Manisha Panchakam – Verse 5 (Tamil)

(Read in ENGLISH)

மனீஷா பஞ்சகம் – ஐந்தாம் ஸ்லோகம்

यत्सौख्याम्बुधि लेशलेशत इमे शक्रादयो निर्वृता
यच्चित्ते नितरां प्रशान्तकलने लब्ध्वा मुनिर्निर्वृतः
यस्मिन्नित्य सुखाम्बुधौ गलितधीर्ब्रह्मैव न ब्रह्मविद्
यः कश्चित्स सुरेन्द्रवन्दितपदो नूनं मनीषा मम ॥
யத் சௌக்யாம்பூதி லேஷலேஷத் இமே ஷக்ராதயோ நிர்வ்ரிதா
யாச்சித்தே நிதராம் ப்ரஷாந்தகளனே ளப்த்வா முனிர்நிர்வ்ரித:
யஸ்மின் நித்ய ஸுகாம்பூதௌ களிதீஹீர் ப்ரஹ்மைவ ந ப்ரஹமவித்
ய: கக்ஷ்சித்ஸ ஸுரேந்த்ர வந்திதபதோ நூனம் மனீஷா மம  || 5 ||
திரைகளிலாச் சுகக்கடலே தெளிந்தபரப் பிரம்மம்!
தெளித்ததுளி சுகபோகம் தேவானு பவமாகும்!
குறைகளிலாத் தூயமனம் குவித்தமுனி யோர்கள்
கோடிசுகம் காணுமவர் ஞானாமய யோகம்!
நிறைவிதனால் நித்யசுக நீள்கடலில் கரையும்
நேரியனே பிரம்மமினி ஞானியென இல்லை!
இறையடியே இவனடியாய் இந்திரனும் பணியும்
எவரெனினும் குருஅவரென் தீர்மான முடிவு! (5)

பொருள்

ஆத்மா எனும் பரந்த ஆனந்தக்கடலின் சில துளிகளினாலேயே,  இந்திரன் முதலான தேவர்கள் குறைகளற்ற சுகபோகங்களில் ஆனந்தித்து இருக்கிறார்கள்.    தூய மனதுடைய முனிவர்களும், தங்களுடைய சிந்தையினாலாயே முழுமையான நிறைவினையும் இந்த ஆத்மாவின் துளியினாலேயே அடைந்து இருக்கிறார்கள்.  எப்போதும் நிலைத்திருக்கும் இந்த சுகக்கடலில் எவர் முற்றிலும் கலந்து, கரைந்து விடுகிறார்களோ, அவர் பிரம்மமே அன்றி, பிரம்மத்தை அறிந்தவர் அல்ல.  இந்த ஞானத்தை அடைந்தவர் எவராயினும் அவரே தேவர்களின் தலைவனான இந்திரனும் வணங்கத்தக்க  திருவடிகளை உடையவராக இருக்கிறார் என்பதே என்னால் கண்டிப்பாக தீர்மானிக்கப்பட அறிவு.

class=”subheading”>முதல் வரி:
யத்  = எதில் (இந்த ஆத்மாவில்);  சௌக்ய = முற்றிலும் சுகம் நிறைந்த;  அம்பூதி  = கடல்;   லேஷலேஷத் = துளித் துளியால்;   இமே = இந்த ஆனந்தம்;   ஷக்ர ஆதயோ  = இந்திரன் ஆகியோர்களுக்கு  (தேவர்களுக்கு);  நிர் வ்ரிதா = குறைகளற்ற முழுச்சுகத்தைத் தருகிறதோ;

இரண்டாம் வரி:

யா = எது;  ப்ரஷாந்த களனே = களங்கமற்ற தூய்மையான;  சித்தே ந இதராம்  = சிந்தையால் மட்டுமே (அன்றி பிறவற்றால் அல்ல);  ளப்த்வா = எந்த அனுபவத்தை;  முனிர் = (பூவுலகில்) முனிவர்கள்;  நிர் வ்ரித: = முழு நிறைவை அடைகிறார்கள்;

மூன்றாம் வரி:

