Log in to download as PDF

(Read in ENGLISH)

ஆத்மராமர்

ஐயாவுடன் உரையாடல் (34)

“ஆமாம் ஐயா, இது ஒரு அழகான நாள், மனதை மயக்கும் பஜனை மற்றும் பூஜை முதலியன நிறைந்து, சுவையான உணவுப் பிரசாதத்துடன் முடிந்தது. இங்கிலாந்தில், இந்த வாரம் முழுவதும், மிகவும் விமரிசையாக ஸ்ரீ ராமநவமி கொண்டாட்டங்கள் இருந்தன, அவற்றைக் காணும்போது, அவை எல்லாம்  நாம் இந்தியாவில் காண்கின்ற நிகழ்வுகளுக்கு இணையானவை என்று சொல்லித்தான் ஆக வேண்டும். சிறப்பான கொண்டாட்டங்கள்!”

நான், வெகு சில மாதங்களுக்குப் பிறகு சந்திப்பதால்  ஐயாவிடம் ஒரு சுருக்கமான அப்டேட் கொடுத்துக் கொண்டிருந்தேன்.

“ஓ! தெரிந்ததில் மகிழ்ச்சி!  நீங்கள் சொன்ன ‘கொண்டாட்டம்’ என்பதும் சரியான வார்த்தைதான்.  ஏனெனில் நமது பூஜை மற்றும் மதச் சடங்குகள் எல்லாம், நாம் எப்பொழுதும்  ஒரு கொண்டாட்ட நோக்கத்தில்  மனநிலையை வைத்திருக்க வேண்டும் எனும் முக்கியத்துவத்தை மட்டுமே அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.”

“ஆமாம் ஐயா! ஸ்ரீ இராமரின் பிறந்த நாளையும் அதுபோன்ற பிற பெரிய அவதாரங்களையும் நினைவுகூறுவது மிகவும் முக்கியம் அல்லவா!”

புன்னகையுடன் ஐயா கேட்டார்.

“இருக்கலாம்! நீங்கள் ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?”

நான் சொன்னேன்.

“ஸ்ரீ இராமநவமி என்பது பகவான் இராமரின் பிறந்த நாள் கொண்டாட்டம். இராமரின் வாழ்க்கையைப் பற்றி முழு மனிதகுலமும் அறிந்திருப்பது முக்கியம் அல்லவா! இராமரின் வாழ்க்கையை விவரிக்கும் இராமாயணப் பாராயணத்தை கேட்பது நமது கற்றலுக்கும் வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியமானது!”

“நிச்சயமாக!”.

ஐயா தொடர்ந்து சொன்னார்.

“ஆனால் நினைவில் கொள்ளுங்கள்.  மாமுனிவர் வால்மீகி தாம் தொகுத்த  படைப்பான் ஸ்ரீ இராமரின்  உன்னதமான வாழ்க்கை வரலாற்றுக்கு ‘இராமாயணம்’ எனப் பெயர் வைத்தாரே, அதன் பொருள் ‘இராமரின் பயணம்’ என்பதுதானே! சமஸ்கிருதத்தில் ‘அயன’ என்றால் பயணம் என்று பொருள்.”

நான் குறுக்கிட்டேன்.

“ஆம் ஐயா!   ‘உத்தராயணம்’ மற்றும்  ‘தக்ஷிணாயனம்’ போன்ற வார்த்தைகளைப் போலத்தானே!”

“ஆம், இராமரின் பயணம் என்பது, இவ்வுலகில் நாம் மேற்கொள்ள வேண்டிய தர்மப் பாதையைப் பற்றியது!  அப்பாதை நமது வழுக்கல்களிலும் வாய்ப்புகளிலும், துன்பங்களிலும் சுகங்களிலும், பதவிகளிலும் செயல்களிலும், எல்லாச் சமயங்களிலும் கடைபிடிக்கப்பட வேண்டியதாகும்.”

“ஆம் அது தெய்வீக வழியைப் பின்பற்றுவது அல்லவா! ஸ்ரீ இராமர் விஷ்ணுவின் அவதாரம் ஆயிற்றே!”

ஐயா சட்டெனப் பதிலளித்தார்.

“அப்படித்தான் நாமெல்லாம் ஸ்ரீ இராமரை வணங்குகிறோம். அந்த நம்பிக்கை மிகவும்  புனிதமானது. எனினும் நாம் இராமாயணம் தரும் உண்மையைக் கற்றுக் கொள்வதற்குக் குறிப்பாக ஸ்ரீ இராமரைச் சரியாகப் புரிந்து கொள்வதற்கு  அது அவசியமில்லை!”

சிறிது இடைவெளிக்குப் பிறகு ஐயா தொடர்ந்தார்.

“மாமுனிவர் ஆதிகவி வால்மீகி, ஸ்ரீ இராமரை  இறைவனின் அவதாரம் என்று ஓதித் தமது காவியத்தைத் தொடங்கவில்லை!  எனினும், இறுதியில் உறுதியாக ஸ்ரீ இராமர் வேறு யாருமல்ல, சாக்ஷாத் ஈஸ்வரரே  எனவும், உலகில்  அனைவருக்கும் அறவழியை வாழ்ந்து காட்டத் தோன்றிய பேரருள் அவர் எனவும் பணிவுடன் முடிக்கின்றார்.”

பல வேறு இராமாயணங்களை நானும் ஓரளவு படித்திருந்ததால், கேட்டேன்.

“ஐயா, கம்ப-ராமாயணத்தில் மேதகு கம்பர், ஸ்ரீ இராமனை இறைவனின் அவதாரம் எனத் தொடங்கி, அவ்வாறே தமது காவியம் முழுதும்  போற்றுகின்றார்! அப்படித்தானே!”

“ஆம், அது மிகவும் அழகு! மதிப்பிற்குரிய துளசிதாஸரும்  தாம் இயற்றிய காவியமான ‘ஸ்ரீ இராம-சரித-மனஸ்’ எனும் தமது இராமாயணத்தில், ஸ்ரீ இராமர் இறைவனின் அவதாரம் என்றே தொடங்குகின்றார்.  ஆனால் தனது படைப்பின் இறுதியில், ‘மரியாதா புருஷோத்தம்’ என, மனிதர்களில் மேன்மை கொண்டவர் இராமர் எனும் பெரும் வியப்புடனும்  பணிவுடனும்  முடிக்கின்றார்! அதுவும் உங்களுக்குத் தெரிந்திருக்குமே!”

“எப்படி ஆனால் என்ன ஐயா, ஸ்ரீ இராமரே நமது கடவுள்!”

