Manisha Panchakam – Context (Tamil)

Pages: 1 2 3
Pages: 1 2 3

புலையனின் இரண்டாம் வினா

किम् गंगाम्बुधि बिंबितेम्बर मणौ चंडाल वीधी पयः
पूरेवा अन्तरमस्ति कांचनघटी मृत्कुम्भयोर्वांबरे?
கிம் கங்காம்புதி பிம்பிதே அம்பர மணௌ சண்டாள வீதீ பய:
பூரேவா அன்தரபஸ்தி காஞ்சனகடே ம்ரித்கும்பாயோர்வாம்பரே?
வானத்து மணியாம் பரிதி,
வடிவத்தின் அழகாம் பிரதி
காணட்டும் கங்கை நந்நீர்!
கரையுற்ற புலையன் வீதி
தேங்கிட்ட நீரில் வீழ்ந்தும்
தெள்ளறி! என்ன பேதம்?
பாங்கறி! மண்ணோ, பொன்னோ
பானைக்குள் வெளியோ பேதம்?

பொருள்:

வானத்தின் (ஒளி) மணியான சூரியன் ஒன்றே, (புனித) கங்கை நீரிலேயும், (அதே சமயம்), புலையன் வசிக்கின்ற தெருவிலே தேங்கியுள்ள (சாக்கடை) நீரிலும், பிரதிபலிக்கின்றது! தங்கக் குடத்துக்குள்ளும், மண்ணாலான குடத்துக்குள்ளும், ஒரே வெற்றிடம்தானே குடியிருக்கின்றது? அதனால் என்ன வேறுபாடு இவற்றில்? (சூரியன் ஒன்றே, ஆகாய வெளியும் ஒன்றே அல்லவா?)

முதல் வரி:

கிம் = என்ன?; கங்க அம்புதி = கங்கை நீரில் ; பிம்பிதே = பிரதிபலிக்கின்ற; அம்பர மணௌ = ஆகாயத்தின் மணியான (சூரியன்); சண்டாள வீதி = புலையன் வசிக்கின்ற தெரு; பய: = நீர்;

இரண்டாம் வரி:

பூரே வா = தேக்கத்திலே அல்லது; அன்தரம் = வேறுபாடு; அஸ்தி = உள்ளது; காஞ்சன கடே = தங்கக் குடத்திலே; ம்ரித் கும்பா யோர், வா = அல்லது களி மண் குடத்திலே; அம்பரே = ஆகாய வெளி;

விளக்கம்:

புலையனின் கேள்வி, எளிய எடுத்துக்காட்டுகளினால், ஆதாரமான அறிவுமயமான ஆத்மாவில் வேறுபாடு என்பது இல்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

முதல் எடுத்துக்காட்டு, சூரியினின் பிரதி புனித நீரில் விழுந்தாலும், அழுக்கான சாக்கடை நீரில் விழுந்தாலும், சூரியனில் எந்த பாதிப்பும் வேறுபாடும் இல்லை என்பதே.

இங்கே வானத்தின் ஆபரணமாகச் சூரியன் காட்டப்படுகிறான். அறிவாகிய பரந்த வானத்தின் ஒளி, ஆத்மா. ஆத்மா என்னும் அறிவுரூபம் (சைதன்யம்), அந்தச் சூரியனைப் போலவே எல்லா உடல்களிலும் பிராகசித்துக் கொண்டிருக்கிறது. ஆசைகளாலும் அதனால் ஏற்படும் வேற்றுமைகளாலும், மனமானது அலைகளால் கலங்கிய குட்டையாகி, அதனுள்ளே பிரதிபலிக்கின்ற ஆன்ம ரூபத்தை அடையாளம் காட்ட முடியாததாய் இருக்கிறது. இதனால் ஆன்மாவில் என்ன பேதம் ஏற்பட முடியும்!

மற்றொரு எடுத்துக்காட்டு, பரப்பிரம்மமே ஆத்மனாக உலகில் உள்ள எல்லா உடலிலும் இருக்கிறது என்பதாகும்!

உடல்கள் எல்லாம் பஞ்ச பூத உணவாலான பானைகள். ஆத்மா, அப்பானைகளுக்குள் உயிர்த்திருக்கும் பரவெளி. எதைப் போல என்றால், மண்ணாலான பானைக்குள் அடைந்திருக்கின்ற ஆகாசமே, பொன்னாலான பானைக்குள்ளும் இருக்கிறது. இவற்றில் வேறுபாடுகள் இல்லை. பானைகள் உடைந்தால், பரவெளியில் இவை ஒன்றாயிருப்பதைப் புரிந்து கொள்வதில் என்ன கடினம் வரக்கூடும்? அதுபோலவே, உடல் பலவாக இருப்பினும், உள்ளே ஒளி விளக்காக, மாறாமல் இருக்கின்ற ஆன்மா ஒன்றே என்பதை ஏன் உணர முடியவில்லை?

அதற்கு ஆதாரமான ‘சமநோக்கு’ என்னும் மிக உயர்ந்த பண்புதான் அத்வைத ஞானத்தின் உச்சநிலை. அந்தச் சமநோக்கு இல்லாதபோது, அத்வைத ஞானம் எப்படிப் பரிபூரணமாகும் என்பதே புலையனின் வினாவில் விளைத்த வித்து.

Pages: 1 2 3

Related Posts

Share this Post

Leave a Comment