Madurai Sri Meenkshi Prayer
ஐந்தொழிற் காரணி
அருள்மிகு மதுரை மீனாக்ஷி அன்னை துதி
முக்குறுணி விநாயகர் துதி
சுந்தரமாம் மதுரைதிருக் கூடம் – சிந்தனையில்
முக்குறுணி விநாயகரின் முன்னடங்கப் போதும்
நெக்குருகச் சுகமே நிதம்
அருள்மிகு மீனாக்ஷிசுந்தரேசுவரர் துதி
பொன்னும் வெள்ளிமணிப் பூவுமிழைத்த சபை
பூத்துநட மாடும் தெய்வம்!
பொற்றா மரைநீரில் பற்றால்தமிழ்க் கீரன்
புகலகல அருளும் தெய்வம்!
மண்ணும் சுமந்துபரி தந்தும் வேகவதி
மாமதுரை ஆளும் தெய்வம்!
மாதுமீ னாக்ஷிமன மோகன கடாக்ஷமருள்
மங்கைஒரு பாகன் தெய்வம்!
விண்ணும் கடலும்புவி வேறு புவனங்களும்
விளைத்த விதியான தெய்வம்!
வேறான யாவற்றின் வேராகி வித்தாகி
விளங்கு சிவ மான தெய்வம்!
மின்னும் சிந்தையருள் சங்கர சுயம்புவே!
மீட்கவரும் சாட்சி தெய்வம்!
மேலான நல்மதுரைக் கோலான தெய்வமே
மீனாக்ஷி சுந்தர வடிவே!
அருள்மிகு மீனாக்ஷி அன்னை துதி – படைத்தல்
பச்சைநிற மேனியும் பவளவாய் முறுவலும்
பாதமலர்ப் பேரரு ளவும்
பரிதிபல கோடிமுகக் காந்தியும் மீன்விழி
பால்மதி போல் ஒளிரவும்
உச்சிமதி சூடனுன் மத்தமலர்க் கூடனுன்
ஒப்பறிய நற்றுரு விலும்
உயரமரர் அரியுமா லயனவர் தொழுதிடும்
உருச்சக்தி மூல மெனவும்
இச்சைசிவ னேகியும் இடதுநற்பாதியும்
இலாதிடை மடி யுதரமும்
ஈண்டுலகு யாவையும் தோன்றருளுந் தாயெனும்
இயற்கை படைக்கும் முதலே!
பிச்சைபெற வேஎமது அச்சமறவே நினது
பிள்ளையிவன் உள்ள மெழுக!
பிறவியறு! கடம்பவனத் திரவியமே! திரளான
பேரமிர்தே மீனாக்ஷி உமையே!
அருள்மிகு மீனாக்ஷி அன்னை துதி – காத்தல்
திருகாமக் கோட்டத்து ஆளுடைய நாச்சியே!
திருமகளே படைத்து ஆளும்
திரையுலகு எழுபுவனம் வரையறை இலாதுஎண்
திசையெலாம் வளர்த்த மாயே!
சுருகாம லுனதுவிழிக் கருகா ருண்யமழை
சுந்தரியே தந்து காப்பாய்!
சூழுலகு மும்மார்புப் பாலுனது சூரணம்
சுகப்பயன் ஆர்த்த தாயே!
உருகாம லுன்னழகு உருவத்தை ஓர்கணமும்
உற்றுப் பார்த்தல் எளிதோ?
உயர்வே தரவெழும் உத்தமியே சித்தமலர்
ஊதித் திறந்த காற்றே!
அருகாமை விட்டுனது அருகாமை யில்மனது
அடங்கிவர அருள்க தாயே!
ஆதிபரா சக்திஅவா ஆக்கமறி வாய் மதுரை
ஆளும் மீனாக்ஷி உமையே!
(2)
அருள்மிகு மீனாக்ஷி அன்னை துதி – அழித்தல்
காலையுள் மாலையும் மாலையுள் காலையும்
கணத்துள் தினமு மழியும்!
காட்சியிது கண்முனே சாட்சியாய்த் தெரிந்துமென்
கல்லாமை யாலோ ஏனோ
மூளையுள் அழிவெனும் முயற்சியுன் அருளெனும்
முக்கியம் முகிழ்க்க வில்லை!