“நிச்சயமாக, அதில் எந்தக் கேள்வியும் இல்லை! நமது சனாதன தர்மத்தில் கடவுள்களுக்கா பஞ்சம்!  பல வடிவங்களிலும், திருநாமங்களிலும், பல தெய்வங்கள் நமக்கு உள்ளனவே! அவை எல்லாம், கடவுள் மட்டுமே உலகின் எல்லா வெளிப்பாடுகளிலும் இருக்கிறார் என்பதைக் கற்பிக்கத்தானே!”

ஐயா தொடர்ந்தார்:

“இங்கே நான் சொல்ல வந்தது என்னவென்றால், வெறும் நம்பிக்கையை மட்டுமே வைத்துக்கொண்டு வழிபாடு செய்வது, சரியான அறிவிற்கான தேடலில், உண்மையை நமது கண்களுக்குக் காட்டாமல் மறைத்திடக் கூடும். அதனால் கற்கின்ற வாய்ப்புகளை நாம் இழக்க நேரலாம்! உண்மையை அறியும்  ஆய்வும், அந்த ஆய்வில் அடையும் உட்பொருளில் மனதின் ஓய்வும்  நடக்க வேண்டும்.  அந்த ஞானவேள்விக்கான பயிற்சிதான் ‘உபாசனா’ எனப்படுவது!”

“ஐயா! வேதச் சடங்குகள் ‘கர்மா’ எனப்படும் அல்லவா?”

“ஆம்!  வேதச் சடங்குகளும் செயல்களும் ‘கர்மா’ எனப்படும்.  அந்தக் கர்மாக்களுடன், உபாசனையையும் சேர்ந்து செய்வது,  ‘கர்ம-உபாஸனா-சமுச்சயம்’ என்று வேதங்களில் காட்டப்படுகின்ற நல்வழி ஆகும். அதனால், செயலின் பயன் அதிகரிக்கும்.”

“ஐயா,  இறை வழிபாட்டில் நாம் செய்கின்ற பூஜை, சடங்குகள் எல்லாம் போதாதா? இதனுடன் தொடர்புள்ள உபாசனா என்றால் என்ன? உபாசனையை எப்படி, எப்போது செய்ய வேண்டும்?”

புது அறிவைத் தவறவிட விரும்பாததால், நான் ஆர்வமாக இருந்தேன்.

ஐயா கூறினார்.

“இதை எளிமையாகப் புரிந்து கொள்ளுங்கள். ‘கர்மா’ என்பது வாக்கு, உடல், மனம் என நமது கரணங்களினால், தேவைக்கேற்ப வெளிப் பொருட்களையும் ஈடுபடுத்திச் செய்கின்ற வேதச் சடங்குகள் ஆகும்.  மனதினால் மட்டுமே,  வெளிப்புற பொருட்கள் எவற்றின் தேவையும் இன்றி, தனக்குள்ளே செய்யப்படும் கர்மத்தின் பெயர்தான்  ‘உபாசனை’ ஆகும்.  அதை ‘மானச கர்மா’ என்றும் சொல்லலாம். ஸ்ரீ இராமநவமியைக் கொண்டாடும் போது, இறைவனுக்குச் செய்யும் பூசைகள், பஜனைகள் என எல்லாமும் கர்மா ஆகும். அதனைத் தொடர்ந்து, ஸ்ரீ இராமரைப் பற்றித் தியானித்தல், அவரது மகிமை, அவரது உண்மை போன்றவற்றைப் பற்றி மனதில் இருத்திப் பூசித்தல் என்பன உபாசனை ஆகும்.”

“அப்படிப்பட்ட உபாசனை எப்போது செய்யப்பட வேண்டும்?”

“எப்போதும் செய்யலாம்! கர்மாவைச் செய்யும்போதே உபாசனையுடன் சேர்த்துச்  செய்வது சிறந்தது! ஆனால்  எல்லா நேரங்களிலும் அது எல்லோருக்கும் சாத்தியமில்லை. எனவே கர்மாக்களை நியமிக்கப்பட விதிகளின்படிச் சரியாகச் செய்து  முடித்த பின்னர் அமைதியாக உபாசனையைச் செய்யலாம். அதில், மந்திரங்களின் கருத்து, ஸ்ரீ இராம நாமத்தின் பெருமை என எதையாவது ஆழ்ந்து தியானிப்பதும் தனக்குள்ளேயே அவற்றைச் சிந்திப்பதும்,   அல்லது சான்றோர்கள் அளிக்கும் விளக்க உரைகளைக் கேட்டு மனதில் பதிப்பதும் செயலாக வேண்டும். அப்படிச் செய்யும் உபாசனை, செய்பவரின் இதயத்தில் நல்மாற்றத்துக்கான தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும்.”

“ஐயா, இப்போது தங்களுடன் நான் உரையாடிச் சிந்திப்பதையும், நான் செய்யும் ஒரு உபாசனையாகக் கருதலாமா?”

“தேடுபவராகவும், ஆசிரியராகவும் நாம் இருவரும்  இருந்து, அதற்கான ‘ஷ்ரத்தா’ நமக்கு இருந்துவிட்டால்… நிச்சயமாக!”

இப்படிச் சொல்லி, ஐயா பலமாகச் சிரித்தார்.

“அப்படியே ஆகட்டும் ஐயா!   ஸ்ரீ இராமநவமி முதலான பண்டிகைகளின் முக்கியத்துவம், அவற்றால் நமக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது என்பதால்தான் அதைச் சொன்னேன்.  மகிழ்ச்சியே எல்லோரின் குறிக்கோள் அல்லவா!”

“உண்மைதான்! ஆனால், மகிழ்ச்சி என்பது கொண்டாட்ட மனநிலையில், நல்ல சூழல், இனிய இசை,  சுவையான உணவைப் பகிர்ந்து கொள்வது என அவற்றில்தான் உள்ளது  என நீங்கள் நினைத்தால், அது ஓரளவே சரி!

“ஏன்?”

“அதை நீங்களே உணர முடியுமே! கொண்டாட்டங்கள் முடிந்தவுடன், நீங்கள் உங்கள் அன்றாட வேலைகளுக்குத் திரும்பிவிடுவீர்களே!  ஸ்ரீ இராமநவமி பண்டிகைக் கொண்டாட்ட மகிழ்ச்சியும்  விரைவில் ஒரு நல்ல நினைவாக மாறிவிடுமே!”

“அது இயற்கைதானே ஐயா!  விழா முடிந்த பிறகு, நமது அன்றாட வாழ்வின் சோதனைகளோடுதான் நாம் இருந்தாக வேண்டும்! அதனால்தான், நமது சனாதன தர்மம், நமக்கு  ஆண்டு முழுவதும் பண்டிகைகள் மற்றும் சமயச் செயல்கள் என வரிசையாகக் கொடுத்து, நம்மை உற்சாகத்தில் ரீசார்ஜ் செய்து கொள்ளச் செய்கிறது! அப்படித்தான் நான் நினைக்கிறேன்.”

“அப்படி உற்சாகத்தை ரீசார்ஜ் செய்துகொள்ள, நீங்கள் இந்த மத விழாக்களுக்குப் பதிலாக,  சமூக நிகழ்ச்சிகளை வைத்துக் கொள்ளலாமே! அவைகளும் மகிழ்ச்சியைத் தரும் அல்லவா!”

மேலும் அறிவைப் பெறுவதற்காக, அமைதியுடன் காத்திருந்தேன்.

ஐயா சொன்னார்.

“மகிழ்ச்சி என்பது இன்பம் அளிக்கும் புறப் பொருட்களால் நிகழ்கின்ற  அனுபவம் என நினைப்பது முழுமை அல்ல! ‘நிகழ்வு’ என்றாலே, அது வந்து முடிந்து போவது என்றுதானே பொருள்? அதனால் அவை தற்காலிகமானவை. சனாதன தர்மத்தில் கூறப்படும் மகிழ்ச்சியோ ‘ஆனந்தம்’ எனும், என்றும் நிலையான நிறைவைத் தருவது.”

“… அதாவது நீண்ட சுக அனுபவம்?”

ஐயா பதிலளித்தார்.

“நான் சொற்களால் விளையாடவில்லை. நான் சொல்வதின் ‘தாத்பர்யம்’, அதாவது  கருப்பொருள் என்னவெனப் புரிந்து கொள்ளுங்கள். ‘அனுபவம்’ என்பது மனதினைச் சார்ந்தது. அது துன்பமாகவோ இன்பமாகவோ அல்லது அவற்றின் கலவையாகவோ இருக்கலாம். இன்ப துன்பங்கள் வந்து வந்து செல்வன. அதனால் அனுபவங்களும் மாறிக் கொண்டே இருக்கின்றன.  ஒவ்வொரு அனுபவமும் மனதில் எழும் ஒருவகை எண்ணம்தான்.  பதஞ்சலி அதை ‘சித்தவ்ருத்தி’ என அழைக்கின்றார்.”

“ஐயா, ‘சித்த விருத்தி’ என்றால்?”

“அது, தெளிவான மனதில் சலனத்தை எழுப்புகின்ற ஒரு அலை! எண்ணம்!”

“ஓ! இருக்கட்டும் ஐயா! அந்த சித்த விருத்தியான  எண்ண அலைகள் எல்லாம், மகிழ்ச்சியான அனுபவத்தைத் தருவதாக இருந்தால் போதுமே! அதைத்தானே   நாம் அனைவரும் விரும்புகிறோம்!”

“நிச்சயமாக! ஆனால் ஒரு அனுபவத்தை மகிழ்ச்சியாகவோ அல்லது சோகமாகவோ மாற்றுவது மனதின் உள்ளார்ந்த சார்பு. பொதுவாக உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் ஒரு அனுபவமே, மற்ற சமயங்களில், கசப்பான அனுபவமாக உங்களுக்கு ஏற்படுத்தலாம். அதற்குக் காரணம், அவ்வப்போது எழும் எண்ணங்கள்தான். அவற்றின் தாக்கம்தான், உங்களது அனுபவங்களை இன்பம்-துன்பம் எனும்  இரட்டைத்  துருவங்களுக்கு இடையே நிரந்தரமாக அலைய வைக்கின்றன!”

“ஐயா, அப்படியானால் ‘ஆனந்தம்’ என்பது?”

“ஆனந்தம்  இன்பத்திற்கும், துன்பத்திற்கும் இடையே ஊசலாடுவது அல்ல! அது இன்ப துன்பங்கள் அற்ற மையத்தில் நிறைவுற்று இருப்பது. அச்சமநிலையில், மனதில் எழும் எந்த விருத்திகளினாலும் தாக்கம் இல்லை! அங்கே உங்களின் இயல்பு நிலை மட்டுமே நீடிக்கிறது. உங்களின் அந்த இயற்கையான நிலைதான் ஆனந்தம்! அதுவே நித்திய அமைதி, இணையற்ற முழு நிறைவு.”

“ஐயா, ஸ்ரீ இராமநவமி கொண்டாட்டம் எப்படி இப்படிப்பட்ட ஆனந்தத்திற்கு வழி வகுக்கிறது?”

“ஸ்ரீ இராமநவமி மட்டுமல்ல, சனாதன தர்மத்தின் முக்கியத்துவத்தை வெளிக் கொணரும் எந்த ஒரு விழாவும், சத்சங்கமும் அத்தகைய ஆனந்தத்தை நோக்கி மட்டுமே நம்மை வழிநடத்துகின்றது;  என்ன, அந்த ஆனந்தம் ஒரு சிலருக்கு மெதுவாக வரலாம்; ஆனால் அனைவருக்கும் நிச்சயமாகக் கிடைக்கும்! அதற்கான  ஒரே முன்நிபந்தனை என்னவென்றால், அத்தகைய முயற்சியை முழுமையாக ஆக்குவதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.

“எப்படி ஐயா?”

“உதாரணமாக, இராமாயணம் உணர்த்தும்  முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வதன் மூலம்! நான் முன்பே சொன்னது போல், இராமாயணம் என்பது ஸ்ரீ இராமரின் வாழ்க்கை வரலாறு எனப் பார்ப்பதும்  சிறப்புத்தான் எனினும், இராம தத்துவம் என ஆய்ந்து உணர்வது அதை விடச் சிறப்பு! இராமரின் பிறப்பு, அவரது திருமணம்,  அவர் தனது ராஜ்ஜியத்தைத் துறப்பது,  மனைவியை இழப்பது, மனைவியைக் கடத்தியவனை நீண்ட போரில்  கொன்று மீண்டும் அடைவது போன்ற பல சுவாரஸ்யம் மிக்க திருப்பங்களுடன் உள்ள வியப்பான வரலாறாகக் காண்பதில் எப்படி முழுமையான தாக்கத்தை, பயனுள்ள வழியை அடைய முடியும்!”

நான் பதில் சொல்வதற்கு முன், ஐயா தொடர்ந்தார்.

“ஒரு வேளை சிலர் சொல்லலாம் – அந்தக் காலம் வேறு!  இந்தக் காலத்தில் இராமரின் காலம் போன்ற விஷயங்கள் நடக்காது,  அல்லது  எனது வாழ்க்கை இராமரைப் போன்றதல்ல,   எனவே எனது வாழ்க்கைக்கு, அவ்வரலாறு பொருந்தாது. – இப்படியும் நீங்கள் சொல்வீர்கள் என்றால், அப்புறம் எதற்காக இராமாயணத்தைப் படிக்க வேண்டும், பண்டிகையாக ஸ்ரீ இராமநவமியைக்  கொண்டாட வேண்டும்?”

“ஐயா, அதற்குக் காரணம் ஸ்ரீ இராமர் நமது கடவுள் என்பதால்தான்! கடவுளின் பெருமையைப் படிப்பதும், பாடுவதும் ஒரு நற்செயல் அல்லவா! நம் கடவுளுக்குப் பூஜை செய்வதால் நமக்குச் செழிப்பு கிடைக்கும். அதை எப்படி நாங்கள் கேள்வி கேட்க முடியும்?’’

“நான் அதைக் கேள்வி கேட்கவில்லை! பிரார்த்தனைகள் மற்றும் சடங்குகள் எல்லாம் சரியாகச் செய்யப்படும்போது, அவற்றுக்கான பலனும் நமக்கு இறையருளால் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.  கடவுளை எல்லா வடிவங்களிலும், பெயர்களிலும் வழிபட முடியும் என்பதால், மிகுந்த மனப்பூர்வமாக செய்யப்படும் அனைத்து பிரார்த்தனைகளும் நல்ல பலனைத்தான் தரும், எனவே அதில் எந்தச் சந்தேகமும் இல்லை! நான் சொல்வதெல்லாம், ஓர் உபாசனையாக, அந்த விழாக்களைப் பற்றிய கருப்பொருளை உணர்வதில் உங்கள் கவனம் இருக்கட்டும் என்பதுதான்.  அவற்றில் ஆழமான அர்த்தம் உள்ளது. கருப்பொருளை உணர்வதால், உங்களுக்குள்ளே நல்ல மாற்றங்கள் மலரும். அவை உங்களது  ஆசைகளை ஆனந்தத்தின் திசை நோக்கிச் செலுத்தும். உங்கள் வாழ்க்கையில் உங்களது செயல்கள் மற்றும் அணுகுமுறைகளை மாற்றும். ஸ்ரீ இராமரின் பாதையில் செல்ல உங்களை அவை தயார்ப்படுத்தும். உலகின் இன்ப துன்ப அனுபவங்களுக்காக அல்ல, மாறாக  தூய சாட்சியாக ஒளிரும் ஆனந்தமான ஆத்ம ராமரின் தரிசனத்துக்காக! “

நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.

“எல்லோர்க்கும், எல்லாவற்றிலும் இறைத் தன்மையைக் காண்பது என்பது எளிதல்ல; அப்படிப் பார்ப்பது பழுத்த அறிவின் அடையாளம்! அதைப் பற்றிக் கேள்வி இல்லை. ஆனால் பெரும்பாலோருக்கு உண்மையில் ‘இறைவன்’  என்பவர் வெறுமனே ஒரு மரியாதைக்குரிய பொருளாகிவிட்டார் என்பதுதான் உண்மை! அவர்  எங்கோ தொலைவில் உள்ளவர் என்றும், ஒரு துயருக்காக அல்லது தேவைக்காக அவ்வப்போது அணுகப்பட வேண்டியவர் என்றும் வைத்திருக்கின்றோம்.  அதனால்தான், தெய்வீகமான எந்த விஷயத்தையும் நமது பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டது எனத் தள்ளி வைத்து விட்டோம். நீங்கள் பார்த்திருக்கலாம், பலரும் பகவத்கீதை எனும் பேரறிவைப் பயன்படுத்தாமல், அதனை ஒரு புனிதநூல் என்பதால் அட்டையும்   திறக்கப்படாத கட்டைப் புத்தகமாக, ஒரு பவித்திரப் பொருளாகப்  பூசை அறையில் வைத்து, நாள்தோறும் அதனைப் பூசித்துக் கொண்டிருக்கிறார்கள். தீண்டுவதுமில்லை!”

ஐயா தொடர்ந்தார்.

“அதுபோலவே பழுத்த ஞானிகள் நம்மிடையே வாழும்போது, அவர்களை அறிந்தும், அவர்களை அவ்வளவு பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருந்துவிட்டு, அவர்கள் இவ்வுலகை விட்டு நீங்கியபிறகு, அவர்களைக் கடவுளாக்கி, அவர்களின் சிலைகளையோ படங்களையோத் தங்கள் பூஜையறைகளில் வைத்து, பிரார்த்தனை மழைகளை வீசி, வேண்டுதல் வெள்ளத்தில் அவர்களை ஆழ்த்திக் கொண்டிருக்கிறோம்!  நம்மில் பலருக்குக் கடவுள் என்பவர் நம் தேவைகளை அளிக்க, கவலைகளை அழிக்க ஒரு வசதி! நாம் தேடுவதை, நாம் தேடும் போது, நமக்குத் தர வந்தாக வேண்டிய, மற்ற நேரங்களில் அறியத் தேவையில்லாத சக்தி! அதனால்தான் துக்கமோ அல்லது ஏதேனும் கஷ்டமோ வந்தாலொழிய, கடவுள் நம் வாழ்வில் நுழைவதில்லை!”

குற்ற உணர்வுற்றவனாகச் சொன்னேன்.

“ஐயா, ஏற்கிறேன்! ஸ்ரீ இராமரை ஒரு மனிதராகப் பார்ப்பது, அவரது நடத்தையைப் பின்பற்ற வேண்டும் என்ற ஆவலையும், அவரது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைக் கேள்வி கேட்கும் தைரியத்தையும் தூண்டுவதாகின்றது! கடவுள் மனிதனாகப் பிறந்து பெருஞ் செயல்கள் செய்வதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது! மனிதனால் முடியாத எதையும் செய்யும் வல்லவர் அல்லவா இறைவன்! ஸ்ரீ இராமரை அற்புதமான நற்பண்புகள், வீரம், தர்மம், சீலம் கொண்ட மனிதராகப் பார்ப்பதும், அவ்வரிய பண்புகளினால், தெய்வீகத் தன்மையை அவர் அடைந்தார் என உணர்வதும், நமக்கு அதிக உத்வேகத்தைப் பயனாக அளிக்கிறது.  அது சிறப்பே! நான் ஒப்புக்கொள்கிறேன்!”

ஐயா சிரித்தார்.

“நல்லது; நான் உங்களிடம் கேட்பது, இராமாயணத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய உண்மைக்காக, நீங்கள் உங்களின் கண்ணோட்டத்தைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான்.”

“நன்றி ஐயா! எனக்கு இன்னொரு சந்தேகம்! இதில் ஸ்ரீ இராமரின் வரலாற்றிலேயே நம்பிக்கை இல்லாதவர்களின் நிலை என்ன! இராமயணத்தை ஒரு சுவாரசியமான கதையாக மட்டுமே படிப்பவர்கள் என்னவாக இருக்கிறார்கள்! இராமயணத்தின் உண்மை அறிவினால், அவர்களுக்கு என்ன மாற்றம் ஏற்படுகிறது?”

