, இல்லையா?”
“ஆம்! எனவேதான் சொல்கிறேன், அந்த நாட்களில், இந்த முன்நிபந்தனைகள் எல்லாம் ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவருக்கும் பொருந்தக்கூடியதாக இருந்திருக்கலாம்! அப்படி இருந்ததற்கும் பல சான்றுகள் உள்ளன.”
“ஐயா, ‘உபநயனம்’ என்பது பிராமணராகப் பிறந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றல்லவா நான் நினைத்தேன்?”
ஐயா தனது புருவங்களை உயர்த்தியபடி பதில் கூறினார்:
“பிராமணனாகப் பிறப்பதா! அப்படி இல்லை, இல்லை! பிராமணனாக இருப்பது என்பது பிறப்புரிமை அல்ல! அது ஒருவரால் மனதார ஏற்றுக் கொள்ளப்பட்ட கடமை! ஒருவர் தாம் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை முறையிலிருந்து அடைகின்ற தகுதி! அது ‘சங்கல்பம்’ எனும் தெய்வ சாட்சியான உறுதியை எடுத்துக்கொள்வதன் மூலம் அடையப்படுவது. வேத காலத்தில், பாரத நாட்டில் அனைவரும் தமது குணத்திற்கு ஏற்பத் தமக்கு விருப்பமான வாழ்க்கை முறையைத் தொடரவும், அதே சமயம் சமூகத்தின் பொது நலனுக்கான தேவைகளைப் பூர்த்தி செய்யவும், எடுத்துக் கொள்ளும் உறுதி மொழியைத் தருவதற்கே, ‘உபநயனம்’ எனும் வைபவம் இருந்து. அது அதனை ஏற்பவர்களின் ‘இரண்டாவது பிறப்பு’ – அதாவது ‘த்விஜஹா’- என்பதாகக் கொடுக்கப்பட்டது. வேத காலங்களில், இந்தச் சடங்கு அனைவருக்கும் பொதுவானது.”
ஐயா தொடர்ந்தார்.
“வேத காலத்தில், உபநயனம் எனும் இரண்டாம் பிறப்பைப் பெற்றவர்கள், அதற்கப்புறம் மூன்று வழிகளில் தங்களின் வாழ்வைத் தொடரலாம். அவை: வேத அறிவைக் கற்றும், அதனை அனைவர்க்கும் கற்றுக் கொடுத்தும், அறவழியைக் காட்டுகின்ற வாழ்க்கை, அல்லது மற்றவர்களின் பாதுகாப்பிற்காகத் தன்னையே முழுமையாகத் தியாகம் செய்கின்ற தியாகப் பொறுப்புடைய வாழ்க்கை, அல்லது அனைவரின் நலனுக்காகவும் செல்வ வளத்தை உருவாக்குவதற்கும், பரிமாற்றம் செய்வதற்கும் உறுதியளிக்கின்ற சேவையாகிய வாழ்க்கை என மூன்று ஆகும். இந்த மூன்று அணுகு முறைகளுமே முறையே ‘பிராமணர்’, ‘க்ஷத்திரியர்’ மற்றும் ‘வைசியர்’ என மூன்று வர்ணங்களாக அறியப்பட்டன. அதாவது ஒவ்வொரு வர்ணமும், அவரவர் செயலாற்ற ஒழுக்கத்தை ஒட்டிய தெளிவான பிரிவினால் பகுக்கப்பட்டும், ஒவ்வொரு வர்ணத்தினரும் ஒழுக வேண்டிய கடுமையான நடத்தை நெறிமுறைகளால் தொகுக்கப்பட்டும் இருந்தன. அப்படி உபநயனம் ஏற்காத மற்ற அனைவரும், எப்படிப் பிறப்பில் எல்லா மனிதர்களும் இருந்தார்களோ, அதுபோல ‘சூத்திரர்’ என்றே இருக்கட்டும் என விதித்திருந்து. இந்த நான்காவது வர்ணமானது மற்ற மூன்று வர்ணங்களுக்கு உதவ வேண்டிய கடமையைத் தவிர வேறு எந்தக் கடுமையான ஒழுக்கங்களாலும் கட்டுப்படுத்தப்படவில்லை. எனவே ‘உபநயனம்’ என்பது ஒரு காலத்தில் ஆண், பெண் என அனைவருக்கும் பொதுவான சடங்காகவே இருந்திருக்கிறது.”
“ஐயா, இந்த வர்ணாசிரம ஒழுக்கத்தில், மேலானது கீழானது எனும் பாகுபாடுகள் இருந்தனவா? அப்படி இருந்ததாகவே பலராலும் கருதப்பட்டு, அதனால் அது அநீதியான செயலாகிறது எனவும் இன்னும் விமர்சிக்கப்படுகிறதே!”
“வேத காலங்களில், இப்படிச் சமுதாய நலம் சார்ந்து விதிக்கப்பட்ட வர்ணாஸ்ரம தர்மங்களுக்கிடையில் அப்படி எவ்விதப் பாகுபாடும், உயர்வு தாழ்வும் இருக்கவில்லை! ஆனால், வழி தவறி, பிறப்பின் அடிப்படையில், சாதி எனும் கருத்துத் திணிப்பால், ஏற்றுக்கொள்ள முடியாத அநீதி இழைக்கப்பட்டு, சமூக ஒற்றுமையை அறுக்கும் விதமாக, தேவையற்ற சண்டைகளும் ஏற்பட்டுவிட்டன என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்! ஆனால், அத்தகைய கசப்பான பார்வைகள் முற்றிலும் தவறானவை.”
ஐயா தொடர்ந்தார்.
“உயர்வு தாழ்வு இல்லை! வேறுபாடு உண்டு என்றால், அதுவும், அவரவரின் ஒழுக்க விஷயத்தில்தான். உதாரணமாக, உலக இன்பங்களை அனுபவிப்பதில், பிராமணர்கள் அதிகபட்சக் கட்டுப்பாடுகளைக் கடைபிடிக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் மிகவும் எளிமையான வாழ்க்கையை நடத்த வேண்டும், அறவழி நடந்து, எல்லா உயிர்களுக்கும் அன்பு செலுத்தி, சன்மார்க்கத்தில் மற்றவர்களுக்கு முதன்மையான முன்மாதிரியாக இருக்க வேண்டும் என நியதி இருந்தது. அது போலவே, பிறருடைய பாதுகாப்பிற்காகத் தங்கள் உயிரையும் தியாகம் செய்யும் க்ஷத்திரியர்கள், மக்களை ஆள்பவராகவும், அறம் காப்பவராகவும் இருந்து, உயர்ந்த சுகங்களை அனுபவிக்கும் பயனையும் பெற்றவராகினர். வைசியர்களுக்கும் வேத நியமங்கள் இருக்கின்றன. குறிப்பாக மற்ற அனைவருக்கும் வேலை செய்தாலும், சூத்திரர்களுக்கு மட்டுமே எல்லாவித உலக இன்பங்களையும், அனுபவிப்பதற்கு எந்தவிதமான தடையும் இல்லை! அறவழியில் அனுபவிக்க வேண்டும் என்பது மட்டுமே விதி! எனவே நீங்கள் தேர்வு செய்யும் வாழ்க்கை நெறிக்கேற்ப, ஒழுக்கமும், சுதந்திரமும் வரையறுக்கப்பட்டிருந்தன.”
“ஐயா! அப்படியானால், வர்ணாசிர தர்மம் என்பது வேத காலத்தில், ஒவ்வொருவாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளக் கூடிய வாழ்க்கை முறையாக இருந்தது, பிறப்பால் அல்ல என்பது சரியா?”
“ஆம்! பிராமணர், க்ஷத்திரியர் மற்றும் வைசியர் ஆகிய மூவருக்கும் வேதங்களைப் படிக்கும் உரிமை இருந்தது! மேலும் அனைவரும் வேதங்களைப் படித்திருப்பதற்கான சான்றுகள் இருக்கின்றன. ஆனாலும், வேதங்களில் உள்ள அறிவு முடிவற்ற கடலாக இருப்பதாலும், மனித வாழ்வு குறுகிய காலமாக இருப்பதாலும், ஒவ்வொரு வர்ணத்தாரும், தங்கள் வாழ்க்கை முறைக்கும், வாழ்க்கைத் தேவைகளுக்கும் அவசியமானவற்றை மட்டுமே வேதங்களில் படிக்கத் தேர்ந்தெடுத்தனர்.”
“அவை என்ன?”
“இவ்வுலகிலும், மறுவுலகிலும் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துவதற்கான வழிமுறைகள் எதுவோ அவையே அனைவருக்கும் முதன்மையான குறிக்கோள். வேதங்கள் அவற்றை, ‘தர்மம்’, ‘அர்த்தம்’, ‘காமம்’ எனும் அறம், பொருள், இன்பமாகிய மூன்று இலக்குகளாக் காட்டி, அவற்றை அடைவது ‘சரீரம்’ எனும் உடலால் என்பதால், உடலாற் செய்ய வேண்டிய கர்மங்களை எல்லாம் தருகின்றன. அதனால்தான் ‘வேதா-பூர்வா’ எனப்படும் வேதங்களின் முற்பகுதி ‘கர்மகாண்டம்’ என்றும், அதற்கான விளக்கங்கள், ‘சாரீரகபாஷ்யம்’ எனவும் கூறப்படுகின்றன. இவையே கர்மச் சடங்குகளுக்கும் வழிகாட்டுகின்றன. உங்களுக்குப் புரிகிறதா?”
“புரிகிறது ஐயா, ஆனால் என் கேள்வி பெண்கள் வேதம் ஓதுவதுபற்றி அல்லவா? அதற்கும், வேத பூர்வம் உடலுக்கான கர்மகாண்டம் என்பதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது?”
“இருக்கிறது! உடலாற் செய்யப்படுவன எல்லாம், உடலின் தன்மையையைப் பொருத்தும், அவற்றில் ஏற்படும் மாற்றங்களை அனுசரித்தும் அமைய வேண்டும்! அதற்கான தேவை உள்ளது. ஆண்-பெண் எனும் இரு சாராரையும் ஒப்பிட்டால், சில விஷயங்களில், ஒரு சாரார் வலிமையானவர்கள், மறு சாரார் பலவீனம் ஆனவர்கள்! அதனால்தான் வேதச் சடங்குகளும், துறவுகளும் யாரால் எதனை முறையாகச் செய்ய முடியும் எனும் இயற்கை விதிக்கொப்ப வரையறுக்கப்பட்டு, அதற்கான அறிவுரையும் தரப்பட்டன.”
ஐயா ஒரு சில நிமிடங்கள் கழித்துச் சொன்னார்.
“ஆனால், நிச்சயமாக, அத்தகைய வழிகாட்டுதல்கள் எல்லாம் காலப்போக்கில், நடைமுறையில் தடை உத்தரவுகளாக மாறியுள்ளன! இன்று வேத நியமத்தின் ஆலோசனைகளும் ஆணைகளாக ஆக்கப்பட்டுவிட்டன. வேதகாலத்தில், வெவ்வேறு வர்ணங்களைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும், அவர்களுக்கான ஒழுக்கத்தில் தெளிவாக இருந்த காலத்தில், அவர்களுக்கு உகந்த, தனித்துவமான பாதைகள் இருந்தன. குழப்பம் இருக்கவில்லை!”
“ஐயா, அப்படி வேத காலத்தில் இருந்திருக்கலாம். ஆனால் நவீன காலத்தில் அவை பொருந்தாது.”
“நிச்சயமாக! அதனால்தான் வழிமுறை அறிவு-நூல்களாக பல ஸ்ம்ருதிகள், எப்பொழுதும் மாறுதலை ஏற்பனவாக உள்ளன! அதனால்தான் நமது சாத்திரமும், அதை ஒட்டிய நமது கலாச்சாரமும் எப்போதும் புதியதாக இருக்க முடிகிறது. அதனால்தான் நம்முடையது ‘ஸனாதன தர்மம்’ என்று அழைக்கப்படுகிறது. நமது கொள்கைகள் மூர்க்கத்தனமானதும், பழமையில் பாழடைவதும், திணிக்கப்படுவதும் அல்ல! மாறாத பேருண்மைக்காக, மாறுதலடைகின்ற காலத்திற்கேற்ற வழிமுறையில் அறம் வளர்க்கின்ற நடைமுறை நமது அணுகுமுறை.!
