33. உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
34.மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
‘ஓங்காரம்’ எனும் பிரணவமே, பரம்பொருளின் நாத வடிவ வெளிப்பாட்டின் அடையாளம். அதுவே உலகின் எல்லா அசைவுகளுக்கும் ஆதாரமான விசை.
வெட்டவெளி என்பது, உலகம் எல்லாவற்றின் விளைநிலம். உதாரணமாக, தக்க ‘நுண்ணலையுணர்-கருவி’ (Transceiver) ஒன்று இருந்தால், வெட்டவெளியில் கிடைக்கும் எத்துணையோ விஷயங்களை நுகர முடியும். வானொலி, தொலைக்காட்சி, அலைபேசி எனும் நுண்ணலையுணர்-கருவிகள் எல்லாம், வெட்டவெளியில் பரவும் நாத சக்தியில், வேண்டிய நுண்ணலைக் கற்றைகளைப் பிடித்தே பயன் அளிக்கின்றன.
இவற்றைப் போலவே, உலகங்கள் எல்லாம் வெட்டவெளியின் சக்தியினாலேயே, பிறக்கின்றன. வெட்டவெளியின் நுண்ணலை வீச்சின் கட்டுமானங்களுக்கு, ஓர் அடிப்படையான அதிர்வு ஆதாரமாக இருக்கிறது. எப்படி மின்சாரக் கம்பிகளில், Earth எனும் விசையை ஆதாரமாக வைத்தே, மற்ற மின்னோட்டங்களின் அளவு வெளிப்படுகிறதோ, அப்படியே, வெட்டவெளியில் இருக்கும் ஆதார அதிர்வே ‘ஓம்’ எனும் நாதம். அதுவே எல்லா எழுச்சிகளுக்கும் காரணமாய் இருக்கிறது. இந்த ஓரெழுத்துக்கு மட்டுமே உபநிடதங்கள் வெகுவான விளக்கங்களை எல்லாம் அளிக்கின்றது.
இறைவனை உருவங்களாகவும், ஒளியாகவும் வழிபட்டதைக் கடந்து, நாதம் எனும் அருவமாக, தம்முள்ளேயே அனுபவிக்கும் பெரும்பயனைத் தாம் பெற்றுவிட்டதாக மாணிக்கவாசகர் காட்டுகின்றார்.
பஞ்ச பூதங்களில், உருவம் எனும் குணத்தை முதலில் காட்டுவது ‘தீ’ யாகிய ஒளியே. அதைத் தொடர்ந்தே நீர், நிலம் ஆகிய மூலப் பொருட்கள், உருவுடன் கூடிய, சுவை, மணம் எனப் பல குண வேறுபாடுகளைக் கொள்கின்றன. தீயினும் முதியது நாதம் எனும் மூல ஒலி. இதுவே வெட்டவெளியாகிய முதற்பூதப்பொருளில் பிறந்து, மற்ற மூலப்பொருட்களைப் பிறப்பிக்கும் பெருங்கருவாக விளங்குகிறது. அந்த மூல ஒலியே எல்லாப் பிறப்புக்கும் வித்து. இங்கே மாணிக்கவாசகர், ஓங்கார நாதமே தன்னுள் மிகுந்திருப்பதால், விசைகளுக்கு விசையான இறைவனால் தாம் முழுதுமாக நிரம்பி, நிறைவுடன் இருப்பதை உணர்ந்திருக்கிறார்.
அப்பெரிய அனுபவத்தினாலேயே, இறைவனை, ‘உண்மையே (மெய்யா), குற்றங்களற்றவனே (விமலா), காளை மேல் அமர்ந்தவனே’ என்று அழைத்து, ‘வேதங்கள் எல்லாம், உன்னையே தலைவா என அழைக்கின்றன. நீயோ ஓங்கி (எழுச்சியாய்), ஆழ்ந்து (கடவுளாக, உள்ளுள்), அகன்று (இறைவனாகப் பரந்து) நுண்ணியனாக இருக்கின்றாய்’ என்றெல்லாம் வியக்கிறார்.
‘விடை’ என்பதற்கு ‘காளை மாடு’ என்றும், ‘பாகன்’ என்பதற்கு ‘மேல் அமர்ந்து ஆள்பவன்’ என்றும் பொருள். சிவபிரான் ‘இரிஷப வாகனத்தில்’ இருக்கிறார் என்பதே இதன் கருத்து. ‘விடை’ என்பதற்கு, கேள்விகளைத் தீர்க்கும் பதில் என்றும் பொருள் கொள்ள முடியுமென்பதால், ‘விடைப்பாகன்’ ஆகிய சிவபிரானே, நமது விடுதலைக்கான வினாக்களுக்கு, விடை தரும் குரு எனவும் நாம் பொருள் கொள்ளலாம்.
36. வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
37. பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
38. மெய் ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே
அமுதத்தமிழில், ‘அகல்’ என்ற வினைச் சொல்லுக்கு, ‘போய்விடு’ என்பது பொருள். ‘அகல்’ எனும் பெயர்ச் சொல்லுக்கு, ‘விளக்கு’ என்பது பொருள். ‘விளக்கு’ எனும் வினைச் சொல்லுக்குக்கு, ‘தெளிவுபடுத்து’ என்பது பொருள். இங்கே உண்மை அறிவாகிய விளக்கினால், அறியாமை எனும் இருள் அகல்கிறதாம்.
‘அகலுதல்’ என்பது ‘அழிதல்’ அல்ல, அருகில் இல்லாமல் இருத்தல். மயக்கம் எனும் இருள் அழிக்கப்பட முடியாதது. ஏனெனில் அது இறைவனின் கட்டுப்பாட்டினால் இயங்கி, இறைவனின் திருவிளையாடலில் ஒரு பாகமாக இருப்பது. ஆனால், மயக்கம் எனும் இருளை, நம்மை அண்ட விடாமல், ‘அகற்ற’ முடியும். எனவேதான் அகல் எனும் சொல் வந்துள்ளது. அதற்கான அகல் விளக்குத்தான் ஆத்மஞானம். அதன் ஒளிப் பொறியினாலே, சூரியனையும் பழிக்கும் பேரொளியில் நம்மால் திளைக்க முடியும்.
அப்படி மிளிர்கின்ற மெய்ச்சுடராக இறைவனைத் துதிக்கிறார் ஆசிரியர்.
32. மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
39. எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே