Manisha Panchakam – Verse 4 (Tamil)
மனீஷா பஞ்சகம் – நான்காம் ஸ்லோகம்
यद्भासा हृदयाक्षदेहविषया भान्ति स्वतो चेतनाः,
ताम् भास्यैः पिहितार्कमण्डलनिभां स्फूर्तिं सदा भावय
न्योगी निर्वृतमानसो हि गुरुरित्येषा मनीषा मम || 4 ||
யத்பாஸா ஹ்ரிதயாக்ஷதேஹவிஷயா பாந்தி ஸ்வதோ சேதனா:
தாம் பாஸ்யை: பிஹிதார்கமண்டலநிபாம் ஸ்பூர்திம் ஸதா பாவய
ந்யோகி நிர்வ்ரிதமானஸோ ஹி குருரித்யேஷா மனீஷா மம || 4 ||
எல்லோர்க்குள் தான்என்ற எண்ணம் உருவாகும்
எதனொளிபோல் மனமுடற்கண் சடமான தூலம்
ஏதறியும் ஞானமுறும் எதுயிதனால் மறையும்
எதனுணர்வு முகில்மறைத்த சூரியனாய் ஆகும்
என்றிந்தப் பேருண்மை கண்டாய்ந்து ஞானம்
அதுபிரம்மம் எனநின்று ஆய்ந்தரெவ ரெனினும்
மனமார குருஅவரென் திடமான முடிவு (4)
பொருள்:
எந்த அறிவினால் மிருகங்கள்,மனிதர்கள், தேவர்கள் என எல்லா உயிர்களுக்குள்ளும் இருக்கும் ‘நான்’ எனும் உணர்வு மிகத் தெளிவாக உணரப்படுகிறதோ, எந்த அறிவினால் மனம், ஞானேந்திரியங்கள், உடல் ஆகிய சடலப்பொருட்கள் எல்லாம் உயிர்த்துக் காணப்படுகின்றதோ, எந்த ஒளி, சூரியனால் காட்டப்பட்ட மேகமே சூரியனை மறைப்பதுபோல, தன்னால் விளக்கப்பட்ட மனதாலேயே தான் மறைக்கப்பட்டதாக இருக்கும் ஆத்மாவாக இருக்கிறதோ, அந்த நிறைவான அறிவினையே எப்போதும் தியானித்து இருப்பவரே, தன்னுள்ளே முழு நிறைவைக் கண்ட யோகி. அவரே (உலக வழக்கில் எவராக இருந்தாலும்) என்னுடைய குரு என்பது என்னுடைய நிச்சயிக்கப்பட்ட தீர்மானமான அறிவு, முடிவு.
முதல் வரி:
யா = எது (எந்த ஒரு அறிவு); திர்யங் = மிருகங்கள்; நர= மனிதர்கள் ; தேவதா பிர் = தேவர்கள் ஆகியோருக்குள்ளும்; அஹம் இதி அந்த: = நான் எனும் உள்ளார்ந்த உணர்வு; ஸ்புடா = மிகத் தெளிவாக; க்ரிஹ்யதே = உணரப்படுகிறது;
இரண்டாம் வரி:
யத் பாஸா = எந்த அறிவினால்; ஹ்ரிதய, அக்ஷ, தேஹ விஷயா = மனம், கண் முதலிய கருவிகள், உடல், பொருட்கள்; பாந்தி = உணரப்படுவது; ஸ்வத: அதே சேதனா = சடலனமானவை அறிவு பெறுவது;
மூன்றாம் வரி:
தாம் = அந்த ஆத்மா; பாஸ்யை = (தன்னால் ஒளிபெற்ற மேகங்களினால்) மனம் முதலிய விஷயங்கள்; பிஹிதா = மூடப்பட்ட; அர்க மண்டல = சூரியன்; நிபாம் = உதாரணமாகும்; ஸ்பூர்திம் = என்றும் விளங்கிக்கொண்டிருக்கும் ஞானத்தை; ஸதா பாவயன் = எப்போதும் தியானித்திருப்பவன்;
நான்காம் வரி:
யோகி = முழுமையான தியானத்தில் நிலைத்த யோகி; நிர் வ்ரித = முற்றிலும் திருப்தி அடைந்த; மானஸ = தன்னுடைய மனதிலேயே; ஸஹ குருர் = இவரே குரு; இதி யேஷா = இந்தக் குணங்களை உடையவரே; மனீஷா மம = என்னுடைய நிச்சயித்த அறிவு.
