Manisha Panchakam – Verse 1 (Tamil)
மனீஷா பஞ்சகம் – முதல் ஸ்லோகம்
स्फुटतरा या संविदुज्जृम्भते
या ब्रह्मादि पिपीलिकान्त तनुषु
प्रोता जगत्साक्षिणी,
सैवाहं न च दृश्य वस्त्विति
दृढ प्रज्ञापि यस्यास्तिचे
च्चण्डालोस्तु स तु द्विजोस्तु
गुरुरित्येषा मनीषा मम || 1||
ஸ்புடதரா யா ஸம்வித்ஜ்ரும்பதே
யா ப்ரஹ்மாதி பிபீலிகாந்த தனுஷு
ப்ரோதா ஜகத் சாக்ஷிணீ
ஸைவா அஹம் ந ச த்ருஷ்ய வஸ்த்விதி
த்ருத ப்ரக்ஞாபி யஸ்யாஸ்தி சே
சண்டாளோஸ்து ஸ து த்விஜோஸ்து
குருரித்யேஷா மனீஷா மம || 1||
சுடராகித் தெளிகின்ற ஸ்வரூபம் எதுஅதுவே
அயனாதி எறும்பாகி ஆனபல உயிர்க்குள்
அறிவாகிக் கோர்த்திட்ட அகிலத்தின் சாட்சி!
வயமாகும் அதுஇதுவே வகுத்துணர முடியா
வடிவாகும் எனும்நீதி வழுவாத ஞான
மயமானோர் புலையோனோ மறையோனோ என்ன
மனமார குருஅவரென் திடமான முடிவு (1)
பொருள்
விழிப்பு நிலை, கனவு, உறக்கம் எனும் (மூன்று வேறுபட்ட அனுபவங்களின்) நிலைகளில் எல்லாம் உள்ளே பதிந்து, அறிவாகிய ஒளியைத் தந்து கொண்டிருப்பது எதுவோ (ஆத்மனே), பிரம்ம தேவன் முதலாக எறும்பு போன்ற சீவராசிகள் அனைத்துக்குள்ளும் ஊடுருவிக் கோர்த்து இருக்கின்றது எதுவோ (பரமாத்மா), இது (ஆத்மா) அதுவே (பரமாத்மா) ஆகும். எனினும், புறஅறிவினால் புலப்படாது, அப்படியே (எப்போதும்) அது இருக்கிறது. இந்த ஞானத்தை எவர் புரிந்து அதில் நிலைத்தவராய் உள்ளாரோ அவரே, (வெளித்தோற்றத்தில்) புலையனாக இருந்தாலும், இருபிறப்பேற்ற அந்தணராக இருந்தாலும் என்னுடைய குரு என்பது என்னால் நிச்சயிக்கப்பட்ட அறிவு (முடிவு).
முதல் வரி:
ஜாக்ரத் = (தூல உடலோடியங்கும்) விழிப்பில்; ஸ்வப்ன = (தூல உலகறியா) கனவில்; ஸூஷூப்திஷூ = (ஒன்றும் அறியாத) உறக்கத்தில்; ஸ்புட தரா = மிகத் தெளிவாக; யா ஸம்வித் = எது முற்றிலும் அறிகிறதோ; ஜ்ரும்பதே = எல்லாவற்றிலும் விளங்கிக் கொண்டிருக்கின்றதோ;
இரண்டாம் வரி:
யா ப்ரஹ்மாதி = எது பிரம்ம தேவன் முதலான; பிபீலிகா அந்த = எறும்பு வரையிலான (அதற்கும் கீழான); தனுஷு = எல்லா உடல்களிலும்; ப்ரோதா = உள்ளே கோர்த்திலங்கும்; ஜகத் சாக்ஷிணீ = உலகத்தின் (எலாச் செயல்களுக்கும்) சாட்சியாக (உள்ளதோ);
மூன்றாம் வரி:
ஸ ஏவா அஹம் = அதுவே நான் (என்ற); ந ச த்ருஷ்ய வஸ்த்து இதி = நம்மால் அறிந்து கொள்ள முடியாத பொருளான இது; த்ருத ப்ரக்ஞாபி யஸ்யா = புற அறிவுக்கு அப்பாற்பட்டு; அஸ்தி சேதே = அவ்வாறே இருக்கிறது என்பதை அறிபவன்;
நான்காம் வரி:
சண்டாளோஸ்து = புலையானாலும் ; ஸ து = அதே போல; த்விஜோஸ்து = இருபிறப்பேற்றவனானாலும்; குருர் இதி யேஷா = இந்த ஞானத்தை நிரந்தரமாக உடையவரே குரு என்பது; மனீஷா மம = என்னுடைய தீர்மானமான அறிவு.