யஸ்மின் = எவர்;  நித்ய = எப்போதும் உள்ள; ஸுக அம்பூதௌ = (இந்தச்) சுகக் கடலில்; களித தீஹீர் = முற்றிலும் கரைந்து விடுகிறார்களோ; ப்ரஹ்மைவ ந ப்ரஹமவித் = (அவர்) ப்ரம்மமே  (இனி) பிரம்ம ஞானி அல்ல;

நான்காம் வரி:

ய: கக்ஷ்சித் = இப்படி எவர் இருந்தாலும்;  ஸ: = அப்படி இருப்பின் (மேலே கூறியபடி);  ஸுர இந்த்ர வந்தித பதோ = (அவரே) தேவர்களின் இந்திரனும் வணங்கும் பாதங்களை உடையவர்;  நூனம் = உறுதியான;  மனீஷா மம  = என்னால் நிச்சயிக்கப்பட்ட அறிவு (முடிவு).

விளக்கம்

முதல் இரண்டு ஸ்லோகங்களில் ஆத்மா என்றும் நிலையானது (ஸத்) என்பதையும்,  அடுத்த இரண்டு ஸ்லோகங்களிலும் ஆத்மா எங்கும் நிறைந்த அறிவு (சித்) எனவும் விளக்கிய ஜகத்குரு ஆதி சங்கரர், இந்த ஐந்தாவது ஸ்லோகத்தில் ஆத்மா முழுமையான இன்ப வடிவம் (ஆனந்த ஸ்வரூபம் ) என்பதனை விளக்குகின்றார்.  புலையனது இரண்டாவது கேள்வியில் கண்ட ‘ஆத்ம ஆனந்தம்’ என்ன என்பதையும், அதனை நோக்கியே அறிந்தும், அறியாமலும் எல்லா உயிர்களும் வாழ்க்கைத் தவத்தை ஏற்கின்றன என்பதையும் குறிக்கிறார்.

ஆத்மா ஆனந்த ஸ்வரூபமானது என்பதனை  ‘சௌக்யம்’ எனும் வாக்கினால் குறிக்கிறார். வடமொழியில் ‘சுகஸ்வரூபம் சௌக்யம்’  என்பதன் பொருள், முற்றும் இன்ப வடிவாக  இருப்பதே சௌக்கியம் என்பது ஆகும்.  இன்பமே எல்லா உயிர்க்கும் இயற்கை.   என்றாலும் அறியாமையினால் எது இன்பம் அல்லது ஆனந்தம், அது எதனால் கிடைக்கிறது என்று புரியாமல்,  நாம் உலகில்  ஒன்று மாற்றி ஒன்று எனப்  பொருட்களிலும், செயலிலும், உறவிலும் சுகத்தைத் தேடுகின்றோம்.  இவ்வாறு நமக்கு வெளியில் இருப்பதாகப்பட்ட பொருட்களில் இன்பம் தேடுவதை  ‘விஷய ஆனந்தம்’ அல்லது பொருளின்பம் என்கிறது உபநிடதம்.

மனித வாழ்க்கையின் நாம் இப்படிப்பட்ட பொருளின்பத்தில்தான் குறியாக  இருக்கிறோம்.  பணம், நகை, வீடு, பதவி,புகழ், என எல்லாவற்றிலும் இன்பத்தை அனுபவிக்கத்தான் நாம் வாழ்க்கையைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.  ஆனாலும் அனுபவத்தினால்,  பொருளின்பத்தால் வரும் சுகம்  நிலையாக இல்லை என்பதை உணரமுடிகிறது.  மேலும் பொருளின்பமே  துன்பமாகவும் ஆகிறது என்பதையும் அறிகிறோம்.  இதன் காரணம் என்ன என்று ஆராய்ந்து சொல்கிறது உபநிடதம்.

பொதுவாக நாம் விஷயானந்தம் எனும் பொருளின்பத்தை மூன்று விதங்களில் அனுபவிக்கிறோம்.  அடையும் சுகம் (ப்ரியம்), உடமை சுகம் (மோஹம்), அனுபவ சுகம் (பிரமோதம்)  எனும் இம்மூன்று சுகத்திலும், துன்பமும் கூடவே வருகிறது.

