Manisha Panchakam – Verse 3 (Tamil)
மனீஷா பஞ்சகம் – மூன்றாம் ஸ்லோகம்
नित्यं ब्रह्म निरन्तरं विमृशता निर्व्याज शान्तात्मना,
भूतं भावि च दुष्कृतं प्रदहता संविन्मये पावके
प्रारब्धाय समर्पितं स्ववपुरित्येषा मनीषा मम ॥3||
நித்யம் ப்ரஹ்மா நிரந்தரம் விம்ரிஷதா நிர்வ்யாஜ ஷாந்தாத்மநா
பூதம் பாவி ச துஷ்க்ரிதம் ப்ரதஹதா ஸம்வின்மயே பாவகே
ப்ராரப்தாய ஸமார்பிதம் ஸ்வ வபூரித்யேஷா மனீஷா மம || 3 ||
தொலையாத பிரம்மமெனத் தூயகுரு ஞானம்
தடமாகக் குவியுமனந் தெளியுமதி கொண்டு
தவமாக ஞானாக்நி தத்துவத்தில் நின்று
விடமான முக்கால வினையாவும் கொன்று
விட்டுவிட உடல்கரும விளையாட்டே என்று
மடமான தூலவுடல் மாற்றத்தை ஏற்போர்
மனமார குருஅவரென் திடமான முடிவு (3)
பொருள் :
ஒவ்வொரு கணத்திலும் தொடர்ந்து இருப்பதுபோல் தோன்றும் இந்த உலகங்கள் எல்லாம், ஒவ்வொரு கணமும் அழிந்து கொண்டே இருக்கின்றன. இந்த உண்மையை குருவின் உபதேசத்தால் புரிந்து கொண்டு, (அதனால், ‘ஜகத் மித்யம், பிரம்மம் சத்யம்’ எனும்) இந்த உயரிய ஞானத்தினை, எப்போதும், தூய்மையும், அமைதியால் குவிந்த மனத்தினாலும் தியானித்து, அதன் பயனாக, முக்காலங்களிலும் அறிந்தும் அறியாமலும் செய்த வினைப்பளுவை எல்லாம் இத்தூய ஞானத்தீ முற்றும் சாம்பலாக்கிவிட, பிறகு (இவ்வுடல் தோன்றுவதற்குக் காரணமான) ‘பிராரப்தம்‘எனப்படும் மிஞ்சி நிற்கும் வினைப்பயனை மட்டும் (வேண்டுதல் வேண்டாமை எதுவும் இல்லாமல்) முற்றிலும் ஏற்றுக்கொள்ளும் உறுதியுடன், இப்பிறவிக்கான உடலை வெறுமனே சாட்சியாகச் சுமந்து கொண்டிருக்கும் இவரே குரு என்பதே என்னுடைய திடமான முடிவு.
முதல் வரி:
சக்ஷ்வாத் யயேவா = தொடர்வதாகத் தோன்றினாலும்; நக்ஷ்வரம் = தொடர்ந்து அழிந்து கொண்டே இருப்பது; ஏவ = என்பதாகிய; விக்ஷ்வம் அகிலம் = அகில உலகங்கள் எல்லாம் (படைத்தன எல்லாம்); நிக்ஷ்சித்ய = உறுதிப்படுத்திக் கொள்க; வாசா குரோர: = குருவின் உரையின்படி;
இரண்டாம் வரி:
நித்யம் = எப்போதும் நிலைத்த; ப்ரஹ்மா = பிரம்மம்; நிரந்தரம் = மாறுபாடற்றது; விம்ரிஷதாம் = (இந்த அறிவில்) கவனமான தியானம் செய்பவரால்; நிர் வ்யாஜ = களங்கமற்ற (தூய அறிவுடன்); ஷாந்த ஆத்மநாம் = ஒருமுனைப்பட்ட மனமுடன்;
மூன்றாம் வரி:
பூதம் = கடந்த கால; பாவி ச = இப்போது மற்றும் வருங்காலம்; துஷ்க்ரிதம் = அறியாமலும் செய்த வினைகள்; ப்ர தஹதாம் = முற்றும் சாம்பாலக்கி; ஸம் வின்மயே = மிகச் சிறந்த ஞானம்; பாவகே = எரியும் தீயாகிய (ஞானத்தில்);
நான்காம் வரி:
ப்ராரப்தாய = பிராரப்தம் எனும் இவ்வுடலுக்கான முன்வினைகள்; ஸமார்பிதம் = முற்றிலும் ஏற்றுக் கொள்ளுதல்; ஸ்வ வபூர் = தூல உடல்கள்; இத் யேஷா = இவ்வாறு எவர்; மனீஷா மம= என்னால் நிச்சயிக்கப்பட்ட அறிவு.
