Shiva Mahimina Stotram – 01
|| பாடல் 1 ||
ஸ்துதிர்ப்₃ரஹ்மாதீ₃னம் அபி தத₃வஸன்னாஸ்த்வயி கி₃ர: |
அதா₂(அ)வாச்ய: ஸர்வ: ஸ்வமதிபரிணாமாவதி₄ க்₃ருணன்
மமாப்யேஷ ஸ்தோத்ரே ஹர நிரபவாத₃: பரிகர: || 1 ||
பொருள்:
ஒருவேளை (யத்₃) நினது (தே) பெருமையின் (மஹிம்ன:) அளவினை (பாரம்) முழுமையாக (பரம்) அறியாதவருடைய (அவிது₃ஷோ) துதி (ஸ்துதி) குறையானதாகி விடலாம் (அஸத்₃ருஶீ). அப்படியானால் (தத்₃) நின்பால் (த்வயி) பிரம்மா (ப்₃ரஹ்மா), முதலானோர் (ஆதீ₃னாம்) செய்த துதிகளும் (கி₃ர: அபி) முழுமையானவை ஆக முடியாது (அவஸன்னா:)! ஆயினும் (அத₂), தமது (ஸ்வ) அறிவின் (மதி) வளர்ச்சியை (பரிணாம) ஒட்டியே (அவதி) அனைவரும் (ஸர்வ:) நின்னைப் புகழ்வது (க்₃ருணன்) மறுக்கப்படக் கூடாததே (அவாச்ய)! (அதனால்) ஓ கள்வனே! (ஹரா!) என்னுடைய (மம) இத்துதியின் (ஏஷ: ஸ்தோத்ரே) புகழ்ச் சொற்றொடர்களும் (பரிகர: அபி) தடை செய்யப்படக் கூடாதனவே ( நிரபவாத₃:)! (1)
அது போலவே பிர மாதியர் அடை யாருன தளவை!
எவ ராயினு மவ ராய்மன வித மாயறி வதனால்
சிவ மாமுனைப் புகழ் வாரதிற் சிறி தானது மில்லை!
தன தாய்மதி விரி வால்துதி அள வாற்சிவ மகிமை
தரு வாரது தகை யாமெனில் வெகு வாமிது முழுமை
அடை யாதது என வாகினும் அணி யாய்ப்புக ழெனது
அள வாகினும் கள வாணியே அத வாதமும் அரிது!
(1)
குறிப்பு:
நந்நூலாசிரியர்கள் தங்களின் நூலின் தொடக்கத்தில், தமது பணிவைச் சமர்ப்பிப்பது நல்லொழுக்கம். அந்தவகையிலே புஷ்பதந்தர் இந்த முதற்பாடலில் தான் எடுத்துக்கொண்ட அரிய முயற்சி யாதெனக் கூறி, அதனை இறைவன் அன்புடன் ஏற்க வேண்டும் என வேண்டுகின்றார்.
இறைவனது அளவில்லாப் பெருமையை யாரால் அளக்க முடியும்! பிரம்மன் முதலான தெய்வங்கள் செய்கின்ற துதிகளும், இறைவனை முழுமையாகப் புகழ முடியாது! மேலும், ஒவ்வொருவரும் அவரவரின் அறிவின் முதிர்ச்சிக்கு ஏற்பவே இறைவனைப் புகழ முடியும்! இக்காரணங்களை எல்லாம் காட்டி, தன்னுடைய இத்துதியினையும் இறைவன் ஏற்றுக் கொள்வதே முறை என புஷ்பதந்தர் அன்புக் கட்டளையிடுகிறார்.
கதையின்படி, தாம் செய்த மலர்த்திருட்டாகிய தவற்றினைத் திருத்தி உயர்வு பெறவே புஷ்பதந்தர் இப்பாடல்களை அருளினார் என்பதாலோ என்னவோ, இறைவனை “திருடனே” எனும் பொருளைத் தருகின்ற சொல்லால், “அரனே” என அழைத்துப் பணிகின்றார். அடியாரின் ஆணவத்தைத் திருடுகின்ற நற்கள்வன் அல்லவா பரசிவன்!
