Poem Collection-1

Pages: 1 2 3 4 5 6 7 8
Pages: 1 2 3 4 5 6 7 8

உண்மை

Read at ELAB

உண்மை என்பது ஒன்றே ஒன்று!
உணர்ந்தால் உணர்வில் உறையும் நன்று!

பொய்த்தல்
இருப்பதை மறைப்பது, இலாததை உரைப்பது,
வருத்திப் பிறரை வதங்கிடச் செய்வது!
பொய்யாமை
பொய்த்தல் இலாதிருத்தல்,
பொய்யாமெய் வளர்த்தல்!
பொய்த்தல்
விலக்க வேண்டிய உபாதை!
பொய்யாமை
நடக்க வேண்டிய பாதை!
பொய்த்தலும் பொய்யாமையும்
பலவகைப் படுவது!
பூரண உண்மையோ
ஒருநிலைப் படுவது!

பொய் என்பது
ஒருகாலும் இல்லாத தன்மை!
உண்மையோ
எப்போதும் இருக்கின்ற ஒருமை!
மெய் என்பது
இருகால இடைவெளியின் உண்மை!

பிறப்பு இறப்பு என்னும் இருகால இடைவெளியில்
உருவாகும் உடல், அதனாலே அதுமெய்!
அதன் உள்ளிருக்கும் ஆன்மா,
அது உள்மெய் – உண்மை!
உண்மையின் உருவகமே மெய்!

மெய்யென்பது
உடன்பட, உடல்தரும் கதி,
உண்மையோ
உயர்வுறப் பெறும் வெகுமதி!

வாய்மை

வாக்கு மெய்யிருக்கும் வரைக்கும் மெய்யுரைக்கும்
நோக்கால் வாய்மெய் ஆகுமென்றோ வாய்மை எனவைத்தார்!
உண்மைக்கு எது உவமானம்?
பார்த்ததைப் பார்த்தபடி அளிப்பதா?
படித்ததைப் படித்தபடி அறிதலா?
கேட்டதைக் கேட்டபடி விளித்தலா?
சுவைத்ததைச் சுவைத்தபடி உரைத்தலா? அல்ல!
பொதுவாக இவை பொய்யாமை ஆகலாம்!
மெதுவாக இவையே பொய்யாவும் போகலாம்!
ஏனெனில், பார்த்தது பார்வையின் பயிற்சியால் மாறும்!
படித்தது படிப்பதின் முதிர்ச்சியால் மாறும்!
கேட்டது கேட்பவர் உணர்ச்சியால் மாறும்!
சுவைப்பதோ அனுபவம், சுயநம்பிக்கை யாகும்!
ஆகையால் நின்றுநிலைக்கும் சத்தியமாக
என்றுமிருக்கும் நித்தியமாக ஆனதுவொன்றே உண்மை!
அதுஆன்மனெனும் நுண்மை!
மனமுணர்வு, மதியறிவு, வாயுரை, செயலியல் –
எனுமிவைகள் ஒன்றானால் – அது பொய்யாமை!
தினமிவைகள் தீமைதராத் தூய்மையெனில் – அது வாய்மை!
வாய்மை வழியாலே வகையுணர உள்ளத்துள்
சீர்மை அடைந்தால் – அது நன்மை, இது உண்மை!

மீ. ராஜகோபாலன்

Pages: 1 2 3 4 5 6 7 8

Related Posts

Pages: 1 2 3 4 5 6 7 8
Share this Post

Leave a Comment