விளக்கம்:
இந்த முதல் ஸ்லோகம் ஜீவனைப் பற்றிய ஆய்வினை முதல் வரியிலே காட்டுகின்றது. ஜீவனை ஆய்வதற்கு, மனிதர்களின் வாழ்க்கை அனுபவங்களையே பொருளாக எடுத்துக் காட்டுகிறது. எல்லா மனித உயிர்களும் தினமும் மாறி மாறி அனுபவிக்கும் மூன்று நிலைகளை உபநிடதங்கள் ‘அவஸ்தா’ என்று குறிக்கின்றது.
ஒன்று ‘ஜாக்ரத்’ எனும் உடலும், மனமும் பூதவுலகியலில் ஈடுபடுகின்ற விழிப்பு நிலை. இதைத்தான் நாம் தினசரி நடத்தும் உலக வாழ்க்கையாகக் கருதுகின்றோம். ஆனால் உபநிடதங்கள் இந்த விழிப்புநிலை, ஜீவனுக்கு மூன்றில் ஒரு பங்கான அவஸ்தை என்றே கருதுகிறது.
மற்றொரு அனுபவம் கனவு எனப்படும் ‘ஸ்வப்ன அவஸ்தை’. இந்தக் கனவு அனுபவத்தில் தூல உடலோ, பூதவுலகியலோ தொடர்பில் இல்லை. மனம் மட்டுமே சிந்தையில் பதிந்த நினைவுகளேயே உணவாகச் சமைத்து, இந்தக் கனவுலகைப் படைத்து, அனுபவிக்கிறது.
மூன்றாவது அனுபவம் ஆழ்துயில் அல்லது உறக்கம். இந்த ‘ஷூஷூப்தி’ எனும் அவஸ்தையில், நமது உடல், மனம் இரண்டும் அறியாமை எனும் போர்வைக்குள் ஆழ்ந்துவிடுகிறது; ஒன்றும் தெரியாத அனுபவத்தை மட்டுமே ஜீவன் பெறுகிறது.
நாம் தினசரி இந்த மூன்று அனுபவங்களைப் பொதுவாக அனுபவித்துக் கொண்டிருப்பதுதான் வாழ்க்கை. உபநிடதங்கள், இம்மூன்று அனுபவங்களையும் ஆராய்கிறது.
அனுபவங்களை ஆய்வதினாலேயே, அந்த அனுபங்களுடைய ஆதார அறிவினைப் பெற முடியும். அனுபவத்தால் புரிந்து கொள்ளும் அறிவு ஒன்று; அனுபவத்தை ஆராய்வதால் வரும் அறிவு அதைவிட ஆழமான ஒன்று. உண்மை என்று அனுபவத்திக் கொண்டிருக்கின்ற ஒரு அறிவு, சரியான ஆய்வுக்குப் பிறகு வேறொரு உண்மையைக் காட்டுகிறது. உதாரணமாக சூரியனின் உதயத்தை அனுபவித்து, அதனால் சூரியன் கிழக்கில் உதிக்கிறது என்ற அறிவு ஒரு உண்மை. அதனை ஆராய்ந்து பார்த்தால், சூரியன் உதிப்பதோ, மறைவதோ இல்லை, அதன் கிழக்கின் உதயம் பூமியின் சுழற்சியால் வரும் விளைவு என்பது தெளிந்த அறிவு. அனுபவம் இன்னும் முன்போலவே இருப்பினும், ஆதார அறிவு வேறாக இருக்கிறது.
மனிதர்கள் தினமும் அடையும் இந்த மூன்று அனுபவங்களை நாம் ஆராய்வதன் நோக்கம் என்ன? இந்த மூன்று அனுபவங்களிலும் எது பொதுவாக இருக்கிறது? எது வேறுபட்டது? இதனை ஆராய்ந்தால் நமக்குக் கிடைக்கும் முதல் பாடம் – ஒரு நிலையில் அனுபவிக்கும் உலகமோ, உடலோ, பொருளோ, மறு நிலையில் இருப்பதில்லை என்பதுதான். கனவுலகின் விருந்து, விழிப்புலகின் பசிக்கு உதவாது. விழிப்புலகின் தூல உடலின் பங்கு, கனவுலகில் இருக்காது. உறக்கத்திலோ எதுவும் இல்லை. அப்படி என்றால், இந்த ஒவ்வொரு அனுபவங்களிலும், உடலோ, மனமோ, உலகோ – இவைகள் எல்லாம் மாறிக் கொண்டே இருக்கின்றன. நிலையானவையாக இல்லை!
இந்த மூன்று அனுபவங்களிலும், எது மாறாமல் இருக்கிறது?
