38 – உருவைக் கொடு
உருவைக் கொடு
ஐயாவுடன் உரையாடல் (38)
“கொலுப்படி வைச்சாச்சா?” – அய்யா கேட்டார்.
“ஆமாம் அய்யா! அதான் கொஞ்சம் லேட்”.
அய்யாவோட வாக்கிங் செய்ய மதியம் 1 மணிக்கு வருவதாகச் சொல்லிவிட்டுப் பத்து நிமிஷம் தாமதமாய் வந்ததன் காரணத்தைச் சொல்வது எனக்குக் கடமையாகப் பட்டது.
“நானே சில மரப்பலகைகளை வைச்சு, 5 படியோ, 9 படியோ வருஷா வருஷம் செஞ்சுடுவேன் அய்யா! என்ன, இப்பல்லாம் கொஞ்சம் மோடிவேஷன் குறையறது. ஆனாலும் உமாவுக்கு நவராத்திரி வந்தாலே அதிக சக்தியும் ஆர்வமும் வந்துவிடும். அவரோட விருப்பத்துக்காகவே கொலுவை வருஷந் தவறாமல் செய்ய முடிகிறது அய்யா!”
“கண்டிப்பாக! அது பெரிய பாக்யம் இல்லையோ!”
நானும் அப்படித்தான் நினைத்தேன்.
“ஆன என்ன ஆகிறது அப்படினா, கொலுப்படி வைக்கிறதோட இல்ல, யோசிச்சு யோசிச்சு, என்ன பரிசுப் பொருள் வாங்கறது, யார் வீட்டுக்கு எப்போ போறது, யாரெல்லாம் என்னிக்கெல்லாம் நம்ம வீட்டுக்கு வருவது, என்ன உணவு சமைக்கிறது அப்படினு, கொலுவுக்கு ஒருவாரம் முன்னாடியிருந்தே ஒரே டென்ஷன்தான் உமாவுக்கு. அதை ரொம்ப சுலபமா எம்மேலேயும் ஏத்திவைக்கிறதுல அவர் ரொம்ப கெட்டிக்காரி!”
அய்யா சிரித்தார்.
“நீங்கள் அதிர்ஷ்டசாலிதான்! இந்த மாதிரி சுப காரியங்களைப் பண்ணியே ஆகணும்னு சங்கல்பம் ஏற்படுவதே பெரிய பாக்யம்! அதனால கம்ப்ளெயின்ட் பண்ணாம துணையா இருங்கோ.”
“நிச்சயமாய் அய்யா! ஆனாலும் சுவாமிக்குப் பூஜை பண்ற நேரத்தைவிட இந்த விருந்தோம்பலும், வீடு வீடா போறதும்தான் ஜாஸ்தியா இருக்கோனு தோண்றது! நான்தானே, முக்கால்வாசி டிரைவ் பண்ணனும்!”
என் ஆயாசத்தைச் சொல்லிவிட்டேன்.
அய்யா என்னை உற்றுப் பார்த்தார்!
“சுவாமிக்கு பூஜைனா என்ன சார்! எதுக்குப் பூஜை பண்றேள்? சந்தோஷமாக இருக்கணும்னுதானே! உங்க மனைவி இந்த நவராத்திரி காரியங்கள்ல சந்தோஷமாக இருக்கிறார் இல்லையா? நீங்கள் சொல்றதப் பார்த்தால், நவராத்திரியில்தான், அவர் அதி உற்சாகமாக இருக்கார்னு தெரிகிறது! அது பெரிய ஆரோக்கியம் இல்லையா! அதுவே பூஜாபலன் தானே!”
“ஆம் அய்யா! அவருக்கு, ஏன், வீட்டில் அத்தனை பேருக்குமே பண்டிகை காலங்களில் மனசுக்கு ஒரு நிம்மதி, ஒரு உற்சாகம்தான்!”
“அதுதான் நமது பண்டிகைகளின் தாத்பர்யமே! மாதாமாதம் எப்படியாவது, ஏதாவது பண்டிகையை வைச்சு, மத்த கஷ்டங்களை எல்லாம் மறந்து, அந்தச் சுமைகளை எல்லாம் சுவாமிகிட்ட கொடுத்துட்டு, சந்தோஷமாக இருக்க வழி பண்ணியிருக்கிற நமது ‘ஸநாதன தர்மம்’, எப்படியான மன-நல வைத்தியமா நமக்கு இருக்குனு புரிகிறதா? இது ஒரு ஒப்பற்ற வாழ்க்கை இயல்.”
