Sivapuranam by Manickavasagar (25-31)

25. பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன்

ஏன் மாணிக்கவாசகரால், எல்லையற்ற இறைவனின் புகழைப் பாட முடியவில்லையாம்?  தாம் தீய வினைகளினால் அறியாமையில் கிடப்பதால், இறைவனது பெருமைகளில் எதனையும் அறியாதவனாக இருக்கின்றேன் என அவர் கூறுகின்றார். பரஞானியான மாணிக்கவாசகர், இப்படித் தம்மைத் தாழ்த்திக் கொள்வது, முற்றிய கதிர் வளைவது போல, முதிர்ந்த அறிவால் கொண்ட பணிவுதான் என உணர்வோம்.

தம்முள்ளேயே இறைச் சக்தி இருந்தும், அவ்வுண்மையை உணராமல் நாம் வாழ்நாளை வீணே கழிக்கிறோம். இதன் காரணம்,  ஆத்ம ஒளியைத்  தீய வினைப் போர்வைகள் மறைக்கின்றன (பொல்லா வினை) என்பதே.

ஒன்றை மற்றது மறைக்கிறது என்றால்,  மறைப்பது, மறைக்கப்பட்டதை விடவும், பெரிதாய் இருக்க வேண்டுமே! அப்படியானால், அறியாமை இருள் அறிவொளியை விடவும் பெரிதா!  இல்லை!   சூரியனை மேகம் மறைக்கிறது என்றாலும்,  சூரியனையா மேகம் மறைக்கிறது?  நமது பார்வையைத்தான் மேகம் மறைக்கிறது!  மேகம் பார்வையை மறைக்கிறது என்ற உண்மையைத் தருவதும் சூரியனின் ஒளிதான்.

அதுபோல் பொல்லா வினையாகிய அறியாமைப் போர்வையால், உண்மைப் பார்வை மறைக்கப்பட்டு இறைவனது பெருமையை உணர்ந்து கொள்ள முடியாமற் போகிறது.

இப்படி அறியாமைப் போர்வையில் நாம் ஆழ்ந்து கிடப்பதனால் ஏற்படும் விளைவுகளை அடுத்து வரும் வரிகள் விளக்குகின்றன.

26. புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
27. பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
28. கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
29. வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
30. செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்

31. எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்

பொல்லா வினைகளால் மூடப்பட்டிருப்பதால், தமக்குப் பிறவிப் பிணி இருக்கிறது எனக் கூறுகிறார் ஆசிரியர்.

இறைவனை விட்டுப் பிரிந்தாற்போல் நம்மை இழுத்துக் கட்டுவது பாசமாகிய கயிறு. அப்பாசக் கயிற்றின் முனையைப் பற்றிக்கொண்டு, பரிதவிக்கின்றன பசுக்களாகிய உயிர்கள்.

கயிற்றில் ஒரு தீப்பந்தத்தை வைத்துச் சுற்றும்போது, வித விதமான உருவங்கள் தோற்றத்தில் வந்து போவது போலவே, பாசக் கயிற்றில் கட்டுண்டு சுழலும் பசுவாகிய ஜீவன், பலவிதப் பிறவிகளுள் வீழ்கின்றான்.

புல், பூடு,  மரம் எனத் தாவரங்களாகவும், ஊர்வன, பறப்பன, நடப்பன, மிதப்பன எனப் பல உயிரினங்களாகவும், கல் போன்ற சடப்பொருளாகவும், மனிதர்களாகவும், பிறகு பேய்கள், கணங்கள், வலிய அசுரர்கள், முனிவர்கள், தேவர்கள் எனவும் எப்படி எல்லாமோ பிறந்தும் இறந்தும் இளைக்கின்றது ஜீவன். ‘யானும் அப்படி எல்லாம் பிறந்து, இப்பொழுது மிகவும் களைத்து இருக்கிறேன், என்னுடைய பெரும் தலைவனே’ என மணிவாசகர் இறைவனிடம் முறையீடு செய்கின்றார்.

‘இளைத்தேன்’  என்பது பிறவியால் ஜீவனுக்கு ஏற்படும் களைப்பினைக் காட்டுகிறது.  அந்தக் களைப்பினை உணர்வதுதான், ஞானத்தின் முதற்படி.

பிறத்தல், இறத்தல் எனும் வட்டத்தில் உழலுகிறோம் எனும் உண்மையை நாம் உணரவில்லை என்றால், மணிவாசகர் காட்டும் இந்தக் களைப்பின் பெருமை, நமக்குப் புரியாது.  இக்களைப்பின் உந்துதலே, ஞான வேட்கை,  வைராக்கியம் எனும் பற்றின்மை ஆகியவற்றில் நம்மைத் திருப்பும் விசை.

அத்தகைய நல்லறிவு எப்படி மணிவாசகருக்கு வந்தது?

‘சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்’ என முன்னே சொன்னபடி, இறைச் சிந்தனை இருக்கின்ற ஒரே காரணத்தினால்தான், மாணிக்கவாசகருக்கும், அன்னாரைப் போன்ற பெரியோர்களுக்கும், மனிதப் பிறவியில் இருக்கும்போதே, பிறவிச் சங்கிலியை அறுத்தெரிக்கும் ஆவலும், அறிவும், மெய்யடியாரைத் தொழுகின்ற பணிவும் கிடைக்கும்.

அதனாலேயே மாணிக்கவாசகப் பெருந்தகை, விவேகம் வந்தும் வைராக்கியம் வரவில்லையே எனத் தம்மைத் தாழ்மைப்படுத்திப் புலம்பி, அழுது, திருவாசகத்தேனை ஊனுருக்கப் பாடினார்.  அதன் பயனாக, அனுபூதி எனும் ஆத்ம அனுபவம் பெற்றார். அப்பேரானந்தத்தில் இசைத்த பேருண்மைதான், சிவபுராணம் எனும் இத்தேன்.

அவ்வனுபூதியின் பயன் என்ன என்பதை அடுத்த வரியில் தருகின்றார் ஆசிரியர்.

24. எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்

32. மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்

Related Posts

Share this Post

Leave a Comment