Sivapuranam by Manickavasagar (32)

32. மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்

உண்மை அறிவினை அடைந்த பயனாக, இறைவனை ‘மெய்யே’ என அழைக்கின்ற பக்குவத்தைக் காட்டுகின்றார் ஆசிரியர்.  எத்தனையோ பெயர்களும், உருவங்களும் கொடுத்து வணங்கப்பட்ட இறைவனை, இறுதியாக, ‘உண்மை என்பதே இறைவன்’ என்று உணர்ந்து, அதனால் ‘மெய்யே’ என அழைக்கிறார்.  உண்மையை எவராலும் மறுக்க முடியாது அல்லவா? எனவே, உண்மையே இறைவன் என்றால், அச்சக்தியை மறுப்பது ஏது!   இறையுணர்வினால் கிடைத்த அனுபூதியின் விளைவே, இறைவனது ‘பொன்னடிகள் கண்டு, இன்று வீடு உற்றேன்’ என மகிழ்ந்து பாடிய வரிகள்.

பொன்னைப் போன்ற ஒளியான திருவடிகளை, மாணிக்கவாசகர் எப்படிக் கண்டார்?

இறைவன்,  மாணிக்கவாசகரது வாழ்வில் ஊடுருவி ஆற்றிய திருவிளையாடல்கள் பல. திருப்பெருந்துறையில் குறுந்த மரத்தின் அடியில் அமர்ந்த குருவாகவும், மதுரையிலே நரியைப் பரியாக்கியும், பிட்டுக்கு மண் சுமந்த பெருமானாயும், சிவபெருமான் மாணிக்கவாசகரது வாழ்க்கையில், வந்து அருள் காட்டினார்.

தம்மிடம் ‘வந்து அருள் காட்டுவது’ எந்தையாகிய இறைவன் என்றே உணருகின்ற பக்குவமும், உயர்வான பக்தியும், மாணிக்கவாசகரது உள்ளச் சீர்மையாலும், மாறாத இறைச் சிந்தனையினாலும் மட்டுமே சாத்தியமானது.   அதனாலேயே இறைவனை மனித வடிவிலும் அடையாளம் கண்டு அடிபணிந்து, அவரால் உய்ய முடிந்தது.

மேலும், ‘கண்டு’ என்பதற்குச் சிந்தையில் ‘காணுதல்’ எனவும் கொள்ளலாம். இறைச் சிந்தனையால் நிறைவாகவும், சீராகவும் ஆன மணிவாசகரின் மனதில், தன்னுள்ளே ஆத்மாவாகத் துலங்கும் இறையொளி,  ஒரு கணமேனும் பளிச்சென ஒளிகாட்டி இருக்க வேண்டும்.  அதனைச் ‘சிக்கெனப் பிடித்துக் கொள்ளும்’ வலிமை, தெளிய மனமுடைய மாணிக்கவாசகருக்கு இருந்திருக்கிறது என்பதில் ஐயம் இல்லை.

அப்படித் தன்னுள்ளே ஆத்மஒளியைக் கண்டதால் என்ன பயனாம்?

‘இன்று வீடு உற்றேன்’ – அதாவது, அந்த ஒளியைக் கண்ட அந்தப் பொழுதிலேயே, தன்னுடைய இருப்பிடமாகிய வீடு எதுவென அறிந்து அதிலே நிலை பெற்றேன் என்பதாகும்.  வீடு என்பது விடுதலை அல்லது முக்தி. தந்நிலை அடைதல். தந்நிலை என்பது, இறைவனின் தாளடியில் கலத்தல். அதனைத்தான் மாணிக்கவாசகர் பயனாகப் பெற்றார்.
பதஞ்சலியின் யோகசூத்திரம் ‘ததா  த்ருஷ்டு: ஸ்வரூப அவஸ்தானம்’  – அதாவது, ‘ஆத்ம ஒளியைப் பார்ப்பவனுக்கு, அந்த ஆத்மனே தமது உருவமென நிலைப்படுகிறது’ எனக் கூறுகிறது.  அதனாலேயே,  ‘வீடு பெற்றேன்’  என  முக்தியினைப் பெற்ற பயனைக் காட்டுகின்றார்.

31. எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்

33. உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற

Related Posts

Share this Post

Leave a Comment