“ம்ம்ம்… முதலில், இதை அறியுங்கள். நம்பிக்கை என்பது உண்மையை உணர்வதற்கான முன்னேற்றத்திற்கு ஒரு தேவையும் இல்லை, தடையும் இல்லை! அதாவது, ஒருவர் நம்பினாலும் நம்பாவிட்டாலும், உண்மை எப்போதும் இருக்கும். எனவே, நம்பிக்கை இல்லாத இடத்திலும், ‘reasoing’ எனும் பகுத்து-உணர்வதனால் எளிதாக மாற்ற முடியும்.”

“ஐயா லாஜிக் எனும் தர்க்க வழியாகத்தானே!”

“தர்க்கத்தை விடப் பகுத்துணர்தல்  சிறப்பு. லாஜிக் என்பது புலனறிவால் அறியப்படும் பொருட்களைச் சார்ந்தது!  அப்படி அடையும் அறிவு, ‘FACT’ என்பது, மனதினால் பகுக்கப்பட்டதுதானே! அது முழுமையான உண்மையாக முடியாது.”

“எனக்கு புரியவில்லை ஐயா!”

“எனது கனவு அனுபவத்தை நீங்கள் தர்க்க ரீதியாக மறுக்க முடியுமா?”

“முடியாது ஐயா! கனவு தர்க்க ரீதியாக ஆயப்பட முடியாதது! எனது புலனறிவுக்கு உட்படாததால், கனவை லாஜிக்கால் ஆராய முடியாது.”

“மிகச் சரி! எனவே, லாஜிக் எனும் தர்க்கத்திற்கு ஒரு இடம் உண்டு! அதுபோல, உங்கள் வாழ்க்கையை உருவாக்குகின்ற  பல அனுபவங்களின் பல   இடங்களில், தர்க்கத்திற்கு இடமில்லை! புரிகிறதா?”

“புரிகிறது!  லாஜிக் என்பது புலனறிவுக்கும் புறப்பொருள் அறிவிற்கும் மட்டுமே பயனுள்ள கருவி! எனக்கு புரிகிறது.”

“புலனறிவால் அடைய முடியாததையும், உள்ளுணர்வுடன், நம்பத் தகுந்ததாகப் பார்க்கும் ஒரு சிறந்த விழிப்புணர்வு, ஒவ்வொருவருக்குள்ளும் பகுத்துணர்வாக இருக்கிறது. Reasoning  எனும் அந்த உள்ளுணர்வு கடந்த கால அனுபவங்கள், ஆழ்ந்த நினைவுகள், விழிப்புணர்வு, ஆகியவற்றிலிருந்து வெளிவரலாம். அவை அனைத்தும் நமது ஆழ் மனதில் சக்திகளாக உள்ளன.”

சில நொடிகள் அமைதியாக இருந்த ஐயா தொடர்ந்தார்.

“இந்த விசாரத்தில் இப்போது நாம் ஆழமாகச் செல்ல வேண்டாம். நான் சொல்வது இராமாயணத்தை வேதாந்தப் பார்வையில் பயில வேண்டும், அங்கு பகுத்தறிதலும், தொகுத்துணர்தலுமே  சிந்தனைகான முதன்மைக் கருவிகளாகும் என்பதே. அதற்கு உறுதுணையாக ‘ஷ்ரத்தா’ மட்டுமே அமைய வேண்டும்.   அது கற்றுக் கொள்வதற்கான அசைக்க முடியாத நமது அர்ப்பணிப்பு.”

“சொல்லுங்கள் ஐயா ப்ளீஸ்!”

“அனைத்திலும் பர்ந்து, எல்லாவற்றிலும் இருக்கும் ஒளிமயமான உணர்வு,  பேரின்பமாகிய ஆத்மா – அதுவே இராமர். பத்துவகையான இந்திரியங்களின் சேட்டைகளும் அடங்கிய இடத்தில்தான், அந்த ஆத்மராம ஒளி பிராகசிக்கின்றது. ஒரே நேரத்தில் பத்து இரதங்களைக் கட்டுப்படுத்தும் திறனுக்காகப் புகழப் பெற்ற தசரதர், அத்தகைய இந்திரியக் கட்டுப்பாட்டைக் குறிக்கின்றார்”

“ஐயா, எல்லா புலன்களையும்  அப்படிக் கட்டுப்படுத்துவது மிக அரிதான செயல்!”

“ஆம்!  அத்தகைய கட்டுப்பாடு மன அமைதியினால் மட்டுமே சாத்தியம்! மன அமைத்திக்கும் புலன்களின் கட்டுப்பாடே காரணம். புலன் கட்டப்பட்டு இருந்தால் அமைதியும் உண்டாகும். அமைதி என்பது போர் விளையா பூமி.  அ + யுத்தா, அதாவது யுத்தங்கள் அற்ற அமைதி மண்டலம்.  அதுதான் அயோத்தி! அதனால்தான், அயோத்தியில், மன்னன் தசரதரிடம்  இராமராகிய பேரொளி பிரகாசித்தது.”

ஐயா தொடர்ந்து கூற, நான் செவிகளால் நிறைந்தவனானேன்.

“ஜனகரைப் பற்றி உங்களுக்குத் தெரியும். ‘ஜனக’ என்றால் பெற்றோர் அல்லது படைப்பாளி என்று பொருள்! ஜனகர் பூமியை உழுதபோது, அவர் சீதையைத்  தோண்டி எடுத்தார்.  சீதா எனும் அந்த ‘மாயா’ அனைத்துப்  படைப்புகளின் மூலம்.  எல்லாச் உலகில் எல்லாச் சடப் பொருளையும் நெய்கின்ற குணக்கலவை! அதுவே  ‘பிரகிருதி’ ஆகிய ஆக்க-பூமி! அவள் அனைத்தையும் அறியும் ஆத்மாவின் சக்தி! ஈஸ்வரனின் வல்லமை வெளிப்பாடு.”

ஐயா தொடர்ந்தார்.

“அந்த சீதா எனும்  ‘மனஸ்’, ஆத்ம ராமனை மணக்கும்போது,  அங்கே ‘ஜீவ’ உணர்வு எழுகின்றது.  தான் எனும் அகங்காரம், ஒரு ஜீவ அனுபவத்தில் மயங்கித் தனது உண்மையான ஆத்ம அனுபூதியை மறந்து விடுகிறது. ஆனாலும், அதுவும்  ஒரு ஆனந்த சங்கமம்தான்!  இராமரும் சீதையும் எங்கே இணைந்து இருக்கிறார்களோ, அங்கெல்லாம் ஆனந்தம் மட்டுமே இருக்கின்றது!”

“ஆனால், ஐயா, சீதாப் பிராட்டியார் பல துயரங்களை அல்லவா சந்தித்தார்?”