“ஆமாம் ஐயா! ஆனால் நவீன காலத்திற்கு பொருந்தாத விதிகள் நம்மிடம் இன்னும் உள்ளனவே!”
“ஆம்! அத்தகைய நடைமுறை விதிகளை நாம்தான் மரியாதையுடனும், அறிவுடனும் விசாரித்து, செய்யும் சடங்குகளின் புனிதம் மாறாத வகையில் மாற்றிக் கொள்ள வேண்டும்! நிச்சயமாக வேதச் சடங்குகளைச் செய்து வழிகாட்டுகின்ற பெரியோர்களைக் கேட்டே அதற்கான தெளிவினை அடைய வேண்டும்.”
ஐயா தொடர்ந்து கூறினார்:
“ஆனால் ஆன்மீகப் பாதையில் பயணம் செய்பவர்களுக்கு அப்படியான நிபந்தனைகள் இல்லை.”
“எனக்கு புரியவில்லை ஐயா.”
“நல்லது, இக்காலத்தில், வர்ணாசிரம வழிமுறையும், அதை ஒட்டிய ஒழுக்கமும் வேத காலத்தின்படி நடக்கச் சாத்தியமில்லை. பிறந்த சாதியின் அடிப்படையில் வர்ணாசிரம வாழ்க்கை முறை என்பது நிராகரிக்கப் படுகிறது என்பதாலேயே, ‘வர்ணாசிரம தர்மம்’ தொடர்புடைய அனைத்தும் தொலைந்து போய்விட்டதாக நாம் தவறாக முடிவு செய்யக் கூடாது. ஏனெனில், ஆழமாகக் கவனித்தால், நாம் ஒவ்வொருவருமே, அன்றாட வாழ்க்கையில், நமக்குள்ளேயே ஒவ்வொரு வர்ணத்தின் பண்புகளையும் கொண்டவர்கள் ஆகிறோம்.”
“எப்படி ஐயா?”
“நாம் இறையருளைத் தேடியும், எல்லா உயிர்களுக்கும் கருணை செய்தும், எல்லாவற்றிலும் தெய்வீகத்தைத் தேடவும் முயலும் ஒவ்வொரு செயலின் போதும் பிராமணர்களாக இருக்கிறோம்! அறவழி காத்து நமது உடல்,பொருள், ஆவி என எதையும் தியாகம் செய்து மற்றவர்களின் நலம் காக்க விழையும் போதெல்லாம், நாம் எல்லாம் க்ஷத்ரியர் ஆவோம்! அனைவரின் நலனுக்காகவும் செல்வத்தை உருவாக்கவும், அவற்றை அறம் வழுவாமல் பரிவர்த்தனை செய்யவும் உழைக்கும்போது, நாம் வைசியர் ஆகிறோம்! பிறரிடம் ஊதியத்திற்கு உழைத்துப் பணிவிடை செய்கின்றபோது, நாம் எல்லாம் சூத்திரர்கள் ஆகிறோம்! ஆகவே, ஒரு குறிப்பிட்ட குடும்பத்திலோ அல்லது சாதியிலோ பிறந்ததால் அல்ல, நல்லறத்தைச் செய்வதற்காகவே நாம் அனைவரும், எத்தொழில் செய்தாலும் சரி, வேத தர்மத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். வேதங்கள் எல்லா நேரங்களிலும், எல்லா மனிதர்களுக்கும் துணை தருபவை ஆகும்.”
“அது எப்படி ஐயா? வேதச் சடங்குகள், வேத நம்பிக்கைகள், வேத கர்மாக்கள் – இவை அனைத்தும் இந்துக்கள் அல்லாத அனைவருக்கும் எவ்வாறு பொருந்தும்? தொலைதூர நிலத்தில் பிறந்த ஒருவர் எப்படி வேதங்களைத் தங்கள் வாழ்க்கையின் வழிகாட்டியாகக் கருத முடியும்? குறிப்பாகப் பல வேதச் சடங்குகள் மற்றவர்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்திற்கு முற்றிலும் அந்நியமானவை அல்லவா? எனவே வேதங்கள் எப்படி உலகளாவியதாக இருக்க முடியும்?”
