Manisha Panchakam – Context (Tamil)
ஆதி சங்கரரின் மனீஷா
புலையனின் வினாக்கள் ஜகத்குரு ஆச்சாரியாரின் ஆழ்ந்து நிச்சயித்த அறிவு விளக்கின் வெளிச்சத்தைத் தூண்டி நமக்கெல்லாம் ஞான ஒளி கொடுப்பதற்காக அமைந்தவையாக இருக்கின்றன. ஜகத்குரு ஆதிசங்கரர் அளித்த மனீஷா பஞ்சகம் எனும் இந்த ஐந்து மந்திரங்கள், புலையனின் கேள்விகளுக்கான விடையாக மட்டும் இல்லாமல், உபநிடதங்களின் சாரங்களை எல்லாம் வெளிக் கொணர்ந்த அரிய பொக்கிஷம்.
எல்லா அரிய விஷயத்தையும் சுருக்கி விளக்கும் ஆற்றல் ஆதி சங்கரர் பாடல்களிலே எப்போதும் விளங்கும். இங்கே ஐந்து பாடல்களின் முக்கியக் கரு என்னவென்றால், எதனை எல்லா உபநிடதங்களும் பலவிதமான வழியிலே விளக்குகின்றதோ, அதனை, சுருங்கக்கூறி விளங்க வைப்பதுதான். உபநிடதங்கள் அத்வைதப் பேருண்மையைப் பலவழிகளிலும் பழுதற விளக்கி, உணரவேண்டிய அரிய கருத்துக்களை விதைகளான வார்த்தைகளில் கோர்த்து, சிறிய ஆனால் மிகபெரிய ஞானத்தைத் தரக்கூடி வாக்கியங்களில் படைக்கிறது. அவை ஒவ்வொன்றும் ‘மஹாவாக்கியம்‘ என்று அழைக்கப்படுகிறது.
பொதுவாக எவ்வாக்கியத்தின் கருத்தை அறிவதன் மூலம் நமக்குள் பெரிய மாற்றம் ஏற்படுகிறதோ அவ்வாக்கியமே நமக்கு மஹா வாக்கியம் என்று கொள்ளலாம். நமது உலக அனுபவத்தில் அத்தகைய, மாற்றங்களைத் தரவல்ல, வாக்கியங்களைப் பார்த்திருக்கிறோம்.
உதாரணமாக, ‘வந்தே மாதரம்’ எனும் வாக்கியம் சுதந்திர தாகம் கொண்டிருந்த இந்தியர்களுக்கு, விடுதலை வேட்கையைத் தூண்டிவிட்ட மஹா வாக்கியம் ஆகிறது. ‘நீயே எந்தன் மகன்’ என்ற குந்தியின் வாக்கியம், மஹாபாரதத்திலே, கர்ணனுக்குக் கிடைத்த மஹா வாக்கியம். அதனாலேயே அவரது மனம் முழு நிறைவுற்றது. அவனது வாழ்க்கைப் பயணமும் மாறியது. ‘கண்டேன் சீதையை’ எனும் அனுமனின் வாக்கியம், ராமனுக்கு ராவணவதம் எனும் காரியத்தின் தொடக்க வித்து. ‘ஸதாசிவா, உன் வாய் அடைக்காதா’ என்று குரு சொன்ன வாக்கியத்தாலேயே, வாழ்நாள் முழுதும் மௌனமாய் இருந்தார் ஸதாசிவ பிரம்மேந்திரர் எனும் பிரம்ம ஞானி. ‘இறப்பு என்பது உயிர் உடலைவிட்டுப் போவதுதான்’ என்று கேட்ட காரணத்தாலேயே, ‘நான் யார்’ எனும் ஆன்ம ஆய்விலே கலந்து ஞானியானவர் பகவான் ரமண மஹரிஷி. E=MC2 எனும் சமன்பாட்டு வாக்கியமே விஞ்ஞான உலகில் பல விளைவினை விதைத்த மஹாவாக்கியம். இவ்வாறு ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு சமுதாயத்துக்கும் உயர்வினைத் தரவல்ல வாக்கியங்கள் இருந்திருக்கின்றன.
உபநிடதங்களோ, மனிதர்கள் எல்லாருக்கும், எல்லாக் காலத்திலும் பொருந்துகின்ற உண்மையினைக் கூறுவன. அதனால், அவற்றில் உள்ள மஹா வாக்கியங்கள் என்றும் உண்மையாக, உலகில் உள்ள எல்லா மனிதர்களுக்கும் எப்போதும் பயன்படக்கூடிய வாக்கிய ஞானம். எளிமையான விதத்தில், மேன்மேலும் ஆய்வதற்கான வித்தான வார்த்தைக் கோப்புக்களால், எளிமைக்குள் மலையன்ன பெருமைகளைப் புதைத்து வைத்துள்ளதாய் அமைவனதான் இவ்வுபநிடத மஹா வாக்கியங்கள்.
அவற்றில் ‘தத்வமஸி’ (அது நீயே), ‘அஹம் ப்ரஹ்மாஸி’, (நானே பிரம்மமாய் இருக்கிறேன்), ‘ப்ரக்ஞானம் ப்ரஹ்மா’ (அறிவே பிரம்மம்), ‘அயமாத்மா ப்ரஹ்மா’ (ஆத்மனே பிரம்மம்) ஆன இவை நாலும், மிகவும் உன்னதமான மஹாவாக்கியங்களாகக் கருதப்படுகின்றன.