“ஆம், ஸ்ரீ ராமரும்கூடத்தான்! மாயையை மணந்தால், எல்லா நேரங்களிலும் சோதனைகள் ஏற்படத்தான் செய்யும்! அதன் விளைவு துயரந்தான்!”

“ஐயா, பதினான்கு ஆண்டுகால வாழ்வைக் காட்டில் கழிக்க அவர்கள் இருவரும் விதிக்கப்பட்டதைக் குறிப்பிடுகிறீர்களா?”

“ஆம்!  அச் சோதனையில்தான் இராமரும் சீதையும் அயோத்தியின் அமைதியை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, மேலும் காட்டின் கடுமையான வெப்பத்தையும் துயரத்தையும் தாங்க வேண்டியதாயிற்று!  நல்லவேளை ‘பக்தி’  மற்றும் ‘வைராக்கியம்’ ஆகியவற்றின் உருவான லக்ஷ்மணனின் ஆதரவுடன், அந்த சோதனைகளை எதிர்கொண்டு தம்பதியர் இருவரும் மகிழ்ச்சியுடனே இருந்தனர். ‘மனம்’ ஆகிய  சீதை, ‘ஆத்மா’ ஆகிய இராமரை விட்டு விலகும்போது பிரச்சனைகள் தொடங்கின!’’

“ஐயா, வனத்தில் தங்கள் முன்னே நான் நடந்து சென்று, வழியில் இடர்படுத்தும் முட்களை எனது பாதங்களில் தாங்கித் தங்களுக்குத் துணை செய்வேன் என்றல்லவா அன்னை சீதாப்பிராட்டியார் ஸ்ரீ இராமரிடம் கூறினார்!  படித்ததில், அன்னாரின் அன்பும் கருணையும் நினைவுக்கு வருகிறது.”

“உண்மைதான்!  ஆனால் அதில் எழுந்த சிக்கலைப் பாருங்கள்!  முன்னே நடந்த சீதையின் முகம் ஸ்ரீ ராமரின் முகத்தைப் பாராமல், முன்னிருந்த உலகை அல்லவா காண ஆரம்பித்துவிட்டது!  மனம் எப்பொழுது ஆத்ம தரிசனத்தை மறந்து, உலகில் ஈர்ப்புக்கொண்டதாக ஆகிறதோ, அப்பொழுதிருந்தே இருள் குவிகிறதே!  கண்ணில் கண்ட தங்க-மானில் கொண்ட சீதாப்பிராட்டியின் ஆசை ஸ்ரீ இராமரையும், இலட்சுமணரையும் வெகு தூரம் விரட்டி விட்டது அல்லவா!”

“ஆமாம் ஐயா!”

“சீதையின் கவனம் ஸ்ரீ இராமரிடமிருந்து விலகியபோது, துக்கம் ஏற்பட்டது. எங்கு மனமானது உள்ளிழுக்கும் உணர்வின் ஒளியில் நித்தியமாக ஒருமுகப்படுகிறதோ அங்கே அமைதி இருக்கிறது, இல்லையெனில் துக்கம்தான்! இதைத்தான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்!”

“அதனால் சீதாப்பிராட்டியை இராவணன் கடத்தினான் அன்றோ!” – நான் கேட்டேன்.

“ஆம், ஆத்மாவில் கவனம் செலுத்தியிருந்த மனம், அதற்கு உதவியாக இருந்த பக்தி மற்றும் ஷ்ரத்தையின் பாதுகாப்பையும் விலக்கிக் கொள்ளும்போது, மனம் உயர் நிலையிலிருந்து கீழே விழுந்து எல்லாவித வெளிப்புற ஆசைகளிலும் சிக்கிக் கொள்கிறது. அப்போது ஆசை, மதிமயக்கம், சினம், பொறாமை எனப் பத்து விதமான இன்னல்களும் மனதுள்  எழுகின்றன. இதைத்தான் ‘தசகண்டன்’  எனும் இராவணன் உருவகப்படுத்துகின்றான்.”

“ஆமாம் ஐயா, உண்மையாகவே இது ஒரு அவலம்தான். பத்து இந்திரியங்களின் மீதும் கட்டுப்பாடு இருந்தால், அமைதி நிலவுகிறது. அவற்றில் கட்டுப்பாடு இல்லாத போது, பத்து வகையான துன்பங்களாலும் துயரம் உண்டாகிறது! அமைதி குலைக்கும் போர்ச்சூழல் ஏற்படுகின்றது.”

“ஆம், துக்கப்படுகிற சீதையின் வடிவான, அகங்காரம்,  ஏமாற்றப்பட்டதாக, தீய குணங்களால் சிக்கிக்கொண்டது. அந்தச் சிக்கல், மேன் மேலும் சிக்கலை விளைக்கும் போகங்களை விளைக்கின்றது!”

“ஏராளமான பொக்கிஷங்களுடனும் பட்டங்களுடனும் சீதையை ஆசை காட்டிய அரக்கன் ராவணனைப் போல!” – நான் யோசித்தேன்.

“ஆம்! ஆனால், ஆத்மராமரை முன்பே தரிசித்து உயர்வு பெற்ற  மனமாகிய சீதாப்பிராட்டிக்கு, இனித் தாழ்வு இல்லை!  அதனால், எல்லாப் போகங்களையும், விஷமச் சோதனைகளையும் தூரத் தள்ளினார். மீண்டும் ஆத்மராம தரிசனத்தில் ஆனந்திக்கவே, அவருக்கு உறுதி மிகுந்தது.”

“ஐயா, துக்கம் வரும்போதுதான்  சத்தியமாகிய இறைவனைப் பற்றிய சிந்தனை நமக்கு வருகின்றதல்லவா!”

“ஆம்!  ‘ஶோகம்’ எனும் துயரம் கடுமையாகத் தாக்கும் போதுதான், ‘மோஹம்’ எனும் மதிக் குழப்பத்தின் இருள் புரிகிறது. அதிலிருந்து விடுபட வேண்டும் எனும் அறிவும் எழுகின்றது. பகவத் கீதையில் நாம் பார்ப்பது போல, தனது மதிக்குழப்பத் துயரத்தை (விஷாதா), அதிலிருந்தும் மீள்வதற்கான பாதையாக (யோகம்) மாற்றிய அர்ஜுனனைப்போல, சீதாப் பிராட்டியார், தமது துயரத்தையே தவமாக இயற்றினார். மனம் ஆழ்ந்து ஆத்ம சுகத்தைத் தேடுகின்றது!”

“ஆமாம் ஐயா, துன்பத்தில் இருக்கும்போதுதான்  நாம் கடவுளை நினைக்கிறோம்!” – குற்ற உணர்வோடு புலம்பினேன்.

“குற்ற உணர்வு வேண்டாம். பொதுவாக,  நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போது கடவுளைத் தேடுவதில்லைதான்! அது பரவாயில்லை. நம்முடைய மகிழ்ச்சி தற்காலிகமானது என்றும், துக்கம் வரும்போது, இறுதியில் கடவுளைத் தேடுவோம் என்றும் கடவுள் அறிந்திருக்கிறார்.”

“அதாவது, நாம் அவரைத் தேடிச் செல்ல வைப்பதற்காக கடவுள் நமக்குத் துக்கத்தை ஏற்படுத்துகிறார்! அப்படியா?”

“இல்லை! கடவுள் எங்கேயோ சென்று தேடிப் பார்க்க வேண்டிய இடத்தில் இல்லை! கடவுள் என்பது ஆனந்தம்! முழுமையான மகிழ்ச்சி. எனவே மகிழ்ச்சியின் எந்தச் சிறிய நிழலிலும், நீங்கள் கடவுளுடன் மட்டுமே இருக்கிறீர்கள். எனவே, நீங்கள் மகிழ்ச்சியான தருணத்தில் கடவுளைத் தேடவில்லை என்றால், அது பரவாயில்லை, ஏனென்றால் நீங்கள்,  மகிழ்ச்சி எனப்படும் கடவுளுடன் மட்டுமே இருக்கிறீர்கள்.”

“ஐயா! அப்படிப் புரிந்து கொள்வது நலமே! ஆனால் அதன்படி மகிழ்ச்சியற்ற நேரத்தில், கடவுள் என்னுடன் இல்லை என்பதுதானே பொருள்! எனவே துயரத்தில் நான் அவரைத் தேடிச் செல்லத்தானே வேண்டும்! ஏனென்றால் அவர்தானே  மகிழ்ச்சி!”

“அப்படி இல்லை!”

“ஏன் அய்யா? கடவுள் என்றால் மகிழ்ச்சி மட்டுமே எனச் சொன்னீர்கள், அதனால் கடவுள் துக்கமாக இருக்க முடியாது!

“நம்மால் வரையறுக்க முடியாத கடவுளை நாம்  வரையறுக்க முயல வேண்டாம்! நாம் மகிழ்ச்சியாக இல்லாத போது கடவுள் எப்படியோ நம்மை விட்டு விலகி இருக்கிறார் என்று ஏமாறவும் வேண்டாம்.  நமது மகிழ்ச்சியிலும், துயரத்திலும் கடவுள் எப்போதும் நம்மோடு இருக்கிறார், நமக்குள் இருக்கிறார்.  எனவே நீங்கள் மகிழ்ச்சி அற்றவராக இருக்கும்போதும், கடவுள் உங்களுடனே உள்ளார் என உணருங்கள்!”

“அதாவது, கடவுள் மகிழ்ச்சியும் துக்கமும் என்று சொல்கிறீர்களா?”

இதை சொல்லும்போது, நான் அத்தகைய வருணனையை ஏற்கத் தயாராக இல்லை!

ஐயா பதிலுரைத்தார்.

“கடவுளை வரையறுப்பதற்குப் பதிலாக, மகிழ்ச்சியை வரையறுப்போம். நமக்கு உடல், மனம் என எல்லாக் கரணங்களிலும் சுகம் விளைந்தால் அந்த இன்பத்தை மகிழ்ச்சியாகவும், அவை இல்லாதபோதும், அக்கரணங்களுக்கு இடர் வரும்போதும் துன்பமாகவும் எடுத்துக்கொள்கிறோம். இந்த இன்ப-துன்ப  ஜோடி அடிக்கடி ஒரு சுழற்சியில் வந்து போய்க் கொண்டிருப்பது! நிலைக்காதது! எனவே,  இப்படியான நிலையற்ற அனுபவத்தில் நாம் தேடும் மகிழ்ச்சியைப் பொருத்தி வரையறுப்பது தவறானாது. நாம் உண்மையில் தேடுவது இந்த எதிர் ஜோடிகளுக்கு அப்பாற்பட்ட நித்திய மகிழ்ச்சியைத்தான். அதுதான் ‘ஆனந்தம்’. அது நிரந்தரமானது. நல்ல செய்தி என்னவென்றால், அதை அடைய நீங்கள் எந்தப் புதிய பொருளையும் வாங்கத் தேவையில்லை. ஏனென்றால் அது உங்கள் உள்ளார்ந்த இயல்பு.”

“ஐயா, பிறகு ஏன் சுகம் தேடுகிறோம்?”

“நல்ல கேள்வி. நீங்கள் துக்கத்தை விரும்புகிறீர்களா?”

“நிச்சயமாக இல்லை!”

“சுகத்தில் ஆசையா?”

“ஆம் ஐயா! எப்போதும், அதற்காகத்தான் நாம் அனைவரும் உழைக்கிறோம்!”

“அப்படி ஆசைப்பட்டு உழைத்து நீங்கள் விரும்பிய ஒன்றை அடையும்போது, நீங்கள் மகிழ்ச்சியாக உணர்கிறீர்கள் அல்லவா! நிறைவேற்றப்பட்ட பொருளால்  உங்களுக்கு மகிழ்ச்சி வருவதுபோல் தோன்றினாலும், உண்மையில் அப்பொருளைப்பற்றிய உங்களின் ஆசை முடிவுக்கு வந்ததால்தான்  உங்களுக்கு மகிழ்ச்சி வருகிறது. அடைந்த   அப்பொருளால் அல்ல! ஏனென்றால் அந்தப் பொருளே பிறகு துயரத்தையும் தரலாம்!”

“ஐயா! ஆசையின் முடிவுதான்  மகிழ்ச்சியைத் தருகிறதா?”

“ஆமாம், ஆசை முடிவுற்றதும்,  ஒரு  கணம் உங்கள் மனதில் ஆசைகளின் கிளர்ச்சி இருக்காது. அதனால், விருத்திகளின் சேட்டை இல்லாத மனதில், ஆத்ம ஒளியான ஆனந்தம் தெரிகின்றது. அதுதான் நீங்கள் அனுபவிக்கும் சந்தோஷம்!  அது  நிச்சயமாக மற்றொரு ஆசை வரும்வரைக்கும்தான் நீடிக்கும்! ஏனென்றால், உங்கள் மனதில் எழும் ஆசைகளின்  அழுத்தத்தில், இன்ப-துன்ப நாடகம் மீண்டும் தொடரும்!”

“அப்படியானால், ஆசை இல்லாமையே மகிழ்ச்சியா?”

“ஆம்! இது சாதாரணமாகச் சாத்தியமில்லை! எனவே, நாம் நமது ஆசைகளை பொது நன்மைக்காகத் திருப்பிவிட்டோம் எனில், அதன்மூலமும் நமக்கு ஆனந்த அனுபவம் கிடைக்கும். அது உயர்வுக்கு ஒரு நல்ல தொடக்கமாகும்!”

“சரி! துயரத்துக்கு நான் ஆசைப்படவில்லை! அப்புறம் ஏன் துயரம் அடைகிறேன்.”

“அதற்குக் காரணம் உங்கள் கர்ம பலனே! என்றோ ஆசைப்பட்டுச் செய்த கர்மங்களின்  பலன். ஆனால் சரியான வைராக்கியத்துடன் அத்துயரங்களை நம்மால் தாங்கிக் கொள்ள முடியும்.  ஏனென்றால்  வந்து போவதல்லவா, இன்ப-துன்பங்கள்! எனவே துக்கமும் போய்விடும்!”

ஐயா மீண்டும் முக்கிய உரையாடலுக்குள் இழுத்தார்.

“சரி, ஏற்கனவே ஆத்மராமரைக் கண்ட சீதாப்பிராட்டி, எல்லாப் புறப்பொருள் ஆசைகளையும் முற்றும் விலக்கியவராக உறுதியாக இருந்தார்! நசிகேதஸைப் போலவே, சீதையும் தனது இலக்காக ‘ஶ்ரேயஸ்’ எனும் ஆத்ம தரிசன வழியையே தேர்ந்தெடுத்தார்! அது சம்சாரத்தில் மூழ்விக்கும் ‘ப்ரேயஸ்’ எனும் உலக ஆசைகளிலிருந்து விடுதலை அளிப்பது ஆகும். அதன் பலனாக துயரமற்ற தளம் கிடைக்கும். சிறைப்பட்ட  சீதாப்பிராட்டியார்,  ‘அஶோக’ மரத்தின் அடியில் தங்கியிருந்தது அதனைத்தான் காட்டுகின்றது. அத்தகைய துயரமற்ற நிலையில்தான், அகங்காரமாகிய ஜீவன் ஆத்மராமரின் தரிசனத்திற்காக மெய்த்தவம் எடுக்கின்றது.”

“ஆனாலும் சீதாப்பிராட்டியார் வெகு காலம் நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது!”

“ஆம், ‘முக்தி’ எனும் விடுதலையைத் தேடுகின்ற விழைவு ‘முமுக்சுத்வம்’. அது ஒரு பெருந்தவம்.   அதன் பலனே நல்ல குருவை அடைவதுதான்.  அந்த ஆத்ம குருவின் வழி காட்டலும், ஆறுதலுமே நமக்கு நல்வழி காட்டுவது. அதற்குத்தான் சீதாப்பிராட்டியார் காத்திருந்தார்.”

ஐயா தொடர்ந்தார்.

“அவருடைய தவம் மிகவும் வலிமை மிக்கதாக  இருந்ததால்,  அது ஆத்மாவாகிய ஸ்ரீ இராமரையும் தவமுறச் செய்தது! ஸ்ரீ இராமரும் சீதையை மனதார தேடிச் செல்லப் பணித்தது!”

“ஐயா! இது ராதாவின் காதலுக்காக கிருஷ்ணர் ஏங்கி அவரைத் தேடி சென்றதுபோல் இருக்கிறது!”

“ஆம்! இலக்ஷ்மணரின் உதவியுடன் ஆத்மராமர், சீதாவெனும் ஜீவனுக்கு அருள் செய்யத் தேடி வந்தார். உதவிக்கு  வழியில், ஓய்வற்ற (சஞ்சலத்வம்), எப்போதும் அலைகின்ற (அஸ்திரத்வம்) மனக் குரங்குகள் வந்தன!  மனக்குரங்குகள் தானே ஜீவனும் ஆத்மனும் இணைவதற்கு வழி தரக்கூடிய சக்திகள்! எனினும் அவற்றைச் சீர்மைப்படுத்தி அல்லவா அவற்றின் துணையைப் பெறவேண்டும்! மனக் குரங்குகள் ‘வாலி’ போன்ற ஒரு பேராசையும் மூர்க்கமும் கொண்டவரால் ஆளப்படும் வரை, அந்தக் கொடிய சக்தியினால் எந்த நல்ல பயனைச் சாதிக்க முடியும்! எனவேதான் ஆத்மராமர் வாலியை அழித்து,  அவ்விடத்தில் சுக்ரீவனைத் தலைவன் என ஆக்கினார்.  சமஸ்கிருதச் சொல்லான   ‘கிரீவா’ என்பது கடிவாளம் எனும் கட்டுப்பாட்டினைக் குறிக்கும்.”

ஐயா தொடர்ந்தார்.

“இப்போது மனம் கட்டுப்படுத்தப்பட்டு, தவம் உறுதியானதால்,  அங்கே ஹனுமான் எனும் ஆத்மகுரு வருகிறார். பெரும் துயரான கடலையும் தாண்டி, வருத்தப்படும் ஜீவனாகிய சீதாப் பிராட்டியாருக்கு, ஆத்மராமரின் அடையாளங்களைக் காட்டி, ஆறுதல் அளிக்கிறார்.”

நான் அமைதியாக ஐயா சொல்வதை இரசித்துக் கொண்டிருந்தேன்.

“உங்களுக்குத்தான் வரலாறு தெரியுமே! ஆத்மராமரால் வழி நடத்தப்படும்போது மனக்குரங்குகள் துயரக்கடலை எளிதில் தாண்டிவிடாதா என்ன! கடலைத்தாண்டி,  இராவணனைக் கொன்று ஸ்ரீ இராமர் வெற்றி பெற்றார்.  ஜீவனாகிய சீதை, ஆத்மராமரை நேருக்கு நேர் எதிர்காண, அக்கணமே, தமது ‘ஜீவபாவம்’  மறைந்தவராக, ஆத்மானுபூதி பெற்றார். சீதை ஸ்ரீ ராமருள் மறைந்தார்.”

ஒரு சில நொடிகள் அமைதியாய் இருந்த ஐயா மீண்டும் கூறினார்.

“இருந்தாலும்,  அவதாரக் காரணமாக எடுத்த  வாழ்க்கையை நிறைவேற்ற, ஸ்ரீ இராமரும் சீதாப்பிராட்டியும், இவ்வுலகில் ஜீவன்-முக்தர்களாக இருந்து, மனித குலத்தின் நலனுக்காக, நல்லொழுக்கமான வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை விளக்குவதற்காக வாழ்ந்து காட்டினார்கள்.”

இருவரும் பெஞ்சில் அமர்ந்தோம்.

ஐயா அமைதியாக இருந்தார்.

மகிழ்ச்சி மற்றும் ஏராளமான கேள்விகளாலும் கனத்திருந்த மனத்தோடு, நானும் பேசாமல் இருந்தேன்!

.

Mee. Rajagopalan

22 May 2024

Related Posts

Share this Post