முதலில் இன்பத்தைத் தருகின்றதாக ஆசைப்பட்ட  பொருளை  அடைய வேண்டும் என்ற வேட்கை. அந்த வேட்கைக்கு, ‘ப்ரியம்’ என்பது வடமொழி வார்த்தை.   ஆசைப்படும் பொருள் நம் கைவசம் இல்லை என்றாலும் அதன்மீது நாட்டம், அதன் நினைவு, அதனைப் பார்க்கும் போதும், கேட்கும் போதும் எழுகின்ற உணர்ச்சி எல்லாமே ஒருவித இன்பத்தைத் தருகின்றது. பிறகு முயற்சியாலோ, வாய்ப்பாலோ, அப்பொருள் கிடைத்துவிட்டால், ஒரு இன்பம் வருகிறது.  இதுவே ‘மோஹம்’ எனப்படுவது.   பிறகு அந்தப் பொருளை அனுபவிக்கும் பொது, மற்றொரு வகையான  இன்பம் கிடைக்கிறது.  இதனைப் ‘பிரமோதம்’ என்னும் வடமொழிச் சொல்லால் அறிவர்.

அடைய நினைத்த பொருள் கிடைக்காதபோது துயரம். அடைந்த பொருளான உடமையை இழந்துவிடுவோமோ எனும் பயம், உடமையை அனுபவித்ததால் கரைந்துவிட்ட இன்பமும், படிப்படியாக அதிகரிக்கும் அனுபவக் கசப்பு.    எனவே இன்பம் கொடுத்த இப்பொருட்களே துன்பத்திற்கும் காரணமாகின்றன.  இதனை உணர்ந்து, மீண்டும் வேறு ஒரு பொருளில் இன்பத்தைத் தேடி நம்முடைய நாட்டம் போகிறது.  நாட்கள் போகிறது.  மனித வாழ்க்கையில் இன்பத்தை முழுமையாக அறியாமலேயே ஆயுளைக் கழித்தி விடுகிறோம்.

விரும்பி உண்ணும் உணவே திகட்டுகிறது. நோயாகிறது.  திரட்டிய சொத்துக்களே, அச்சத்தைக் கொடுக்கிறது. ஏனென்றால் நாம் இன்பம் என்று தேடுகின்ற உலகப் பொருட்கள் முழுமை பெற்றதாக அமையவில்லை.  முழுமை பெறாத பொருட்கள் முழுமை தரமுடியாது.  அதனாலேயே எந்த இன்பமும் நம்மை முற்றும் திருப்திப் படுத்தவில்லை.    இதனை மேலும் ஆராயும்போது,  இன்பம் பொருளில் இல்லை, அப்பொருளின் மேல் வைத்த ஆசை முடிவதாலேயே இருக்கிறது என உணர்கிறோம்.  அதனால் ஆசை விலகும்போது இன்பம் தெரிகிறது என அறிகிறோம்.  அதனால், பொருளின்ப விலக்கம் அல்லது தியாகம் செய்வதால்,  ஆசை விலக்கம் ஏற்படுகிறது, அதனால் உயர்ந்த இன்பம் கிடைக்கிறது என்பதை அறிகிறோம்.  பலனை எதிர்பார்க்காத பணி என்று பகவத்கீதை விளக்குவதும் இதுவே.

தியாகம் செய்யச் செய்ய, இன்பம் ஓங்குகிறது. பலன் கருதாப் பணியும், தியாகமும் பண்பினை வளர்ப்பதால், இன்பத்தின் உயரமும் சிறப்பாக இருக்கிறது. இத்தகைய இன்பம் ‘தியாகானந்தம்’ அல்லது ‘வைராக்யானந்தம்’ எனப்படுகிறது.  இதுவே பண்பட்ட மனிதர்கள் உலக வாழ்வில் தேடும் இன்பம்.  பொருளும், பொருள் தியாகமும் முழுமையான இன்பத்தைத் தரவில்லையே என்ற ஆராய்ந்தால்,  அதனால் என்ன தெரிகிறது?  முழுமையான இன்பம் முழுமையான பொருளாலோ, செயலாலோதான் பெறமுடையும்.