இவை என்ன சொல்கின்றன? நம்மை இறைவனாக உயர்த்திக் காட்டுகின்ற சமன்பாட்டுத் தத்துவங்கள் இவை. ஒவ்வொரு வாக்கியமும், ஒரு அரிதான சமன்பாட்டினைக் கொடுத்து, அதன்மூலம் உயிர்களுக்குள் விளங்கும் ஆத்மாவும், எல்லா அகிலங்களுக்கும் சாட்சியான பிரம்மமும் ஒன்றே என விளக்குகிறது.
பொதுவாக ‘ இதுவும் அதுவும் சமம்’ என்று சொன்னால், நாம் அறிவது என்ன? முதலில் இது, அது என்று இரண்டு இருக்கின்றன, அவைகளுக்குள் வேறுபாடு இருப்பதுபோல் தோன்றுகிறது, ஆனால் உண்மையில் அவை இரண்டும் ஒன்று என்பதே அல்லவா? அப்படி என்றால், மஹா வாக்கியங்கள் காட்டும் உண்மை என்ன? ஜீவனில் இருக்கும் ஆத்மாவும், உலகெங்குமிருக்கும் பிரம்மமும் ஒன்று என்றால், இவ்விரண்டும் இருக்கிறது, இவற்றுக்குள் வேறுபாடு இருப்பனபோல் தோன்றுகிறது, ஆனால் ஆதார அறிவினால் இவை ஒன்று என்றாகிறது என்பதே! இந்த உண்மையினை ஆய்வதே உபநிடதங்கள். இந்த அரிய கருத்தை சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதே இந்த மனீஷா பஞ்சகம்.
புலையனின் கேள்வி, சமுதாயப் பிரச்சனையாக இருந்த தீண்டாமையினால் எழுப்பட்டதாக இருக்கலாம். ஆனால், அதன் ஆழம், ஆத்ம ஞானத்தைப் பற்றியது. அதனாலேயே, ஆதி சங்கரர், இந்த ஐந்து பாடல்களிலேயே, வேத உபநிடத சாரங்களை, அறிவுபூர்வமாக ஆராய்ந்து பெறக்கூடிய உண்மைகளாகப் படைத்துள்ளார்.
மனீஷா பஞ்சகத்தின் முதல் ஸ்லோகம் ஜீவனைப் பற்றிய ஆய்வு செய்து, அந்த ஆய்வின் முடிவில், ஜீவனே பிரம்மம் என நிச்சயிக்கிறது.
இரண்டாவது ஸ்லோகம் பிரம்மத்தைப் பற்றிய ஆய்வு செய்து, அதன் முடிவில், பிரம்மமே ஆத்மாவாக எல்லா ஜீவனிலும் இருக்கிறது என நிச்சயிக்கிறது.
எனவே முதல் இரண்டு ஸ்லோகங்களே எல்லா உபநிடதத்தின் மூலக் கருத்துக்களையும் சாரப் பிழிந்து கொடுத்து விடுகின்றன.
கருணை வடிவான ஆதி சங்கரர், அத்தகைய ஞானம் மனிதர்கள் எல்லாருக்கும் பயன்படவேண்டும் என்பதற்காகவே, மூன்றாவது ஸ்லோகத்தில் உயரிய அத்வைத ஞானத்தை அடைவதற்கு, எத்தகைய வழிகளை நாம் பின்பற்ற வேண்டும், ஏன் பின்பற்ற வேண்டும், அப்படிச் செய்தால், நமக்கு என்ன பயன் கிடைக்கும் என்பதை விளக்குகின்றார்.
பிறகு நான்காம் ஸ்லோகத்தில், எப்போதும் இருப்பதான (ஸத்) ஆத்மா, முழுமையான அறிவு (சித்) வடிவாக இருப்பதை விளக்குகிறார். அதனை நாம் புற அறிவினால் அறிய முடியாமல் இருப்பதற்கு என்ன காரணம்? இதனையே இந்த நாலாவது ஸ்லோகம் விளக்குகின்றது.
இறுதியாக, ஐந்தாம் ஸ்லோகத்தில், இந்த ஞானத்தின் பலன் ஆத்மனை சுகவடிவாக (ஆனந்தம்) அடைவதே எனக் காட்டி, இத்தகைய உயரிய ஞானத்தைக் கொண்டு அதிலேயே நிலைத்திருப்பவன், புலையனோ, அந்தணனோ – எவராய் இருப்பினும், அவரே இந்திரன் முதலான தேவர்களும் வணங்கத்தக்க பாதங்களைக் கொண்டவர் எனத் தமது நிச்சயித்த திடமான முடிவினை அறிவிக்கின்றார்.
இப்பாடல்களே அத்வைத விளக்கு! அத்வைத விளக்கத்தின் வித்து. பயிலப் பயில, மாபெரும் உண்மையினை நோக்கிப் படிப்படியாக நம்மை அழைத்துச் செல்லும் ஆசான்.
இதன் ஆழ்ந்த கருத்துக்கள் தக்க குருவிடம் கேட்டு அறியப்பட வேண்டியவை. எனவே சூரியனுக்கு ஊதுபத்தியால் வெளிச்சம் காட்டுவது போலத்தான், மனீஷா பஞ்சகம் எனும் ஞானப்புதையலுக்கு எழுதப்பட்ட இந்த எளிய உரை.
இது, படிப்போரை மேலும் பயில்வதற்குத் துடிப்போராக மாற்றினால், அதுவே இப்பணிக்குப் பரிசு!