இப்பாடலில் இறைவனை எவராலும், முழுமையாகப் புகழ முடியாது என ஆசிரியர் கூறுகின்றார். அதற்கு முதற்காரணம், அவரை நாம் அறிவினால் அறிந்து கொள்ள முடியாது என்பதே!
ஒருவரை முழுமையாக அறிந்திருந்தால் மட்டுமே அவரது புகழை நாம் முழுமையாகக் கூற முடியும். இறைனுக்கோ உருவம் இல்லை! வேதாந்தம் நம்முடைய அறிவினாலோ, புலன்களினாலோ இறைவனை அறிய முடியாது எனக் காட்டுகின்றது. எனவே “இறைவன் இந்த வடிவத்தில்தான் இருக்கிறார்” என நம்மால் எப்படித் தீர்மானிக்க முடியும்? அன்பினால், இறைவனின் வடிவத்தை எப்படி எல்லாம் நாம் மனதால் தியானித்துப் போற்றினாலும், அவ்வடிவங்களை எல்லாம் தாண்டியவராகவே இறைவன் இருக்கிறார் என்பதால், அவரது வடிவங்களைப் போற்றுகின்ற நமது புகழுரைகள் முழுமையானதாக முடியாது.
ஒருவரை நேரில் பார்க்க முடியவில்லை என்றாலும், அவரது படைப்புக்களை எல்லாம் நாம் நன்றாக அறிந்திருக்கிறோம் என்றால், அவ்வறிவால் நாம் அவரைப் புகழுவது இயலும். ஆனால் இறைவனால் படைக்கப்பட்ட உலகங்களும், உயிர்களும் எண்ணற்றனவாக, முடிவில்லாதனவாக இருக்கின்றனவே! இவற்றையெல்லாம், முழுமையாகக் கற்று அறிந்து, அவ்வறிவினால், அவற்றைப் படைத்த இறைவனை முறையாகப் புகழ்வது என்பது நம்மால் சற்றும் முடியாத செயலாகிறதே! எனவே வெளியிலிருக்கும் உலகங்களைப் பற்றிய அறிவினைக் கொண்டும் இறைவனை நாம் அறிவது முடியாத செயலாகிறது.
மேலும் உலகில் நாம் ஒருவரைப் புகழும்போது, பொதுவாக அவரது சிறப்புக்களை மிகைப்படுத்திச் சொல்லுவோம். அன்பும், நந்நோக்கமுமே அப்படிப் புகழ்வதற்குக் காரணம் என்றால், அந்த மிகையான புகழுரைகளால் தவறில்லை. அப்படிப் புகழ்பவரும், புகழப்படுபவரும் புகழ்ச்சியில் மிகையான சிறப்புக்கள் இருக்கின்றன என்பதையும் அறிந்தே அவற்றை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆகவே, புகழுரை என்றாலே, மிகைப்படுத்தப்பட்ட சிறப்பு என்பது நமக்கு உலகில் வழக்கமாக இருக்கிறது.
ஆனால் இறைவனோ, எல்லாப் புகழுக்கும் மேலாக, இன்னும் புகழப்பட வேண்டியவராகவே இருக்கிறார். அதனால் இறைவனை எப்படிப் புகழ்ந்தாலும், அது மிகையும் அல்ல, முழுமையும் அல்ல என்பதே உண்மை.
இறைவனை முழுமையாகப் புகழவே முடியாது என்றால், பிறகு எதற்காகப் புஷ்பதந்தரும், அவரைப் போலவே மற்ற நல்லடியார்களும், தத்தம் அறிவிற்கேற்ப இறைவனைப் புகழத் துணிகிறார்கள்?
இதற்கான காரணத்தை ஆசிரியர் தமது அடுத்த பாடலில் தருகின்றார்.