அனுபவம் என்பதற்கு, அனுபவிக்கும் பொருள், அனுபவிப்பவன், அனுபவிக்கும் அறிவு என மூன்றும் இருப்பது அவசியமாகிறது. அனுபவிக்கும் பொருள் மூன்று நிலைகளிலும் மாறு படுகிறது என அறிந்தோம். அறிவுதான் அனுபவத்துக்கு அடிப்படை. முதல் வரியில் ‘ஸ்ம்வித்’ எனக் குறிப்பிட்ட இந்த அறிவே ஜீவனின் மூன்று அனுபவ நிலைகளிலும், தொடர்ந்து இருக்கின்றது. அந்த அறிவே, பிறகு, ‘நான் உலக விஷயங்களில் ஈடுபட்டேன்’, அல்லது ‘நான் கனவில் இதனைக் கண்டேன்’, அல்லது ‘நான் நன்றாகத் தூங்கினேன்’ என்றெல்லாம் அறிவிக்கின்றது. ஆதலால் அனுபவிப்பவன் அறிவுமயமாகவே இருக்கிறான் என்றும் அந்த அறிவுமயமே ‘நான்’ என்றும் புரிகிறது.
இந்த ஆய்வில் நாம் தெளியும் முக்கிய உண்மைகள் என்ன?
முதலில் ‘நான்’ என்பவன் உடல்/மனம்/உலகம் இவற்றிலிருந்து வேறுபட்டவன். இரண்டாவது, அந்த ‘நான்’ என்பது அறிவுமயமானதாக இருக்கின்றது. மூன்றாவதாக, அந்த ‘நான்’ ஜீவனுடைய மூன்று அனுபவ உலகங்களிலும் மாறாது, தொடர்ந்து இருப்பவன். இறுதியாக, மனித வாழ்க்கை என்பது இந்த மூன்றுவிதமான தினசரி அனுபவ நிலைகளின் மொத்தமே என்பதால், அந்த ‘நான்’, என்பவன் ஜீவனுடைய பயணத்தில் என்றுமே மாறாதவனாக இருக்கின்றான். இந்த உண்மைகளே, ஜீவனை ஆராய்வதால் கிடைத்த பலனாக முதல் ஸ்லோகத்தின் முதல் வரியிலேயே, பகவான் ஆதி சங்கரர் காட்டும் உபநிடத ஞானம்.
இரண்டாவது வரியில், அந்த ‘நான்’ என்று உணரும், தன்னுள்ளே இருக்கும் அறிவுமயமான சக்தியே, உலகில் உள்ள எல்லா உயிர்களுக்குள்ளும் இருக்க வேண்டும் என்ற ஆய்வினைத் தருகிறது. உலகங்களைப் படைத்ததாகக் கருதப்படும் பிரம்ம தேவன் முதல், சிற்றெறும்பு வரையிலான, அதாவது எல்லா உயிர்களுக்குள்ளும் இதே அறிவு கோர்க்கப்பட்டு உலக சாட்சியாக இருக்கிறது. இதனையே மீண்டும் அடுத்த ஸ்லோகம் ஈஸ்வர ஆராய்ச்சியாகக் காட்டுகின்றது. முதல் வரியில் தெளிந்த எனக்குள் இருக்கும் ‘நான்’ எனும் அறிவும், இரண்டாம் வரியில் தெளிந்த எல்லா உயிர்க்குள்ளும் ‘நான்’ என இருக்கும் அறிவும் ஒன்றே.
இதனை மூன்றாம் வரியில் ‘ஸ ஏவா அஹம்’ (அதுவே இது) என்னும் மஹா வாக்யமாக, ஜீவனே ஈஸ்வரன் அல்லது ஆத்மாவே பரமாத்மா என்று அறிவிக்கப்படுகிறது. இதுவே சத்தியம். ஆனால் நம்மால் ஏன், நமக்குள்ளே இருப்பதான இந்த ‘நான்’ எனும் ஆத்மாவினை அறிய முடியவில்லை? இதனையே மூன்றாம் வரி தொடர்ந்து விளக்குகிறது. ‘நான்’ என்பது அறியப்பட முடியாதது. எதை நாம் அறிகிறோமோ, அதிலிருந்து நாம் வேறுபட்டு இருக்கிறோம், ஏனெனில் ஒன்று அறியப்பட்டால், அறிபொருள், அறிந்தவன் என இரண்டாகிறது அல்லவா? அதனாலேயே, இந்த நான் எனும் ஆத்மா, புற அறிவினால் அறியப்படமுடியாதாது.
இறுதி வரியிலே புலையனது கேள்வியால் தெளிந்த தனது உறுதி எது என்பதைக் காட்டுகின்றார். அதாவது, மேற்கூறிய ஞானத்தைத் திடமாகக் கொண்டவர், புலையனாகவோ, அந்தணராகவோ எவராக இருந்தாலும் அவரே என்னுடைய குரு என்பதே என்னுடைய நிச்சயித்த அறிவு என்று இறுதி வரியிலே முடிவாகத் தருகின்றார்.
இவ்வாறு முதல் ஸ்லோகத்தில் ஜீவ ஆய்வு செய்து மஹாவாக்கிய உண்மையை உறுதிசெய்த ஜகத்குரு சங்கரர், அடுத்த ஸ்லோகத்தில், ஈஸ்வர ஆய்வு செய்து, இதே மஹாவாக்கியத்தை மீண்டும் நிலை நிறுத்துகிறார்.