01 நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க
‘சிவாய நம:’, ‘நம: சிவாய’ எனும் திருவைந்தெழுத்துக்கு, ‘சிவ பஞ்சாக்ஷரம்’ எனப்பெயர். இதன் ஒவ்வொரு எழுத்துக்கும் ஓர் ஆழ்ந்த தத்துவப் பொருளைப் பொருத்தி, பெரியோர்கள் விளக்கி அருளி இருக்கிறார்கள்.
‘சிவம்’ என்பதற்குச் சொற்பொருள் ‘மிகவும் மங்களமானது’, அதன் ஆழ்பொருள், உருஅருவிலாப் பரம்பொருளாகவும், யாதிற்கும் ஆதாரமாகவும் விளங்கும் ‘பரமாத்மா’ என்று வேதங்கள் காட்டுகின்றன.
அருவான பரம்பொருளையே ‘சிவம்’ எனும் சொல் குறிக்கின்றது. சம்ஸ்கிருத மொழியில் ‘லிங்கம்’ என்பதன் பொருள் ‘அடையாளம்’ என்பதாகும். எனவே ‘சிவலிங்கம்’ என்பது அருவுருவாய் பரம்பொருளைக் காட்டுவது. அருவான பரம்பொருள் உண்மையை, படிப்படியாக உணருவதற்கான பாதையே, அப்பரம்பொருளை ‘சிவ சக்தி’ உருவினராகத் தொழுதல். அதனால்தான் ‘சிவம்’ எனும் பரம்பொருளை ‘சிவன்’ என்று உருவகப்படுத்துகின்றோம்.
‘உரு அகப்படுதல்’ என்றால், நம்முள்ளேயே ‘உருவான ஒன்றைக் கண்டு பிடித்தல் என்றும் ஆகிறது. அவ்வாறு, மேலான உண்மையைக் ‘கண்டும்’, ‘பிடித்துக் கொள்ளுதலுமே’, ஞானம் என்றும், யோகம் என்றும் நாம் புரிந்து கொள்ளலாம்.
அவ்வாறு ‘அகப்படும் சிவத்தில் சுகப்பட நிலைத்தலே’ முக்தி. அப்பயணத்திற்கான பாதைகள்தான், தருமம், பக்தி, யோகம் என நமது திருமறைகள் காட்டும் பல வழிமுறைகள்.
‘நம’ எனும் சம்ஸ்கிருதச் சொல், ‘ந மம:’, அதாவது, ‘எனதன்று’, ‘நான் அல்ல’ எனும் ஆழ்பொருளைத் தருவது. எனவே ‘நம’ எனும் சொல்லினால், ‘நான்’ எனும் செருக்கினை விட்டுப் பணிவது என்பது பொருள்.
‘நம’ எனும் சொல்லினால் ‘எனதல்ல’, ‘நானன்று’ என்று கொண்டால், பிறகு நாம் எல்லாம் யாருடைய உடைமை?
எல்லாமும் ‘உடையவன்’ இறைவன் ஒருவனே. அவனே, ‘சுவாமி’ எனும் சொல் காட்டுகின்ற ‘உரிமையாளன்’. அவனே ‘நாதன்’ எனும் ‘தலைவன்’. ‘நாமல்ல, நம்முடையவை எதுவுமல்ல’ எனப் பணிந்து, திருவடிகளில் வணங்குவதே பணிவுடையார் பண்பு என்பதால், ‘நாதன் தாள் வாழ்க’ என வழுத்தும் வணக்கமாக இந்த முதலடி இருக்கிறது.
தாள் பணிதல் என்பது மிகவும் உயர்வான நெறி. அதிலும் பக்தி நெறியை வளர்த்த சைவ, வைணவ வழிபாடுகளிலே, திருவடி பணிதல் பெரிதும் முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளது. திருவடிகளின் பெருமையை உணர்த்தத்தானோ என்னவோ, அடியார்களின் வரலாற்றைக் கூறும் சேக்கிழாரின் நூலாகிய ‘திருத்தொண்டர் புராணம்’, எனும் அரிய காப்பியமும், எல்லோராலும் ‘பெரிய புராணம்’ என்ற பெயராலேயே அழைக்கப்படுகிறது! அதுபோலவே, திருக்குறளில், கடவுள் வாழ்த்து எனும் முதல் அதிகாரத்தில், முதல் ஒரு குறளில் மட்டுமே ‘ஆதி பகவன்’ எனத் தலை வணக்கம் செய்த திருவள்ளுவர், மற்ற ஒன்பது குறட்பாக்களிலேயும், இறைவனது திருவடிகளையே பணிகின்றார்! என்னே திருவடிகளின் பெருமை! அதனாலேதான், பக்தியை முன்னிலைப்படுத்தும் சைவ நெறியில், இறைவனின் மலரடியும், திருவடியுமே தொழுவாரின் குறியாக இருக்கின்றது.
2. இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க