“ஆம் அய்யா! கண்டிப்பாக! நாம் அவற்றைக் கொண்டாடித்தான் ஆக வேண்டும்.”
கொஞ்சம் நாணியே சொன்னேன்.
“என்னோட சலிப்பு மேலோட்டமானதுதான் அய்யா!”
“நல்லது! எல்லோரையும் வீட்டுக்குக் கூப்பிடுவது, எல்லோர் வீட்டுக்கும் நாமும் போவது, அன்பினால், சின்னச் சின்ன பரிசுகளைப் பரிமாறிக் கொள்வது, பக்திப்பாடல்களைப் பாடுவது, கோலாட்டம், கும்மி எனக் கொண்டாடுவது எல்லாமே அற்புதம். நவராத்திரிதான், ஒன்பது-பத்து நாட்களுக்கு நடக்கிற பெரிய பண்டிகை!”
நான் கேட்டுக் கொண்டிருந்தேன்.
ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு, அய்யா தொடர்ந்தார்.
“ஆனாலும், நீங்கள் சொல்லுவதிலும் ஒரு பாயிண்ட் இருக்கு!”
என்னை உற்சாகப்படுத்த அய்யா ஏதோ சமாதானம் சொல்லப் போகிறார் என நினைத்தேன்.
ஒருவேளை, எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சி தரக் கூடிய ஆன்மீக அறிவை இன்னும் கொஞ்சம் தரப்போகிறாரோ!
நான் பேசாமல் அவருடன் நடந்து கொண்டிருந்தேன்.
“கொண்டாட்டங்களுக்கு நடுவில், நாம் உண்மையில் கொண்டாடவேண்டிய ஒன்றைப் பற்றி ஆழ்ந்து சிந்திப்பது கடமைதான். நவராத்திரிப் பண்டிகை அதற்காகத்தானோ என்னவோ, ஒரு பத்து நாட்களை ஒதுக்கி, ஆற அமர தியானம் செய்ய வழி செய்துள்ளது என நினைக்கிறேன்.”
“எதைபற்றி அய்யா! கொண்டாட்டங்களுக்கு நடுவில், எப்படியாவது ஏதோ பாராயணம், பஜனை என நடந்து கொண்டுதானே இருக்கிறது! நாங்கள் தினசரி நவராத்திரி சமயத்தில் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் பல முறை செய்வது உண்டு அய்யா!” – நான் ஒரு ரிப்போர்ட் போல சமர்பித்தேன்.
“ரொம்ப நல்லது! பாராயணம், பூஜை எல்லாம் முக்கியம்தான்! ஆனால் எப்பவாவது, நாம் பாராயணம் செய்த மந்திரத்துக்கோ, பாடலுக்கோ என்ன அர்த்தம்னு யோசிப்பீர்களோ! அப்படி யோசித்தால்தான், நீங்கள் செய்கிற பூஜை ஒரு ‘உபாசனை’ ஆகும். இல்லை என்றால், அது ஒரு கருமம் மட்டுமே! நிச்சயமாக ஒரு புண்ணிய கருமம்தான்! ஆனால் பூரண பலனைத் தருவதில்லை!”
“என்ன அய்யா இப்படிச் சொல்கிறீர்கள்?”
“சாஸ்திரங்கள் ‘கர்ம-உபாசன சமுச்சயம்’ எனச் சொல்லும். அதாவது, சடங்குகளாகச் செய்கின்ற கருமங்களுடன், அவற்றின் பொருளை ஆழ்ந்து தியானிக்கின்ற ‘உபாசனை’ செய்யப்பட வேண்டும்.”
“அய்யா, பல மந்திரங்கள், பாடல்களுக்குப் பொருள் நமக்கு எப்படித் தெரியும்? உண்மையான பக்தியோட பாடினால், கேட்டால் போதாதா!”
அய்யா சிரித்தார்.
“அந்தமாதிரி வாதம் செய்யாதீர்கள்! உண்மையான பக்தி எதுனு நமக்குத் தெரிந்தால், நாம் இந்த உரையாடலை இப்படிச் செய்ய மாட்டோம்! இருக்கட்டும், நீங்கள் எல்லாவற்றுக்கும் எப்படிப் பொருள் தெரியும்னு கேட்பது சரிதான்! ஆனால் எப்படியாவது தெரிஞ்சுக்கணும்னு முயற்சி பண்ணியிருக்கேளா! அதுதான் கேள்வி! முயற்சி செய்ய ஆரம்பித்துவிட்டால், தன்னால பொருள் விளக்கத்துக்கான வழி கிடைக்கும்!”
“உண்மைதான் அய்யா! நான் அப்படி யோசித்தது உண்டு! ஆனால் தீவிரமாக இல்லை! எத்தனையோ ஸ்லோகங்கள் இருக்கே! ஒவ்வொன்றுக்கும் பொருள் தெரிஞ்சுக்கணும்னா, அதுக்கே நேரம் போய்டுமே!”
இப்படிச் சொல்லிவிட்டு, சற்றே வெட்கினேன்.
அய்யா தொடர்ந்தார்.
“அதில் ஏதேனும் ஒன்றுக்கு மட்டும் ஆழமான பொருளை தேட ஆரம்பித்தால்கூடப் போதும். அதுவே நமக்கு எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்துவிடும்.”
‘எந்த ஒன்று’ என நான் யோசித்துக் கொண்டிருந்தேன்.
அய்யா கேட்டார்.
“எந்த ஸ்லோகத்தையாவது நீங்கள் தீவிரமாக ஜபம் செய்வீர்களா?”
“ஆம் அய்யா! குறிப்பாக நவராத்திரி சமயத்தில். சின்னதா, ஈஸியா மனப்பாடம் பண்ணிக்கிற மாதிரி, நேரடியா நமக்கு வேண்டியதைக் கேட்கிற மாதிரி ஸ்லோகம் அய்யா!”
“வெரிகுட்! என்ன அது”
“ரூபம் தே₃ஹி ஜயம் தே₃ஹி யஶோ தே₃ஹி த்₃விஷோ ஜஹி”
அய்யாவைப் பார்த்தேன்.
“நீங்கள்தான் முன்பு ஸ்ரீ தேவி மஹாத்மியம்பற்றி எனக்கு உபதேசித்தபோது, இந்த மந்திரத்தைப் பூஜிக்கக் கொடுத்தீர்கள். ”
“ஆமாம். அது அர்க₃லா-ஸ்தோத்ரம்! அதில் ஒரு வரியை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டீர்கள் போல! நல்லது!”
argalāstotram
rūpaṃ dehi jayaṃ dehi yaśo dehi dviṣo jahi ||8||
“ஆம் அய்யா! எப்பவும் மனசுல இதச் சொல்லிண்டிருக்க சங்கல்பம்! இந்த நவராத்திரியிலாவது, அந்த சங்கல்பம் நடக்கணும்னு விரும்பறேன்.”
“நடக்கட்டும்! இந்த ஸ்லோகத்தின் ஆழத்தை நீங்கள் யோசித்தீர்களா?”
நான் அமைதியாக இருந்தேன்.
அய்யா பெரிய ஆழத்துக்குள் என்னை அமிழ்த்தி மீண்டும் வெளியே எடுக்கப் போகிறார் என்பது மட்டும் எனக்குத் தெரியும்.
“இந்த வரியின், முதல் இரண்டு சொற்களை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்!”
“ரூபம் தேஹி! அதுதானே!”
“ஆம்! எதை வேண்டுகிறது இந்தச் சொற்கள்!”
“நல்ல உருவத்தை எனக்கு கொடு என அம்பாளிடம் கேட்கிறது!”
“ஏன் உங்கள் உருவம் உங்களுக்குப் பிடிக்கவில்லையா?”
“இல்லை அய்யா! நாம் அழகானவராக இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்வதில் தவறில்லையே!”
“தவறில்லைதான்! ஆனால் ஏற்கனவே உங்களுக்கு ஒரு உடல் இருக்கிறது! உங்களுடைய வேண்டுதலை ஏற்று இறைவன் நல்ல அழகான உருவத்தைத் தரவேண்டும் என்றால், உங்களுக்கு மற்றொரு பிறவியில்தான் அதனைச் செய்ய வேண்டும் இல்லையா? அதற்காகவா இந்த வேண்டுகோள்? பிறவி இல்லாத பெருவாழ்வு உங்களுக்கு வேண்டாமா?”
“தெரியவில்லை அய்யா! ஒருவேளை ‘ரூபம் தேஹி’ என்றால், எனது உருவத்துக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தா எனப் பொருளாகுமோ?”
“அப்படியானால், ‘தேஹ ஆரோக்யம் தேஹி’ என வெளிப்படையாகக் கேட்டிருக்கலாமே!”
“செய்திருக்கலாம்! ஆனால் ‘தேஹ ஆரோக்கியம்’ என்பதில், மன நலனையும் சேர்த்துக் கேட்பதாக எடுத்துக் கொண்டால்?”
நான் இப்போதுதான் யோசிக்க ஆரம்பித்தேன்.
அய்யா கேட்டார்.
“என்ன, இப்பொழுது புதிது புதிதாக ஸ்லோகத்தின் சொற்களையே மாற்ற வேண்டும் எனத் தோன்றுகிறதோ! அதற்கு நமக்கு உரிமை இல்லை! அதன் பொருளை முழுதுமாக சீரணிக்க மட்டுமே நமக்குக் கடமை உள்ளது!”
அய்யா தொடர்ந்தார்.
“ரூபம் என்பது உங்களது தூல வடிவம் என்று மட்டும் எடுத்துக் கொண்டால், அதில் பெரிதாக ஒரு மாற்றத்தையும் இறைவன் கொடுக்கமாட்டார். நீங்கள் வாங்கிவந்துள்ள உங்களது உடல், உங்களுடைய கர்ம பலனினால் கிடைக்கப் பெற்றது. அதில் சில சௌகர்யங்களை வேண்டுமானால், இந்தப் பிறவியில் பிரார்த்தனையால் அடையலாமே தவிர, புதிய உடலைப் பெறுவது என்பது இல்லை! புதிய உடல் என்றாலே, அது புதிய பிறவி!”
“அப்படியானால், இந்த வேண்டுதலின் பலன் என்ன?”
“உங்கள் உருவத்தை நீங்கள் கண்ணாடியில் பார்த்துக் கொள்வீர்கள்தானே!”
“ஆம் அய்யா!”
“நீங்கள் பார்க்கும் உங்களது உருவத்தைத்தானே, உங்களைப் பார்க்கும் மற்றவர்களும் பார்க்கிறார்கள்?”
“ஆம் அய்யா! அதிலென்ன சந்தேகம்!”
“இல்லை! உங்களை ஒருவர் பார்க்கிறார் என்றால், அவரது பார்வையில் நீங்கள் எப்படித் தெரிகிறீர்கள் என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியாது!”
“ஏன் அய்யா!”
“ஏனென்றால், ஒவ்வொருவரின் பார்வையும், பார்க்கும் பொருளின் தூல வடிவத்துடன், பார்ப்பவர் அப்பொருளின்மேல் வைத்துள்ள பாவனையையும் கலந்துதான் காட்டும்! உங்களை மற்றவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதற்கு, உங்களைப் பற்றிய மற்றவரின் கருத்து எப்படிப்பட்டது என்பதையும் பொறுத்தது!”
“புரிகிறது அய்யா! சிலசமயங்களில், எனது மனைவி அணிந்திருக்கும் ஆடை, அணிகலனைப் பார்ப்பதை விட, அவர் என்ன கேட்க வந்திருக்கிறார் எனும் எண்ணத்தைத்தான் நான் பார்க்கிறேன்! அதனால், பலமுறை, அவரது ஒப்பனையைப் பற்றிக் கருத்துச் சொல்லாமல் இருப்பதால், திட்டு வாங்கியதும் உண்டு.”
அய்யா சிரித்தார்.
“ஆம்! இறைவனைப் போல, நாம் ஒவ்வொருவரும் ஒரு சிருஷ்டிகர்த்தா! நமது எண்ணங்களினால் சில பாவனைகளை மனதுக்குள் நாமே படைத்து, அந்தப் பாவனை கலந்த பார்வையுடனேயே உலகத்தைப் பார்க்கிறோம். அதனால்தான் சொல்கிறேன், நீங்கள் உங்கள் உருவம் என்னவென்று நினைத்துள்ளீர்களோ, அதையே மற்றவர்கள் பார்க்கிறார்கள் என்பது தவறு!”
“புரிகிறது அய்யா!”
“அப்படியானால் ‘ரூபம் தேஹி’ எனும் வேண்டுதலால், நீங்கள் இறைவனிடம், ‘கடவுளே, என்னைப் பார்ப்பவர்கள் அனைவருக்கும் எனது அன்பான, இனிமையான, நன்மையான வடிவத்தைக் காட்டு’ என்பதாகக் கொள்ளலாமே!”
“ஆம் அய்யா! எல்லோருக்கும் நல்லவனாக, அன்புடையவனாக எனது வடிவம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதுதானே சரி! இது சாத்தியம்தானே!”
“நிச்சயமாக! அந்த மாற்றத்துக்கு உங்கள் தூல உடலில் எந்த மாற்றமும் தேவை இல்லைதானே! உங்கள் குணம், சொல், நடத்தைதானே மாற வேண்டும்! ஒவ்வொரு உறவுகளுடனும், உங்களுடைய போக்குதானே நல்லதாக மாறவேண்டும்! அதனால் ‘ரூபம் தேஹி’ எனும் வேண்டுதலின் பலன், உங்களுக்குள் நீங்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய மாற்றம் என்பதுதானே பலனாக முடியும்?”
“ஆம் அய்யா! இது நல்ல சிந்தனைதான்! ஆனால், அப்படியான மாற்றங்கள் எனக்குள் நான்தானே ஏற்படுத்திக் கொள்ள முடியும்? இதற்கு எதற்காக இறைவனிடம் வேண்டுதல்!”
அய்யா எனை வியப்புடன் பார்ப்பது போல் தோன்றியது.
“அற்புதம்! இதனைத்தான் நான் உங்களிடம் எதிர்பார்த்தேன்! நம்மால் முயன்று சாதிக்க வேண்டியதை, சுவாமியின் மேல் சுமத்துவது என்ன நியாயம்? எனவே நீங்கள் சொல்வதுதான் சரி! நல்ல மாற்றங்களை நமக்குள் நாம்தான் கொண்டுவர வேண்டும் என்ற அறிவையாவது, இந்தச் சொற்கள் கொடுத்ததே, அதுவே நல்ல பலன்தானே!”
“அப்படியானால், ‘ரூபம் தேஹி’ என நாம் வேண்டுவது தேவையில்லையா?”
“அப்படி முடிவெடுக்க நமக்கு அதிகாரம் இல்லை! ஆனால், அந்த வேண்டுதலுக்கு மேலும் ஆழமான ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் எனத் தேடுவதற்கு நமக்கு உரிமை உண்டு! கடமையும் கூட!”
நான் காத்திருந்தேன்.
“அப்படி ஒன்று வேண்டும் என்றால், அது நமது முயற்சியால் மட்டுமே நடக்க முடியாதது என்றால், அதற்கு இறையருள்தான் துணையாகும் என்றால், அது மிகப்பெரிய பலனாக இருக்க வேண்டும்! இல்லையா?”
“ஆம் அய்யா! என்ன அது?”
“உங்களுக்கு உண்மையிலேயே தெரியாதது அது! தெரிந்து கொள்ள முடியாதது அது!”
“அய்யா! எனக்குப் பலவிஷயங்கள் தெரியாதுதான்! அதனால் தெரியாதது என்பதை ஏற்றுக் கொள்வதில் மகிழ்ச்சியே! ஆனால் தெரிந்து கொள்ள முடியாதது எனச் சொன்னால், அது எப்படி அய்யா! நீங்கள் சொன்னால் தெரிந்து கொள்ளப் போகிறேன்.”
“சொல்லித் தெரிந்து கொள்ள முடியாதது!”
“சரி, வாயால் சொல்ல வேண்டாம். கண்ணெதிரில் காட்டுங்கள்!”
“அது காட்ட முடியாதது! வார்த்தைகளாளும் கூற முடியாதது!”
“என்ன அய்யா! அப்படியானால் இறைவனைச் சொல்கிறீர்களா? இறைவன்தான் எவ்வளவு பூஜைசெய்தாலும் கண்ணுக்குத் தெரியாமல் இருக்கின்றார்? ஆனால் அவரைப்பற்றித்தான் எல்லா வேதங்களும் பேசுகின்றனவே!”
“இறைவன் கண்ணுக்கு எதிரில்தான் எப்பொழுதும் இருக்கிறார். அவர்தானே எல்லாமுமாக இருக்கிறார். நாம் அறியாமையால், இறைவனை ஏதோ ஒரு உருவத்திலும், ஏதோ ஒரு இடத்திலும் இருப்பதாகச் சென்று பூஜிக்கிறோம். அதில் தவறில்லை! பசுமாட்டின் உடலில் பால் எங்கும் இருந்தாலும், அதன் காம்பில்தானே கரக்கிறோம்! அதுமாதிரி கோவிலில் சுவாமியைக் காண்பதில் தவறில்லை! அங்கே நாம் நாம் படைத்த வடிவில் இறைவனைக் காண்பதால், இங்கே ‘ரூபம்’ எனும் சொல், நீங்கள் கும்பிடும் சுவாமியின் உருவத்தைக் குறிப்பிடுவதாகாது!”
“அப்படி என்றால், காண முடியாத அந்த ரூபம் எதுதான் அய்யா!”
“எல்லாவற்றையும் காண்கின்ற நீங்கள்தான் அது!”
“நானா! நான்தான் என்னைப் பார்க்கிறேனே! கண்ணாடியில் தெரிகிறேனே!”
“கண்ணடியில் பார்ப்பதை நீங்கள் என்னவென்று அழைப்பீர்கள்?”
“நான் என்று!”
“உண்மையில் அது நீங்களா?”
“நான் என்றால்…. அது என் பிரதிபிம்பம். என் உடல்.”
“அப்படியானால், நீங்கள் காண்பவர்! நீங்கள் காண்பது உங்கள் உடல்!”
“ஆம்!”
“அப்படியானல், காணுபவரான உங்களது ரூபம் என்ன?”
“ம்ம்ம்… என் மனது?”
“எப்படி? ‘என் மனது’ எனச் சொன்னால், ‘எனது வீடு’, ‘எனது கை’ என்பதுபோல, அதுவும் உங்கள் உடமை அல்லவா!”
“ஆம், எனது மனமும் எனது உடமை!”
“நீங்கள் மனதைப் பார்க்கிறீர்கள்! மனதில் இந்தயிந்த எண்ணம் வருகிறது எனப் பார்க்கிறீர்கள். புத்தியில், எனக்கு இது தெரியும், இது தெரியாது எனவும் அறிகிறீர்கள். அப்படியானால் நீங்கள் உங்களது மனமோ, புத்தியோ இல்லை!”
“அப்படியானால் நான் யார்?”
அய்யா பலமாகச் சிரித்தார்.!
“அப்பாடி! இறுதியாக இந்த எளிமையான கேள்வியைக் கேட்டுவீட்டீர்களே! இதற்கு யாராலும் பதில் சொல்ல முடியாது! அதனால்தான் ‘ரூபம் தேஹி’ என இறைவனிடம் கேட்கிறோம்.”
“அப்படியானால் ‘ரூபம்’ என்பது?”
“அந்த ‘ரூபம்’ என்பது ‘ஸ்வ-ரூபம்’ – உங்களின் உண்மை நிலை! அதுதான் ‘நான் யார்’ எனும் கேள்விக்கான பதில்.”
“அய்யா, இந்தப் பதில் எனக்குக் கிடைக்குமா?”
“நிச்சயமாக! இந்தப் பத்து நாளும், இதைப் பற்றியே சிந்தித்திக் கொண்டிருங்கள்! எப்படித் தானாக கனவு வந்து போகிறதோ, அப்படியே, அதற்கான ஞானமும் வந்து போகும்!”
“போகுமா? ஞானம் வந்தால் அது போகக்கூடாது! அது என்னுடனேயே இருக்க வேண்டுமே!”
“ஞானத்தை உங்களுடைய உடமையாகப் பார்த்தீர்கள் என்றால், எல்லா உடமைகளும் போவதுபோலப் போய்விடும்!”
“அப்படியானால் ஞானம் என்பது?”
“ஞானமே உங்கள் ஸ்வரூபமாக வேண்டும்! அப்புறம் அதற்கு அழிவு ஏது?”
“எனக்கு அழிவு வந்தால்?”
“எனது, நான் எனும் எண்ணத்தை அழித்தபிறகு, உங்களுக்கு அழிவு ஏது?”
சிரித்தார்.
“போங்கள், உமா காத்துக் கொண்டிருப்பார்!”
அய்யா தனது திசையில் நடந்து கொண்டிருந்தார்.
நான் அங்கிருந்த பெஞ்சில் நிறைவுடன் உட்கார்ந்தேன். முன்பு ஒருமுறை நவராத்திரிபற்றி அய்யாவிடம் உரையாடியதும் நினைவுக்கு வந்தது.
அடுத்த முறை அய்யாவிடம், ஸ்லோகத்தின் அடுத்த சொற்களின் பொருளையும் கேட்டறிய வேண்டும்!
எப்போதுதான் அவரை மீண்டும் சந்திப்பது?
மீ. ரா
21-Sep-2025