முன்னறியும் பொருளெலாம் நின்றுநிலை யாகுமென
மூடக் குழியில் விழுவேன்!
சோலையுள் குமரியே! சுந்தர வல்லியே!
சொக்கரின் பக்க பலமே!
சுடரே! அழித்தலெனும் சூட்சுமக் காரியே!
சுருள்கால முடிவின் விடிவே!
ஆலவாய் அந்தரி! அருள்மறைச் சுந்தரி!
அழகுமது ராபுரி அரசி!
அம்பிகே! நின்னடிமை நம்பினே னுன்னுடமை
அன்னை மீனாக்ஷி உமையே!
(3)
அருள்மிகு மீனாக்ஷி அன்னை துதி – மறைத்தல்
ஒன்றே பலவாகி உருவாகி அருவாகி
உருஅருவ மாகி விரியும்!
ஓரரிய உண்மையிப் பேருலகு தந்திரம்!
ஒன்றுக்குள் ஒன்று மறையும்!
அன்றே அதுயிதென அதனால் புறஅறிவு
அகட்டிக் காட்டி விலகும்!
அஞ்ஞான மானயிருட் பொய்யான போர்வையை
ஆக்கிவிரித் தகற்று மாயம்!
நின்றே பார்க்கினுன் நிர்மலத் திருப்பதமும்
நிச்சயமும் பச்சை யழகும்
நெஞ்சமலர்க் குங்குமமும் தஞ்சமருள் செங்கரமும்
அஞ்சலற என்று அருளும்!
இன்றே இப்பொழுதே இக்கணமே தக்கவனாய்
என்னைநீ மாற்றி யருள்க!
இமவான் திருமகளே எழில்மா மதுரைவளர்
ஈஸ்வரி மீனாக்ஷி உமையே!
(4)
அருள்மிகு மீனாக்ஷி அன்னை துதி – அருளல்
அருளலெனும் நினதுபணி விருதுபெற விழையுமினி
அபயமுன தயவி னாலே!
அழகுமிளிர் குமுதமுக மிளகுமதி வதனமலர்
ஆர்த்தவிழி கோர்த்த மீனே!
புருவம்தனுர் உருவமெழில் முறுவலிதழ் கருதுமுயர்
பூத்தசுகம் வார்த்த கலையே!
புத்தொளிரும் தத்துகடல் முத்தனைய மெத்தவிதழ்ப்
பூரணமே புன்ன கையிலே!
தருமபரி பாலகியே தமிழ்மதுரைக் காதலியே
தட்சன்மக ளான தேவி!
தனயனாய் எனையேற்று இனியனாயினி மாற்றம்
தந்தருள வந்த நிலவே!
நறுமணமே! நல்லசிவ நாயகியே! வல்லரென
நற்சித்தர் ஆன சக்தி
நாதமே! நன்மதுரை நாட்டரசி நல்லறிவு
நவிலும் மீனாக்ஷி உமையே!
(5)
எல்லாம் வல்ல சித்தர் துதி
கல்லால் அமர்குருவோ! கயிலைமலை வாசனோ!
கற்களிறு நற்கரும் பினைக்
களித்துண்டு காட்டிய வழித்துணை ஆசனோ!
காரண மறிந்த குருவோ!
வல்லான் எல்லாம் வல்லரெனும் வள்ளலோ!
வழிதரும் திருவுள் ளமோ!
வகைத்த பேர்முனிவனோ! வரமோ! கடம்பவன
வழித்தவ சீலன் சிவனோ!
உள்ளான் மாவுள்ளம் உணர்த்திடும் விளக்கமோ!
உண்மைத் தவத்தி னுருவோ!
ஊற்றான சிவஞானத் தேற்றமோ! தெளிவோ!
உலகெலா மோதும் மொழியோ!
எல்லாம் வல்லரெனும் ஏகாந்த ரூபமே!
என்னறிவில் என்னை அறிவி!
எழில்மதுரை மீனாக்ஷி வழிமுறைவி லாசத்தில்
எழுந்தசிவ முனிவர் மணியே!