விளக்கம்:
முதல் இரண்டு ஸ்லோகங்களில் ஜீவாத்மாவும், பரமாத்வாவும் ஒன்றே என்ற ஞான சாரத்தைக் கொடுத்த ஆதி சங்கரர், இந்த மூன்றாம் ஸ்லோகத்தில் அத்தகைய உயரிய ஆத்ம ஞானத்தை அடைவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும், அதனால் வரும் எத்தகைய ஞானத்தில் நாம் நிலையாக இருக்க வேண்டும் என்பதையும், பிறகு அதனால் நாம் அடையும் பயனையும் வலியுறுத்துகின்றார்.
நான் எனும் அறிவே நித்யம், மற்றதெல்லாம் அழியக்கூடியது; அந்த நான் எனும் ஆத்மாவே பிரம்மம் எனும் பேருண்மையை உணர்தலே மனிதவாழ்வின் குறிக்கோள். அந்த ஞானத்தை இந்தப் பிறவியிலே அடைவதற்கு, நமக்கு எத்தகைய தகுதிகள் வேண்டும் என்பதுதான் முதல் பாடம்.
‘நிர் வ்யாஜ’ எனும் மனத்தூய்மையே முதல் தகுதி; தூய மனம் அடைவதற்கும், அந்த நிலையிலேயே இருப்பதற்கும் நாம் மிகவும் உழைக்க வேண்டும். அதற்கு ஒரு எளிய வழி என்னவென்றால், மனத்தின் குணத்திலேயே மாற்றத்தை ஏற்படுத்துவது. மனம் ஆசையின் வித்து என்பதால், எப்போதும் தூய்மையான பலனையே நமது ஆசையாக ஆக்கினால், மனம் தூய்மையையே நாடும், அதனாலேயே மனம் தூய்மை அடைந்து விடும். அப்படி என்றால், முதலில் எது தூய்மையான பலனைத் தருவது என்ற அறிவும், அதனையே அடையவேண்டும் என்ற ஆசையையும் வளர்த்துக் கொள்ளப் பழக வேண்டும்.
தூய அறிவு இருந்தால், ‘சாந்தாத்மம்’ எனும் அமைதியால் குவிந்த மனத்தினை நாம் அடைய முடியும். அமைதி என்பது ஆசையின் விளைவால் எழும் உணர்ச்சிகளால் அலைபாயாத மனம். தூய ஆசைகளினால், அமைதி பெருக ஆரம்பிக்கும். அத்தகைய மனம் வளரவும், குறிக்கோளை நோக்கிக் குவியவும், யோகப் பயிற்சிகள் துணையாகின்றன.
இதற்கு ‘யமமம்’, ‘நியமம்’ என்று சொல்லப்படுகின்ற எட்டுவித யோகப் பாதைகள் உதவியாக இருக்கின்றன. அவற்றைப் பழகுதல் அவசியம். அதற்குத் தக்க குருவின் உதவி தேவை.
தூய அறிவும், அமைதியும் குறிக்கோளும் உடைய மனமும் அமைந்து விட்டால், தக்க குருவின் உபதேசத்தை உறுதியாக நாடுகின்ற அவசியமும், உற்சாகமும் தோன்றும்.
கற்றல் என்பது குருவுடைய நேரடிக் கருணை, வார்த்தை வடிவங்கள், நல்ல நூல்களின் பயன் எனப் பலவகையினாலும் அடையும் பயிற்சி. இருப்பினும், குருவிடம் நேரடியாகச் சரணடைந்து கற்பதே ஞான யோகத்திற்கான வழி. அவரது துணையுடனே தத்துவ விசாரணை, ஆய்தல் எனப்பல பயிற்சிகளை ஏற்பதும், அதனால் பலன்பெறுவதும் முடியும். உண்மை அறிவினை அடைவதற்கு, நம்மை வழிநடத்தும் குருவின் துணையுடனே நடக்க வேண்டும். மனம் முதிர்ந்த பொழுது, அத்தகைய குருவினை நம்மால் அடையாளம் கண்டு, அடைய முடியும்.
மேற்கூறிய மூன்று தகுதிகளையும் அடைந்தால், நமக்கு முதல் இரண்டு ஸ்லோகங்களில் உபநிடத சாரமாகக் காட்டப்பட்ட, ‘ஜீவபிரஹ்ம ஐக்கிய ரகசியம்’ எனும் ஈறில்லா அத்வைத ஞானம் கிடைக்கும். அந்த ஞானத்தை ‘நிஷ்சித்ய’ எனும்படியாக, உறுதியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். உறுதியற்ற நிலைக்குக் காரணம், ஐயம் என்ற நோய்.
ஆராயும் நோக்கில் ஏற்கும் ஐயம் ஆரோக்கியமானது. அது அறியும் பொருட்டு எழும் கல்விப்படிகள். ஆராய்வதற்கல்லாமல், உலகியல் காரணமாகவும், குணக்கேட்டின் காரணமாகவும் ஐயம் கொண்டு குருவின் வார்த்தைகளிலும், ஆய்ந்த உண்மைகளிலும் உறுதி இல்லாமல் இருப்பது என்பது ஞானம் அடைந்தும் அதனை இழந்த நிலையாகும். நமது ஞான உறுதியினைக் கலைப்பதற்கு, உலகியல் விஷயங்களும், ஆசைகளும் காரணமாகின்றன. அதனால்தான் ஞான நிஷ்டை என்பது, மிக மிக எச்சரிக்கையாக நாம் வாழ்க்கைப்பாதையை அமைத்துக் கொள்வதலாயே அடையக் கூடியதாக உள்ளது. அப்படி இருப்பின், ஐயம் நீங்கி, நமக்குள்ளே மனீஷா எனும் நிச்சயித்த அறிவு கிடைக்கும். அந்த அறிவு, சம நோக்கினை அளிக்கவல்ல அத்வைத பலனைத் தருகின்றது.
உறுதியான நிச்சயித்த அறிவு, நம்முள் நிலை பெற வேண்டும். அதற்கு தக்க பாதை, ‘நித்யம் ப்ரஹ்மா நிரந்தரம் விம்ரிஷதா’ எனக் கூறியபடி, எப்போதும் நானே பிரம்மம், நான் பூரணமானவன் என்னும் உறுதியான எண்ணத்திலேயே தியானம் செய்ய வேண்டும். அதற்குத் துணை உண்மைக்குப் புறம்பான செயல்களையோ, எண்ணங்களையோ முற்றிலும் நீக்கி உலகில் வாழ்ந்து வருவது ஆகும். அதாவது, ஞானப்பாதையில் பயணிப்பவர்கள், நமது உலக நடத்தையில் உயரிய மாற்றத்தைக் காட்டி நடத்தல் அவசியம். ஆசை, சினம், பொறாமை என்றான தீய குணங்கள் இல்லாமல், எதனையும் சம நோக்கில் காணும் பக்குவம் நமது வாழ்க்கைப் பண்பாக இருக்க வேண்டும்.
அத்தகைய பண்பினால், ஆத்ம ஞானத்திலேயே நிலைத்து நிற்க முடியும் என்றால், அதன் பலனாக, உடல்களுக்கு வித்தாகின்ற வினைகள் எல்லாம் அழிந்து, பிரம்ம மயமான உணர்விலேயே அந்த ஞானியால் லயிக்க முடிகிறது. அந்நிலையிலேயே, ‘அகிலங்கள் எல்லாம் அழியக்கூடியன, ஆதார அறிவாகிய நான் எனும் ஆத்மாவே இரண்டற்று, எப்போதும் இருக்கும் உண்மை’ என்ற பேருண்மையில் அவரால் திளைக்க முடிகிறது. அப்படிப்பட்ட உயர்ந்த நிலையிலே, தற்போது ஏற்றுள்ள பூதவுடலும் தன்னுடையதல்ல என்ற வைராக்கியம் ஏற்பட்டு, அவ்வுடல் அடையும் எல்லாவித சுகதுக்கங்களையும், அவ்வுடல் ஏற்கக் காரணமான வினைப்பளுவாக, முற்றிலும் சரியெனவே ஏற்றுக் கொள்ளும் உறுதி பிறக்கிறது. பிறகு அவர் ஓர் பிரம்ம ஞானியாக, உடல் எனும் கூட்டை வெறுமனே சுமந்து திரிகின்றவராக, நான் எனும் ஆணவம் இல்லாத காரணத்தால், அவரது உடல், மனம் செய்யும் எந்த வினைகளுக்கும் காரணமற்ற சாட்சியாகவே இருக்கிறார். இந்த நிலையே ‘ஜீவன் முக்தி’ எனப்படுகிறது. இதன் பலன் என்ன?
நான் என்னும் அறிவு வினைகளுக்குச் சாட்சிதானே ஒழிய, வினைசெய்பவன் அல்ல. நான் எனும் உடல்/மனம்/உலகம் சார்ந்த ஆணவம் அழித்த காரணத்தால், செய்த, செய்கின்ற வினைகளின் பலன் இவனைப் பற்றுவதில்லை. வினைப்பளுவே, மனதில் வாசனையாக (நுண் எண்ணம்) இருந்து கொண்டு, அதற்கேற்பப் பலவிதமான உடலினை ஏற்றுப் பிறிவிப் பிணியில் மீண்டும் மீண்டும் பிணைக்கிறது. ஆத்ம ஞானம் அடைபவன் நான் எனும் ஆணவம் அற்றவன் ஆதலால், இவ்வுடலை விட்ட பிறகு, வினைப்பளு ஏதும் அவனுக்கு இல்லாதாதலும், அவனது மனதின் வாசனை பிரம்மமாகவே இருப்பதாலும், பிரம்மத்திலேயே கலந்து விடுகிறான். அந்த ஞானிக்குப் பிறவிப்பிணி இல்லை. இதுவே ‘விதேஹமுக்தி’ எனப்படும். இத்தகையோர் கோடியில் ஒருவராக உலகில் இருப்பர்.
நாம், இவ்வுண்மையினைக் கற்பதன் மூலம், குறைந்த பட்சம், அல்லன விலக்கி, நல்லன அறியும் ஆசைகளையேனும் வளர்த்துக் கொள்ளலாம் அல்லவா?