Shivanandalahari – Prelude
அணிந்துரை
Dr. V.L. Sethuraman, M.A., Ph.D
Former Prof. of Sanskrit & head,Madras Christian College, Tambaram, India
பாரத தேசத்தின் பழம்பெரும் புதையல் சனாதான தர்மம், அறம், பொருள், இன்பம், வீடு எனும் உயர் நோக்கங்களைக் காட்டி, நன்முறையில் நம்மை நடத்திச் செல்கிறது. அவ்வழியினைக் காட்டுவோர் முனிபுங்கவர்கள், ஆசார்யப் பெருமக்கள் முதலியோர் ஆவர்.
அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது, அதிலும் மகானாய்ப் பிறத்தல் பேரரிது. ஈண்டு குறிப்பிடத்தக்கவர், காலடியில் பிறந்து, ஆய கலைகள் அனைத்தையும் முழுமையாக உணர்ந்து, அவனி முழுதும் காலடிகளாலேயே பன்முறை கடந்து, பண்டிதர்கள் என்றோ, பாமரர்கள் என்றோ வேறுபாடு ஏதும் இன்றி ஆசிகள் அளித்து, புகழ்மிகு ஷண்மத ஸ்தாபகராயும், தத்துவ ஞானியாயும், இறைஞானியாயும், கவிதா ஸிரோமணியாயும், வேத வேதாந்த சிலிபியாயும் திகழ்ந்தவர் ஆதி சங்கரர். அன்னார் வேத பாஷ்யங்கள் முதலாக விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம் மற்றும் பற்பல தோத்திர நூல்களையும் செவ்வணே புனைந்துள்ளார். அவற்றுள் சிறப்பாக இரண்டு தந்தரயுக்தமான சீரிய நூல்களாம் சௌந்தர்யலஹரி, சிவானந்தலஹரி எனும் அம்பாள், சிவபரமான நூல்களை வடித்து, அவற்றுள்ளும் வேதாந்தக் கருத்துக்களைப் புகுத்து இணையிலாக் காவிய வடிவில் தந்துள்ளார்.
நூறு பாடல்களைக் கொண்டு மிளிரும் சிவானந்தலஹரி நூலை, அழகுறத் தமிழ்ச் சந்தங்களாக, சிறப்புற வடித்துள்ளார் திரு மீனாக்ஷிசுந்தரம் இராஜகோபாலனார். பரம்பொருளான சிவாத்மக ப்ரபாவத்தை இந்நூல் பறை சாற்றுகிறது. சிவானந்தப் பெருவெள்ளம் எனும் தலைப்பில், அழகிய தமிழில், மிக மிக எளிமையாகவும், எளிதில் புரிந்து உணரும் வகையிலும் தெளிவாகச் சமைத்துள்ளார். மூல கிரந்தத்திற்கு மிகச் சிறிதும் வழுவாமல், பாட்டுக்களைத் தமிழ் மொழிபெயர்ப்பாக அருளியுள்ளார். காவிய இலட்சணங்கள் மிக இனிதான நடை அழகுடனும், பொருட்செறிவுடனும் தலையாய்த் திகழ்கின்றன. காவிய ஆத்ம பூதமான த்வனி, ரசங்கள், குணங்கள், அலங்காரங்கள், நடை முதலியவை அழகாகக் கையாளப்படுவதையும் கண்டு மகிழலாம். சச்சினாந்த ஸ்வரூபமான பரஞ்ஜோதி வடிவான சிவானந்த நிலையைப் படம் பிடித்துக் காட்டுகின்றார்.
இந்நூலை ஒரு நல்ல நங்கைக்கு ஒப்பிடும் பாடல் (98), இந்நூலின் சிறப்புக்கு ஒரு உதாரணம்.
ஸாது₄வ்ருத்தாம் ஸுவர்ணாம்
ஸத்₃பி₄:ஸம்ஸ்தூயமானாம் ஸரஸகு₃ணயுதாம்
லக்ஷிதாம் லக்ஷணாட்₄யாம் |
உத்₃யத்₃பூ₄ஷாவிஶேஷாமுபக₃தவினயாம்
த்₃யோதமானார்த₂ரேகா₂ம்
கல்யாணீம் தே₃வ கௌ₃ரீப்ரிய மம
கவிதாகன்யகாம் த்வம் க்₃ருஹாண || 98||
தகையு முளவாகிப் – பொன்மேனி
மிகையி லுயர்வாகி முனியர் உடனாகி
இனிய குணமாகி – கனியான
நெறியு முறையாகி மிளிரும் அணியாரம்
ஒளிரப் பொருளோடுங் – கரமாகி
நிறையு சுகமாகி உரையும் கவிமாது
நினது துணையாகி – நிலைவீரே
இவ்வுருவகமும் மொழி பெயர்ப்புமே இந்நூலின் சீரிய சிறப்பைக் காட்டுகிறது. ஸ்லேஷ ஆதி குணங்கள், உபமா, ஆதி அலங்காரங்கள், ப்ரஸாத நடை முதலியவை இந்நூலின் சிறப்பு. உவமை, உருவகம், சிலேடை, எதுகை, மோனை மூல நூலிலும், மொழிபெயர்ப்பிலும் திறம்பட இருப்பதை எளிதில் அறியலாம்.
சிவ சுகப் பேரலை பெயருக்கு ஏற்றாற்போல் உண்மையான பரம்பொருளை மங்களகரமான பரமசிவனைப் போற்றுகிறது. பரம் அசிவம் (அனைத்து அமலங்களையும்) களைந்து, பரமசிவனின் பரிபூரண ஆசிகளையும் அனுக்ரஹத்தையும் அடைய வழி வகுக்கிறது. முதற்பாட்டிலேயே (கலாப்யம்…. கலைகள் பலவாகி) சிவசக்தியின் இன்றியமையாத பெருமைகளை உணரலாம். மேலும் அனுப்ராசம், யமகம், எதுகை மோனைகளால் அன்னாரின் ஆனந்தக் கூத்தினை அனுபவிக்கலாம். சிவநிலை உணர்தல் – யானே பிரம்மம் எனும் அத்வைத பாவம், கேட்டல், நினைத்தல், தியானித்தல் ஆகிய வேத வேதாந்தக் கோட்பாடுகளைப் பாக்கள் 7, 11, 92 மூலம் அறியலாம்.
மேலும் பரமசிவனின் பற்பல திருவிளையாடல்களும் இந்நூலில் காட்டப்பட்டுள்ளன. திரிபுர சம்ஹாரம் (3), மார்க்கண்டேய அனுக்ரஹம் (65, 79), கண்ணப்பர் அனுக்ரஹம் (63), பிரமனும் திருமாலும் அடிமுடி காண முயலுதல் (23), காமதகனம் (21) என எடுத்துக் காட்டலாம். நம் மனதினை அன்னப்பறவைக்கு உவமையாகக் கூறுகிறார் கவி. அல்லவை அகற்றி நல்லவை நல்கும் திறன் அன்னப்பறவைக்கே இருக்கிறது. அது போலவே, நம் மனம், காமாதி துர்க்குணங்களை நீக்கி, நல்லதோர் பரம்பொருளை உணரும் பாங்கு, பாடல் 48ல் வெளிப்படுகிறது. இது போன்ற பல நல்லுவமைகளை, உதாரணமாக, 43ம் பாடலில் சிவனை வேடுவனாகவும், 45ல் சிவனின் திருவடிகளைப் பறவைக் கூண்டாகவும், 46ம் பாடலில் சிவனின் திருவடிகளே பக்தர்கள் வசிக்கும் மாளிகையாகவும், பகவான் ஆதிசங்கரர் அளிக்கிறார்.
சிலேடை அணியினை எளிதாகக் கையாள்கிறார் ஆசிரியர். சிவனோ ஆத்மப்ரகாசர். சந்திரனோ பூரணப்ரகாசர். இவ்விருவருக்கும் சிலேடை பாடல் 38. அது போன்றே சிவனை சிங்கத்துடனும் (44), மல்லிகை மலருடனும், மல்லிகார்ஜுனம் – ஸ்ரீசைலம் எனவும் (50), மயிலின் நடனத்துடனும் (54) ஒப்பிடுவதைக் காணலாம்.
உள்ளதை உள்ளபடியே இயம்புதல் ஸ்வபாவ உத்தியணியாம். அதை அழகாக 59ம் பாடலில் கையாள்கிறார். அன்னப்பறவை தாமரைக் குளத்தை நாடுகிறது. சாதகப் பறவை நீருண்ட மேகத்தையும், கோகணப் பறவை சூரிய ஒளியையும், சகோரப் பறவை பூரண சந்திரப் பிரகாசத்தையும் நாடுவது இயல்பே. அவ்வாறே பக்தர்களாகிய நாமும் உண்மை அறிவால் பூரண சச்சினாந்த ஸ்வரூபத்தை நாடுகின்றோம். என்னே படைப்பாளரின் கவிதா சக்தி!
சிவசக்திப் பிரபாவத்தை வர்ணிக்குங்கால் பூமியைத் தேராகவும், பிரம்மாவை ஓட்டுநராகவும், மேருமலையை வில்லாகவும், திருமாலை அம்பாகவும் ஆதிசேஷனை நாணாகவும் அமைத்துத் திருபுர சமாரத்தை வருணித்திருப்பது, படிப்போர் மனதினைப் பரவசப்படுத்துகின்றது.
பக்தியே முக்திக்கு இணையிலா வழி என்பதும் (10, 13, 14, 15). அவனருளால் அவன் தாள் வணங்குதலும், கர்ம பலனறிவும் (16,19), பரசிவசுகம் அனுபவிப்பவர்களே அடியார்கள் எனவும் (18), சிவதரிசனம் (25) மானசீகப் பூஜை (33) எனவும் பல விதமான அரிய கருத்துக்களும் சிறப்பான உவமைகளுடன் காட்டப்படுகின்றன. மிக மிகச் சிறப்பக, ஜீவன் முக்தர்களுடைய இலட்சணத்தைப் பாடல் 81 மூலம் அறிகிறோம். ‘நெஞ்சத்தால் எவன் உஞ்சத்தாவுவன், செஞ்சொல் ஜீவித சிவமுக்தன்’.
அஞ்ஞானியின் அறியா நிலையையும், சிவப் பிரார்த்தனையும் பாடல்கள் 85, 86 காட்டுகின்றன. முடிவில் முத்தாய்ப்பாக முக்தி பெற சக்தி கொடுக்குமாறு இராமபிரான், அகத்தியர், அயன் ஆகியோர்களைக் குறிப்பிட்டு, சிவபதம் எய்திட நெஞ்சுருக நெக்குருகிறார் கவிஞர்.
மேலும் சிறப்பாக நூறு பாட்டுக்களையும் தமிழில் வடித்து, சிறப்புற ஸ்தோத்ரம் வாயிலாக ஒவ்வொரு பாடல்களுக்கும், முறையான, பொருத்தமான தலைப்பினை நல்கி, போற்றி, போற்றி எனப் போற்றுகிறார். உடனுக்குடன், சிவநடனக் குறிப்பாக, சந்தத்தையும் நாட்டுகிறார், ஆசிரியர் மீ. இராஜகோபாலனார்.
நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர், நிதி குறைந்தவர் காசுகள் தாரீர், அதுவும் அற்றவர் வாய்ச்சொல் அருள்வீர் (ஆசிகள் அளிப்பீர்) எனும் பாரதப் பெருமான் போற்றுதலுக்கேற்ப, தமிழால் இனிதே மொழி பெயர்த்தளித்த மீ. இராஜகோபாலனார் அவர்களுக்கு, அடியேன் உளமார்ந்த ஆசிகளையும், வாழ்த்துக்களையும் நல்கி, பரமசிவனின் கருணா கடாக்ஷ வ்ருஷ்டியால் பரம குணானுகத மங்களத்துடன் பிறவா நிலைபெற, எல்லாம் வல்ல இறைவனாம் பரமானந்த சுகப்பேரலையில் நிலைக்கும் பரம்பொருளை இறைஞ்சுகிறேன்.
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாது வேரொன்றும் அறியேன் பராபரமே.
சென்னை
2 ஜீன் 2014