“இது ஒரு நியாயமான கேள்வி. வேதச் சடங்குகள் இந்துக்களுக்கானதாகவே தெரிகின்றன. அதுவும் இந்த நவீன காலத்தில், ஒரு இனம் அல்லது சமுதாயத்தின் அறிவை எப்படி உலகளாவிய அறிவு என்று கூற முடியும்!”
எனது கேள்வியை ஆமோதிப்பதுபோல், ஐயா திரும்பச் சொன்னார். பிறகு பதிலளித்தார்.
“வேதம் என்பது ஒரு பெரிய வனம் போன்றது. அது ‘வேதாரண்யம்’ ஆகும்! அதன் பரப்பளவு எல்லையற்றது! ஆழமானது. அத்தகைய வேதத்தின் தெய்வீக சப்தங்கள் சத்தியத்தினை விழைந்து தியானம் செய்து கொண்டிருந்த பாரதப் புண்ணிய பூமியின் முனிவர்களால், (உண்மையப் பார்க்கின்ற பார்ப்பனர்களால்) மட்டுமே கேட்கப்பட்டன! அப்படிக் கேட்டவற்றை, அந்த முனிவர்களே, தங்கள் வாயொலியின் வெளிப்பாடாகவும், மற்றவர்கள் கேட்கின்ற ‘ஸ்ருதி’ ஆகவும் பிரச்சாரம் செய்தனர். அதனால்தான், வேத பூர்வ மந்திரங்கள், உரைகள் எல்லாம் அவர்கள் வாழும் நிலம் மற்றும் அவர்களின் வாழ்க்கை நிலைமைகளுக்கு ஏற்றவாறு பரிமளிக்கின்றன. எனவே, பாரதத்தில் பிறக்காதவர்களுக்கு அல்லது பரம்பரையாகப் பாரத்தின் வாழ்க்கை முறையைப் பேணாதவர்களுக்கு, அந்த வேத பூர்வத்தின் பெரும்பகுதி உடனடியாகப் பொருந்தாது என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன்.”
ஐயா தொடர்ந்தார்.
“ஆனால் ‘வேதாந்தம்’ எனும் வேதத்தின் கடைசி அல்லது முக்கிய பகுதி, வேத்தின் முதலில் இருக்கும் பகுதியைப்போல ‘சரீரம்’ பற்றியது அல்ல! அது, ‘ஆத்மா’ பற்றியது. ‘ஆத்மா’ எல்லா உடலுக்குள்ளும் ஒளிர்ந்து, எல்லாச் சட உடலையும் உயிர்ப்பிப்பது! தூய்மையான விழிப்புணர்வின் பிரகாசமாகிய ‘ஆத்மா’ மட்டுமே உலகின் அனைத்துப் பொருளாக்கத்திற்கும் காரணமாகும். அந்த ஆத்மா பிரிக்க முடியாதது, எல்லையற்றது, பற்றற்றது, நித்தியமானது, எல்லாவற்றிலும் வியாபித்துள்ளது! மற்றும் அனைத்தையும் உள்ளிழுக்கும் உண்மையும் அதுவே! இதை எல்லாம் நீங்களும் அறிவீர்கள்! அதனால்தான் ‘வேத அந்தம்’ என்பது ‘வேத பூர்வம்’ போல இல்லாமல், உலகில் அனைவருக்கும் பொருந்திய, உலகளாவிய பேருண்மை! வேதம் என்பது அதனால், வேத முடிவும், வேத மகுடமும் ஆகிய வேதாந்தத்தினாலேயே அப்படிப் பொதுத்தன்மையையும், சிறப்பையும் அடைகிறது! தெரிந்து கொள்ளுங்கள்: வேதம் என்பது ‘இந்துப்’ புத்தகமும் அல்ல. இது முழு மனிதகுலத்திற்கான ‘முழுமையான’ வெளிப்பாடு. நம்மிடையே அது பரவி இருப்பதால், அது நமக்குப் பெருமை தருவதாக இருந்தாலும், அது உலகில் உள்ள எல்லா மனிதர்களின் சொத்து! அதனை அறியவும், படிக்கவ�
