Shiva Mahimina Stotram
|| அணிந்துரை ||
“திராவிடாசார்யா” ஸ்ரீ ராமகிருஷ்ண ஸ்வாமிஜி, ஶாஸ்த்ர நேத்ராலாயா, ரிஷிகேஷ்
ஶிவ மஹிம்னா ஸ்தோத்திரம் எனப்படும் இந்த கிரந்தமானது மிகவும் பிரபலமான ஒரு க்ரந்தம் ஆகும். வேத ரகசியத்தை கூறும் உபநிடதங்கள் எவ்வாறு பொதுவாக அதன் துவக்க வார்த்தைகள் கொண்டு அறியப்படுகிறதோ அது போல இந்த கிரந்தமும் ‘மஹிம்னா’ என்ற வார்த்தை கொண்டு துவங்குவதாலும், இறைவனின் வர்ணிக்கப்பட இயலாத மகிமைகளை கூறுவதாலும் அவ்வாறு அறியப்படுகின்றது.
வேதங்களில் யஜூர் வேதமும் அதனில் ருத்ரமும் மிகவும் மேன்மையானது. இந்த ருத்ரமானது எவ்வாறு ஶிவ பூஜைகளில் படிக்கப்படுகின்றதோ அது போல தினமும் மாலை வேளைகளில் ஶிவ பூஜையின் போது இந்த மஹிம்னா ஸ்தோத்திரமானது வட இந்திய கோவில் மற்றும் ஆஸ்ரமங்களில் படிக்கப்படுகிறது.
இதனை ஶிவனுக்கு உரியதாக பொதுவாக ஏற்றாலும், ஸ்ரீ மதுசூதன சரஸ்வதி அவர்கள் இதனை ஹரி-ஹரன் இருவருக்கும் பொதுவான ஒரு க்ரந்தமாக விளக்கியுள்ளார்.
மிக முக்கியமான ஒரு கிரந்தமானாலும் இதனை சமஸ்கிருதம் அல்லது ஹிந்தியிலோ எழுதியவர் மிகவும் குறைவே. இப்படி இருக்கும் நிலையில் தமிழில் எவரும் அறியாததான இந்த க்ரந்தத்திற்கு, சமஸ்கிருத பதங்களுக்குத் தமிழில் பொருள் தந்ததோடு அல்லாமல் இதன் பொருள் கெடாமல் தமிழில் அழகிய கவிதையாக வடித்து அதற்கு பொருளும் தந்து நம் எல்லோருக்கும் மிகவும் அறிய உபகாரத்தைச் செய்துள்ளார் ஆசிரியர்.
பல ஶ்ருதியில் ஶங்கர என்ற பதத்திற்கு ஸ்ரீ சங்கராசாரியார் என்ற பொருள் படும்படி கூறியிருப்பது ஆசிரியருக்கு அன்னாரிடமுள்ள பக்தியை காண்பிக்கின்றது. இது ஸ்ரீ ஶங்கர திக் விஜத்தில் கூறியிருப்பது போல உள்ளது “ஶம்போ சரதி பூமெள ஶங்கராசார்ய ரூபா” (அந்த ஶிவனே ஸ்ரீ சங்கராசாரியராக இந்த பூமியில் அவதரித்திருக்கின்றார்). “அவன் அருளாலே அவன் தாள் வணங்கி”’ என்பதற்கு இணங்க இங்கும் இந்த வாக்கு மயமான பூஜையானது அவன் அருளுக்காக அவன் பாதங்களில் சமர்பிக்கிறார் ஸ்ரீ புஷ்ப தந்தர்.
பொருளுணர்ந்து சொல்வது மிகவும் சிறப்பானதாக ஏற்கப்படுகிறது. மூலமான சமஸ்க்ருதமிருக்க தமிழைப் படிப்பானேன் என்றால், அதற்கும் மூலமான வேதமிருக்க அதற்கும் மூலமான ஈஷ்வரன், அதற்கும் மூலமான காரண பிரம்மம் என்று கூற இயலும் என்பதால், இங்கு காரண பிரம்மத்தை எல்லோரும் அறிவது அறிது, வேதத்தை படிக்கத் தகுதி முதலியவை கூறப்பட்டுள்ளதாலும், சமஸ்க்ருதத்தை தமிழர்கள் பொதுவாகத் தவறாக உச்சரிப்பதாலும் தமிழில் கசடறப் படிக்க ஏற்ற இந்தக் கிரந்தத்தை எல்லோரும் படித்து உய்ய வேண்டும்.
