39. எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
40. அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே
எந்த அறிவும் இல்லை என்றால் என்ன பொருள்?
வேதங்கள் அறிவினை, ‘அபரஞானம்’, ‘பரஞானம்’ என இரண்டாகப் பிரிக்கின்றன. பரஞானம் அல்லது மேலான அறிவு என்பது, பரம்பொருளை ஆத்மாவாக உணர்ந்து, ஈரற ஒன்றிய சுகத்தில் இருத்தல் ஆகும். மற்ற எல்லா அறிவும், அபர ஞானம் அல்லது கீழான அறிவே ஆகும்.
ஒருவரின் அறிவு வளர்ச்சியைப் பொருத்து, அபர ஞானத்திலும், வேறுபாடுகள் இருக்கின்றன.
உலக விவகாரங்களில் ஈடுபடும் அறிவு ‘விவகாரிக ஞானம்’ ஆகும். அப்படி உலக விஷயங்களில் ஈடுபட்டிருக்கும் ஜீவன், ‘விஷயி’ எனப்படுகிறான். உலக அறிவைச் செம்மைப்படுத்தி, அறமாகிய தர்ம வழிப்படி நடப்பது, ஜீவனுடைய முன்னேற்றம் ஆகும். தர்மத்தின் வழிப்படி நடந்து, சுக துக்கங்களை அனுபவித்து, இவற்றில் கிடைக்காத முழுநிறைவு எதில் கிடைக்கும் எனத் தேடும் பொழுது, ‘விவேகம்’ எனும் பகுத்தறிவு ஜீவனுக்கு வருகின்றது. வேதங்கள் தரும் நெறிகளைக் கற்பதிலும், கற்றபடி நடப்பதிலும் நம்மை இட்டுச் செல்வது ‘விவேகம்’. அது அரிய முன்னேற்றம். அதன்படி நடப்பதால், ‘விஷயி’ என்றிருந்த ஜீவன், ‘விவேகி’ என்று ஆகின்றான்.
பிறகு, விவேகத்தினால், உலக வாழ்கையில், எது உண்மை, எது பொய், எது நிலையானது, எது நிலையற்றது என்றெல்லாம் உணர்த்துகின்ற அறிவினைப் பெற்றாலும், மேலான விடுதலையை உணர்வதற்கான தகுதியை முற்றும் பெறாததால், நல்லறிவு வெறும் சுமையாகவே இருக்க, ஜீவன் தொடர்ந்து தவித்துக் கொண்டுதானிருக்கும்.
பரஞானம் பெறுவதற்கான தகுதி, சுத்தமான மனமும், திடமான அறிவும்தான். அதை அடைவதற்குத் தேவையானது, ‘வைராக்கியம்’ எனும் பற்று இல்லாமை. வைராக்கியத்தை அடைவதற்குத்தான், விவேகிகள் தவிக்கிறார்கள். அத்தவிப்புத்தான், அவர்களுடைய பாடல்களில் புலம்பலாக வெளிப்படுகின்றது.
விவேகம் எனும் அறிவுப் பார்வையுடன், சிரத்தை எனும் நந்நம்பிக்கையைத் துணையாகக் கொண்டு, பக்தி, யோகம் முதலான வழிகளைப் பின்பற்றி, படிப்படியாக முன்னேறியே, சான்றோர்கள் வைராக்கியத்தை அடைகிறார்கள்.
வைராக்கியம் அடைவதே, பரஞானத்தைத் தருகின்ற ஞான யோகத்தினை ஏற்பதற்கான முக்கியத் தகுதி. அவ்வாறே வைராக்கியத்தை அடைந்த விவேகி, ‘வைராகி’ எனும் நிலையை அடைகிறான்.
வைராக்கியம் அடைந்தவர்களிள் ஒரு சிலர், எதிலும் பற்றில்லை என்பதால், முக்தி தரும் பரஞானத்தையும் கூட விழையாமல், தமக்குள்ளே ஒடுங்கி இருப்பார்கள். அப்படிப்பட்ட சீலர்களை, ‘உதாசீன மஹாத்மா’ அல்லது ‘பற்றிலாப் பெருமான்’ என நல்லோர் உலகம் தொழுகின்றது. அவ்வாறு இருப்பவர்களும் இன்றும் நம்மிடையே உண்டு.
ஆனால், ‘பற்றுக பற்றற்றான் பற்றினை’ என்றபடி, முழு நிறைவான இறைவனைப் பற்றுதல், பழுத்த வைராக்கியத்தின் முக்கியக் கடமை. அப்படி பற்றற்றான் பற்றினை அடையும் வைராகியே, பூரணமான பொருளாகத் தந்நிலையிலேயே சுகநிலையை உணர முடியும். அவரே பரஞானம் அடைந்தவர். அவரே ‘ஞானி’. அந்நிலையில் இருப்பவர்களுக்கு, மற்ற எல்லாப் புறஅறிவும், அது வேதங்களைப் பற்றிய அறிவாகவே இருப்பினும், அவை எல்லாம் ‘அபர ஞானம்’ எனும் கீழான அறிவாகவே ஆகும்.
மாணிக்கவாசகர், வைராக்கிய சாதகராக, உள்ளத்தை உருக்கும் திருவாசகம் முதலான அரும்பாடல்களைப் பாடியுள்ளார். அவற்றில் எல்லாம், ‘கீழோன்’, நாயேன்’ என்றெல்லாம் தவித்துப் புலம்பியுள்ளார். அன்னாரின் வைராக்கிய சாதனையாலும், பற்றற்றான் பாதங்களைப் பற்றிய காரணத்தாலும், , சிந்தையுள் சிவனாக ஆத்மனை உணர்ந்த நற்பயனால், மாணிக்கவாசகர் பரஞானம் பெற்ற பெருயோகியாக விளங்குகின்றார்.
‘சிவபுராணம்’ எனும் இவ்வரிய பாடலை, மாணிக்கவாசகர், இறையனுபவமாகிய பூரண அனுபூதி பெற்று, சிதம்பரம் எனும் புனிதத் திருக்கோவிலில் அருளியதாகப் பெரியோர்கள் கருதுகின்றார்கள்.
இவ்வரிகளில், தமக்கே உரித்தான பணிவினால், எந்த அறிவும் இல்லாதவன் என்று தனது அபர அறிவை இகழ்ந்தும், பர அறிவை அறியாத நிலையை ‘அஞ்ஞானம்’ எனும் இருள் எனப் பயந்தும், அவ்விருளை, ‘அகற்றும்’ அகல் விளக்காக, இறையொளியை நாடியும் அதனையே ஆத்ம தரிசனமாகக் கிடைத்தது என்ற ஆனந்தக் கூவலையும், நமக்காகக் காட்டியிருக்கிறார், பரஞானியாகிய பெருந்தகை.
38 மெய் ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச் சுடரே
41. ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்