Jagadguru Sri Sankara Bhagavtpadal ENMANI Malai
ஜகத்குரு ஸ்ரீ சங்கர பகவத்பாதாள் எண்மணி மாலை
ஓம் குருப்யோ நம:
See the Video Version in the Playlist above.
ஆதிப் பொருள்பரம சோதித் திரளமுது வூதிச் சிவனுரு வதாய்
போதித் தருள்நிகம மோதிப் பலனருள வேதி சிவகுரு சுதா!
வாதித் திருள்விலக மோதிப் பெருவுணர்வு சாதித் திடுமுன துலா!
கோதிப் பிறழறிவு சோதித் ததுவகல போதித் திடுகுரு பரா! (1)
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!
காலாதி காரமறை மூலாதி காரவுரை நூலாகி வான்வரு நிலா!
மேலான ஞானமழை போலான சீலனருட் கோலாகி யாள்குரு பரா!
ஆலால காலசிவக் கோலாவு னாலறிவுச் சூலான மாமறை விழா
பாலான ஞானமலர் மேலூறுந் தேனமுதம் மேலான வாகுரு பரா! (2)
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர
கங்கா நதிவடியும் மங்கா மதிமுடியும் தங்கா முயலக னிட
சிங்கா ரடிபடியும் துங்கா நிதிவடிவின் சங்கா கமமுன துபேர்!
எங்கா தெதிரிடரும் தங்கா தருகிடவும் வெங்கா யமுமரு கவே
உங்கா லடிபணியு மெங்கோ ளிடர்தணிய செங்கோ லிடுகுரு பரா! (3)
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!
சிந்தா மணியுனது செந்தா மரையடியைத் தந்தா யருளேகி னேன்!
எந்தா யமுதமொழி தந்தா யுனதுவழி வந்தே கிடவேண்டி னேன்!
முந்தா திருவினையும் அந்தா யவிழுமுணர் வுந்தா யோதேசி கா!
விந்தா பரமகுரு! நந்தா துவைதமறுத் துந்தா யோபேசு வாய்! (4)
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!
வாரா யோகுறைகள் தீரா யோமறையின் சீரா மமதும் ஊறத்
தாரா யோநிறையப் பூரா வுந்தெரிய நேராய் அறிவுள் ஏறப்
பாரா யோபயிலக் கூறா யோயுனது பேராம் அடிகள் ஏகச்
சாரா யோஅறிவிற் சேரா யோபுக லாரா வமுத நேயா! (5)
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!
வேதாந் தம்தவிர யாதாஞ் சிந்தைமுடி வேதான் என்றறி யவே
கோதாம் பந்தமறுத் தேதான் நொந்தவிழ வேதான் நன்றுண ரவே
தோதாய் வந்தநிதி வாதாய் வந்தரியும் நீதான் எம்குரு பரா!
நாதா சங்கரசத் போதா புங்கவசித் பாதா ரவிந்தம ணியே! (6)
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!
கோடிச் சுடர்க்கதிரும் கூடித் திடற்புகினும் வேடிக் கையாகி விடவே
நீடித் தருள்மதியுட் சூடித் திரள்பொழியும் கோடித் திருவடி வமே!
வாடித் துயரிலுனை நாடித் தொழுகமழை ஓடிப் பொழியுமு கிலே!
ஊடித் திறந்தமுது நீடித் திடுமறிவு பாடிப் புகலுமு தலே! (7)
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!
காலா லடிபரந்து மேலாம் மொழிகரந்து நூலால் வழிதிறந் தனை!
பாலாய் மடிசுரந்து கோலா கலமிகுந்து நாலா திசைகலந் தனை!
மூலா வளிபுனைந்து சீலா மடந்திறந்து மேலாம் நகையணிந் தனை!
ஞாலா சிரியவடி வேலா! அருளுமனு கூலா! நினைப்பணிந் தனே! (8)
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!