ஸ்ரீ ராமகிருஷ்ண ஸ்வாமிஜி
ரிஷிகேஷ் – 29 ஜூன் 2016
|| பணிவுரை ||
மீ. ராஜகோபாலன்
ஶிவ மஹிம்னா ஸ்தோத்திரம் எனும் அரிய வடமொழி நந்நூலின் தமிழ்ப் பதிவு இது.
ஓர் காலத்தில், மிகச்சிறந்த சிவனடியாராக இருந்த புஷ்பதந்தர் என்ற கந்தர்வர், பூமியில் இருக்கும் ஒரு பூ வனத்தில், அற்புதமான மலர்கள் பூத்துக் குலுங்குவதைக் கண்டு, அவற்றைத் தன்னுடைய இறைவனான சிவபெருமானுக்கு அர்ச்சிக்க வேண்டும் எனும் தாகத்தால், தமது உருவத்தை மறைத்துக் கொண்டு, நாள்தோறும் அம்மலர்களை எல்லாம் கொய்து பூஜை நடத்தி வந்தார். அப்பூவனத்தின் உரிமையாளரான அரசனும் ஒரு சிவபக்தன். பூக்கள் களவு போவது அறிந்தும், உருவமற்ற கந்தர்வரைக் காண முடியாததால், அரசன் ஆழ்ந்து யோசித்து, ஓர் நாள் பரசிவனுக்கு அர்ச்சித்த வில்வ இலைகளைப் பூவனத்தின் தரையில் பரப்பி வைத்தான். அதை அறியாமல், புஷ்பதந்தர் அந்த வில்வ இலைகளை மிதிக்க நேரிட்டதால், தமது காந்தர்வ சக்தியை இழந்து விடுகிறார். பூக்களைக் களவாடிய குற்றத்தை உணர்ந்து, அதனை மன்னித்து மீண்டும் பழைய சிறப்பினைப் பெறவேண்டும் எனப் பரசிவனை அன்பினால் அழைத்து, அழகான துதிப்பாடல்களால் தொழுகிறார். அவரது முதல் மூன்று பாடல்களிலேயே மயங்கிய கருணாமூர்த்தியான சிவபெருமான் அன்னாருக்கு அருள் கனிவதால், புஷ்பதந்தரும் தன் சிறப்பினை மீண்டும் அடைகிறார். மறைந்திருந்து இவற்றை எல்லாம் கண்டு களித்திருந்த சிவபக்தனான அரசன், புஷ்பதந்தர் பாடியருளிய பாடல்களை எல்லாம் தொகுத்து “சிவ மஹிம்ன ஸ்தோத்திரம்” என உலகோர் உய்யப் பாடிப் பரவினார்.
இவ்வாறே, இத்தோத்திரத்தின் வரலாற்றைப் புராணங்கள் கூறுகின்றன. இன்றும், தென்னிந்தியாவில் ஸ்ரீ ருத்ரம் எப்படிப் போற்றப்படுகிறதோ, அதைப்போலவே வடஇந்தியாவில் சிவ மஹிம்னா ஸ்தோத்திரம் போற்றப்படுகிறது.
சிவ மஹிம்னா ஸ்தோத்திரம் எனும் இப்பாடல்களை, வேதாந்தப் பொருளை பதித்திருக்கும் திருவிளக்காகவே புஷ்பதந்தர் ஏற்றி வைத்திருக்கிறார் என்பது அடியேனின் எண்ணம். இத்தோத்திரம் கவிநயமும், பொருள்நயமும் கொண்டு, பல சிவபுராணக் கதைகளை நினைவூட்டுவதானாலும் ஆழத்தில் உபநிடத உண்மையைப் பொலிய வைத்துள்ள அருநிதியமே என என்னுள் காட்டியதும் குருவருளே ஆகும். இந்நூலைச் செந்தமிழிலும், ஆங்கிலத்திலும் மொழி வார்க்கத் தூண்டியதும் அப்பேரருளே என்பதால், எல்லாப் பெருமைகளும் இறைவனுக்கே சேர்வதாகும்!
அணிந்துரை வழங்கிய பெருந்தகை ஸ்ரீ ராமகிருஷ்ண ஸ்வாமி அவர்களுக்கும், எனை என்றும் வழி நடத்திச் செல்லும் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடமாகிய கற்பகத் தருவின் காலடிகளுக்கும் பணிவினைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடியேனின் இம்முயற்சிக்கு, அருள்மிகு புஷ்பதந்தர் அனுமதி அருளவும், அறியாமையால் யான விளைத்த தவறுகளைச் சான்றோர்கள் திருத்தவும், அதனால் யான் திருந்தவும், திருவருள் துணை புரியட்டும்.
மீ. ராஜகோபாலன்