விளக்கம்:
இந்த ‘நான்’ எனும் உணர்வு மனிதருக்கு மட்டுமா? மற்ற உயிர்களுக்குமா? அப்படி நான் எனும் ஆய்வைச் செய்யும்போது, உடல், புலனறிவுகள், மனம் ஆகியவையும் அறிவுடன் விளங்குவதாகத் தெரிகிறதே? இந்த ஐயங்களை விளக்குவதுதான் முதலிரு வரிகள். இந்த 4ம் ஸ்லோகமும், 5ம் ஸ்லோகமும் முதல் இரண்டு ஸ்லோகங்களின் தொடர் விளக்கமே.
நான் எனும் உணர்வு எல்லா உயிர்களுக்குள்ளும் இருக்கிறது. அதனாலேயே, தான் ஏற்ற உடலுக்கும் மனதுக்கும் ஏற்ப எல்லா உயிர்களும் செயலாற்றுகின்றன. ஆனால், இந்த நான் எனும் உணர்வின் காரணம், ஆன்மா எனும் அறிவே. அந்த அறிவினாலேயே மனம், உடல், புலனாகிய கருவிகள் எல்லாம், உயிர்த்தும், அறிவுடன் இருப்பது போலவும் தெரிகிறது. ஆன்மா இல்லை எனில், இவை அனைத்தும் சடலமே.
இந்த ஆன்மாவின் ஒளியே மனம், உடல் என எல்லாவற்றையும் பிராகசிக்கச் செய்கிறது. அப்படி என்றால், இந்த ஆன்மாவாகிய ஒளியை நம்மால் ஏன் காண முடியவில்லை என்ற ஐயம் வருகிறது. இதற்குக் காரணம் மனம். மனமே ஆத்மாவை மறைக்கிறது. மனமே இந்த ஆத்மாவினால் பிரகாசிக்கையிலே, மனம் எப்படி ஆத்மாவை மறைக்க முடியும்? இந்த ஐயத்திற்கு ஆதிசங்கரர் சூரியனை மேகம் மறைப்பதை ஒரு உதாரணமாகக் காட்டுகிறார்.
சூரியனை மேகம் மறைப்பதில்லை. ஆனால் சூரியனைக் காணவிடாமல், நமது பார்வையைத்தான் மேகம் மறைக்கிறது. அந்த மேகம் வானத்தில் இருப்பதையே சூரியனின் ஒளியாலேயே நாம் உணருகிறோம். இதனைப் போலவே, மனதின் அழுக்கான, அறியாமையான மேகங்கள், ஆன்ம ஒளியினை நமது உள்ளார்ந்த பார்வையினால் காணமுடியாமல் மறைக்கின்றன. அத்தகைய அறியாமையை விலக்குவதே ‘ஆத்ம விசாரம்’அல்லது நான் யார் எனப்படும் தனையறியும் தவம். அதுவே யோகம்.
அத்தகைய ஒளியை, ஆன்ம அறிவை முற்றும் ஆய்ந்து, அந்த அறிவினிலேயே எப்போதும், நிலைத்து இருக்கின்றவர் எவரோ அவரே யோகி. அவரது இந்த ஞானத்தினால், தன்னுள்ளே முற்றிலும் திருப்தி அடைந்தவராக அவர் எப்போதும் இருக்கின்றார்.
முற்றும் திருப்தி பெற்ற நிலையே ஆனந்தம். இது 5ம் ஸ்லோகத்தில் விளக்கப்படுகிறது. அத்தகைய திருப்தியுடைய ஞானி, உலக வழக்கில் புலையனாகவோ, அந்தணராகவோ – எவராக இருப்பினும், அவரே குரு என்பது, தன்னுடைய நிச்சயித்த திடமான அறிவு என்று ஜகத்குரு முடிவு செய்கிறார்.