அப்படி என்றால், எது முழுமைப்பொருள்?  எது முழுமையான இன்பம்?  ஆசை விலகும்போது இன்பம் வருகின்றது என்றால், ஆசையிலா மனதில் இன்பம் அதிகம்.  ஆசையிலா மனது சலனமில்லாத நீராக ஆன்மாவைப் பிரதிபலிக்கிறது.  அப்படி என்றால், ஆன்மாவின் ஒளியினை அதிகம் பிரதிபலிக்கப் பிரதிபலிக்க, ஆனந்தம் அதிகமாகிறது.  இதன் கருத்து என்ன?  ஆத்மா ஆனந்த ஸ்வரூபம்.   எனவே, ஆத்மா எனும் இந்த முழுமையான பொருளில் நாட்டம் இருந்தால், அது மிகச் சிறந்த இன்ப அனுபவத்தைத் தரும்.  ஆத்மாவை நாடும் அறிவே ஞானம் என்பதால், இவ்வுலகில் நாம் அடையும் உயரிய இன்பம் ‘ஞானானந்தம்’ என அழைக்கப்படுகிறது.

அத்வைத ஞானத்தால், ‘வேறு என்று ஒன்றில்லை, நானே ஆத்மா, நானே பிரம்மம், அதனால் வேண்டுதல் வேண்டாமை இல்லை’ எனும் ஞான நிஷ்டையிலே இருந்து கொண்டே,  வேறுபட்டவை போலத் தெரியும் உலக வாழ்க்கையைக் கையாளும்போது,   நமக்கு அது ஒரு விளையாட்டாகவும் இன்பமாகவும் அல்லவா இருக்கும்?  ஜீவன் முக்தராக,  உலக சாட்சியாக, வேண்டுதல் வேண்டாமை அற்றவராக இருப்பவரது ஞானாநந்தம் அளவிடமுடியாத முழுமையான சுகம் அல்லவா?  அதனாலேயே இவ்வின்பமே உலகவாழ்வில் மிகபெரியது எனக்கூறுகின்றன உபநிடதங்கள்.

இந்த ஞான ஆனந்தத்திலேயே ஒருவர் இருப்பின்,  இறுதியில்  அவரே,  இன்பத்தை அறிபவர், நுகர்பவர் எனும் நிலையினைக் கடந்து,  இன்ப ரூபமாகவே ஆகிவிடுகிறார்.  ஆத்மா ஸத், சித், ஆனந்தம் எனும் சச்சிதானந்தக் கடலாக  இருப்பதை உணர்ந்து, அதிலேயே கரைந்து விடுகிறார்.  அதுவே முழுமையான இன்ப நிலை. அந்த ஆத்மசுகமே புலையனின் கேள்வியில் குறிப்பிப்பட்ட ஆனந்தக்கடல்.  அக்கடலில் சுகிப்பதே  மனித வாழ்க்கையின் குறிக்கோள்.   எல்லா உயிர்களுக்கும் இதுவே இயற்கை, இறுதி விதி!

இந்த அறியாமுடியாக் கடினக் கருத்தை,  எளிமையாக்கி,  சாதி மத வேற்றுமை இல்லாத  சமுதாய வளர்ச்சிக்கு ஒரு பாடமாக, எல்லா உயிரையும்  சமநோக்கு எனும் பண்பினால் மதிக்கின்ற மாண்பாக,  வித்யா கர்வம் எனும் அறிவுச்செருக்கை அறவே அழிக்கும் அறமாக,  நாமே இறைவனாவோம் என்னும் மிகப்பெரிய சமன்பாட்டு ஞானவிளக்கமாக,  தூய அறிவுப்பாதையை, மனித குலத்துக்கு உதவும் பொருட்டு, தமது நிச்சயித்த அறிவாகத் தருவதுதான், ஜகக்குரு ஆதி சங்கரரின்  அரிய காப்பியம் – மனீஷா பஞ்சகம்.

ஓம் ஸ்ரீ குருப்யோ நம:

மணீஷாபஞ்சகம் பாடல் (4)

முடிவுரை – நிர்வாணஷாதகம்

Share this Post

Leave a Comment