Sivapuranam by Manickavasagar (11-14)
11. ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி!
12. தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி!
‘தேசன்’ என்பதற்கு இரு பொருள் உள்ளன.
‘தேஜ்’ எனும் வடமொழிச் சொல்லின் திரிபாக, ‘ஒளியாகிய இறைவன்’ என்பது ஒரு பொருள். எனவே, ‘தேவதேவம்’ அல்லது ‘ஒளிக்கு ஒளியான சக்தி’ என வேதங்கள் அழைக்கின்ற சிவபிரானை, ‘ஒளியே’ என்று மாணிக்க வாசகர் அழைக்கின்றார்.
மற்றொரு வகையில் ‘தேச’ எனும் சொல்லை ‘வெளி அல்லது இடம்’ எனும் பொருளுக்கு எடுத்துக் கொள்ளலாம். காலமும் தேசமும் உலகின் எல்லா மாற்றங்களுக்கெல்லாம் ஆதாரமாகிய அளவு கோல்கள். ஆனால், காலமும், தேசமும் இறைவனது சக்திக்குள் அடங்கி இருப்பன.
இங்கே ‘தேசனே, சிவனே’ எனும் சொற்களினால், ‘எங்கும் நீக்கமற நிறைகின்ற’, இறைவனாக சிவனை அழைத்து, அன்னாரின் திருவடிகளைப் போற்றுகின்றார், திருவாதவூரர்.
13. ஞேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி!
ஆனால், மனமும் ஒரு சடப் பொருளே. ஆழ்துயில் நிலையில் மனத்தின் சடத்தன்மை நமக்குத் தெரியும். நினைவு, மறதி என மனதின் அறிவாற்றலும், வேறொரு அறிவொளியினாலேயே நடக்கிறது. அம்மூல அறிவுச் சக்தியே (ஆத்ம சக்தி), ‘ஞேயம்’ எனும் அறிவொளி. அவ்வறிவின் ஒளியாக மிளிர்கின்ற ஆத்மாவே கடவுள். மனதிற்கும் அப்பாற்பட்டு ஆத்மா இருப்பதால், அது எவ்விதக் களங்கமும் இல்லாமல் இருக்கின்றது. எனவே அது நிர்மலம். (நிமலன்).
சத் (உள்ளது), சித் (உணர்வது), ஆனந்தம் (பெருமகிழ்வுறுவது) எனத் திகழும் ‘சச்சிதானந்தம்’ ஆகிய ஆத்மாவின், சித் எனும் ஞேய நிலையை, மணிவாசகர் இவ்வரியில் எடுத்துக் காட்டுகின்றார்.
14. மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி!
உண்மையில்லாதவை எப்படி நமக்கு அனுபவத்தைத் தரும்?
கானல் நீரைப் பார்த்தவருக்கு, தாகம் அதிகரிப்பதுபோல, கயிற்றிலே பாம்பு இருப்பதாய் நம்பியவருக்கு, பயமாகிய அனுபவம் வருவது போல, பிறவியும் உண்மையெனப் பார்க்கப்படும்போது, அது சுக, துக்க அனுபவங்களைக் கொடுப்பதாகவும், அதைப் பொய்யென உணரும்போது, எவ்விதப் பாதிப்பும் தராத ஒரு விளையாட்டாகவும் ஆகி விடுகிறது.
‘அல்லற் பிறவி அறுப்பான்’ எனப் பிறவித் துன்பத்தைக் களைபவன் இறைவன் என்று வேறிடத்தில் கூறிய மாணிக்க வாசகர், இங்கே ‘மாயப் பிறப்பு’ எனக் காட்டியதனால், பிறப்பினை அறுப்பது என்பது ‘பிறவி ஒரு மாயம்’ எனும் ஞானத்தில் நிலைப்பதினாலே மட்டுமே முடியும் என்பதையும் காட்டுகின்றார். அதாவது, உண்மை அறிவினாலேயே, பிறவிப் பிணியினை நீக்க முடியும்.
‘மாயப் பிறப்பு அழிக்கும்’ எனச் சொல்லாமல் ‘மாயப் பிறப்பு அறுக்கும்’ எனச் சொன்னது ஏன்?
பிறவிகளுக்குக் காரணம் நமது ஆசை. அது ஓர் பெருங்கயிறு (பாசம்). உயிர்களாகிய நாம் எல்லாம் பிறவியாகிய நிலத்தில் மேய்கின்ற விலங்குகள் (பசு).
இறைவனே இப்பசுக்களை மேய்க்கின்ற தலைவன் (பதி). பல வகையான மேய்நிலங்களைக் காணவும், அனுபவித்து வாழவும், பசுக்களைக் கட்டி இழுத்துச் செல்கின்ற ஆசைக் கயிறுதான் பாசம்.
எல்லா நிலங்களும், வளங்களும் (அதாவது அறியாமையாகிய பிறவி அனுபவங்களும்) உண்மையான பசியினைப் போக்கவில்லை (முழுநிறைவைத் தரவில்லை) எனத் தெளியும் வரை, பசுவாய்த் திரிந்து பசியால் வாடுவது, எல்லா உயிர்களின் வாடிக்கையாய் இருக்கும்.
பதியுடன் இணைந்தால் மட்டுமே, பசியின்றி, முழுமையான நிறைவோடு இருக்கலாம் என்ற ஞானமும் வந்தவுடனே, பசுக்களாகிய நாம் வேண்டுவது, பாசமாகிய கயிற்றை அறுக்கின்ற வாள். அதுவே இறைவனின் தாள்.
நல்வினையினால், நாம் அதில் வீழ, பாசக் கயிறு அறுபட்டு, பசுபதியான இறைவனின் திருவடிகளில், நாம் நிலை பெறலாம். அவ்வாறு, பாசத்தை அறுத்து நம்மை ஆட்கொள்ளும் தலைவன் என்று இறைவனை இவ்வரிகள் புகழ்கின்றன.
10. சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க
15. சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி